ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

For a working-class strategy against the imperialist repartition of the Middle East!

மத்திய கிழக்கின் ஏகாதிபத்திய மறுபிரிவினைக்கு எதிரான ஒரு தொழிலாள-வர்க்க மூலோபாயத்திற்காக!

Keith Jones
11 May 2018

அமெரிக்க ஏகாதிபத்தியமானது, அதன் இளைய பங்காளி இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு, ஈரானுக்கு எதிராய் ஒரு சகல-முனையிலுமான இராணுவ, இராஜதந்திர, மற்றும் பொருளாதாரத் தாக்குதலைத் தொடக்கியுள்ளது.

செவ்வாய்கிழமையன்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பாதுகாப்பு சபை-ஒப்புதல் பெற்ற ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் “ஈரானுக்கு எதிராய்” “மிக உயர்ந்த மட்டத்திலான” ”உலகளாவிய பொருளாதாரத் தடைகளை” ஒருதரப்பாக திணிக்கவிருப்பதாகவும் அறிவித்தார். அவ்வாறு செய்கையில், ட்ரம்ப் வாஷிங்டனின் பாரம்பரியமான ஐரோப்பியக் கூட்டாளிகளை புறந்தள்ளியதோடு, மத்திய கிழக்கில் இராணுவப் பற்றவைப்புக்கு அவர் திரி கொளுத்துகிறார் என்ற அவற்றின் எச்சரிக்கைகளையும் ஆணவத்துடன் உதறித்தள்ளினார்.

புதன்கிழமை இரவு, இரண்டு டஜனுக்கும் அதிகமான இஸ்ரேலிய போர் விமானங்களும், அவற்றுடன் இஸ்ரேலின் தரை-விட்டு-தரை பாயும் ஏவுகணைகளும், சிரியாவெங்கிலும் ஈரானின் இஸ்லாமிக் புரட்சிகரப் படை நிலைகளின் மீது —அங்கு அவை, ரஷ்யப் படைகளுடன் இணைந்து, எட்டு வருடங்களாக பஷார் அல்-அசாத்திற்கும் அவரது பாத்திஸ்ட் ஆட்சிக்கும் எதிரான அமெரிக்க-ஆதரவிலான கிளர்ச்சிக்கு எதிராய் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்து வந்திருக்கின்றன— தாக்குதல் நடத்தின.

இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் (IDF) "சிரியாவில் கிட்டத்தட்ட ஈரானிய உள்கட்டமைப்பு அத்தனையின் மீதும் தாக்கின” என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரான அவிக்டோர் லீபர்மன் நேற்று பெருமையடித்தார். முரண்பாடான செய்திகள் வந்தபோதும், சிரியாவின் மனித உரிமைகள் பார்வையாளர் அமைப்பு, இஸ்ரேலின் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் “வெளிநாட்டுப் போர்வீரர்கள்” என்றும் தெரிவிக்கிறது.

தெஹ்ரானில் ஆட்சி மாற்றமும் ஈரானிய மக்களை நவ-காலனித்துவ அடிபணிவுக்கு இலக்காக்குவதுமே ஈரானுக்கு எதிரான வாஷிங்டனின் புதிய தாக்குதலின் நோக்கமாகும். ட்ரம்புமே கூட இதனை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் போன்ற ஈரானுடனான போருக்கு நீண்டகாலமாக ஆலோசனையளித்து வருபவர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்தும் பொருட்டு தனது நிர்வாகத்தின் தலைமையான ஆட்களை சமீபத்திய வாரங்களில் அவர் இடம்மாற்றியிருக்கிறார். ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிடுவதாக செவ்வாயன்று அறிவித்த உரையின் போது, ட்ரம்ப் மீண்டும் 1979க்கு முந்தைய ஈரானின் புகழ் பாடினார்; அச்சமயத்தில் ஷாவின் அமெரிக்க-ஆதரவு முடியாட்சி சர்வாதிகாரமானது ஈரானிய மக்களை கொடூரமாக ஒடுக்கியதோடு மத்திய கிழக்கிலும் மற்றும் யூரோஆசியா எங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்தின் ஒரு அச்சாணியாக சேவைசெய்தது.

பெரும் மத்திய கிழக்கு எங்கிலும் கால்-நூற்றாண்டு காலப் போருக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியமானது, மிரட்டல், வன்முறை மற்றும் முழுவீச்சிலான போரின் மூலமாக உலகின் மிக முக்கியமான எண்ணெய்-உற்பத்தி பிராந்தியத்தில் கடிவாளமற்ற மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கின்ற அதன் முனைப்பை இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கிறது.

பிரதான ஐரோப்பிய சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை தகர்ப்பதற்காக வாஷிங்டனைக் கண்டித்தன. ஆனால் அவை அனைத்துமே ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை “தற்காப்பு” என்று கூறி வழிமொழிய விரைந்தன என்பதோடு, சூழ்நிலையை “தீவிரமாக்கும்விதத்தில்” தெஹ்ரான் எதையும் செய்யக் கூடாது, அதாவது, அதன் படைகள் படுகொலை செய்யப்படுவதை எதிர்ப்பில்லாமல் அது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. “ஈரான் இராணுவரீதியான ஆத்திரமூட்டல் அத்தனையில் இருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கோருவதோடு பிராந்திய மேலாதிக்கத்திற்கான உணர்ச்சித்தூண்டல்கள் அத்தனைக்கு எதிராகவும் அதனை எச்சரிக்கிறது” என்று பிரான்சின் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்று அறிவித்தது.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் விலகியதை ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் கண்டனம் செய்கின்றன, ஈரானை பொருளாதாரரீதியாக சுரண்டுவதற்கான அவற்றின் திட்டங்களுக்கு அது குறுக்கே வருகிறது என்பதும் ஈரானுடனான அமெரிக்காவின் ஒரு போரின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளைக் குறித்து அவை அஞ்சுகின்றன என்பதுமே அதற்கான காரணங்களாய் இருக்கின்றன. ஆயினும், மத்திய கிழக்கிலான எந்த இராணுவரீதியான மறுபிரிவினையிலும் வாஷிங்டனே தொடர்ந்தும் ஓட்டுநர் இருக்கையில் இருப்பதும், பேர்லின், இலண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவை மிஞ்சமீதமுள்ளவைகளுக்கு அடித்துக் கொள்ளும் நிலையில் விடப்படுகின்றன என்பதும் அவற்றின் மிகப்பெரும் அச்சமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. ஆகவே தான் ஈரான் அணு ஒப்பந்தத்தை ட்ரம்ப் தூக்கிவீசியதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த ஐரோப்பிய விவாதமானது, ஐரோப்பா மறுஆயுதபாணியாக்கத்தை வேகப்படுத்தவும் ஒரு சுயாதீனமான ஐரோப்பிய இராணுவத் தலையீட்டுப் படையை உருவாக்கவுமான அழைப்புகளைக் கொண்டு நிரம்பிவழிகிறது.

ஈரானின் முல்லா-தலைமை முதலாளித்துவ-தேசியவாத ஆட்சியானது இந்த வாரத்தின் நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்துள்ளது, உலுக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அரசாங்கம் இஸ்ரேலிய மூர்க்கத்தனத்தின் இலக்காக அது ஆகியிருப்பதையும் கூட பொதுவில் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. ஊடகங்கள், தொலைக்காட்சி, Fars செய்தி முகமை, மற்றும் ஈரானிய ஆட்சியுடன் இணைந்த மற்ற வலைத் தளங்கள் எல்லாமே இஸ்ரேலின் தாக்குதலை சிரியா மீதான ஒரு தோல்வியடைந்த தாக்குதலாக மட்டுமே சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

ட்ரம்ப் தேர்வானதைத் தொடர்ந்து, அணு ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்கு தெஹ்ரான் ஐரோப்பிய சக்திகளை நம்பியிருந்தது. மாறாக, பிரிட்டனும், பிரான்சும், ஜேர்மனியும் தெஹ்ரானிடம் இருந்து, சிரியா மற்றும் ஏமனில் அதன் இடைஞ்சலான நடவடிக்கைகளாக சொல்லப்படுவனவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட, மேலதிக விட்டுக்கொடுப்புகளுக்கான ட்ரம்ப்பின் கோரிக்கைகளின் பின்னால் அணிவகுத்தன — இவை ஒரு தனியான “பேச்சுவார்த்தை”யின் விடயப்பொருளாக இருக்க வேண்டுமே தவிர, இப்போதைய ஒப்பந்தத்தின் தலைவிதியுடன் உடனடியாகப் பிணைக்கப்படக் கூடாது என்பது அவற்றின் ஆலோசனையாக இருந்தது, அவ்வளவே வித்தியாசம்.

இஸ்ரேலின் தாக்குதலில் ரஷ்யாவும் உடந்தையாக இருந்தமை —அதேநாளில் முந்தைய சமயத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உடன் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு செலவிட்ட பத்து மணி நேரத்தின் போது மாஸ்கோவால் இதற்கு பச்சைக்கொடி காட்டப்பட்டிருந்தது என்பது தெளிவு— தெஹ்ரானுக்கு குறைவில்லாத கவலையளித்திருக்கிறது.

இவ்வாறாக, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தின் பொறிவுக்கு மட்டுமல்லாமல், சிரியாவில் இருந்து —லெபனானின் ஹெஸ்போல்லா மற்றும் ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனக் குழுக்களுடன் ஈரானின் உறவுகளைப் பராமரிப்பதற்கு இது இன்றியமையாததாக இருக்கிறது— அதனை விலக்கி வைப்பதற்கு பெரும் சக்திகளிடையே ஒரு “புரிதல்” ஒன்றிணைக்கப்படுகின்ற சாத்தியத்திற்கும் கூட ஈரான் இப்போது முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இறுதியாய் ஆனால் முக்கியத்துவத்தில் குறைவில்லாததாய், ஈரானில் சமூக நெருக்கடியும் அதிகரித்துச் செல்கிறது. கடந்த ஆண்டின் போதான சமயத்தில், அதிலும் 2018 இன் தொடக்கத்தில் நடந்த வெகுஜன வீதி-ஆர்ப்பாட்டங்களில் மிக அதிரடியாக, நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்ற ஈரானியத் தொழிலாள வர்க்கம், கடும்போக்கினர் என்பதாகக் கூறப்படுபவர்கள் உள்ளிட ஈரானிய உயரடுக்கின் அத்தனை பிரிவுகளாலும் பின்பற்றப்படுகின்ற கொடூரமான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை சவால் செய்வதற்கு முன்வந்திருக்கிறது.

கவலை கொண்டுள்ள ஈரானின் மதகுருமார்-முதலாளித்துவ உயரடுக்கு, இராணுவரீதியாக சாட்டையை விளாசுவதற்கு தெரிவு செய்யலாம்.

ஆயினும், ஈரானிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்துடன் ஒரு நெருக்கத்தை எட்டுவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும், அவ்வாறு செய்கையில், அது மேலும் சரணாகதி நிலையை மேற்கொண்டு, மேலதிக தொழிலாள-வர்க்க விரோத, முதலீட்டாளர்-ஆதரவுக் கொள்கைகள் உள்ளிட விட்டுக்கொடுப்புகளை நீட்டும் என்பதையே ஒவ்வொரு நடப்பும் சூசகம் செய்கிறது, புதன்கிழமையன்றான இஸ்ரேலின் தாக்குதலை ஒப்புக்கொள்ளவும் கூட தெஹ்ரான் தயங்குகின்ற செயலால் இது அடிக்கோடிட்டுக் காட்டப்படுவதாய் இருக்கிறது.

கடந்த நான்கு தசாப்தங்களது பெரும்பகுதியில், இஸ்லாமிக் குடியரசின் ஆட்சியாளர்கள், “அமெரிக்காவுக்கு சாவு” என்ற அவர்களது கோஷங்கள் எல்லாம் இருந்தபோதிலும், வாஷிங்டனுடன் இணக்கப்படுத்திக் கொள்வதற்கே செயலூக்கத்துடன் முனைந்து வந்திருக்கின்றனர். அதனால்தான் 1991 வளைகுடாப் போரில் தெஹ்ரான் அமெரிக்காவுக்கு ஓசையில்லாத ஆதரவை வழங்கியது, அத்துடன் 2001 ஆப்கானிஸ்தான் படையெடுப்பிலும் 2003 ஈராக் படையெடுப்பிலும் அமெரிக்காவுக்கு தளவாட மற்றும் அரசியல் ஆதரவை வழங்கியது.

இதெல்லாம் வாஷிங்டனுக்கு நன்கு தெரியும். உண்மையில், ட்ரம்ப்பும் அவரது ஆலோசகர்களும் இதனையே கணக்கிடுகின்றனர். கீழிருந்தான சமூக எதிர்ப்பு பெருகி வருவதைக் கண்டு மிரட்சியடைந்துள்ள ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தை, ஈரான் மீதான இராணுவ மற்றும் பொருளாதார நெருக்குதலை தீவிரப்படுத்துவதன் மூலமாக, தெஹ்ரான் மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான எந்த சவாலையும் வெளிப்படையான வகையில் கைவிடுவதோடு ஈரானின் பொருளாதாரத்தை வோல் ஸ்ட்ரீட்டின் கொள்ளைச் சூறையாடலுக்காய் திறந்து விடக் கோருகின்ற அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு சரணடையச் செய்ய நெருக்குவதற்கு வாஷிங்டன் கணக்குப் போடுகிறது.

90 ஆண்டுகளுக்கு முன்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சியாங் காய்-ஷேக்கின் முதலாளித்துவ கோமின்டாங்கிற்கு தன்னைக் கீழ்ப்படியச் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது வலியுறுத்தலை நியாயப்படுத்துவதற்காக ஸ்ராலின் முன்வைத்த கூற்றுக்களுக்கு பதிலளிக்கையில், லியோன் ட்ரொட்ஸ்கி இவ்வாறு விளக்கினார்:

“ஏகாதிபத்தியம் வெளியிலிருந்தபடி எந்திரத்தனமாக சீனாவின் அத்தனை வர்க்கங்களையும் ஒட்டவைத்து விடுவதாகக் கருதுவது பெரும் பிழையாகும்.... ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டமானது வர்க்கங்களின் அரசியல் பேதங்களை பலவீனப்படுத்துவதில்லை, மாறாக பலப்படுத்துகிறது... உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட பரந்த மக்களை எழுந்து நின்று ஆர்ப்பரிக்கச் செய்கின்ற ஒவ்வொன்றும் தேசிய முதலாளித்துவத்தை ஏகாதிபத்தியவாதிகளுடனான ஒரு வெளிப்படையான கூட்டுக்காய் தவிர்க்கவியலாமல் நெருக்குகிறது. ஏகாதிபத்திய ஒடுக்குமுறையால், முதலாளித்துவ வர்க்கத்திற்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளது பரந்த எண்ணிக்கையிலானோருக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் பலவீனமடைவதில்லை, மாறாக ஒவ்வொரு தீவிர மோதலின் சமயத்திலும் இரத்தக்களறியான உள்நாட்டுப் போரின் மட்டத்திற்காய் அது கூர்மையடைகிறது.” (சீனா தொடர்பாக லியோன் ட்ரொட்ஸ்கி, நியூயோர்க்: மோனாட் 1976, பக் 161).

உலகெங்கிலும் போலவே, மத்திய கிழக்கிலும், ஏகாதிபத்திய மூர்க்கத்தனம் மற்றும் போருக்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டல் மற்றும் நிரந்தப் புரட்சி முன்னோக்கு ஆகியவற்றை அடித்தளமாகக் கொள்ளச் செய்யப்பட வேண்டும்.

2018 ஆம் ஆண்டானது, உலகளாவிய அளவிலும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவிலும், தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் ஒரு மீளெழுச்சியால் குறிக்கப்பட்டிருக்கிறது. ஈரானிலான பாரிய ஆர்ப்பாட்டங்கள் தவிர, துனிசியா, இஸ்ரேல் மற்றும் துருக்கியிலும் அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பெரும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன.

போரையும் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளது கொள்ளைவேட்டைகளையும் எதிர்ப்பதற்கு இன மற்றும் மத-வகுப்பு எல்லைகளை —ஈரானிய, அரபு, துருக்கிய, குர்தீஷ் மற்றும் இஸ்ரேலிய— கடந்து பிராந்தியத்தின் பரந்த மக்களை அணிதிரட்டுகின்ற சமூக சக்தியை, சர்வதேசத் தொழிலாள வர்க்கம் என்ற இந்த சக்தி மட்டுமே கொண்டிருக்கிறது.

கொடூரமான பொருளாதாரத் தடைகள், போர் மிரட்டல்கள், இராணுவத் தாக்குதல்கள் அல்லது முழு-வீச்சிலான போர் என ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய முனைப்பு எந்த வடிவமானதாக இருந்தாலும் உலகெங்குமான தொழிலாளர்கள் அதனை எதிர்க்க வேண்டும். ஈரானிய மக்களை அடிமைப்படுத்தும் முனைப்புக்கு தலைமை கொடுக்கின்ற சக்திகள், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதலுக்குத் தலைமையில் இருக்கின்ற அதே சக்திகளே ஆகும்.

ஈரானுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்ப்பது என்பதன் அர்த்தம் சிக்கன நடவடிக்கைக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராய் வளர்ந்து செல்கின்ற ஈரானியத் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க இயக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் ஆதரிப்பது, அத்துடன் ஈரானிய முதலாளித்துவத்திற்கு எதிரானதும் ஈரானில் தொழிலாளர்’ அதிகாரத்திற்கு ஆதரவானதுமான போராட்டத்தை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மத்திய கிழக்கின் ஒரு சோசலிசக் கூட்டமைப்புக்கு ஆதரவாகவும் மத்திய கிழக்கின் பரந்த மக்களை அணிதிரட்டுவதுடன் இணைக்கின்ற ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு அதனை ஆயுதபாணியாக்கப் போராடுவது என்பதாகும்.