ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Sydney rally to defend Julian Assange: An important step forward

ஜூலியான் அசாஞ்ஜை பாதுகாப்பதற்கான சிட்னி பேரணி: முக்கியமானதொரு முன்னோக்கிய அடியெடுப்பு

Linda Tenenbaum
18 June 2018

விக்கிலீக்ஸின் ஆசிரியரான ஜூலியான் அசாஞ்ஜை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யப் போராடுவதற்காக நேற்று ஜூன் 17 ஞாயிறன்று, சிட்னியின் நகரசபை சதுக்கத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அசாஞ்ஜ் இலண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் அடைபட்டிருக்கும் நிலையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கும் அவர் பாதுகாப்பாக ஆஸ்திரேலியா திரும்புவதற்கும் பிரதமர் மால்கம் டர்ன்புல்லின் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்தப் பேரணி கோரியது.

நீண்டகாலமாய் சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவராக இருந்து வரும் லிண்டா டெனன்பாம் இந்தப் பேரணியை அறிமுகம் செய்து தலைமை தாங்கினார். SEP இன் தேசியச் செயலரான ஜேம்ஸ் கோகன்; மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் (IYSSE) தலைவராக இருக்கும் எவ்ரிம் யாஸ்கின்; மற்றும் பொதுக் கல்விக்கான கமிட்டியின் (CFPE) தேசிய ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சூ பிலிப்ஸ் ஆகியோர் இதில் உரையாற்றினர். ஜுலியன் அசாஞ்ஜின் விடுதலைக்கும் மற்றும் ஊடகங்களது விடுதலைக்குமான ஒரு சளைக்காத போராளியாக இருந்து வரும் நன்கறிந்த பத்திரிகையாளரும் ஆவணப்படைப்பாளியுமான ஜோன் பில்ஜரின் ஒரு சக்திவாய்ந்த உரையுடன் அது நிறைவடைந்தது.

ஜூலியான் அசாஞ்ஜை விடுவிக்க சிட்னியில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் பேரணி

அசாஞ்ஜை பாதுகாப்பது, போர், சமூக சமத்துவமின்மை, மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அத்தனை தாக்குதல்களுக்குமான மூல காரணமாக இருக்கின்ற ஒடுக்குமுறை முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்துடன் பிரிக்கவியலாது பின்னிப்பிணைந்ததாகும் என்ற அரசியல் கோட்பாட்டின் அடித்தளத்தில் இந்தப் பேரணி அமைந்திருந்தது.

பல மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட நூற்றுக்கணக்கானோர் இதில் பங்குபெற்று, உரையாற்றியவர்களுக்கு உற்சாகமான கரகோஷம் எழுப்பினர். ஒட்டுமொத்த ஸ்தாபக ஊடகங்களின் இருட்டடிப்பு, அத்துடன் அசாஞ்ஜை பாதுகாப்பதற்கு ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ அரசியல் அமைப்பும் காட்டுகின்ற குரோதம் ஆகியவற்றையும் மீறி அவர்கள் பங்கேற்றிருந்தனர்.

பேரணியைத் தொடக்கி வைத்து, டெனின்பாம் அறிவித்தார், “பத்திரிகையாளர்களுக்கு மக்களுக்கு உண்மைகளைத் தெரிவிக்க உள்ள உரிமை, கருத்து சுதந்திரத்திற்கான அவர்களது உரிமை, ஒவ்வொருவருக்கும் உண்மையைத் தெரிந்து கொள்ள இருக்கின்ற உரிமை ஆகிய ஜனநாயக உரிமைகளுக்கு உறுதிபூண்டிருக்கும் அத்தனை பேரையும் ஒன்றாகக் கொண்டுவருகின்ற ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்புப் பிரச்சாரத்தை ஆஸ்திரேலியாவில், நியூசிலாந்தில், மற்றும் சர்வதேச அளவில் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக இந்தப் பேரணியை சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. இவை மிக அடிப்படையான பிரச்சினைகளாகும். உண்மையின் மீதான, விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியான் அசாஞ்ஜின் மீதான ஒடுக்குமுறையானது, ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதுடன் கைகோர்த்து நடைபெறுகிறது.”

ஜேம்ஸ் கோகன், தனது உரையில், இந்தப் பேரணி “தொழிலாள வர்க்கத்திற்கு மிக முக்கியமானதாகும், ஏனென்றால் மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையின் அத்தனை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான மாபெரும் போராட்டத்தின் பகுதியாக இது இருக்கிறது” என்று அறிவித்தார்.

“அமெரிக்க ஜனாதிபதி ஒட்டுமொத்த நாடுகளையும் அணு ஆயுதங்களைக் கொண்டு ‘முழுமையாக அழித்து விடுவது’ குறித்து சர்வசாதாரணமாக பேசுகின்றதான இச்சமயத்தில்” தொழிலாள வர்க்கத்திற்குள்ளும் இளைஞர்கள் மத்தியிலும் போர் அபாயம் குறித்த விழிப்புணர்வும் கவலைகளும் அதிகரித்துச் செல்கிறது என்பதை கோகன் விளக்கினார்.

“உலக பிற்போக்குத்தனத்தின் மற்றும் முதலாளித்துவ சீர்குலைவின் கருமையமாக இருக்கும் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் மீண்டும் போராட்டத்திற்குள் வருவது மிகவும் தீர்மானகரமான முக்கியத்துவம் கொண்டதாகும்” என்று கோகன் தொடர்ந்து கூறினார்.

“அமெரிக்க ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கம் குறித்து கொண்டிருக்கும் அச்சத்தைப் புரிந்து கொள்ளாமல், விக்கிலீக்ஸையும் அசாஞ்ஜையும் வாய்மூடச் செய்வதற்கு அது கொண்டிருக்கும் தீர்மானகரமான உறுதியை ஒருவர் புரிந்து கொள்ள முடியாது. தொழிலாள வர்க்கத்திற்கும், சாமானிய மக்களுக்கும் இணையம் வழங்குகின்ற சக்தியைக் குறித்து அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களும் அவற்றின் பிரதிநிதிகளும் பீதியடைந்துள்ளனர்.

“இணையம் அவர்களுக்கு மாற்றுப் பகுப்பாய்வுக்கும் செய்திகளுக்கும் அணுகல் வழங்குகிறது; தகவல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் திறனை வழங்குகிறது; தேசிய எல்லைகளைக் கடந்து அரசியல்ரீதியாக ஒழுங்குபடுவதற்கும் ஒரு சர்வதேச சக்தியாக ஐக்கியப்படுவதற்கும் வழியமைக்கிறது.”

அவர் கூறினார், “கடந்த மூன்று வார காலத்தின் போது, இந்தப் பேரணியையும், அத்துடன் ஜூன் 19 அன்று நடைபெறுகின்ற விழிப்புணர்வுக் கூட்டங்களையும் நாங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தில் அசாஞ்ஜ்க்கும் விக்கிலீக்ஸுக்கும் எந்த மட்டத்திற்கு ஆதரவு இருக்கிறது என்பதை நாங்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறோம்.”

“ஸ்தாபகம் அவரைக் கைவிட்டிருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் அவரைக் கைவிடவில்லை. அசாஞ்ஜ் உடனடியான அபாயத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில், அரசாங்கங்களும் அரசியல் கட்சிகளும் இப்போது என்ன செய்கின்றன என்பது ஒருபோதும் மறக்கப்படப் போவதில்லை.”

ஜோன் பில்ஜர் வழங்கிய உரை, ஜூலியான் அசாஞ்ஜை ஓநாய்களிடம் விட்டுவிட்டிருந்த அரசியல்வாதிகள், செய்தித்தாள் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் தாராளவாதிகள், மற்றும் “முன்னாள்-இடதுகள்” அனைவரின் மீதுமான ஒரு கடுமையான மற்றும் கூர்மையான அம்பலப்படுத்தலை வழங்கியது. ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பை அது கொண்டிருந்தது.

“ஜூலியான் அசாஞ்ஜை எனக்கு நன்கு தெரியும்” என்று அவர் ஆரம்பித்தார். “அவரை ஒரு நெருங்கிய நண்பராக, அசாதாரண மனத்தைரியமும் தீரமும் கொண்ட ஒரு மனிதராக நான் கருதுகிறேன். பொய்களும் அவதூறுகளும் முடிவில்லாமல், பழிவாங்கும் நோக்கத்துடன், நம்பிக்கைத்துரோகமான விதத்தில் ஒரு சுனாமியைப் போல் அவரைச் சூழ்ந்திருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன்; அவர்கள் ஏன் அவர் மீது சேறு வீசுகின்றனர் என்பது எனக்குத் தெரியும்.

“2008 இல், விக்கிலீக்ஸையும் அசாஞ்ஜையும் சேர்த்து அழிப்பதற்கான ஒரு திட்டம் 2008, மார்ச் 8 தேதியிட்ட ஒரு உயர்நிலை இரகசிய ஆவணம் ஒன்றில் வகுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இணையவழி எதிர்-உளவு மதிப்பீடுகள் பிரிவுதான் இதனை உருவாக்கியவர்கள். விக்கிலீக்ஸின் ‘ஈர்ப்பு மையமாக’ இருக்கின்ற ‘நம்பிக்கை உணர்வை’ அழிப்பது எத்தனை முக்கியமானது என்பதை அவர்கள் விவரித்திருந்தனர்.

“’அம்பலப்படுத்தல் [மற்றும்] குற்றவியல் வழக்குத்தொடரல்களது’ மிரட்டல்கள் மற்றும் மரியாதையின் மீதான ஒரு இடைவிடாத தாக்குதல் ஆகியவற்றைக் கொண்டுதான் இதனை சாதிக்க முடியும் என்று அவர்கள் எழுதினர். விக்கிலீக்ஸையும் அதன் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளரையும் வாய்மூடச் செய்வதும் குற்றப்படுத்துவதுமே நோக்கமாய் இருந்தது. ஒரு ஒற்றை மனிதரின் மீதும் கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையான கோட்பாட்டின் மீதும் ஒரு போர் நடத்த அவர்கள் திட்டமிட்டதைப் போல அது இருந்தது.

“தனிமனித அவதூறு தான் அவர்களது பிரதான ஆயுதமாக இருக்கும். அவர்களது பயிற்றுவிக்கப்பட்ட படையினர், உள்ளதை உள்ளபடி நமக்கு உண்மையை சொல்ல வேண்டிய ஊடகங்களில் அணிவகுத்திருக்கின்றனர். இந்த பத்திரிகையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஒருவரும் சொல்லவில்லை என்பது ஒரு நகைமுரண். ஜேர்மன் ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்து அதற்கு சேவைசெய்த போர்க்கால பிரான்சின் விச்சி அரசாங்கத்தை ஒட்டி, இவர்களை விச்சி பத்திரிகையாளர்கள் என்றே நான் கூறுவேன்.”

பில்ஜர் ”விச்சி”யுடன் உருவகப்படுத்தியது ஒரு மிகச் சரியான, குறிப்பாக இன்று மிகப் பொருத்தமானதாக இருக்கக் கூடிய உருவகமாக இருந்தது.

ஜூலியான் அசாஞ்ஜைப் பாதுகாக்க பல ஆண்டு காலத்தில் எந்தவொரு நாட்டிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் பேரணியான இதனை, போலி-இடது அமைப்புகளின் ஒரு ஒட்டுமொத்த அடுக்கும் புறக்கணித்தன.

அந்த கோழைத்தனமான வட்டத்தின் “அடையாள அரசியலுக்கும்” ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கும் இடையிலான உறவை இதைவிட வேறொன்றும் தெள்ளத் தெளிவாக அம்பலப்படுத்தி விட முடியாது. தத்தமது அரசாங்கங்களுக்குப் பின்னால் அணிவகுத்துக் கொள்வதற்கும் இந்த தீரமிக்க இரகசியத் தகவல் வழங்குனரின் எந்தவிதமான பாதுகாத்தலையும் கைதுறப்பதற்கும், ஸ்வீடனில் அசாஞ்ஜ்க்கு எதிராக இட்டுக்கட்டப்பட்டிருந்த “வல்லுறவாளர்” என்ற கழிசடையான அவதூறுப் பிரச்சாரத்தை அவை பயன்படுத்திக் கொண்டன.

இந்த வசதியான, சுய-நலமிக்க மற்றும் தொழிலாள-வர்க்க விரோத அடுக்கிற்கு எதிராக பில்ஜர் வலியுறுத்தினார், “சூறையாடும் சக்தியை கணக்கில் பதியும்படி செய்ததில், என் வாழ்நாளில் நான் கண்டிருக்கக் கூடிய எந்தவொரு புலனாய்வு இதழியலையும், விக்கிலீக்ஸ் செய்திருக்கும் முக்கியத்துவத்திற்கு நிகராக என்னால் கூற முடியாது. ஒரு-பக்கமான அறநெறித் திரையை பின்னால் தள்ளி, தாராளவாத ஜனநாயகங்களின் ஏகாதிபத்தியத்தை, முடிவற்ற போர்களுக்கும் கிரீன்ஃபெல் அடுக்குமாடி கட்டிடம் முதல் காஸா வரையிலும் “வாழப் பிரயோசனமற்ற” வாழ்க்கைகள் பிளவுபடுத்தப்பட்டு சீரழிக்கப்படுவதற்கான உறுதிப்பாட்டை அம்பலப்படுத்தியதைப் போன்றதாகும் அது.”

இந்தப் பேரணி தனியொரு நிகழ்வு மட்டும் அல்ல. ஜூலியான் அசாஞ்ஜின் விடுதலைக்கான போராட்டத்தை உலகெங்கிலும் நீட்சி செய்வதையும் அபிவிருத்தி செய்வதையும், அத்துடன் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக சக்தியை அணிதிரட்டுவதையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடர்ந்து முன்னெடுக்கும். அத்தகையதொரு போராட்டம் ஏகாதிபத்தியத்திற்கு-எதிரான, போருக்கு-எதிரான மற்றும் சோசலிச முன்னோக்கு ஒன்றின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட முடியும் என்ற உண்மையை ஞாயிறன்றான பேரணி அடிக்கோடிட்டுக் காட்டியது.