ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Ahead of Brussels summit, EU steps up attacks on refugees

புரூசெல்ஸ் மாநாட்டுக்கு முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியம் அகதிகள் மீதான தாக்குதல்களை அதிகரிக்கிறது

By Alex Lantier
28 June 2018

இன்று புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய மாநாடு தொடங்குகின்ற நிலையில், அகதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளைக் கோர ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வருகின்றன.

செவ்வாயன்று, ஆஸ்திரியா சுலோவேனியாவுடனான அதன் எல்லையை மூட கனரக ஆயுதமேந்திய கலக-தடுப்பு போலிஸ், கவச வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் ஒரு பரந்த படையை அணித்திரட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைவர் பதவியை ஏற்க தயாராகி வருகின்ற வியன்னா, இப்போது நடத்தப்பட்டு வருகின்ற அகதிகள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்த இருப்பதை சமிக்ஞை செய்துள்ளது.

இத்தாலியின் புதிய வலதுசாரி அரசாங்கம் மீட்புக் கப்பல் Aquarius இல் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பட்டினியில் தவிக்க விட்ட பின்னர், லிபியாவை ஒட்டிய மத்திய தரைக்கடல் பகுதியில் 220 அகதிகள் நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள் வந்தன. இத்தாலியின் நவ-பாசிசவாத உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி, மீட்புக் கப்பல் லைஃப்லைனை இத்தாலியில் கரை ஒதுங்க அனுமதிக்க மறுத்து விடையிறுத்தார். ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவி பெற்ற லிபிய கடல் ரோந்துப்படையும் 460 புலம்பெயர்ந்தோரை ஏற்றி வந்த கப்பல்களை மறித்து, அவர்களை லிபிய காவல் முகாம்களுக்கு அனுப்பியது.

நேட்டோவின் 2011 லிபிய போருக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து அமைக்கப்பட்ட முகாம்களில், பத்தாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பூமியிலேயே நரகத்தை அனுப்பவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய லிபிய முகாம்களில் அகதிகள் எவ்வாறு அவமதிக்கப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, அடிமையாக விற்கப்படுகிறார்கள் அல்லது கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் அறிக்கைகள் ஆவணப்படுத்தி உள்ளன. பிரெஞ்சு அரசாங்கத்தின் கருத்தை எதிரொலிக்கும் முகமாக, சல்வீனி இப்போது லிபியாவில் இன்னும் கூடுதல் முகாம்கள் அமைக்க அழைப்பு விடுத்து வருகிறார் — அதேவேளையில் ஈராக் மற்றும் சிரியா போரிலிருந்து தப்பி வரும் மில்லியன் கணக்கானவர்களைக் கைது செய்ய, துருக்கி மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த அகதிகள் ஐரோப்பாவை எட்டுவதிலிருந்து அவர்களைத் தடுத்து வைக்க தொல்லைப்படுத்துவதை தொடருமாறு ஐரோப்பிய ஒன்றியம் இந்நாடுகளுக்கு அழுத்தமளித்து வருகிறது. கடந்த ஆண்டு, சஹாரா பாலைவனத்தின் பின்-தெற்கு பகுதியில் 13,000 க்கும் அதிகமான ஆபிரிக்க அகதிகளை அல்ஜீரியா மரணஊர்வலத்திற்கு அனுப்பியது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் பெடிரிகா மொஹரினி, வட ஆபிரிக்காவில் "புலம்பெயர்வுக்கான கலந்தாய்வுக்கு" இன்னும் கூடுதல் நிதி ஒதுக்க சூளுரைத்ததன் மூலமாக மட்டுமே இந்த செய்திக்கு விடையிறுத்தார்.

இப்போது இந்த கொள்கைகள் ஐரோப்பாவுக்கு உள்ளேயே வரவிருக்கின்றன. புலம்பெயர்வு மீதான இவ்வாரயிறுதி ஐரோப்பிய ஒன்றிய குறு-மாநாடு தோல்வியடைந்ததை அடுத்து, இத்தாலி மற்றும் கிரீஸில் உள்ள புலம்பெயர்ந்தோர்களுக்கான "அகதிகளுக்கான எல்லைப்புற" ஐரோப்பிய ஒன்றிய முகாம்களின் வலையமைப்பை —இவை சித்திரவதை முகாம்களை விட சற்று மேம்பட்டவை— விரிவாக்குவதற்கு போட்டிப்போட்டு கொண்டு முன்மொழிவுகள் வெளியாயின. ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் டொனால்ட் டுஸ்க் அல்பேனியா மற்றும் துனிசியாவில் முகாம்கள் அமைக்க அழைப்புவிடுத்தார், அதேவேளையில் பாரீசும் மாட்ரிட்டும் பிரதான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் "முற்றிலும் அடைக்கப்பட்ட காவல் மையங்களை" முன்மொழிந்தன.

சல்வீனி, 600,000 பேரை நாடு கடத்துவதற்கு சூளுரைத்த பின்னர், நாஜிக்களால் இனப்படுகொலைக்காக இலக்கு வைக்கப்பட்ட ரோமா மக்களைப் பதிவு செய்ய வைக்க நகர்ந்து வருகிறார், மேலும் அவர்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்கும் அழைப்பு விடுக்கிறார், “துரதிருஷ்டவசமாக, அவர்களில் இத்தாலியர்களை நாம் தங்க வைக்க வேண்டியுள்ளது,” என்பதையும் இதனூடாக சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பிய முதலாளித்துவம் நாஜி சகாப்தத்திற்குப் பின்னர் கண்டிராத அளவில் பாரிய அரசு பயங்கரம் மற்றும் இன சுத்திகரிப்பு கொள்கைகளை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில், ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் அகதிகள் காட்டுமிராண்டித்தனமாக கையாளப்படுவதைக் குறித்து அதிர்ந்து போயுள்ளனர். எவ்வாறிருப்பினும், இந்த தாக்குதலை எதிர்த்து போராட, ஒரு புரட்சிகர முன்னோக்கு மற்றும் மூலோபாயம் அவசியமாகும். ஆளும் உயரடுக்கின் எல்லா கன்னைகளும் அகதிகளைத் துன்புறுத்துவதை ஆதரிக்கின்ற நிலையில், அதன் இந்த அல்லது அந்த கன்னைக்கு தார்மீக முறையீடுகள் செய்வது, உலக முதலாளித்துவ முறிவில் வேரூன்றியுள்ள ஒரு நெருக்கடியைத் தீர்க்காது.

ஒரு சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான, சர்வதேச அணித்திரள்வு மூலமாகவே இந்த பாசிசவாத தாக்குதலை எதிர்க்க முடியும்.

இப்போதைய இந்த அகதிகள் நெருக்கடி இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிகப்பெரிய நெருக்கடியாகும். இது, 1991 சோவியத் ஒன்றிய கலைப்புக்குப் பின்னர், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா எங்கிலும், பரந்த மக்கள் எதிர்ப்பை மதிக்காமல் நடத்தப்பட்ட ஒரு கால்-நூற்றாண்டு நவ-காலனித்துவ போர்கள் மற்றும் தலையீடுகளில் வேரூன்றியுள்ளது. ஈராக், பால்கன், ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா, மாலி மற்றும் சாஹெல் எங்கிலுமான போர்களில் இருந்து 60 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தப்பியோடி வந்துள்ளனர்.

வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய "கூட்டாளிகளுக்கு" இடையே ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நேரடியான மோதல்கள் எழுந்துள்ளதுடன் சேர்ந்து, இந்த சர்வதேச நெருக்கடி ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளால் பரஸ்பரம் வர்த்தக-போர் வரிவிதிப்புகள் திணிக்கப்பட்டதன் மீது ஜி7 மாநாடு தோல்வியடைந்ததை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு ஓர் இராணுவ போட்டியாளராக அபிவிருத்தி அடைய நோக்கம் கொண்டு வருகிறது. கடிவாளமற்ற இராணுவவாதத்தை நோக்கிய இந்த நகர்வும், சர்வதேச அளவில் ஒன்றோடொன்று போட்டியிடும் வர்த்தக அணிகள் உருவாவதும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுடன் கை கோர்த்து செல்கின்றன.

எச்சரிக்கை மணி ஒலித்தாகப்பட வேண்டும்: 1930 களைப் போலவே, பாசிசவாத கொள்கைகள் வெறுமனே அகதிகளை மட்டுமல்ல மாறாக ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் இலக்கில் வைக்கிறது. கடந்த ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் Generation What கருத்துக்கணிப்பு, 35 வயதுக்கு குறைந்த ஐரோப்பியர்களில் பெரும்பான்மையினர் இராணுவத்தில் சேர்வதை எதிர்க்கின்றனர் ஆனால் "பாரிய எழுச்சியில்" பங்கெடுப்பதை ஆதரிக்கின்றனர் என்பதைக் கண்டறிந்தது. ஐரோப்பிய ஒன்றியம் அதன் தடுப்புக்காவல் முகாம்கள் மற்றும் போலிஸ் முகமைகள் ஏற்படுத்துவதைத் தொழிலாளர்கள் அனுமதித்தால், இந்த போலிஸ்-அரசு பயங்கரவாத எந்திரம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பை நோக்கி திருப்பப்படும்.

நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை போர் எந்திரத்திற்குள் பாய்ச்சுவதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளுக்கு எதிராக ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்கள் அதிகரித்தளவில் அணிதிரண்டு வருகின்றனர். பிரான்சில் இரயில்வே துறை, விமானச் சேவை மற்றும் எரிசக்தித்துறை தொழிலாளர்கள், ஜேர்மனி மற்றும் துருக்கியில் உலோகத்துறை தொழிலாளர்கள், ஸ்பெயினில் விமானச்சேவை மற்றும் சில்லறை விற்பனைத்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் தீவிர வலதை நோக்கி திருப்பம் எடுத்திருப்பதானது, 1930 களைப் போலவே, எந்த வர்க்கம் ஆட்சி செலுத்துவது என்பதை தீர்த்துக்கொள்வதற்கான பிரச்சினை என்பதற்கு ஓர் அறிகுறியாகும். அரசு அதிகாரத்திற்கான ஒரு பொதுவான போராட்டத்தில் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த போராட்டம், ஐரோப்பா எங்கிலுமான தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் மற்றும் கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பொடெமோஸ், பிரான்சில் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி, அல்லது ஜேர்மனியில் இடது கட்சி போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளுக்கு எதிராக மட்டுமே முன்நகர முடியும். லிபிய மற்றும் சிரிய போர்களை "ஜனநாயக புரட்சிகள்" என்று ஆதரித்த இவை, இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோத நடவடிக்கையின் தரப்பில் நிற்கின்றன அல்லது உண்மையில் சொல்லப்போனால் செயலூக்கத்துடன் மேற்பார்வையிட்டு வருகின்றன.

சிரிசா அரசாங்கம் கிரீஸில் ஐரோப்பிய ஒன்றியத்தின் “எல்லைப்புற அகதிகள் முகாம்களை" நடத்தி வருகிறது, அதேவேளையில் பொடெமோஸ் ஸ்பெயினில் சமூக ஜனநாயக சிறுபான்மை அரசாங்கத்திற்கு பிரதான முண்டுகோலாக உள்ளதுடன், Aquarius மீட்புக்கப்பலை ஸ்பெயின் ஏற்றுக் கொண்ட பின்னர், ஏனைய இடங்களின் புலம்பெயர்வு-விரோத கொள்கைகளிலிருந்து தப்பி வரும் புலம்பெயர்ந்தோருக்கான ஐரோப்பிய அகதிகள் கூடமாக அது ஸ்பெயின் சேவையாற்றாது என்று அது வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாக்குதலை எதிர்ப்பதற்கு, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் போலிஸ் சோதனைகளுக்கு எதிரான எதிர்ப்பையும் வேலைநிறுத்தங்களையும் ஒழுங்கமைக்க, வேலையிடங்களிலும் வசிப்பிட பகுதிகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட சுயாதீயமான குழுக்கள் அவசியமாகும். அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்புக்கு பின்வருவன அவசியம்:

* மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பிய மற்றும் அமெரிக்க துருப்புகள் திரும்பப் பெறப்பட்டு, அப்பகுதிகளில் காவல் முகாம்கள் கலைக்கப்பட வேண்டும். அகதிகள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வர அனுமதிக்கப்பட வேண்டும்.

* ஐரோப்பிய ஒன்றியத்தின் "அகதிகளின் விபர சேகரிப்புக்கான" தடுப்புக்காவல் முகாம்கள் கலைக்கப்பட வேண்டும், அகதிகளுக்கும் மற்றும் ஐரோப்பாவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

* ஐரோப்பிய ஒன்றியத்தின் ஃப்ரொன்டெக்ஸ் (Frontex) எல்லை போலிஸ் கலைக்கப்பட வேண்டும்.

* ஐரோப்பிய ஒன்றிய நாடு கடத்தும் எந்திரத்துடனும், இன சுத்திகரிப்பு தயாரிப்பு செய்து வரும் எல்லா அரசு போலிஸ் உடனும் ஒத்துழையாமை பேண வேண்டும்.

* புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சொந்த நாட்டு தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒருபோல பொதுச் சேவைகள், பயிற்சிகள் மற்றும் வேலைகளுக்காக, ட்ரில்லியன் கணக்கான யூரோக்களை ஒதுக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய வங்கி பிணையெடுப்புகள் மூலமாக ஒரு தசாப்தமாக கொள்ளையடிக்கப்பட்ட செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, உழைக்கும் மக்களின் அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.

விரைவாக வலதுசாரி ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்ந்து வரும் ஐரோப்பிய முதலாளித்துவத்துடன் மேலெழுந்து வரும் அதன் மோதலில், தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர பாதையை ஏற்பதைத் தவிர வேறெந்த வாய்ப்பும் இருக்காது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையும் அதற்கு ஓராண்டுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டமையும், போர்கள் மற்றும் சமூக புரட்சிகளின் 20 ஆம் நூற்றாண்டு சகாப்தத்தின் முடிவைச் சமிக்ஞை செய்ததாக கூறப்பட்ட வாதங்களை, சம்பவங்கள் கிழித்தெறிந்து வருகின்றன. அக்டோபர் 1917 புரட்சியில் உருவடிவமாக இருந்த விட்டுக்கொடுப்பற்ற போராட்டம் மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் பாரம்பரியங்களுக்குத் திரும்புவது, 21 ஆம் நூற்றாண்டின் புதிய பேரழிவுகளைத் தவிர்க்க இன்றியமையாததாகும்.

அனைத்திற்கும் மேலாக, முக்கியமான பணி, சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியமாகும். ஐரோப்பாவில், இதன் அர்த்தம், முதலாளித்துவ ஐரோப்பிய ஒன்றியத்தைத் தூக்கிவீசி, ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளைக் கொண்டு பிரதியீடு செய்வதாகும்.