ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One year since the Grenfell inferno

கிரீன்ஃபெல் பெருந்தீ விபத்துக்கு பின்னர் ஓராண்டு

Statement of the Socialist Equality Party (UK)
14 June 2018

ஓராண்டுக்கு முன்னர், மேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட, பிரிட்டிஷ் வரலாற்றிலேயே மிகப்பெரும் பயங்கர தீவிபத்தில் 72 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 14, 2017 இன் அதிகாலையில் என்ன நடந்ததோ அதுவொரு சமூக படுகொலையாகும். இந்த வார்த்தை முதன்முதலில் பிரெடெரிக் ஏங்கெல்ஸால் இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை என்ற அவரது புகழ்பெற்ற ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. தொழில்துறை முதலாளித்துவத்தின் ஆரம்பத்தில், 1845 இல் எழுதுகையில், அவர் விவரித்தார், “அதிகாலையில் ஒன்றுகூடிய ஆயிரக் கணக்கான பாட்டாளிகளை, சமூகம் தவிர்க்கவியலாமல் இயற்கை மரணமல்லாத ஒன்றை சந்திக்கும் அத்தகைய ஒரு நிலைமையில் நிறுத்துகையில்…" "அதற்கு மேலும் அத்தகைய நிலைமைகள் தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கப்படுகையில், அந்த நடவடிக்கை தனியொருவரின் நடவடிக்கை போலவே அதேயளவுக்கு நிச்சயமாக படுகொலை தான்.”

ஓர் ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறை மீதான—அதாவது முதலாளித்துவம் மீதான—ஏங்கெல்ஸின் இந்த குற்றப்பத்திரிகை 150 ஆண்டுகளுக்கு அதிகமான காலத்துக்கு பின்னரும் பொருத்தமாக உள்ளது.

இது ஏனென்றால், உலகின் உழைக்கும் மக்களின் பொதுவான அனுபவத்தை அது பேசுகிறது. அமெரிக்காவில் மிச்சிகன், ஃபிளின்ட் நகரில் குடிநீர் விஷமாக்கப்பட்டதில் இருந்து, பலர் கொல்லப்பட்ட கொழும்பு மற்றும் சியாரா லியோனில் நடந்த குப்பை குவியல்களின் சரிவு மற்றும் மண்சரிவுகள் வரையில், உலகிலேயே மிகப் பணக்கார நகரங்களில் ஒன்றான இலண்டனில் முற்றிலும் தடுக்கத்திருக்கக்கூடிய அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதி தீவிபத்து வரையில், தனது செல்வசெழிப்புக்காக சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அடிபணிய செய்திருக்கும் ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல் செல்வந்த தட்டுக்களால், உழைக்கும் மக்களின் உயிர்கள் வீணடிப்பதற்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

கிரீன்ஃபெல் சம்பவம், அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் பழமைவாத கட்சி தலைமையிலான அரசாங்கங்களது நெறிமுறைகளைத் தளர்த்தும் கொள்கைகளின் நேரடி விளைவாகும்.

மார்கரெட் தாட்சரின் “சமூகம் என்பது போன்றவொன்று கிடையாது,” என்பதிலிருந்து, “அருவருக்கத்தக்க செல்வத்தைப் பெறுவதில் மக்களை அதிகளவில் ஆசுவாசப்படுத்தி" வைப்பது மீதான பிளேயர் அரசாங்கத்தின் வலியுறுத்தலைக் கடந்து, “மிதமிஞ்சிய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எனும்… பிரிட்டிஷ் வணிகங்களின் குரல்வளையைச் சுற்றிய ஆல்பட்ராஸ் (albatross) பறவையைக்" "கொல்வதற்கான" டேவிட் கேமரோனின் சூளுரை வரையில், தொழிலாளர்களின் வாழ்க்கை தரங்களும் நிலைமைகளும் பிரதான பெருநிறுவனங்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களின் வங்கி கணக்குகளை நிரப்புவதற்காக சீரழிக்கப்பட்டன.

தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான இந்த தாக்குதல், இலண்டனின் மிகப் பணக்கார அதிகார வட்டாரமான கென்சிங்டனின் ரோயல் போரோ மற்றும் செல்சி (RBKC) இல் மிகக் கொடூரமான வெளிப்பாடுகளைக் கண்டது.

பணத்தைச் சேமிப்பதற்காக அதன் புறத்தோற்றத்தை அலங்கரித்த அதேவேளையில், கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு எளிதில் தீப்பற்றக்கூடிய வெப்பத்தடுப்புபூச்சும் உலோகப்பொதியும் சுற்றப்பட்டு, ஒரு மரணப்பொறியாக அது மாற்றப்பட்டிருந்தது. கட்டிடத்தின் உள்ளே பாதுகாப்பே கிடையாது, பொதுவான நெருப்பு எச்சரிக்கை ஒலிப்பான் இல்லை, நீர்பீய்ச்சிகள் இல்லை, தப்பிப்பதற்கு ஒரேயொரு சிறிய படிக்கட்டு வழி மட்டுமே இருந்தது. இதன் விளைவாக, நான்காம் மாடியில் ஒரு சிறிய அறையில் பிடித்த நெருப்பு அந்த ஒட்டுமொத்த 24 மாடி கட்டிடத்தையும் ஒரு சில நிமிடங்களில் சுற்றி வளைத்து பரவியது. இந்த நெருப்பைக் கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர்கள் எஞ்சியவற்றுக்கு எதிராகப் போராடினார்கள்.

கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளில் உயிர்பிழைத்தவர்களை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை, அவர்களில் பலரால் உண்டு, உறங்கி, உடை மாற்ற மட்டுமே முடிந்ததற்காக உள்ளூர்வாசிகளின் சுயநலமில்லா உதவிகளுக்கு தான் நன்றி கூற வேண்டும். 69 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அரசு ஒப்புக் கொண்ட அதேவேளையில், RBKC 74 குடும்பங்களை அவர்கள் தப்பி வந்த இடத்திற்கே இப்போது மீண்டும் அவர்கள் திரும்ப வேண்டுமென்றும் இல்லையென்றால் காலவரையின்றி வீடற்ற நிலையை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், அவர்கள் கவுன்சில் மூலமாக வாடகையில் இருக்கும் அவர்களின் உரிமைகளை இழக்கக்கூடுமென்றும் அச்சுறுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்துக்குப் பின்னர், உயிர்பிழைத்தவர்களும், அவர்களின் உறவினர்களும் மற்றவர்களும் இதற்கு பொறுப்பான அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவனங்களை நீதிக்கு முன் கொண்டு வருமாறு கோரியதுடன், “குறைந்தபட்சம் இந்த கோடைகால இறுதிக்குள் ஓர் இடைக்கால அறிக்கை தயார்" செய்து, "இந்த பெருந்துயரம் முழுமையாக விசாரிக்கப்படுவதை உறுதிப்படுத்த" ஒரு "முழுமையான, சுதந்திரமான பொது விசாரணை" நடத்தப்படுமென அறிவிக்குமாறு பிரதம மந்திரி தெரேசா மே ஐ நிர்பந்தித்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி அப்போது எச்சரிக்கையில், “அதுபோன்ற எதுவொன்றும் ஒருபோதும் நடக்காது. ஆளும் உயரடுக்கால் அழைப்புவிடுக்கப்படும் ஒவ்வொரு பொது விசாரணையும் போலவே இதுவும் ஒரு கண்துடைப்பாக போய் முடியும்,” என்று குறிப்பிட்டது.

ஏறத்தாழ ஓராண்டு காலம் ஆகிவிட்டது, இந்த ஸ்தாபகத்தின் ஒரு தூணான சர் மார்டின் மூர்-பிக் (Sir Martin Moore-Bick) தலைமையிலான அந்த பொது விசாரணை ஒன்றையும் தயாரிக்கவில்லை. அதன் நோக்கம் உண்மையை வெளிக்கொணர்வதல்ல, மாறாக அதை மூடிமறைப்பதாகும்; குற்றவாளியை கணக்கில் கொண்டு வருவதல்ல மாறாக கிரீன்ஃபெல் கட்டிடத்தைப் "புதுப்பிக்க" கையெழுத்திட்ட, மத்திய மற்றும் உள்ளாட்சி அரசாங்கத்திலும் மற்றும் பெருநிறுவன அமைப்புகளிலும் உள்ள குற்றவாளிகளைப் பாதுகாப்பதாகும்.

இதை 2005 விசாரணைகள் சட்டம் தெளிவுபடுத்துகிறது, அது குறிப்பிடுகிறது, “ஒரு விசாரணை குழு, எந்தவொரு தனிநபரின் குடியுரிமை கடமைப்பாடுகள் அல்லது குற்ற பொறுப்புக்கள் மீது தீர்ப்பு வழங்க முடியாது, அவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரமும் அதற்கு கிடையாது.” மூர்-பிக் அவரே கூட, மே உடன் உடன்பட்டு, “சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தன்மை" மீதான பிரச்சினைகள் உரையாடப்படக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளார்.

சமூக படுகொலையுடன் வர்க்க அநீதியும் சேர்ந்து கொள்கிறது.

கிரீன்ஃபெல் தீவிபத்து மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களாக விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரை வழக்கில் இழுக்க சிறிதும் காலங்கடத்தப்பட தேவையில்லை என்றாலும் கூட, 72 பேர் கொல்லப்பட்ட அந்த பெருந்தீவிபத்தில் சம்பந்தப்படுத்தி மகாநகர போலிஸின் குற்ற விசாரணையில் ஒரேயொரு நபர் கூட —குற்றப்பதிவு செய்யப்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க— கைது கூட செய்யப்படவில்லை!

காயத்துடன் அவமதிப்பைச் சேர்க்கும் விதத்தில், இலண்டன் தீயணைப்புப் படையினர் அங்கே வசித்தவர்களை "இருந்த இடத்திலேயே" இருக்குமாறு ஆலோசனை வழங்கியும் அதை மீறியதால் ஏற்பட்டிருக்கக்கூடிய குற்றங்கள் சம்பந்தமானதை மகாநகர போலிஸ் இலக்கில் வைக்க இருப்பதாக விசாரணை தொடங்கியதும் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவுரை மிகவும் ஆபத்தானதாக நிரூபணமானது ஏனென்றால் தீயணைப்புப் படையினரின் ஒருங்கிணைந்த குழு "பல்வேறு" பாதுகாப்பு குறைபாடுகளை விவரித்திருந்தது, அதாவது அக்கட்டிடம் "பெரிதும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய மரண பொறியாக" இருந்தது, அதில் தீயணைப்பு படையினர்கள் "சாத்தியமில்லாத சூழலில்" விடப்பட்டார்கள் என்ற உண்மை குறித்து ஒரு வார்த்தையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆளும் உயரடுக்கு க்ரீன்ஃபெல் நாசத்திற்கு காரணமான நிஜமான குற்றவாளிகளது குற்றத்தைப் பின்தொடர மறுக்கிறது என்பது, அதற்கு அடுத்த பக்கத்தில் அச்சம்பவங்களைக் குறித்த உண்மையை ஸ்தாபிப்பதற்கு போராடும் எவரொருவரையும் மவுனமாக்க அவர்கள் தீர்மானமாக இருக்கிறார்கள் என்பதுடன் பொருந்தி உள்ளது.

க்ரீன்ஃபெல் நடவடிக்கை குழுவின் பாகமாக இருக்கும் Joe Delaney மற்றும் Edward Daffarn க்கு எதிராக வலதுசாரி ஊடகங்கள் விஷமத்தனமான வேட்டையாடல்களைத் தொடுத்துள்ளன, இந்த நடவடிக்கை குழு RBKC இன் மற்றும் குடியிருப்போர் நிர்வாக அமைப்பின் கொள்கையால் ஏற்படக்கூடிய ஒரு "பேரழிவுகரமான" தீவிபத்தின் ஆபத்தைக் குறித்து எச்சரித்திருந்தது. கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் வசித்து வந்த Delaney, கண்ணியமான, பாதுகாப்பான வீட்டில் குடியிருப்பதற்காக அப்பகுதி வாழ்பவர்களின் உரிமைகளுக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறார். Daffarn, கிரீன்ஃபெல்லின் 16 ஆம் மாடியில் உள்ள அவர் வீட்டிலிருந்து தப்பித்திருந்தார்.

கண்டிக்கப்பட்ட மற்றவர்கள், திரைப்பட இயக்குனர் டானியல் ரென்விக் மற்றும் உள்ளூர்வாசி இஸ்மாயில் ஆகியோர் ஆவர், கிரீன்ஃபெல் குறித்து Failed by the State என்ற உண்மையான படமெடுத்தது தான் இவர்கள் செய்த குற்றம்.

எதுவும் தற்செயலானதல்ல. உண்மையை நசுக்குவதற்கான இந்த பிரச்சாரத்தின் உச்சக்கட்டமாக இருப்பது, ஜூலியான் அசான்ஜை மவுனமாக்குவதற்காக நடந்து வரும் குரூரமான முயற்சியாகும். வாஷிங்டன் மற்றும் இலண்டனின் போர் குற்றங்களை வெளியிட்டதற்காக, இப்போது கைது நடவடிக்கை மற்றும் தேசத்துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை முகங்கொடுத்துள்ள விக்கிலீக்ஸின் அந்த ஸ்தாபகர் மற்றும் பதிப்பாசிரியர், கிரீன்ஃபெல்லில் இருந்து நான்கு மைல்களுக்கும் குறைந்த தூரத்தில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் ஆறு ஆண்டுகளாக சிக்கியுள்ளார்.

இதற்கிடையே விடயங்கள் முன்பைப் போலவே தொடர்கின்றன, பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆகிறார்கள், தொழிலாளர்கள் ஒவ்வொரு பைசாவுக்காகவும் கறந்தெடுக்கப்படுகிறார்கள். மூர்-பிக்கின் விசாரணை தொடங்கியதும் தான், இளவரசர் ஹரி மற்றும் மெகான் மார்க்கெல் கிரீன்ஃபெல்லில் இருந்து ஒருசில மைல் தூதரத்தில் உள்ள கென்சிங்டன் மாளிகையின் தரையில் உள்ள அவர்களது "குடிலுக்கு" திரும்பினர். அவர்களின் திருமணத்திற்கு பொதுமக்கள் வரியிலிருந்து சுமார் 30 மில்லியன் பவுண்டு வீணடிக்கப்பட்ட அதேவேளையில், கிரீன்ஃபெல் அடுக்குமாடி குடியிருப்பிற்கு மலிவாக, தீப்பற்றக்கூடிய உறைப்பூச்சை பயன்படுத்தியதன் மூலமாக சேமிக்கப்பட்ட ஏறத்தாழ 300,000 பவுண்டு அந்த தம்பதியினரின் ஆடைக்கு மட்டுமே செலவானதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டது.

பணப் பைத்தியமும், பித்தும் பிடித்த ஒவ்வொரு நாட்டு ஆளும் வர்க்கமும் செல்வ வளத்தை மேற்கொண்டும் பெரும் பணக்காரர்களுக்குக் கைமாற்றுவதையும், மனிதயினத்தையே அழிக்கும் போர்களை நடத்துவதையும் தவிர, வேறெதையும் தீர்க்க தகைமையற்றுள்ளன.

சமூக ஆதாரவளங்களை உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விடுவிப்பதற்கு, நிதியியல் பிரபுத்துவம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளின் பிடியிலிருந்து உடைத்து கொண்டு, சமூகத்தை சோசலிச அடித்தளங்களில் மறுஒழுங்கமைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவே சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்காகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு

லண்டனில் பெருநிறுவன பாரிய படுகொலை