ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Dozens drown in Mediterranean as Europe cracks down on immigrants

புலம்பெயர்வோர் மீது ஐரோப்பா ஒடுக்குமுறையை நடத்தும் நிலையில் மத்திய தரைக்கடலில் ஏராளமானோர் மூழ்குகின்றனர்

By Eric London
4 June 2018

மத்திய தரைக்கடலில் நேற்று நடந்த மூன்று வெவ்வேறு படகு விபத்துகளில் ஏராளமான ஆபிரிக்க அகதிகள் உயிரிழந்தனர். அக்டோபருக்குப் பிந்தைய காலத்தின் மிகவும் மரணகரமான நாளாக புலம்பெயர்ந்தவர்களுக்கு இது அமைந்து விட்டது. வானிலை சற்று மிதமான சூட்டுக்கு வருகின்ற நிலையில், புலம்பெயர்ந்து வருவதை தடுப்பதற்கும் ஏற்கனவே இருக்கின்ற அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கும் நோக்கம் கொண்டிருக்கும் வலது-சாரி அரசாங்கங்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு ஐரோப்பியக் கண்டத்திற்குள் வருவதற்கு நூறாயிரக்கணக்கானோர் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.

துனிசியக் கரையில், மீட்பு நீச்சல் வீரர்கள் இத்தாலியத் தீவான Lampedusa நோக்கி பயணம் செய்திருந்த 46 ஆபிரிக்க புலம்பெயர்ந்தோரின் மூழ்கிய உடல்களை மீட்டனர்.

30 அடி நீளம் கொண்ட “அந்தப் படகில் நாங்கள் சுமார் 180 பேர் பயணம் செய்தோம்” என்று உயிர்தப்பிய ஒருவர் துனிசிய வானொலி ஒன்றிடம் தெரிவித்தார். “ஓட்டை வழியாக நீர் உள்ளே கசிந்ததால் படகு மூழ்கியது” என்று கூறிய அந்த புலம்பெயர்ந்த மனிதர், படகும் அதன் பயணிகளும் மெதுமெதுவாக நீரில் மூழ்கத் தொடங்கிய நிலையில் உண்டாகியிருந்த பீதி மற்றும் திகிலின் ஒரு காட்சியை விவரித்தார்.

“ஒன்பது மணி நேரத்திற்கு மரக்கட்டையை பிடித்தபடி தொங்கி நான் உயிர்பிழைத்தேன்” என்று உயிர்தப்பிய இன்னுமொருவர் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி ஊடகங்களிடம் தெரிவித்தார். பயணம் செய்தவர்களில் 70 பேர் மீட்கப்பட்டிருப்பதாக துனிசிய அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர், அதாவது கிட்டத்தட்ட 65 பேர் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

மத்திய தரைக்கடலின் மறுமுனையில், துருக்கியின் டெம்ரே கரையில் இன்னுமொரு படகு நேற்று மூழ்கியதில் ஆறு குழந்தைகள் உள்ளிட ஒன்பது பேர் பலியாகினர். படகில் 14 அல்லது 15 பேர் பயணம் செய்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிறன்று 11 படகுகளில் இருந்து 240 புலம்பெயர்ந்தோரை மீட்டிருப்பதாக ஸ்பெயினின் அதிகாரிகளும் அறிவித்தனர். மூழ்கிக் கொண்டிருந்த படகு ஒன்றில் இருந்து 41 பேர் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டனர். குறைந்தது ஒருவர் இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

2018 இல் இதுவரை, மத்திய தரைக்கடலை கடப்பதில் புலம்பெயர்ந்தவர்கள் 660 பேர், அல்லது கடக்க முயற்சித்த மொத்த பேரில் 2.8 சதவீதம் பேர், இறந்திருக்கின்றனர்.

இந்த இறப்பு எண்ணிக்கை மீட்பு முயற்சிகளைத் தடுப்பதற்கும் மற்றும் வருங்கால கடல்கடப்புகளை தவிர்ப்பதற்கும் ஐரோப்பிய அரசாங்கங்களால் நடத்தப்பட்ட கொள்கைகளின் விளைபொருளாகும். அடிக்கடி கப்பல்விபத்துகள் நடக்கும் பகுதிகளில் இருந்து கடற்படையை வெகு தூரத்தில் நிறுத்தி வைக்கின்ற கொள்கையை 2014 தொடங்கி ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்தியது. கூடுதலான இறப்புகள் மொத்த அகதிகளின் எண்ணிக்கை குறைகின்றவாறாக சமப்படுத்தி விடும் என்று கொள்கைவகுப்பாளர்கள் வாதிடுவதை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளான ஆவணங்கள் வெளிக்கொணர்கின்றன.

2017 இல், இத்தாலியின் வழக்கு நடத்துநர்கள், ஜேர்மன் தொண்டு நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருந்த ஒரு மீட்புப் படகினை, மூழ்கும் புலம்பெயர்ந்தவர்களை காப்பாற்றும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இருந்து தடுத்து வைக்கும்படி போலிசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த தன்னார்வலர்கள் ஆள்கடத்தலில் ஈடுபடுவோருடன் இரகசியமாக சதிசெய்ததாக “நிரூபிக்கின்ற” ஒரு மோசடியான முயற்சியில் அதிகாரிகள் இரகசிய போலிசையும் ஒட்டுக்கேட்பு கருவிகளையும் பயன்படுத்தியதாக Intercept தெரிவித்தது. இத்தகையதொரு துன்புறுத்தலின் விளைவாக Intercept தெரிவித்தது, “ஒரு வருடத்திற்கு முன்பாக லிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒரு டஜன் மனிதாபிமான அமைப்புகள் மீட்புக் கப்பல்களை இயக்கிக் கொண்டிருந்தன. இப்போதோ வெகு சிலவே மிஞ்சியிருக்கின்றன.”

இந்த ஆபத்தான பயணத்தில் தப்பித்து வருகின்ற புலம்பெயர்ந்த மக்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் ஐரோப்பா காணும் மிகவும் வெளிநாட்டவர் வெறுப்பு அரசாங்கங்களிடம் இருந்து துன்புறுத்தலுக்கும், உதாசீனத்திற்கும், திருப்பி அனுப்பப்படும் நிலைக்கும் முகம்கொடுக்கின்றனர்.

இத்தாலியில், உள்துறை அமைச்சராக ஆகவிருப்பவரும் அதி வலது Lega கட்சியின் அங்கத்தவருமான மத்தேயோ சல்வீனி நேற்று சிசிலிக்கு ஒரு ஆத்திரமூட்டும் விஜயத்தை மேற்கொண்டு அங்கிருந்த கூட்டத்திடம் கூறினார், “ஐரோப்பாவின் அகதி முகாமாக சிசிலி இருந்தது போதும். அடுத்து அடுத்து வந்து இறங்கிக் கொண்டிருக்கையில் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கப் போவதில்லை. திருப்பியனுப்பும் மையங்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன.”

சனிக்கிழமையன்று இன்னுமொரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய சல்வீனி புலம்பெயர்ந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்: “உங்கள் பெட்டிபடுக்கைகளை மூட்டை கட்டத் தயாராகுங்கள்.” Lega வும் அதன் ஆட்சிக் கூட்டணிக் கூட்டாளியான ஐந்து நட்சத்திர இயக்கமும் (M5S) 500,000 புலம்பெயர்ந்தோரை திருப்பியனுப்ப உறுதியெடுத்திருக்கின்றன. இது நாட்டின் பெரும்பகுதிகளை இராணுவச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கு அவசியமாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாகும். M5S இன் தலைவரான லுய்ஜி டி மாயோ முன்னர் மீட்புப் படகு அமைப்புகளை “கடலின் டாக்ஸிகள்” என்று அழைத்திருந்தார்.

Lega மற்றும் M5S ஆல் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக விடுக்கப்படுகின்ற பாசிச மிரட்டல்கள், அகதிகளுக்கு எதிராக வன்முறையின் ஒரு பெருகும் சூழலைத் தூண்டியிருக்கின்றன. நேற்று சல்வீனி பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களுக்காக, தெற்கு கலப்ரியா மாகாணத்தில் உள்ள விபோ வாலன்சியாவில், ஒரு இத்தாலிய மனிதர் மாலியைச் சேர்ந்த 29 வயது அகதி ஒருவரைக் கொலைசெய்தார். அதன்பின்னர் போலிஸ், அந்த அகதி ஒரு கட்டுமான இடத்தில் இருந்து பொருட்களைத் திருடியதாக ஒரு அறிக்கை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜேர்மனியில், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியமும் (CDU) சமூக ஜனநாயகக் கட்சியும் (SPD) எட்டியிருந்த ஒரு மாபெரும் கூட்டணி உடன்பாடு நவ-பாசிச ஜேர்மனிக்கான மாற்று (AfD) இன் புலம்பெயர்ந்தோர்-விரோதக் களத்தை பெருமளவில் ஏற்றுக் கொண்டதாகும். AfD இன் நாடாளுமன்றவாதியான அலிஸ் வைடெல், சென்ற மாதத்தில் நாடாளுமன்றத்தில், “கண்ணைத் தவிர உடல் முழுவதையும் மறைக்கும் பர்க்கா உடை அணிபவர்கள், கத்தி வைத்திருப்பவர்கள், வேறெதற்கும் இலாயக்கற்றவர்கள்" என்று “முஸ்லீம் புலம்பெயர்ந்தோரை” கண்டனம் செய்கின்ற ஒரு வெளிநாட்டவர் வெறுப்பு ஆவேசத்தை கக்கினார்.

பிரான்சில், இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கம் சென்ற வாரத்தில் பாரிஸில் ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமை அகற்ற கலகத் தடுப்பு போலிசாரை பயன்படுத்தியது, 1,000க்கும் அதிகமானோர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன. பிரெஞ்சு அரசாங்கம் சமீபத்தில் நிறைவேற்றியிருக்கும் ஒரு புகலிடச் சட்டமானது எல்லை கடப்பதை குற்றமாக்குகிறது, புகலிட உரிமையை வரம்புபடுத்துகிறது, அத்துடன் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பப்படும் நிகழ்முறையை துரிதப்படுத்துகிறது.

ஸ்பெயினில், நாட்டிற்கு வந்து சேரும் அகதிகள் பலர் வீதிகளில் வாழத் தள்ளப்படுகிறார்கள் என்றும், சிலர் நாள்முழுக்க வெறும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து வேறெதுவும் உண்ண வழியற்ற நிலைக்கு தள்ளப்படுவதாகவும் El País சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ஹங்கேரியின் அதி-வலது பிரதமரான விக்டர் ஓர்பன் ஏப்ரலில் பேசுகையில், ஐரோப்பா ஒரு “புலம்பெயர்வோர் மண்டலமாக” இருக்கிறது என்றும் பெருந்திரள் குடியேற்றம் என்பதன் அர்த்தம் “நமது மோசமான கொடுங்கனவுகள் உண்மையாகக் கூடும். ஐரோப்பாவின் மீது ஏறிமிதித்து ஓடுவதைக் காணத் தவறுகையில் மேற்கு வீழ்ச்சியடைகிறது” என்றும் தெரிவித்தார்.

குடியேற்றக் கட்டுப்பாடு குறித்து விவாதிப்பதற்கு செவ்வாய்கிழமையன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்கள் கூடுகையில், கண்டமெங்கிலும் பெருந்திரள் திருப்பியனுப்பல்களுக்கு பாதை திறக்கக் கூடிய வகையில் புலம்பெயர்வோர் மீது இன்னும் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அவர்கள் உடன்படவிருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்தோருக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரவலான ஆதரவு இருப்பதற்கு முகம்கொடுக்கும் நிலையில் இது வருகிறது. ஏப்ரலில் நடத்தப்பட்ட Eurobarometer கருத்துக்கணிப்பு ஒன்றின் படி, ஐரோப்பியர்களில் 57 சதவீதம் பேர் புலம்பெயர்ந்த மக்களை சவுகரியமாகவே உணர்கிறார்கள் என்பதோடு, அண்டை வீட்டினர், நண்பர்கள் மற்றும் சகாக்களாகக் கருதி அவர்களை வரவேற்கின்றனர். மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே புலம்பெயர்ந்தவர்களுடன் உரையாடுவது சற்று அசவுகரியமானதாகவேனும் இருப்பதாக கூறுகின்றனர். ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில், புலம்பெயர்ந்தவர்களுக்கு மக்களிடையே அமோக ஆதரவு இருக்கிறது.

ஐரோப்பாவிலான புலம்பெயர்ந்தோர் விரோத அலையானது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சுற்றிய அதி-வலது கூறுகளிடம் இருந்து ஆதரவைப் பெற்றிருக்கிறது, அவரின் முன்னாள் பாசிச ஆலோசகரான ஸ்டீவன் பானனும் இதில் உண்டு, அவர் வெள்ளிக்கிழமையன்று இத்தாலியில் இருந்தபடி CNN இல் தோன்றினார். வரவிருக்கும் இத்தாலிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர்-விரோதக் கொள்கைகளை பாராட்டிய பானன், அதனை தொழிலாள-வர்க்கத்துக்கு ஆதரவான விடயமாக மோசடியாக சித்தரித்தார். “ஒட்டுமொத்த சமயத்திலும் வேலைக்குச் செல்பவன் தான் முடக்கப்பட்டு வந்திருக்கிறான், அந்த கலகம் தான் டொனால்ட் ட்ரம்புக்கு அழைத்துச் சென்றது, அதுதான் இத்தாலியில் நாம் உண்மையாகக் கண்டிருப்பதுமாகும்.”

ஆளும் வர்க்கங்களின் புலம்பெயர்-விரோதக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. புலம்பெயர்ந்தோரைக் குறிவைக்கின்ற மிருகத்தனமான கொள்கைகள், வர்க்கப் போராட்டம் தீவிரமடைகின்ற போது தொழிலாள வர்க்கத்தை இலக்கு வைக்கும். புலம்பெயர்வோர் விரோத மனோநிலையை விசிறி விடுகின்ற ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள் போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக் கொள்கைகளுக்கு எழுகின்ற வெகுஜன எதிர்ப்பை திசைதிருப்பும் நோக்கம் கொண்டவையாகும். ஒவ்வொரு நாட்டிலும் -குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியில்- ஆளும் வர்க்கமானது தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக்குவதற்கும் ஓய்வுதியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்கும் வெளிநாட்டவர் வெறுப்பை ஒரு பொறிமுறையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.