ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Despite rising social anger, Macron pledges to step up austerity attacks in France

சமூக கோபம் பெருகிச் செல்கின்ற போதிலும், பிரான்சில் சிக்கன நடவடிக்கைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த மக்ரோன் உறுதிபூணுகிறார்

By Alex Lantier
16 June 2018

பிரான்சின் தேசிய இரயில்வேயை (SNCF) தனியார்மயமாக்குவதற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் வாக்களித்ததன் பின்னர் சமூக எதிர்ப்பு பெருகிச் செல்கின்ற போதிலும், பிரான்சின் ஜனாதிபதியான இமானுவல் மக்ரோன் சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் அதி வலதுகளுடன் நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடுகிறார். புதனன்று Montpellier இல் பிரான்சின் சுகாதாரக் காப்பீடு நிறுவனங்களுக்கு மக்ரோன் வழங்கிய உரையில் இருந்தும் அதன்பின் அதி-வலது முடியாட்சிவாத அரசியல்வாதியான பிலிப் டு வில்லியே ஐ சந்திக்க Vendée க்கு அவர் செய்த பயணத்தின் போதும் இதுவே வெளிப்பட்டது.

செவ்வாய்கிழமை இரவு, SNCF ஒப்பந்தத்தின் மீது வாக்களிப்புக்கு தேசிய நாடாளுமன்றம் தயாரிப்புடன் இருந்த நேரத்தில், மக்ரோன் ஒரு காணொளியை வெளியிட்டார், அதில் சமூக செலவீனத்தின் மீது அவர் அலட்சியத்துடன் கண்டனம் செய்திருந்தார். ஒரு சில ஆண்டு வேலையிலேயே கோடீஸ்வரனாக ரோத்ஸ்சைல்ட் வங்கியால் மாற்றப்பட்டிருந்த இந்த 40 வயது மனிதன், மக்களை சோம்பேறிகள் என்றும் அரசு உதவியை நம்பியிருப்பவர்கள் என்றும் தான் நம்புவதை தெளிவாக்கினார். “நாம் அளவுக்கு அதிகமான பணத்தை செலவிடுகிறோம், மக்கள் அவர்களது பொறுப்பில் இருந்து நழுவ நாம் அனுமதிக்கிறோம், சிகிச்சை பெறுகின்ற ஒரு பக்குவத்தில் நாம் இருக்கிறோம்” என்று பிரெஞ்சு சுகாதாரப் பராமரிப்பு முறை குறித்து புகார் கூறிய அவர், “ஏழைகள் ஏழைகளாவே இருக்கின்ற போதிலும்கூட” சமூக பிரச்சினைகளில் பிரான்ஸ் “பைத்தியக்காரத்தனமான அளவுக்கு பணம்” செலவிடுவதன் மீது தாக்கினார்.

அதேநேரத்தில், மக்ரோனின் மக்கள் செல்வாக்கு தொடர்ந்து தேய்ந்து செல்வதை கருத்துக்கணிப்புகள் காட்டின. வெறும் 40 சதவீதம் மட்டுமே ஒப்புதல் மதிப்புகளைப் பெற்றிருக்கும் மக்ரோன், தேர்தலின் முதல் சுற்றில் அவருக்கு வாக்களித்த வாக்காளர்களில் -இது பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் வெறும் 16 சதவீத எண்ணிக்கை மட்டுமே-  19 சதவீத வாக்காளர்களின் ஆதரவை இழந்திருக்கிறார். எலிசே ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் அலுவலர்கள் “எங்களது ஆதரவு அடித்தளம் எங்களை கைவிடவில்லை” என்று மட்டுமே கருத்துக் கூறினர்.

புதனன்று Montpellier இல் உரை நிகழ்த்திய சமயத்தில் அதிருப்திக் கூச்சல்களை மக்ரோன் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது, ஆயினும் என்ன விலை கொடுத்தேனும் சமூக வெட்டுகளை தொடர்ந்து நடத்தப் போவதாக அவர் வலியுறுத்தினார்.

சமூக செலவினங்களில் அதிரடியான வெட்டுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்: “சிலர் சமூக உருமாற்றத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் கடன் பெற எதிர்பார்த்திருக்கிறார்கள், அதில் நம்பிக்கையில்லாத மற்றவர்கள் செலவினங்களை வெட்டுவதற்கு விரும்புகிறார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. கெட்ட செய்தி என்னவென்றால்: சமூக செலவினம், நீங்கள் செலவிடுகிறீர்கள், நாங்கள் செலவிடுகிறோம்.”

சமூக நிலைமைகள் குறித்து பிரெஞ்சு மக்கள் மத்தியில் நிலவுகின்ற வெகுஜன கோபம் குறித்து மக்ரோன் சுருக்கமாகக் குறிப்பிட்டார்: “ஜனநாயக வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாத ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம், ஏனென்றால் வெறும் காகிதத்தில் மட்டும் தான் பெரும்பாலும் இருக்கின்ற பல உத்தியோகபூர்வ உரிமைகளை நாம் பராமரித்து வந்திருக்கிறோம், அது சமகால பிரெஞ்சு கண்ணியக்குறைச்சலுக்கு இட்டுச்செல்கிறது. இருந்தும் நாம் தொடர்ந்து நமது செல்வத்தை மேலும் மேலும் சமூகப் பிரச்சினைகளின் மீது செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.”

எலிசேயில் இருக்கும் மில்லியனருக்கு, இந்த பிரச்சினைக்கான தீர்வு தெளிவாய் இருக்கிறது. பிரெஞ்சு மக்கள் அவர்களது சமூக நிலைமைக்குரிய நன்றிக்கடன்பட்டவர்களாக இல்லாது போவார்களாயின், அப்போது செல்வம் எங்கே குவிக்கப்பட வேண்டும் என்று மன்னர்களின் புனித உரிமையானது சொல்கின்றதோ, அந்த இடமான உச்சமட்டத்தில் அது குவிக்கப்படுவதற்கு கூடுதலான வெட்டுகள் செய்யப்பட வேண்டும். பிரான்ஸை அழுத்திப் பிடித்துக் கொண்டிருப்பதில் இருந்து அதனை “விடுதலைசெய்வதற்கு” வாக்குறுதியளிக்குமளவுக்கு சென்ற மக்ரோன், ஒரு “ஆழமான புரட்சி”க்கான தனது திட்டங்களை 1945 இல் தேசிய எதிர்ப்பு கவுன்சிலால் (National Resistance Council - CNR) சமூக பாதுகாப்பு உருவாக்கப்பட்டமையுடன் ஒப்பிட்டார்.

மக்ரோனின் உரையானது, அவரது மக்கள் செல்வாக்கின் வீழ்ச்சி குறித்தும், இரயில்வே தொழிலாளர்கள், மின்துறை தொழிலாளர்கள் மற்றும் ஏர் பிரான்ஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் அத்துடன் பிரான்சில் மட்டுமல்லாது ஐரோப்பாவெங்கிலும் இதேபோன்ற துறைகளில் வேலைநிறுத்தங்கள் பெருகிச் செல்வது குறித்தும் அவரது கட்சிக்குள்ளேயே கவலை பெருகிச் செல்வதற்கான ஒரு எதிர்வினையாக இருந்தது. குறிப்பாக, நாடாளுமன்றத்தால் வாக்களிக்கப்பட்டிருக்கின்ற சீர்திருத்தத்திற்கு இரயில்வே தொழிலாளர்கள் மிகப்பெருவாரியான அளவில் எதிர்ப்பு கொண்டுள்ளதில் இந்த அச்சங்கள் மிகவும் கூர்மைப்பட்டிருக்கின்றன.

சென்ற வாரத்தில், மக்ரோனின் மூன்று ஆலோசகர்கள் - Philippe Aghion, Philippe Martin, மற்றும் Jean Pisani-Ferry - மக்ரோனின் பிம்பத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியை சிடுமூஞ்சித்தனமாக ஆலோசனையளித்திருந்த ஒரு கடிதம் பகுதியாக பத்திரிகைகளுக்கு கசிந்திருந்தது. தொழிலாளர்களுக்கு எதிராக அவர்கள் ஆலோசனையளிக்கின்ற தீவிரப்பட்ட சிக்கன-நடவடிக்கைகளை விவரித்த அதேநேரத்தில், மக்ரோன் “சமூகப் பிரச்சினைக்கு அலட்சியமாய் இருப்பதான பிம்பத்தை கொடுப்பதாக” தமது கவலையையும் அதில் வலியுறுத்தினர்.

மக்ரோனின் உரைகள், அவரது கொள்கையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை, அதேபோல அவரது பிம்பத்தை சுமூகமாக்குவதற்கான சிடுமூஞ்சித்தனமான மக்கள்தொடர்பு பிரச்சாரமும் இருக்கப் போவதில்லை என்பதை தெளிவாக்குகின்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. பிரெஞ்சு வாக்காளர்களுக்கு ஜனாதிபதி காட்டுகின்ற அலட்சியமே கூட ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் அதிவலதை நோக்கி நகரும் ஒரு பரந்த நகர்வின் அறிகுறியாகவே இருக்கிறது, மக்களின் விருப்பத்திற்கேற்ற ஒரு கொள்கையை வகுப்பதற்கு முயற்சி செய்வதாக அது காட்டிக் கொள்வதும் கூட இப்போது கிடையாது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஒரு புரட்சிகர சூழ்நிலை எழுந்து கொண்டிருக்கிறது. SNCF சீர்திருத்தம் மற்றும் பிற சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதற்கு மக்ரோன் தொழிற்சங்கங்களையே நம்பியிருக்கிறார். ஆயினும், தொழிலாளர்கள் மக்ரோனின் தாக்குதல்களுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்வதற்காக தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை முன்நிறுத்துவார்களாயின், பேசுவதற்கோ அல்லது சமரசம் செய்து கொள்வதற்கோ எந்த இடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. அத்தகையதொரு போராட்டத்திற்கு எதிராக, அவசரகாலநிலையில் இருந்து பெறப்பட்ட ஒரு பரந்த போலிஸ்-அரசு எந்திரத்தை மக்ரோன் தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறார், இது தொழிலாள வர்க்கத்துடன் ஒரு முழு-வீச்சிலான மோதலைத் தூண்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்ற போதிலும் கூட.

1945 சகாப்தத்திற்கு பிந்தைய கோலிச மற்றும் ஸ்ராலினிச சீர்திருத்தங்களை சிடுமூஞ்சித்தனத்துடன் மக்ரோன் பாராட்டுகின்ற அதேநேரத்தில், அவற்றை அழிப்பதற்கே அவர் நோக்கம் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கு நன்கு தெரியும். தொழிலாளர் சட்டப் பிரிவானது 2016 தொழிலாளர் சட்டத்தால் -தொழிற்சங்க ஒப்புதல் இருந்தால் தொழிலாளர் சட்டப்பிரிவை மீறுவதற்கு முதலாளிகளை இது அனுமதிக்கிறது, அத்துடன்  இரயில்வேயை தனியார்மயமாக்குவதற்கு மக்ரோன் இதையே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்- கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த வேலைத்திட்டங்கள் அவற்றின் இப்போதைய வடிவத்தில் CNR இன் கோலிச, சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச சக்திகளால் உருவாக்கப்பட்டிருந்தன, ”பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவதில் இருந்து பெரும் பொருளாதார மற்றும் நிதிய பிரபுத்துவங்கள் வெளியேற்றப்படுவதை” ஒழுங்கமைக்கின்ற ஒரு “சமூக” குடியரசாக பிரான்ஸ் திகழும் என்று இவை உறுதியளித்தன.

அதற்கு முக்கால் நூற்றாண்டுக்குப் பின்னர், மக்ரோனின் கீழ், முதலாளித்துவ வர்க்கமானது, நான்காம் அகிலத்தின் தலைமையிலான தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை தலைசீவும் பொருட்டு, விச்சி-நாஜி ஆட்சியில் இருந்தான விடுதலையின் சமயத்தில் CNR அமல்படுத்தியிருந்த சீருதிருத்தங்களை பகிரங்கமாக மறுதலித்திருக்கிறது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் உள்ளிட்ட அதன் அத்தனை அரசு ஸ்தாபனங்களும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்காக வேலை செய்கின்றன என்பதோடு, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாளர்களது போராட்டங்களை ஒழுங்குகுலைக்கின்றன.

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி விடுத்த அழைப்பின் சரியான தன்மையை இது நிரூபணம் செய்கிறது. தொழிற்சங்கங்களுக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை முன்வைப்பதும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் நடைபெற்று வருகின்ற வெவ்வேறு போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கு சுயாதீனமான சாமானிய தொழிலாளர் கமிட்டிகளை ஒழுங்கமைப்பதும், அதிகாரத்துக்கான போராட்டத்தின் பாதையை எடுப்பதுமே தொழிலாளர்களுக்கு இருக்கின்ற ஒரே நின்றுபிடிக்கத்தக்க மூலோபாயம் ஆகும்.

மக்ரோனைப் பொறுத்தவரை, அவர் அதிவலதுகளுடனான தனது உறவை அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறார். Montpellier இல் இருந்து கிளம்பிய பின்னர், மக்ரோன், பிரான்சுக்கான பேரணி (RPF) கட்சியின் முன்னாள் தலைவரும் Puy du Fou பொழுதுபோக்குப் பூங்காவின் இயக்குநருமான முடியாட்சிவாதி டு வில்லியே ஐ சந்திக்க Vendée பிராந்தியத்திற்கு சென்றார்.

மக்ரோன் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பான காலத்தில் பிரெஞ்சு புரட்சியை விமர்சனம் செய்தும் பிரான்சுக்கு ஒரு மன்னர் தேவையாக இருக்கிறார் என்று வலியுறுத்தியும் ஊடகங்களில் சில குரோதமான கருத்துகளுக்குத் தூண்டுதலளித்தார்: “ஜனநாயக நடைமுறையில் அங்கே ஒரு வெற்றிடம் இருக்கிறது. பிரெஞ்சு அரசியலில், மன்னரின் இடம் தான் அந்த வெற்றிடமாக இருக்கிறது, அவரது மரணத்தை பிரெஞ்சு மக்கள் அடிப்படையாக விரும்பவில்லை என்று நான் நினைக்கிறேன்.”

ஏப்ரலில் St. Denis திருச்சபையில் அரசகுடும்ப கல்லறைகளுக்கு சென்று வந்திருந்த மக்ரோன், இந்த வாரத்தில் டு வில்லியே உடனான தனது நல்லுறவை வலியுறுத்தினார், அவருடன் “வண்ணமயமான” விவாதங்களை கொண்டிருந்ததாக கூறிய அவர், டு வில்லியே “நான் பாதுகாக்கும் அதே விழுமியங்கள் அல்லது கோட்பாடுகளை பாதுகாப்பவரல்ல” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஆயினும் RPF முடியாட்சிவாதியின் அதே அடிப்படைக் கண்ணோட்டத்தையே ஜனாதிபதியும் பகிர்ந்து கொள்கிறார் என்பதை மக்ரோனின் ஆலோசகரான Bruno Roger-Petit வலியுறுத்தினார்: “அதிகார செலுத்தத்தின் செங்குத்தான தன்மை குறித்த ஒரே கருத்தாக்கத்தையே அவரும் மக்ரோனும் கொண்டிருக்கின்றனர்.” சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு மக்ரோன் காட்டும் அப்பட்டமான அலட்சியத்தின் ஒரு சுருக்க விவரிப்பாக, அதற்கு மேல் சேர்த்துச் சொல்வதற்கு அங்கே வேறொன்றுமில்லை.