ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-European tensions erupt at the G7 summit

ஜி7 உச்சிமாநாட்டில் அமெரிக்க-ஐரோப்பிய பதட்டங்கள் வெடிக்கின்றன

Andre Damon
9 June 2018

இவ்வாரயிறுதி ஜி7 உச்சிமாநாடு, அந்த அமைப்பின் 43 ஆண்டுகால வரலாற்றிலேயே மிகவும் சச்சரவுக்குரிய கூட்டமாக உள்ளது. அது அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு இடையே அதிகரித்து வரும் ஆழ்ந்த பிளவுகளை எடுத்துக்காட்டி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் கனேடிய பிரதம மந்திரி ஜஸ்டீன் ட்ரூடோ ஆகியோருக்கு இடையிலான எரிச்சலான பகிரங்க கருத்து பரிமாற்றங்களுக்குப் பின்னர், அந்த உச்சிமாநாடு மரபார்ந்த கூட்டறிக்கை வெளியிடாமல் நிறைவு செய்யப்படலாமென பத்திரிகை செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

வியாழனன்று மாலை, ட்ரம்ப் ஒட்டுமொத்தமாக அந்த உச்சிமாநாட்டைப் புறக்கணிக்க பரிசீலித்து வருவதாக செய்திகள் வந்தன, அதையடுத்து நிர்வாகம், அதிகாலை ஜனாதிபதி புறப்படுவார் என்று அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதி மீது 25 சதவீதம் வரையில் கடுமையான தீர்வை வரிகள் விதிப்பதென ட்ரம்ப் ஜூன் 1 அன்று எடுத்த முடிவுதான் அந்த உச்சிமாநாட்டில் மேலோங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் சரி கனடாவும் சரி, அவை பதிலடி நடவடிக்கைகள் எடுக்க உத்தேசிப்பதாக தெளிவாக அறிவித்துள்ளன, இது அமெரிக்காவுக்கும் அதன் பெயரளவிற்கான கூட்டாளிகளுக்கும் இடையே முழு அளவிலான வர்த்தக போரின் சாத்தியக்கூறை உயர்த்துகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு இடையிலான இந்த பிளவுகளின் கடுமையான தன்மை, மக்ரோன் வெளியிட்ட தொடர்ச்சியான பல அறிக்கைகளில் தெளிவாக்கப்பட்டது, அவர் வியாழனன்று ட்வீட்டரில் அறிவித்தார்: “அமெரிக்க ஜனாதிபதி தனிமைப்படுத்தப்படுவது குறித்து கருத்தில் கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு அவசியமானால் 6 நாடுகளின் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதைக் குறித்து நாங்கள் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இந்த 6 நாடுகளும் தான் மதிப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன, இவைதான் ஒரு பொருளாதார சந்தையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன, இவை அவற்றின் பின்னால் வரலாற்று பலத்தைக் கொண்டுள்ளன, இவைதான் இப்போது ஒரு நிஜமான சர்வதேச சக்தியாக உள்ளன.”

அதையடுத்து மக்ரோன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார், “அமெரிக்கா இல்லாமல் ஜி7 இல் உள்ள மீதி ஆறு நாடுகளின் ஒருமித்த சந்தை, அமெரிக்க சந்தையை விட மிகப்பெரியது.” “நம்மை நாம் எவ்வாறு ஒழுங்கமைத்துக் கொள்வது என்று தெரிந்து கொண்டால், அங்கே உலக மேலாதிக்கமே இருக்காது. அவ்வாறு ஒன்று இருப்பதையே நாங்கள் விரும்பவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கடந்த மாதம் மக்ரோனின் "போலிநயவுரை பேச்சுக்கள்" என்றழைக்கப்பட்டவை வந்த பின்னர், அதில் பிரெஞ்சு ஜனாதிபதி வர்த்தகம் மற்றும் ஈரான் அணுசக்தி உடன்படிக்கை மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை மாற்றுவதற்கு அவரை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அவருக்கு பணிவாக பேசியிருந்த நிலையில், மக்ரோனின் இந்த அதிரடியான அறிக்கை கடுமையோடு முகத்தைத் திருப்பிக் கொண்டதாக இருந்தது.

ட்ரூடோ இதே உணர்வுகளை எதிரொலித்தார், “நாங்கள் எங்கள் தொழில்துறைகளை, எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாக்க செல்வோம்,” என்று அறிவித்த அவர், ஒரு மூடிமறைக்காத அச்சுறுத்தலில், “அமெரிக்க ஜனாதிபதியின் ஏற்கவியலாத நடவடிக்கைகள் அவரின் சொந்த மக்களைப் பாதிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும்,” என்றார்.

அதேபோல இந்த உச்சிமாநாடு, மத்திய கிழக்கில் புதிதாக ஒரு மிகப் பெரிய போரைத் தொடங்குவதற்கான ட்ரம்பின் முனைவு மீதும் கூர்மையான கருத்துவேறுபாடுகளால் பிளவுபட்டிருந்தது. சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் உடன் ஒரு அச்சை உருவாக்கி, ஈரானுடன் ஒரு தீவிர பொருளாதார, இராஜாங்க மற்றும் சாத்தியமான இராணுவ பலத்தைக் காட்டுவதற்கான தயாரிப்பில், ஐரோப்பிய சக்திகளின் எதிர்ப்புக்கு முன்னால், ட்ரம்ப் 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேறி உள்ளார்.

அதேநேரத்தில், ட்ரம்ப் அமெரிக்காவின் இரண்டு மிகப்பெரிய புவிசார் அரசியல் மோதல் பகுதிகளை, அதாவது ஜி7 நிறைவடைந்ததும் உடனடியாக சிங்கப்பூரில் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்க-வட கொரிய உச்சிமாநாடு உள்ளடங்கலாக, வட கொரியாவுடனும், 2014 இல் ஜி7 இல் இருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யாவின் அங்கத்துவத்தை மீட்டுத் தருவதற்கான சாத்தியக்கூறை ட்ரம்ப்  வெளியிட்டார்.

எவ்வாறிருப்பினும், 1930 களில் முறிந்த புவிசார்அரசியலைப் போலவே, இந்த அல்லது அந்த நாட்டிற்கு ட்ரம்ப் வழங்கும் "உடன்படிக்கைகள்" வெறுமனே இராணுவ மோதலுக்கான முன்னறிவிப்பாகவே உள்ளன. போர் என்பது யார்யாருக்கு இடையே என்பது தான் இன்னும் தெளிவாக இல்லையே தவிர, அது கண்ணுக்கெட்டும் தூரத்தில் தெரிகிறது.

ட்ரம்ப் தேர்வானமையும் மற்றும் அவரது "அமெரிக்கா முதலில்" தேசியவாத பொருளாதார கொள்கையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே பதட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளது என்றபோதிலும், உலகளாவிய புவிசார்அரசியலின் அதிகரித்தளவில் சுமையேறிய நிலை, இன்னும் பல ஆழ்ந்த நிகழ்வுபோக்குகளுடன் பிணைந்துள்ளது.

1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதும், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எந்த போட்டியாளரையும் சகித்துக் கொள்ளாதென அறிவித்தது. அதன் பொருளாதார வீழ்ச்சியை ஈடுகட்ட அதன் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா மத்திய கிழக்கிலும், கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிலும் ஒரு கால்-நூற்றாண்டு போர்களை நடத்தியது.

இப்போதோ இந்த போர்கள், கடந்த ஆண்டு இறுதியில் பென்டகன் அறிவித்தவாறு, ரஷ்யா, சீனா அல்லது ஐரோப்பிய சக்திகளையே கூட உள்ளடக்கிய “வல்லரசு மோதலாக” உருவெடுத்து வருகிறது. ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தி இருப்பதைப் போல, அமெரிக்காவின் வர்த்தகப் போர் கொள்கைகள் வல்லரசு மோதலின் இந்த மூலோபாயத்தின் ஓர் உள்ளார்ந்த கூறுபாடாக உள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி முழு அளவிலான ஒரு வர்த்தக போரைக் கட்டமைத்து வருகின்ற நிலையில், ட்ரம்பின் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் விடையிறுப்போ, பாதுகாப்புவாதத்தைக் கண்டிப்பதாக இல்லை, மாறாக ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக அதை இன்னும் ஆக்ரோஷமாக பயன்படுத்துவதற்கு அழுத்தமளிப்பதாக உள்ளது. ட்ரம்ப் இவ்வாரம் சீன தொழில்நுட்ப நிறுவனம் ZTE மீதான வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நகர்வுகளை அறிவித்ததும், ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சபை சிறுபான்மை தலைவர் நான்சி பெலொசி அறிவித்தார், “சீனா நம் உணவை உண்டு வருகிறது, இந்த ஜனாதிபதியோ அவர்களுக்கு வேண்டிய மட்டும் பரிமாறி கொண்டிருக்கிறார்.” ஒருகாலத்தில் போருக்கு காரணமான ஒரு இழிவார்ந்த பிழையாகவும் மற்றும் முன்னறிவிப்பாகவும் கருதப்பட்ட வர்த்தகப் போர், 21 ஆம் நூற்றாண்டு முதலாளித்துவத்தில் ஓர் உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திரைக்குப் பின்னால், அமெரிக்காவை சவால் விடுக்க புதிய புவிசார் அரசியல் அணிசேர்க்கைகளுக்கான பேச்சுக்கள் நடந்து வருகின்றன. National Interest இதழில் முன்னாள் நிர்வாகத்தின் ஆலோசகர் Doug Bandow எழுதுகையில், “அமெரிக்காவிற்குத் தீவிரமாக சவால்விடுக்க அவர்கள் தேவையான தியாகங்களைச் செய்வார்கள் என்பதற்கு ஐரோப்பியர்கள் இதுவரையில் எந்த அறிகுறியும் காட்டவில்லை,” என்று குறிப்பிட்டார். ஆனால் வாஷிங்டனின் கூட்டாளிகள் "ஒரு புதிய எதிர்காலத்திற்காக ஒரு பெரிய அடியை எடுத்தால்… இந்த ஜி7 உச்சிமாநாடு, வாஷிங்டனின் தலைமைக்கு ஒருமித்த தீவிர சவாலின் ஒரு தொடக்கமாக இருக்கும்,” என்றார்.

இதுபோன்றவொரு புவிசார் அரசியல் மறுஅணிசேர்க்கை சர்வதேச ஒழுங்கமைப்பிலும் ஒவ்வொரு நாட்டின் அரசியல் வாழ்விலும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தும். அண்மித்து ஒரு நூற்றாண்டின் மூன்று கால்வாசி பகுதி உலக அரசியலில் ஆளுமை கொண்டிருந்த புவிசார் அரசியல் மற்றும் இராஜாங்க உறவுகளில், இதுபோன்றவொரு மறுநோக்குநிலையை நோக்கி எந்த அமைதியான வழிவகைகளும் கிடையாது.

கடந்த உலக சோசலிச வலைத் தளம் எச்சரித்தவாறு, “உலக முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், பெரிய-அளவிலான வர்த்தகப் போரும் இராணுவ மோதலும் உருவாவதை தடுக்கும் வகையிலும் இந்த சக்திகளது ஒரு கூட்டணி உருவாகியே தீரும் என்று எவரொருவர் திட்டவட்டம் செய்தாலும், அவர் வரலாற்றுக்கு எதிராய் கனமாய் பந்தயம் கட்டுகிறார் என்பதே அர்த்தமாயிருக்கும்.” ஒரு "சுதந்திர" வெளிநாட்டு கொள்கைகைக்கான ஐரோப்பிய சக்திகளின் கோரிக்கைகளானது, மீள்-அணுஆயுதமயமாக்கல், போலிஸ் அரசு நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்க விரோத சிக்கன கொள்கைகள் ஆகியவற்றுக்கான அழைப்புகளுடன் சேர்ந்துள்ளன. அவை அனைத்துமே —அமெரிக்காவுடன் சேர்ந்தோ, அல்லது சாத்தியமானால் அதை எதிர்த்தோ— தங்களின் சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுக்க அவற்றின் விரிவாக்கப்பட்ட இராணுவ பலத்தைப் பெருக்க முனைந்து வருகின்றன.

1930 களைப் போலவே, அதன் வர்த்தகப் போர்கள், மிகவேகமாக நிகழும் அமைதி உடன்படிக்கைகள், சிறியளவிலான போர்கள் மற்றும் இணைப்புகள் ஆகியவற்றுடன், சர்வதேச புவிசார்அரசியல் அதிகரித்தளவில் ஒரு சூடான கட்டத்திற்குள் நுழைந்து வருகிறது. உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படுகின்றன, பின்னர் முறிக்கப்படுகின்றன, புதிய கூட்டணிகள் அமைக்கப்படுகின்றன, எல்லைகள் உருவாக்கப்படுகின்றன, அனேகமாக மிக முக்கியமாக, எல்லா சக்திகளும் கோரபற்களுடன் மீள்ஆயுதமேந்தி வருகின்றன.

இந்த மிகப்பெரிய அபாயகரமான நிலைமையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வேலைதிட்டம் மற்றும் முன்னோக்கை வெளிப்படுத்த முனைய வேண்டும். நான்காம் அகிலத்தின் ஸ்தாபகர் லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “போரின் பாதையை அல்ல, மாறாக வர்க்க போராட்டத்தின் பாதையை" பின்தொடர்வதே பணியாகும்.

ஒரு சர்வதேச வேலைநிறுத்த அலை ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு தொழில்துறையிலும் தொழிலாளர்களிடையே வெளிப்பட்டிருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஓர் உலகளாவிய இயக்கத்தின் மீள்எழுச்சி, போருக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட சர்வதேச இயக்கத்திற்கான புறநிலை அடித்தளத்தை வழங்குகின்றன.