ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

$3000 per second for Bezos, Poverty wages for Amazon workers

பெஸோஸ் க்கு நொடிக்கு 3000 டாலர், அமசன் தொழிலாளர்களுக்கு வறிய கூலிகள்

Eric London
18 July 2018

அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் இன் நிகர சொத்து மதிப்பு திங்களன்று 150 பில்லியன் டாலரைக் கடந்து, அவரை நவீன உலக வரலாற்றில் மிகப் பணக்கார மனிதராக ஆக்கியது.

இந்தளவுக்கு மிகப்பெரிய தொகையை நினைத்து பார்ப்பதே கடினம். இதை அமசனின் 500,000 தொழிலாளர்களின் சமூக நிலைமைகளுடன் அடுத்தடுத்து வைத்து பார்க்கையில் இதன் நிஜமான அர்த்தம் தெரியவரும்.

* ஜெஃப் பெஸோஸ் 2018 இல் 50 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்தாண்டின் ஒவ்வொரு நாளும் அவர் ஈட்டியிருக்கும் 255 மில்லியன் டாலர் என்பது அமெரிக்காவில் 10,000 க்கும் அதிகமான அமசன் தொழிலாளர்களின் ஓராண்டு சம்பளங்களுக்குச் சமம்.

* 2018 இல் பெஸோஸ் ஒரு நொடிக்கு சம்பாதித்துள்ள 2,950 டாலர், இந்தியாவில் ஒரு அமசன் தொழிலாளரின் ஓராண்டு சம்பளமான 2,796 டாலரை விட அதிகம்.

* 2018 இன் ஐந்து நாட்களிலேயே, பெஸோஸ் ஏறக்குறைய உலகளவில் ஒவ்வொரு அமசன் சேவை நிறைவேற்று மைய தொழிலாளரின் 2017 மொத்த சம்பளம் அளவிற்கு பணம் ஈட்டி இருந்தார்.

* பெஸோஸின் செல்வ வளத்தை அமசன் பணியாளர்களுக்குச் சமமாக பகிர்ந்தால், ஒவ்வொருவரும் 300,000 டாலர் காசோலையைப் பெறுவார்கள்.

* சராசரியான ஒரு வாசகர் இந்த ஐந்து புள்ளிகளையும் வாசிக்க எடுக்கும் நேரத்தில், ஜெஃப் பெஸோஸ் இன்னும் 70,000 டாலர் சம்பாதித்திருப்பார், இது 10,000 டாலர் என்ற உலகளாவிய ஆண்டு சராசரி வருவாயை விட ஏழு மடங்கு அதிகம்.

இந்தளவுக்கு சொத்துக்கள் ஓரிடத்தில் குவிந்திருப்பது அமெரிக்காவின் மற்றும் உலகளாவிய சமூகத்தின் ஆதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது. முதலாளித்துவத்தின் கீழ், பெஸோஸ் உம் அவரைப் போன்ற பில்லியனர்களும் அரசியல் கட்சிகளில் மேலாதிக்கம் செலுத்துகின்றனர், அரசு பதவிகளுக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை மேற்பார்வையிடுகின்றனர், உலகின் அரசாங்கங்களது கொள்கையைத் தீர்மானிக்கின்றனர், கல்விப் பயிலகங்கள் மற்றும் ஊடகங்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகள் மூலமாக "மக்கள் அபிப்ராயங்களுக்கு" கட்டளையிடுகின்றனர். இதிலும் கூட, பெஸோஸ் ஒரு பிரதான எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் 2013 இல் 250 மில்லியன் டாலருக்கு வாஷிங்டன் போஸ்ட் ஐ விலைக்கு வாங்கினார்—இது இப்போது அவர் ஒரு நாளைக்கு ஈட்டும் தொகையைக் காட்டிலும் குறைவானது.

இந்த மிகப் பெரும் செல்வவளங்களுக்குப் பின்னால் மிகப்பெரிய சமூக குற்றங்கள் உள்ளன. பெஸோஸின் பில்லியன்கள் அமசன் தொழிலாளர் சக்தியை ஈவிரக்கமின்றி சுரண்டியதன் மூலமாக வந்ததாகும், பெஸோஸின் செல்வவளம் 60 பில்லியன் டாலராக இருந்த 2015 க்குப் பின்னர் இருந்து அங்கே தொழிலாளர் சக்தி இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 க்குப் பின்னர் அமசன் சுமார் 300,000 புதிய தொழிலாளர்களை நியமித்துள்ளது, இது ஓர் உண்மையான படையின் உழைப்பைச் சுரண்டியதன் மூலமாக உருவான உபரி மதிப்பை பெஸோஸ் தனது பையில் சேர்த்துக் கொள்ள அனுமதித்தது.

அமசன் அதன் தொழிலாளர்களின் ஒவ்வொரு கடைசி சொட்டு வியர்வையையும் பிழிந்தெடுக்க 21 ஆம் நூற்றாண்டு நுட்பங்களை அறிமுகப்படுத்தியதன் மூலமாக போட்டித்தன்மையைக் கூர்மைப்படுத்தியது, ஒவ்வொரு நாளும் 14 மைல்கள் நடக்கவோ அல்லது ஓடவோ நிர்பந்திக்கப்பட்டுள்ள அத்தொழிலாளர்கள் எவ்வளவு கடினமாக வேலை செய்கிறார்கள் என்பதை அளவிடும் கண்காணிப்பு கருவிகளை அணிந்து வேலை செய்கிறார்கள். காயப்படுவது பொதுவாக நடக்கின்றன, மரணங்களும் தற்கொலைகளும் கூட வழமையாகி விட்டன. தொழிலிட பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், அமெரிக்காவில் மிகவும் ஆபத்தான வேலையிடங்களில் ஒன்றாக அமேசனைக் கண்டது.

அமெரிக்க அரசின் வெளிநாட்டு ஏகாதிபத்திய போர்களிலும் சரி, உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் மீதான கெஸ்டாபோ பாணியிலான அதன் தாக்குதல்களிலும் சரி, இரண்டிலுமே, அமசன் அமெரிக்க அரசின் குற்றங்களுக்கு ஆழமாக உடந்தையாக உள்ளது.

இந்நிறுவனம் அமெரிக்க இராணுவத்திற்கும் மத்திய உளவுத்துறை முகமைக்கும் (CIA) இணைய சர்வர்களை வழங்குவதுடன், புலம்பெயர்ந்தவர்களை வேட்டையாடி சிறை பிடிக்க, புலம்பெயர்வு மற்றும் சுங்க அமுலாக்க இலாகா (ICE) பயன்படுத்தும் மென்பொருளை வழங்குகின்ற ஒரு தரவு பகுப்பாய்வு நிறுவனமான Palantir க்கு அதன் குளவ்டு சேவையையும் விற்றுள்ளது. போலிஸ் துறைகளுக்கும் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கும் (DHS) ஓர்வெல்லியன் பாணியிலான முகம் அடையாளம் காணும் மென்பொருளையும் அமசன் விற்பதாக மே மாதம் ACLU அறிவித்தது.

இந்த பிரமாண்டமான பெருநிறுவனத்திற்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது, இந்நிறுவனத்திற்கு உள்ளே வளர்ந்து வரும் எதிர்ப்பும் இதில் உள்ளடங்கும்.

பெருந்திரளான மக்களை நாடு கடத்துவதிலும் போலிஸ் கண்காணிப்பு வேலைகளிலும் அது சம்பந்தப்பட்டிருப்பதை நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென கோரி, ஜூன் மாதம், அமசன் பணியாளர்கள் எத்தனை பேர் என்பதைக் குறிப்பிடாமல் ஒரு கடிதம் வெளியிட்டனர். “இது அரசு கண்காணிப்புக்கான மற்றொரு சக்தி வாய்ந்த கருவியாக இருக்கும், இறுதியில் மிகவும் விளிம்போர மக்களைப் பாதிக்கவே இது சேவையாற்றும்,” என்று குறிப்பிடும் அக்கடிதம், சித்திரவதை முகாம்களில் மில்லியன் கணக்கானோரைப் படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை ஹிட்லருக்கு வழங்குவதில் IBM சம்பந்தப்பட்டிருந்ததைக் குறிப்பிட்டு காட்டியது.

இந்தாண்டு, உலகெங்கிலுமான அமசன் வளாகங்களில் பல தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள் அபிவிருத்தி அடைந்ததை கண்டுள்ளது. ஸ்பெயின், போலாந்து மற்றும் ஜேர்மனியில், குறைந்த கூலிகள், “நிரந்தரமாக தற்காலிக" வேலைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான வேலையிட நிலைமைகள் மீதான தொழிலாளர்களின் கோபம் கிட்டத்தட்ட உலகெங்கிலும் நிலவுகிறது, இதனால் ஜூலை 16-17 இல் 36 மணி நேர விற்பனைக்கான “பிரைம் தினத்துடன்" பொருந்தியவாறு, தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டன.

இந்த பிரைம் தின வேலைநிறுத்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான தொழிற்சங்கங்களின் நோக்கமோ, அவற்றில் பங்கெடுத்த தொழிலாளர்களின் விருப்பங்களுக்கு முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

ஸ்பெயினில், அந்த தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை ஒரேயொரு சேவை நிறைவேற்று மையத்தோடு முடக்கிக் கொண்டது. ஜேர்மனியில், வேர்டி (Verdi) தொழிற்சங்கம் பெருநிறுவன இலாபங்களைப் பாதிக்காத வகையில் தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்றறிந்து, அது அழைப்பு விடுத்த ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பல தொழிலாளர்கள் பங்கெடுக்கவில்லை. போலாந்தில், அந்த தொழிற்சங்கம் ஒரு பரந்த வேலைநிறுத்ததைத் தடுப்பதற்காக பகுதியளவில் வேக குறைப்பு நடவடிக்கைக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது.

தொழிலாளர்கள் அமேசனின் தொடர் வினியோக மையங்களை மூடி, கூலிகளில் பாரிய உயர்வு மற்றும் வேலையிட நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய விரும்புகின்ற நிலையில், தொழிற்சங்கங்களோ அவை அமசனின் தொடர் வினியோக மையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆரம்பத்திலிருந்தே வேலைநிறுத்தங்களை மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களாக ஒழுங்கமைக்கின்றன என்பதை ஒப்புக் கொள்கின்றன.

தொழிலாளர்கள் தேசிய எல்லைகளைக் கடந்த தங்களின் சக-தொழிலாளர்களுடன் ஒரு பொதுவான சர்வதேச போராட்டத்தில் இணைய விரும்புகின்ற வேளையில், தொழிற்சங்கங்களோ அவற்றின் இயல்பிலிருந்து தொழிலாளர்களை "அவர்களின் சொந்த" தேசிய அரசுகள் மற்றும் அரசாங்கங்களுடன் பிணைத்து வைக்கின்றன.

அமேசனில் ஆகட்டும் மற்றும் உலகெங்கிலும் ஆகட்டும் அனைத்து வேலையிடங்களிலும், தொழிற்சங்கங்கள் வர்க்க போராட்ட அபிவிருத்திக்கு ஒரு வடிகாலாக அல்ல, ஒரு தடையாக சேவையாற்றுகின்றன. அவற்றின் தலைவர்கள், அரசியல் செயல்பாட்டு அர்த்தத்திலும் சரி சமூக சேர்க்கை என்றரீதியிலும் சரி, இரண்டு விதத்திலும் தொழிலாள வர்க்க உறுப்பினர்களுக்கு விரோதமாக உள்ளனர், ஆனால் இவர்கள் செலுத்தும் சந்தாக்கள் தான் அவர்களுக்கு சம்பளம் அளிக்க உதவுகின்றன. தொழிற்சங்கங்கள், அமசனிலும் ஏனைய இடங்களிலும் வர்க்க போராட்டத்தை இடைவிடாது ஒடுக்குவதன் மூலமாக, இந்தளவுக்கு ஜெஃப் பெஸோஸ் செல்வவளம் ஈட்டுவதற்கு பொறுப்பாகின்றன.

பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு எதிரான அவர்களின் போராட்டங்களில், தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கட்டுக்களைக் தகர்த்தெறிந்து, சாமானிய தொழிலாளர்களின் புதிய அமைப்புகளைக் கட்டமைக்க வேண்டும்.

இத்தகைய ஆலை குழுக்கள், ஒவ்வொரு ஆலையிலும் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கு அல்ல, வெவ்வேறு வேலையிடங்களிலும் தொழிலாளர்களுக்கு இடையே தகவல் தொடர்புகளை ஸ்தாபிக்க போராட வேண்டும். தொழிலாளர்களின் நலன்களும் முதலாளிமார்களின் நலன்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாது, தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே "கூட்டுறவு" இருக்க முடியாது என்ற கோட்பாட்டை அவை அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும். அவை உயர்ந்த மட்டத்தில் ஜனநாயரீதியான விவாதம், திட்டமிடல், மற்றும் தொழிலாளர்களுக்கு இடையே வாதங்களைப் பேணி வளர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கம் ஒரு சர்வதேச சமூக சக்தி, தொழிலாளர்கள் தேசியரீதியில் பிளவுபட்டிருக்கும் போது பலவீனமடைகிறார்கள் என்ற ஒரு புரிதலை அக்குழுக்கள் அடித்தளத்தில் கொண்டிருக்க வேண்டும்.

வர்க்க போராட்டங்கள் ஒடுக்கப்பட்டமை, முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மை மட்டங்களை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில், மொத்த மக்கள்தொகையில் மிக வறிய பாதி பேர்—அதாவது 160 மில்லியன் மக்கள்—கொண்டிருக்கும் அந்தளவிலான செல்வ வளம் மூன்று பேரிடம் குவிந்துள்ளது. உலகளவில், மிக வறிய பாதி சனங்கள்—3.6 பில்லியன் பேர்—கொண்டிருக்கும் அந்தளவிலான செல்வம் ஐந்து மிகப் பெரிய செல்வந்தர்களிடம் உள்ளது. உலக மக்கள்தொகையில் 5 இல் இருந்து 10 சதவீத மிகப் பெரிய செல்வந்தர்கள் தவிர்த்து, பெருந்திரளான மக்களோ கடுமையான பொருளாதார மட்டங்களை முகங்கொடுக்கின்றனர், எந்தளவுக்கு கடுமையாக முகங்கொடுக்கின்றனர் என்பதில் மட்டுமே இது மாறுபடுகிறது.

இதுபோன்ற மிகக் கடுமையான சமத்துவமின்மை மட்டங்கள் இருப்பதானது, சோசலிசப் புரட்சிக்கான அவசர தேவையை எழுப்புகிறது. சமூகத்தால் முதலாளித்துவ அமைப்புமுறையைச் சகித்து கொண்டிருக்க முடியாது. பெருநிறுவன வங்கி கணக்குகளிலும் மற்றும் பெரும் செல்வந்தர்களின் அறக்கட்டளை நிதியங்களிலும் குவிந்து கிடக்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உலகின் ஒவ்வொரு மூலைக்கும் குடிநீர், உணவு, கல்வி, கலாச்சாரம், வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதற்கான பாரிய சர்வதேச திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டும்.

உலக பொருளாதாரத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பானது, முதலாளித்துவத்தின் கீழ், மோதல், போர் மற்றும் போட்டிக்கான ஆதாரமாக சேவையாற்றுகிறது, இதுவே, சோசலிசத்தின் கீழ், ஒவ்வொரு பிரதேசத்தின் மக்களது தேவைக்கு ஏற்ப அந்தந்த பிரதேசங்களின் இயலுமைக்கு ஏற்ப உலகின் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் ஆதாரவளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு அதுவொரு இயங்குமுறையாக மாறும். ஒவ்வொரு கண்டத்திலும் டஜன் கணக்கான நாடுகளில் வலைப்பின்னல் போன்று அதன் சிக்கலான சரக்கு வினியோக சேவை கொண்டிருக்கும் அமசன், உலகெங்கிலும் மருந்துகளையும், கட்டுமானப் பொருட்கள், உணவு மற்றும் பேரிடர் நிவாரண பொருட்களைக் கொண்டு செல்ல ஒரு பொது மக்கள் சேவை நிறுவனமாக மாற்றப்படும்.

ஒரு போராட்டம் இல்லாமல் பெஸோஸ் அல்லது முதலாளித்துவ வர்க்கம் அவர்களின் செல்வ வளங்களை விட்டுத் தராது. தொழிலாள வர்க்கம் சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணைவதன் மூலமாக, வரவிருக்கும் வர்க்க போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும்.