ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Thailand cave rescue and the humanitarian hypocrisy of imperialism

தாய்லாந்து குகையில் மீட்பு நடவடிக்கைகளும், ஏகாதிபத்தியத்தின் மனிதாபிமான பாசாங்குத்தனமும்

By Bill Van Auken
10 July 2018

வடக்கு தாய்லாந்தில் வெள்ள நீர் சூழ்ந்த ஒரு சிக்கலான குகை அமைப்பிலிருந்து 12 சிறுவர்களின் ஒரு கால்பந்து குழுவையும் அவர்களின் பயிற்சியாளரையும் மீட்பதற்கான முயற்சிகளைக் குறித்த நேரடி ஊடக செய்திகள் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைத் துளைத்தெடுத்து வருகின்றன.

ஜூன் 23 இல் தாம் லுவாங் (Tham Luang) குகைக்குள் காணாமல் போன அந்த குழு உறுப்பினர்களை ஒன்பது நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடித்ததே ஏதோவொரு வித வியக்கத்தக்க அற்புதமாக தெரிந்தது. அவர்களை உயிருடன் வெளியில் கொண்டு வருவதற்கான கடினமான —இதுவரையில் வெற்றிகரமான— முயற்சிகளையும் குறைத்து குறிப்பிட முடியாது.

சுற்றிலும் நீர் அதிகரித்து கொண்டிருக்கையில், உணவுமின்றி, இருட்டில் நிலத்துக்கு அடியில் சிக்கி, உதறலெடுக்கும் நிலைமைகளின் கீழ், 11 வயதில் இருந்து 17 வயது நிரம்பிய அந்த சிறுவர்களும், 25 வயதான அவர்களின் பயிற்சியாளர் Ekaphol Chantawong உம் தங்களின் மனஉறுதியை மற்றும் இணக்கத்தைப் பேணி இருந்ததாக தெரிகிறது.

ஞாயிறன்று குகையிலிருந்து நான்கு சிறுவர்களும், திங்களன்று மேலும் நான்கு பேரும் மீட்கப்பட்டார்கள். மீதமுள்ள நான்கு பேரும் மற்றும் அவர்களின் பயிற்சியாளரும் இன்று மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நீச்சல் வீரர்கள், அவர்களின் சுவாச சிலின்டர்களைக் கூட கழற்றி செல்ல வேண்டியளவுக்கு நீர் நிரம்பிய மிகக் குறுகலான பாதைகளைக் கடந்து, அந்த சிலருக்கு நீச்சல் தெரியாது என்ற நிலையில், அவர்களை நோக்கி 11 மணி நேரம் சுற்றி வளைந்து செல்ல நிர்பந்திக்கப்பட்டனர்.

ஒரு திட்ட நடவடிக்கையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தாய்லாந்து கடற்படை SEAL இன் முன்னாள் நீச்சல் வீரர் ஒருவர், குகைக்குள் ஆக்சிஜன் சிலின்டர்களைக் கொண்டு செல்லும் போது உயிரிழந்த நிகழ்வு, அந்நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட அபாயங்களை எடுத்துக்காட்டியது. காலநிலை அச்சுறுத்தல் காரணமாக குகைகளில் நீர் மட்டங்கள் அதிகரித்து வந்த நிலையில், ஆக்சிஜன் அளவும் கூட அபாயகரமாக குறைந்து கொண்டிருந்த நிலையில், என்னவானாலும் முன்னோக்கி செல்வதைத் தவிர வேறு தெரிவு இல்லையென மீட்பு நடவடிக்கையாளர்கள் முடிவெடுத்தனர்.

ஒட்டுமொத்த மீட்பு நடவடிக்கையும் மிதமிஞ்சிய மனித ஒற்றுமையோடு பூமிக்கடியில் சிக்கியிருந்த அந்த இளைஞர்களின் கதியைக் குறித்த கவலைகளால் குணாம்சப்பட்டிருந்தது, இத்துடன் சர்வதேச ஒத்துழைப்பும் மற்றும் அவர்களை உயிருடன் வெளியில் கொண்டு வரும் நோக்கத்தை எட்ட அளப்பரிய ஆதாரவளங்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த அபாயகரமான மீட்பு நடவடிக்கையில் 90 நீச்சல் வீரர்கள் பங்கெடுத்து வருகின்றனர், வெளிநாடுகளில் இருந்து தாய்லாந்துக்கு விரைந்து சென்ற அவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் சுய-ஆர்வலர்கள். சீனக் குகை மீட்பு வல்லுனர்கள் அமெரிக்க நடவடிக்கையாளர்களின் பக்கவாட்டில் இணைந்து செயல்பட்டனர், அதேவேளையில் நெதர்லாந்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு வல்லுனர்களின் ஒரு குழு குகையிலிருந்து நீரை வெளியேற்றுவதற்கு உதவுவதில் அவ்விடத்திற்கு வந்திருந்தது.

இந்த மீட்பு நடவடிக்கையாளர்களின் சுய-அர்ப்பணிப்பும் அளப்பரிய திறமைகளும், அத்துடன் சர்வதேச கூட்டுறவும் மற்றும் இந்த முயற்சிக்காக திரட்டப்பட்ட வெளிப்படையாகவே மட்டுப்படுத்தப்படாத ஆதாரவளங்களும் உற்சாகமூட்டுவதாயுள்ளன, அதேவேளையில் உலகெங்கிலுமான மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் இதை விட மிகப் பெரிய அன்றாட துயரங்கள் மற்றும் பேரழிவுகளிலும் இன்னல்படுகையில் இதேயளவுக்கு ஏன் செய்ய முடியவில்லை என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுகிறது.

இதற்கான பதில் உலகளாவிய முதலாளித்துவ மேலாதிக்கத்தில் தங்கியுள்ளது. இந்த இலாபகர அமைப்புமுறையானது,, சமூக பண்டங்களைச் செல்வந்த ஆளும் உயரடுக்கு செல்வத்தைக் குவித்துக் கொள்வதற்காக மட்டும் அடிபணிய செய்வதில்லை, இது பொருளாதாரரீதியில் அதிகரித்தளவில் ஒருங்கிணைந்த இந்த உலகம் எதிர்விரோத போட்டி தேசிய-அரசுகளுக்குள் பிளவுபட்டிருப்பதைத் தாங்கிப்பிடிப்பதன் மூலமாக சர்வதேச ஆதாரவளங்களை ஒரு பகுத்தறிவார்ந்த விதத்தில் ஒருங்குவிப்பதைத் தடுக்கிறது. வசப்படுத்த முடியாத பொருளாதார, சமூக மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளால் சூழப்பட்டு, அமெரிக்காவின் தலைமையில், உலக முதலாளித்துவம், அதிகரித்தளவில் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தையும், மலைப்பூட்டும் மட்டத்திற்கு சமூக சமத்துவமின்மை மற்றும் உலகப் போரை நோக்கிய முனைவையும் உருவாக்குகிறது.

வாஷிங்டன் ஆதரிக்கும் சவூதி-தலைமையிலான மூர்க்கமான போரில் யேமன் மீது அமெரிக்கா வினியோகித்த குண்டுகளும் ஏவுகணைகளும் மழையென பொழிவதற்கு இடையே, மில்லியன் கணக்கான இளைஞர்கள் சிக்கியுள்ளனர், இது 8 மில்லியன் மக்களைப் பட்டினியின் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 50,000 யேமன் குழந்தைகள் பட்டினியில் உயிரிழந்தனர், அதேவேளையில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குண்டுவீச்சிலும் மற்றும் வேகமாக பரவிய காலரா தொற்றுநோயிலும் உயிரிழந்தனர். அவர்களுக்காக எந்த சர்வதேச மீட்பு முயற்சியும் எடுக்கப்படவில்லை, அவர்களின் கதியைக் குறித்து எந்த ஊடக கவனமும் கொடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டியதே இல்லை—அவர்களைக் கொன்றவர்களுக்கு அமெரிக்க அரசிடமிருந்து அதிகரித்த ஆதரவே வழங்கப்பட்டது.

அமெரிக்க போர்கள் மற்றும் ஏகாதிபத்திய பொருளாதார சூறையாடல்கள், 68.5 மில்லியன் பேரை, அவர்களில் பலர் குழந்தைகள் என்கின்ற நிலையில், பாரியளவிலான இந்த மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்தித்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் எல்லைகளுக்கு தள்ளி அகதிகளாக்கி உள்ளது. அவர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகள் அவர்களின் நாடுகளுக்கே அவர்களைத் "திரும்பி அனுப்ப" உறுதிபூண்டு, அவர்களைக் குற்றவாளிகளாக கையாள்கிறது. ஐரோப்பாவில், அகதிகளுக்கான சித்திரவதை கூடங்கள் ஜேர்மனியிலும் மற்றும் அக்கண்டம் எங்கிலும் எழுப்பப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில், ட்ரம்ப் நிர்வாகத்தின் "பூஜ்ஜிய சகிப்பு" புலம்பெயர்வு கொள்கை, எல்லையைக் கடக்க முயற்சிக்கும் ஒவ்வொரு அகதியையும் கைது செய்து சிறையில் அடைப்பதை அர்த்தப்படுத்துகிறது.

தாய்லாந்து நாடகத்தின் பெரும்பான்மை, குகை வாயிலுக்கு வெளியே விழிவைத்து பார்த்துக் கொண்டிருக்கும், தங்களின் குழந்தைகளுடன் மீண்டும் இணைய காத்து கொண்டிருக்கும், அதில் சிக்கிய இளைஞர்களின் அந்த பெற்றோர்களை மையப்படுத்தி உள்ளன என்கின்ற நிலையில், அமெரிக்காவிலோ, ஆயிரக் கணக்கான இளம் குழந்தைகள் அகதிகளைத் தண்டிப்பதற்கும் பயமுறுத்துவதற்கும் ஒரு வழிவகையாக, புலம்பெயர்ந்த பெற்றோர்களின் கரங்களில் இருந்து பறித்து பிரிக்கப்படுகின்றனர்.

நடந்து வரும் குகை மீட்பு நடவடிக்கைகளுக்கு முன்னால் முதலாளித்துவ அரசுகளின் பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை. தாய்லாந்துக்கு உதவிப்பொருள் அனுப்பியவர்களில் ஹங்கேரியின் தீவிர வலதுசாரி அரசாங்கமும் உள்ளது, இது சமீபத்தில் தான் அதன் குடிமக்களில் எவரேனும் அகதி குழந்தைகளுக்கு உதவி வழங்குவதை ஒரு குற்ற நடவடிக்கையாக ஆக்கியது.

ஞாயிறன்று ட்ரம்ப் ட்வீட் செய்தார்: “குகையிலிருந்து அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியில் மீட்க உதவுவதில், தாய்லாந்து அரசுடன் அமெரிக்கா மிக நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. மிக தைரியமான, திறமையானவர்கள்!”

போர்த்தோ ரிக்கோ மரியா சூறாவளியால் சூறையாடப்பட்டு, குறைந்தபட்சம் 5,000 பேர் கொல்லப்பட்டு, இன்று வரையில் அத்தீவை இடிபாடுகளாக விடப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இதுபோன்ற தைரியத்தையும் திறமையையும் அதற்காக ஒன்றுதிரட்ட விரும்பவில்லை, முற்றிலும் அதற்கு திராணியற்றது என்பதையும் நிரூபித்தது, ஆதாரவளங்களைக் குறித்தோ கூற வேண்டியதே இல்லை.

கடந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், ஏகாதிபத்திய செல்வாக்கு மேலோங்கி இருந்தபோது, ஏகாதிபத்திய சக்திகளின் மேலாதிக்கத்திற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதில் அவற்றின் படுபாதக காட்டுமிராண்டித்தனத்திற்கு இடையே, ஜேர்மன் புரட்சியாளர் ரோசா லுக்செம்பேர்க் இயற்கை பேரழிவுகளின் முன்னால் ஏகாதிபத்திய சக்திகளின் மனிதாபிமான வேஷங்களின் பாசாங்குத்தனம் மீது கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார்.

அப்போது மார்டினிக் (Martinique) தீவின் பீலே மலையில் இயற்கை சீற்றம் ஏற்பட்டு, அதில் சுமார் 40,000 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டிஷாரால் ஆபிரிக்கர்களும், அமெரிக்கர்களால் பிலிப்பைன்வாசிகளும், மற்ற பிற சக்திகளால் மற்ற இடங்களின் காலனி மக்களும் கொல்லப்பட்டதை மேற்கோளிட்டு, லுக்செம்பேர்க் எழுதினார்:

“இப்போது அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே மனதாக, ஒரே சிந்தனையோடு, மார்டினிக் நோக்கி திரும்பி இருக்கிறார்கள்; அவர்கள் உதவுகிறார்கள், மீட்பு நடவடிக்கை மேற்கொள்கிறார்கள், கண்ணீரைத் துடைத்து, பேரழிவை உண்டாக்கிய அந்த எரிமலையைச் சபிக்கிறார்கள். பெரிய மனம் படைத்த பெருமலையே, பீலே மலையே, நீ சிரிக்கலாம்; இந்த விம்மி அழும் ஊனுண்ணிகளை, வள்ளல்களாக வேஷமிட்டு மார்பை மறைத்துக் கொண்டிருக்கும் இந்த பெருந்தகை படுகொலையாளர்களை, நீ வெறுப்போடு குனிந்து பார்க்கலாம். ஆனால் மற்றொரு எரிமலை இடி முழக்கமென அதன் குரலை உயர்த்தும் ஒரு நாள் வரும்: சீறும் கொதிக்கும் அந்த எரிமலை, நீ கவனித்தாலும் கவனியாவிட்டாலும், உணர்ச்சிகரமாக உதிரம் கொட்ட செய்யும் இந்த ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் பூமியின் முகத்திலிருந்து துடைத்து அழித்துவிடும்.”

இன்று, தாய்லாந்து குகையில் சிக்கிய இளைஞர்களுக்காக ட்ரம்பும் "வள்ளல்களாக வேஷமிட்டு மார்பை மறைத்துக் கொண்டிருக்கும்" மற்றவர்களும் காட்டும் அவர்களின் போலி அக்கறை மற்றும் அனுதாபத்திற்கும், உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி அவர்கள் காட்டும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையே நிலவும் கூர்மையான முரண்பாடானது, சமத்துவமின்மை, வன்முறை மற்றும் ஒடுக்குமுறை மேலோங்கிய ஒரு சமூகத்தின் அடையாளமாக மற்றும் சோசலிச புரட்சி கனிந்திருப்பதற்கான ஓர் அடையாளமாக உள்ளது.