ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

European Union adopts far-right refugee policy

ஐரோப்பிய ஒன்றியம் அதிவலதின் அகதிகள் கொள்கையை ஏற்கிறது

By Johannes Stern
30 June 2018

வெள்ளிக்கிழமை புரூசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு முடிவடைந்து சற்று பின்னர், மத்தியத் தரைக்கடலில் மற்றொரு துயர சம்பவம் நடந்தது. ஊடக செய்திகளின்படி, 120 அகதிகளை ஏற்று வந்த ஒரு படகு லிபிய கடல்பகுதியில் மூழ்கியது. ஒரு சிலர் மட்டுமே மீட்கப்பட்டனர், 100 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது. நேரில் பார்த்தவர்களின் தகவல்படி, குழந்தைகள், பெண்கள் மற்றும் மழலைகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மொராக்கோ மற்றும் யேமன் குடும்பங்கள் அப்படகில் இருந்தன.

மீட்பு தொழிலாளர்களைத் தடுத்ததாலும், குற்றவாளிகளாக்கியதன் விளைவாகவும், அந்த உச்சிமாநாட்டுக்கு முந்தைய நாட்களில் நடந்த பல விபத்துக்களில் சுமார் 220 பேர் மூழ்கி இறந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகமை UNHCR இன் தலைவர் கருத்துப்படி, இதுவொரு ஆகக் குறைந்த மதிப்பீடு தான். ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 1, 2014 இல் இருந்து (18 ஜூன், 2018 வரையில்) 16,346 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர், 2000 இல் இருந்து இந்த மரண எண்ணிக்கை சுமார் 35,000 ஆக உள்ளது.

புரூசெல்ஸ் மாநாட்டில் தங்களின் அகதிகள்-விரோத கொள்கையைக் கடுமையாக தீவிரப்படுத்த உடன்பட்ட ஐரோப்பிய ஒன்றியமும் அதன் தேசிய அரசாங்கங்களுமே இந்த மக்கள் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பாகின்றன.

அகதிகள் உள்நுழைய முடியாதவாறு ஐரோப்பிய கோட்டையின் எல்லைகளை அடைப்பது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் போர் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் அகதிகளை நாடு கடத்துவது ஆகியவையும் திட்டங்களில் உள்ளடங்கி உள்ளன. “உறுப்பு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி மற்றும் பொருளுதவியைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிஎல்லைகள் மீது சிறப்பான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய கவுன்சில் மீண்டும் அழைப்புவிடுக்கிறது. இதற்கும் கூடுதலாக, சட்டத்திற்குப் புறம்பாக வரும் புலம்பெயர்ந்தோரை அவர்களின் தாயகங்களுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கை கணிசமானளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும்,” என்று அம்மாநாட்டின் இறுதித் தீர்மானங்கள் குறிப்பிட்டன.

அகதிகள் மீதான ஒடுக்குமுறையைத் திணிக்க, ஐரோப்பிய எல்லை முகமை ஃப்ரொன்டெக்ஸ் (Frontex) “அதன் வரவு-செலவு திட்டக் கணக்கில் அதிகரிப்பு மற்றும் அதன் சட்டதிட்டங்களில் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலமாக விரிவாக்கப்பட" உள்ளது. இதற்கும் கூடுதலாக, வட ஆபிரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளேயும் நடைமுறையளவில் கொடூர சிறை முகாம்கள் நிறுவுவதற்கும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த மாநாட்டு அறிக்கையில், இந்த முகாம்கள் நாசூக்காக "தடுப்பு தளங்கள்" என்றும், “மறுகுடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றத்திற்கான" “கட்டுப்பாட்டு மையங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் எல்லை கட்டுப்பாடுகள் உட்பட தேசியளவிலான நடவடிக்கைகள் வெளிப்படையாக அனுமதிக்கப்படுகின்றன. “ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, உறுப்பு நாடுகளுக்கு இடையே தஞ்சம் கோருவோரின் இரண்டாம் தடவையான புலம்பெயர்வானது, ஐரோப்பிய தஞ்சம் கோரும் பொதுவான முறை மற்றும் செங்கென் சட்ட முறையின் நேர்மையை அச்சுறுத்துகிறது. இத்தகைய புலம்பெயர்வு நகர்வுகளுக்கு எதிராக உறுப்பு நாடுகள் அவசியமான அனைத்து உள்நாட்டு சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஏற்க வேண்டும் என்பதோடு, இதை செய்வதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்று அந்த உடன்படிக்கையின் 11 ஆம் புள்ளி குறிப்பிடுகிறது.

அகதிகளை இலக்கில் வைக்கும் இந்த நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தனமான கொடூரத்தனத்தை அம்பலப்படுத்துகிறது, தேசிய அரசாங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஒருபுறம் இருந்தாலும், இந்த பிற்போக்குத்தனமான கொடூரத்தனம் ஐரோப்பிய அரசியல் வாழ்வைக் கூர்மையாக வலதுக்கு மாற்ற பயன்படுத்தப்பட்டு வருகின்றது. “ஐரோப்பிய பாதுகாப்பு திறனைப் பலப்படுத்துவது,” இணையத் தணிக்கை, ஐரோப்பிய போலிஸ் அரசு அரசை விரிவாக்குவது, சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளைத் தொடர்வது ஆகியவை இம்மாநாட்டு உடன்படிக்கையின் ஏனைய பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புரூசெல்ஸ் மாநாட்டைத் தொடர்ந்து, ஐரோப்பா முழுவதிலுமான தேசியவாத மற்றும் வலதுசாரி தீவிரவாத சக்திகள் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாராட்டும் அளவுக்கு, அது வலதுக்கு நகர்ந்துள்ளது. ஒரு பத்திரிகை அறிவிப்பில், வியன்னாவில் அதிவலது சுதந்திர கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளவரும், ஜூலை 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய தலைமைப் பதவியை ஏற்க இருக்கின்ற அரசாங்கத்தைச் சேர்ந்தவருமான ஆஸ்திரிய சான்சிலர் செபஸ்டியான் கூர்ஸ், இந்த மாநாட்டு தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த அவர் "அழுத்தமளிக்க" இருப்பதாக அறிவித்தார். “எங்களின் போக்கை ஆதரிக்கும் பல பங்காளிகளும் மற்றும் திறந்த எல்லைகளைக் கொண்ட ஒரு ஐரோப்பாவுக்கு பிரச்சாரம் செய்த பலரும் அவர்களின் நிலைப்பாட்டை பரிசீலனை செய்திருப்பதற்காக" அவர் மனநிறைவை வெளிப்படுத்தினார்.

ரோமில், இத்தாலியின் அதிவலது அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் மத்தேயோ சல்வீனி குறிப்பிடுகையில், அவருக்கு "திருப்தி" என்றும், “பெருமைப்படுவதாகவும்" தெரிவித்தார். இத்தாலியின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்-இறுதியில் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் ரோமின் இரும்புக்கரங்களால் ஐரோப்பா நிர்பந்திக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இப்போது அவர் "உறுதியான வாக்குறுதிகளுடன்" காத்திருக்கலாம்.

இத்தாலியின் "மொத்த 600,000” புலம்பெயர்ந்தவர்களையும் நாடு கடத்தவும், அந்நாட்டில் வாழும் சின்டி மற்றும் ரோமா மக்கள் அனைவரையும் நாடு கடத்துவதற்கான தயாரிப்பில், அவர்களைக் குறித்து கணக்கெடுப்பதற்கான முறையீடும் சல்வீனியின் பாசிசவாத முன்மொழிவுகளில் உள்ளடங்கி இருந்தன.

ஜேர்மனியில், அதிவலது AfD இன் வெளியுறவுக் கொள்கை செய்தி தொடர்பாளர் ஆர்மின்-பௌல் ஹம்பெல் அம்மாநாட்டு உடன்படிக்கையை ஆதரித்தார். “அது சரியான திசையில் நகர்ந்து வருகிறது. இதுபோன்ற ஒன்றை தான் நீண்ட காலமாக நாங்கள் கூறி வந்தோம், அந்த பிரச்சினையை ஐரோப்பிய எல்லைகளில் இருந்தே கையாள வேண்டும், குற்றகரமான கும்பல்கள் மற்றும் ஆட்கடத்துபவர்களின் உதவியோடு புலம்பெயர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து வந்த பின்னரே அவர்களைக் கையாள வேண்டும் என்பதல்ல,” என்று Deutschlandfunk க்கு அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போது "தீர்க்கமான விடயம்", “இந்த வரவேற்பு மையங்கள் செயல்படுத்தப்படுமா என்பதற்கான பதில், ஆம் அல்லது இல்லை என்பது தான்.”

கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் இறுதி விளைவைக் குறித்து அதன் திருப்தியை அறிவித்தது. அது “ஜேர்மனியில் நடந்த விவாதத்தின் விளைபயன், ஜேர்மனி இறுதியில் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய மட்டத்தில் கையாண்டுள்ளது,” என்று பேர்லினில் CSU இன் நாடாளுமன்ற குழுத் தலைவர் அலெக்சாண்டர் டோபிரிண்ட் தெரிவித்தார். வெளி எல்லைகளை சிறப்பாக பாதுகாப்பது உட்பட பல புள்ளிகள், “சில காலமாகவே CSU பலமாக அழைப்புவிடுத்து வந்த" கோரிக்கைகளாகும். இதற்கு கூடுதலாக, அந்த மாநாட்டு ஆவணத்தில் "தேசிய நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் வெளிப்படையாக வழிவகைகள் உள்ளது,” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவை "இதை பயன்படுத்துவதற்கு தயாரிப்பு" செய்யும், மேலும் "இப்போதும் தேசிய நடவடிக்கைகள் அவசியப்படுவதாக" நம்புகிறேன் என்றார்.

அந்த புரூசெல்ஸ் உடன்படிக்கை, CDU மற்றும் CSU இடையே மாபெரும் கூட்டணிக்குள் இருந்த பிரச்சினைக்கு குறைந்தபட்சம் ஒரு தற்காலிக சமாதானத்திற்கும் தயாரிப்பு செய்துள்ளது. CSU இன் துணைத் தலைவர் மான்ஃபிரெட் வேபர் அம்மாநாட்டு முடிவுகள் மீது ஒரு நம்பிக்கையான மதிப்பீட்டை வழங்குமாறு Münchner Merkur க்கு முறையிட்டார். சான்சிலர் அங்கேலா மேர்க்கெலைக் குறிப்பிட்டு அவர் கூறுகையில், “அவர் சொன்னதை செய்துவிட்டார்,” என்றார்.

மேர்க்கெல் அவர் பங்கிற்கு, ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அந்த மாநாட்டு முடிவுகளைப் பாராட்டியதுடன், CSU ஆல் கோரப்பட்டதைப் போன்ற தேசிய நடவடிக்கைகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார். அவர்கள் "ஒரு விரிவான புலம்பெயர்வு மூலோபாயத்தை அபிவிருத்தி செய்திருந்தனர், அது வெளி எல்லைகளையும் அந்த எல்லைகளின் கட்டுப்பாட்டையும் உள்ளடக்கி உள்ளதுடன், வெளி நடவடிக்கைகளையும் உள்ளடக்கி உள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே நடவடிக்கைகள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது, நாம் இப்போது எதை இரண்டாம் தடவையான புலம்பெயர்வு என்று கூறுகிறோமோ, அந்த உள்நாட்டு பிரச்சினைகள் மீதும் ஒருங்குவிந்துள்ளது,” என்றார்.

ஏற்கனவே வியாழக்கிழமை அவரது அரசு அறிக்கையில், மேர்க்கெல் CSU இன் குறிப்பிடத்தக்க பாணியில் இவ்வாறு அறிவித்திருந்தார், “அது உத்தரவு, நிர்வாகம், நடைமுறைப்படுத்தல், நிலைத்திருக்கும் தன்மை சம்பந்தப்பட்டதாகும். அது நமது உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்பாதுகாப்பு சம்பந்தமானது. தேசிய நடவடிக்கைகளும் சரி ஐரோப்பிய நடவடிக்கைகளும் சரி இரண்டுமே இதற்கு தேவைப்படுகின்றன.”

சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பும் "ஐரோப்பிய" உடன்படிக்கைகள் ஸ்பெயின் மற்றும் கிரீஸ் உடன் முடிவு செய்யப்பட்டு விட்டதாக மேர்க்கெல் வெள்ளியன்று அறிவித்தார். “தஞ்சம் கோருவோர் ஜேர்மன் அதிகாரிகளால் ஜேர்மன்-ஆஸ்திரிய எல்லையில் நிறுத்தப்பட்டால் தஞ்சம் கோருவோரை மீண்டும் ஏற்றுக் கொள்வதைத் தொடங்க, தொடர்புடைய அரசிடமிருந்து EURODAC (ஐரோப்பிய ஒன்றியத்தின் கைரேகை தரவுத்தளம்) உள்நுழைவைக் கொண்டிருந்தால்" அவ்விரு நாடுகளும் தயாராக உள்ளன என்று ஒரு அரசாங்க செய்தி வெளியீடு அறிவித்தது. இதற்கு பிரதியீடாக, உறுப்பு நாடுகள் "வெளி எல்லைகளில் மிகப் பொதுவான ஒத்துழைப்பை … நிதியியில்ரீதியிலும் அத்துடன் அதிக போலிஸ் அதிகாரிகளையும்" பெறும்.

போலி-இடது சிரிசாவில் இருந்து, சமூக ஜனநாயக PSOE ஸ்பானிய அரசாங்கம் வரையில், ஜேர்மனியின் மாபெரும் கூட்டணி மற்றும் மிக வெளிப்படையாக இத்தாலி, ஆஸ்திரியா, கிழக்கு ஐரோப்பாவின் அதிவலது அரசாங்கங்கள் வரையில், ஐரோப்பாவில் ஆட்சியிலிருக்கும் அனைத்து கட்சிகளும் அகதிகளுக்கு எதிரான பயங்கரத்தைத் தீவிரப்படுத்த மிக நெருக்கமாக கூடி இயங்கி வருகின்றன என்ற உண்மையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவினது முன்னோக்கின் சரியானத்தன்மையை அடிக்கோடிடுகிறது. ஐரோப்பிய வரலாற்றிலேயே மிக இருண்ட காலங்களை நினைவூட்டும், இத்தகைய அபாயகரமான அரசியல் அபிவிருத்திகளைத் திருப்பித் தாக்க, தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கு எதிராகவும், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான நனவுபூர்வமான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.