ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Millions of refugees face harsh conditions across South Asia

 தெற்காசியா எங்கிலும் மில்லியன் கணக்கான அகதிகள் கடுமையான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்

By Rohantha De Silva 
13 July 2018

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களும் தஞ்சம் கோருபவர்களும் துன்புறுத்தப்பட்டு வருகின்ற அதே வேளையில், தெற்காசியா முழுவதிலுமான அரசாங்கங்களால் பல மில்லியன் அகதிகள் எதிர்கொள்ளும் மிருகத்தனமான நிலைமைகளும் அவ்வளவு குறைவானதாக இல்லை.

தற்போது இந்த பிராந்தியத்தில் மிக முக்கியமான அகதிகள் குழுவாக பங்களாதேஷில் உள்ள நூறாயிரக்கணக்கான பர்மிய ரோஹிங்கியா அகதிகள் உள்ளனர். கொடூரமான மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீடுகளில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பருவகால பாதிப்பில் இருந்து அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு கிடைப்பதில்லை. கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக பர்மிய இராணுவமும் பௌத்த மேலாதிக்க சக்திகளும் நிகழ்த்திய அதிகரித்தளவிலான வன்முறை தாக்குதல்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு பதிலிறுப்பாக ரோஹிங்கியா அகதிகளின் உட்புகுதல் இருந்தது.

கடந்த மாதம் இறுதியில் வெளிவந்த செய்தி அறிக்கைகளின் படி, பர்மா-பங்களாதேஷ் எல்லைக்கு அருகே, காக்ஸ் பஜாரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளங்கள் போன்ற அபாயங்களை எதிர்த்து குறைந்தபட்சம் 200,000 மக்கள் போராடினர். ஆகஸ்ட் 2017 இல் இருந்து 700,000 க்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷிற்குள் நுழைந்துள்ளமையால், அங்குள்ள அகதிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளது.

காக்ஸ் பஜாரில், சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்தின் (International Red Cross and the Red Cresent Society) அவசரகால நடவடிக்கையின் தலைவர் ஸ்டீவ் மெக்ஆண்ட்ரூ, ஜூன் 25 அன்று ஐக்கிய இராஜ்யத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தின் போது, பங்களாதேஷ் அகதிகள் முகாம்களில் உள்ள நிலைமைகளைப் பொறுத்தவரை, கடந்த இருபது ஆண்டுகளில் அவர் கண்ட முகாம்களில் மிக மோசமான நிலைமையிலுள்ள முகாமாக அது இருந்தது எனத் தெரிவித்தார்.

“ஏற்கனவே, முகாம்களில் சில இயற்கை சேதங்களை (பருவகால மழையினால் உருவானவற்றை) நாம் காண தொடங்கியுள்ளோம்,” என்று மெக்ஆண்ட்ரூ தெரிவித்தார். மேலும், “முகாம்களில் பல கூடாரங்கள் சேதமடையத் தொடங்கிவிட்டன. சில சாலைகள் பயனற்று போய் விட்டன. கழிவறைகள் வெள்ளத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டன. அத்துடன், மக்கள் நடக்கக்கூடிய மற்றும் குழந்தைகள் தினசரி பள்ளிக்கு செல்லக்கூடிய பாதைகள் ஊடாக வெள்ள நீர் அத்துமீறி பாய்ந்து செல்கின்றது” என்றும் கூறினார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் மழை பெய்வது தொடருமானால் அங்கு நிலைமைகள் இன்னும் மோசமடையக்கூடும் எனவும் மெக்ஆண்ட்ரூ கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் (World Health Organization-WHO) செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்டேமியரும் அதிகரித்து வரும் சுகாதார சீர்குலைவு பற்றி எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், “இந்த பருவகால மழையும் வெள்ளப் பெருக்கும், வயிற்றுப் போக்கு, ஹெபடைட்டிஸ் போன்ற தண்ணீரில் பரவும் நோய்களையும், மற்றும் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற உயிரிகளால் பரவும் நோய்களையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.

பங்களாதேஷில் மட்டும் ரோஹிங்கியா அகதிகள் இல்லை. சில அறிக்கைகளின் படி பார்த்தால், இந்தியாவிற்குள்ளும் இவர்களில் சுமார் 40,000 பேர் தஞ்சம் புகுந்து, மும்பை, தில்லி மற்றும் ஹைதராபாத் என நாட்டின் பெரும் நகரங்களின் சேரிப் பகுதிகளில் மோசமான நிலைமைகளில் வசித்து வருகின்றனர். மேலும், இந்தியாவின் முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமான ஜம்மு காஷ்மீரில் கூட கிட்டத்தட்ட 5,000 ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர்.

இந்தியாவில், ஆளும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) மற்றும் அதனுடன் இணைந்த பிற இந்து தீவிரவாத குழுக்களினால் தூண்டப்பட்ட முஸ்லீம் விரோத துன்புறுத்தலுக்கு ரோஹிங்கியா அகதிகள் ஆளாகியுள்ளனர். பிஜேபி மந்திரிகளும் பிற இந்து பேரினவாதிகளும், இந்த ரோஹிங்கியா அகதிகளை பாகிஸ்தான் நிதியுதவி பெறும் காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என பொய்யாக குற்றம்சாட்டியுள்ளதோடு, அவர்களை வெளியேற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ஒரு மூத்த பிஜேபி பிரமுகர் மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேச்சாளருமான குல்விந்தர் குப்தா, சன்ஜூவான் இராணுவ முகாமில் ஒரு பிரிவினைவாத தற்கொலை தாக்குதலில் ரோஹிங்கியாக்கள் ஈடுபட்டனர் என்றும், மேலும் அதில் ஆறு இராணுவ சிப்பாய்களும், ஒரு குடிமகனும் மற்றும் மூன்று தாக்குதல்காரர்களும் கொல்லப்பட்டனர் என்றும் குற்றம்சாட்டினார். இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களும், மற்றும் இந்து பேரினவாதிகளின் இதே போன்ற கூற்றுக்களும், அனைத்து ரோஹிங்கியா அகதிகளையும் வெளியேற்றுவதற்கான அழைப்புக்களை அதிகரிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், பல்லாயிரக்கணக்கான சக்மா மற்றும் ஹாஜோங் அகதிகளும் கூட வசித்து வருகின்றனர். இவர்கள் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், பாதுகாப்பு படையினர் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்ளையர் குழுக்களின் தாக்குதல்களினால் பங்களாதேஷின் சிட்டகாங் மலைப்பகுதி மாகாணங்களில் இருந்து தப்பியோடி வந்தவர்களாவர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை பொறுத்தவரையில், இந்திய மாகாணம் அருணாச்சலப்பிரதேசத்தில் மட்டும் சுமார் 47,000 சக்மாக்கள் வசித்து வந்துள்ளனர் என்பதுடன், இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களிலும் மேற்கு வங்கத்திலும் கூட பல அகதிகள் வாழ்கின்றனர்.

பங்களாதேஷில் இருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான “சட்டவிரோத” புலம்பெயர்ந்தவர்கள் அங்கு இருந்தனர் என்று இந்தியாவின் முன்னாள் காங்கிரஸ் அரசாங்கம் கூறிய போதிலும், தற்போதைய பிஜேபி நிர்வாகமோ புலம்பெயர்ந்தோர் விரோத உணர்வை தூண்டிவிடும் ஒரு முயற்சியில், 20 மில்லியன் புலம்பெயர்ந்தவர்கள் இருப்பதாக பொய்யாக வலியுறுத்திக் கூறுகின்றது.

படுகொலைகள் மற்றும் தீவின் மீதான இனவாத போர் இவற்றில் இருந்து தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களும் மிக வறிய நிலைமைகளில் இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்பதுடன், தென் இந்தியா முழுவதிலுமான அகதிகள் முகாம்களில் தொடர்ச்சியான பொலிஸ் கண்காணிப்பின் கீழ் அவர்கள் வசித்து வருகின்றனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு யுத்தத்தின் முதல் கட்டமான 1983 மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இலங்கையை விட்டு சுமார் 130,000 இலங்கை தமிழர்கள் தப்பியோடி வந்தனர்.

இந்திய மாகாணமான தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் 60,000 க்கும் அதிகமான அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், கிட்டத்தட்ட 38,000 பேர் பிற குடியிருப்புகளிலும் வசித்து வருகின்றனர். மேலும், கேரளாவில் 7,000 அகதிகளும், கர்நாடகாவில் 35,000 அகதிகளும் வசித்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் போட்டி முதலாளித்துவ கட்சிகள் இரண்டும் – ஆளும் கட்சியான AIADMK மற்றும் எதிர் கட்சியான DMK இரண்டும் – பல நூறாண்டு காலம் பழமை வாய்ந்த தமிழ் குடும்பங்களின், மற்றும் இலங்கைத் தமிழர்களுடன் கலாச்சார உறவுகளை கொண்டிருக்கும் தமிழ்நாடு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழர்களின் நிலைமை குறித்து முதலைக் கண்ணீர் வடித்துள்ளனர். இருப்பினும், மாறி மாறி ஆட்சிக்கு வரும் AIADMK மற்றும் DMK அரசாங்கங்களும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வருகின்ற போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலைமையை எதிர்கொள்கின்றனர் என்பதுடன், அவர்களுக்கு இந்திய குடியுரிமையும் வழங்கப்படவில்லை.

அதிகபட்சமாக பாகிஸ்தானில் ஏற்கனவே 300,000 உள்நாட்டு அகதிகள் இருக்கின்ற நிலையில், 2.7 மில்லியனுக்கு அதிகமான ஆப்கானிய அகதிகளுக்கு அந்நாடு அடைக்கல பூமியாக உள்ளது. அதில் பாதி பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்டவர்களாவர்.

சோவியத் ஒன்றிய ஆதரவிலான ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களுக்கு நிதி மற்றும் இராணுவ உதவிகளை வழங்க தொடங்கிய போது ஆப்கானியர்களின் உட்புகுதல் 1979 இல் தொடங்கியது. 2001 இல் அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனையும் வாஷிங்டனின் பரந்த மூலோபாயத் திட்டத்தின் ஒரு பாகமாகவே இந்த தற்போதைய தலையீடு உள்ளது.

தெற்காசிய முழுவதிலும் நிலவுகின்றதான பல மில்லியன் கணக்கான தஞ்சம் புகுந்தவர்கள் மற்றும் அகதிகளின் கடுமையான வாழ்க்கை நிலைமைகள் என்பது ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் பிராந்திய ஆளும் உயரடுக்கினரின் ஒரு கடுமையான குற்றச்சாட்டாக உள்ளது.