ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Australia: Tamil refugee deported, separated from his wife and baby daughter

ஆஸ்திரேலியா: தமிழ் அகதி அவரின் மனைவி மற்றும் பெண் குழந்தையிடமிருந்து பிரித்து, நாடு கடத்தப்பட்டார்

By Max Newman
23 July 2018

அமெரிக்க நிர்வாகம் காட்டுமிராண்டித்தனமாக அகதி குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வருவதன் மீது உலகளாவிய கவனம் ஒருமுகப்பட்டிருக்கையில், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் தஞ்சம் கோருவோரைத் தண்டிப்பதற்கும் மற்றும் தடுப்பதற்கும் ஒரு வழிவகையாக வேண்டுமென்றே குடும்பங்களைப் பிரிப்பதில் வகித்துள்ள பாத்திரத்தை கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவங்கள் உயர்த்திக் காட்டின.

மால்கம் டர்ன்புல்லின் தாராளவாத-தேசிய அரசாங்கம், தீயவர் என்ற மூடிமறைப்பின் கீழ், தஞ்சம் கோரிய திலீபன் ஞானேஸ்வரன் என்ற 30 வயது தமிழர் ஒருவரைப் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பியது. அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது 10 மாத குழந்தை மற்றும் அவர் மனைவி கார்திகா ஞானேஸ்வரனிடம் இருந்து பிரிக்கப்பட்டார், அனேகமாக நிரந்தரமாக கூட இருக்கலாம்.

ஞானேஸ்வரனுக்கு ஜூலை 13 இல் நாட்டை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டது, பின்னர் நான்கு நாட்களுக்கும் குறைவான காலத்தில் ஜூலை 16-17 இன் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார். ஆஸ்திரேலிய அரசாங்கம் வாடகைக்கு அமர்த்தியுள்ள ஓர் ஒப்பந்த விமானம் மூலமாக, நாடு கடத்தப்பட்ட 18 தஞ்சம் கோரிய இலங்கையர்களில் அவரும் ஒருவராவார்.

அவர்கள் இலங்கை தலைநகரம் கொழும்புக்கு அருகில் பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கே உடனடியாக குற்ற விசாரணை இலாகாவிடம் (CID) ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், கடந்த புதனன்று இரவு தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக, அங்கே ஞானேஸ்வரன் விசாரிக்கப்பட்டார். வெளியில் தெரிவிக்கப்படாத குற்றச்சாட்டுக்களின் மீது அவர் வருகின்ற புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் அகதிகளை, குறிப்பாக பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுடன் (LTTE) தொடர்பு வைத்திருந்தவர்களாக குற்றஞ்சாட்டப்படுபவர்களைச் சித்திரவதை செய்ததற்காக இந்த குற்ற-விசாரணை இலாகா நீண்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாறைக் கொண்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் ஒரு உறுப்பினர் என்று நிர்பந்தத்தின் கீழ் பொய்யாக அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெறும் வரையில், பாதுகாப்பு படைகளால் பிடிக்கப்பட்டு ஞானேஸ்வரன் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், இலங்கையை விட்டு தப்பியோடி இருந்தார். படகு மூலமாக ஜூன் 2012 இல் ஆஸ்திரேலியா வந்த அவர், தற்காலிக இணைப்பு நுழைவனுமதியில் "சமூக தடுப்புக்காவலில்" நிறுத்தப்பட்டிருந்தார். அகதி பாதுகாப்புக்கான அவர் விண்ணப்பம் இந்தாண்டு தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்ட பின்னர், அவர் சிட்னியில் வில்லாவுட் தடுப்புக்காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.

அவரைத் திருமணம் செய்யவிருந்த அவரது எதிர்கால மனைவி கார்த்திகா செப்டம்பர் 2012 இல் வேறொரு படகில் அங்கே வந்ததடைந்த போது, அவரும் அதேபோல சமூக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் 2016 இல் ஒருவரையொருவர் சந்தித்து திருமணம் செய்து கொண்டனர், அதற்கடுத்த செப்டம்பரில் அவர்களுக்கு மகள் பிறந்தாள்.

ஞானேஸ்வரன் திருப்பி அனுப்பப்பட்ட பின்னர், கார்திகா மனமுடைந்திருப்பதைத் தெரிவிக்க ஆஸ்திரேலிய ஊடகங்களிடையே பேசினார். “நாங்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளோம்; என் மகள் மிகவும் நிலைகுலைந்து விட்டாள், அவள் அவளின் தகப்பனாருக்காக ஏங்குகிறாள்,” என்று தெரிவித்தார். “என் கணவர் என்னுடன் இல்லை, அவரை மீண்டும் நாங்கள் எப்போதும் பார்ப்போம் என்பது குறித்து கூட எனக்கு தெரியவில்லை. என் மகள் வாழ்க்கைக்கு அவள் தகப்பனார் தேவை. ஆனால் நாங்கள் பிரிக்கப்பட்டுள்ளோம்,” என்றார்.

ஞானேஸ்வரனுக்கு நாடு கடத்தப்படுவதற்கான உத்தரவாணை கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், கார்த்திகா மற்றும் அவரது கைக் குழந்தைக்கு “பாதுகாப்பு புகலிட அமைப்பு” நுழைவனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதால், இவர்கள் பிரிக்கப்பட்டிருப்பது உண்மையில் நிரந்தரமானதாக இருக்கலாம். இந்த வகையான நுழைவனுமதி வைத்திருப்பவர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆஸ்திரேலியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள அனுமதி இல்லை என்பதால், இவர்களின் குடும்பம் மீண்டும் இணைவதற்கான உரிமையை அது வெளிப்படையாகவே மறுக்கிறது. கார்த்திகா இலங்கைக்குத் திரும்பினாலும் அவரும் இன்னல்களைச் சந்திப்பார் என்பதால், அவரால் ஆஸ்திரேலியாவை விட்டு செல்ல முடியாது என்பதோடு, அவர் கணவரை மீண்டும் அவரால் ஒருபோதும் சந்திக்க முடியாமலேயே போகலாம்.

இந்தளவுக்கு விரைவாக ஞானேஸ்வரனை நாடு கடத்தியமை எந்தவொரு சட்டபூர்வ தலையீட்டையும் அல்லது தடையாணையையும் தடுப்பதற்காக நடந்திருந்தது. கார்த்திகா, ஏனைய ஆதரவாளர்களோடு சேர்ந்து, அவர் அடைக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் மையத்தின் முன்னால் ஜூலை 16 இல் ஓர் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்திருந்த போதும் கூட, ஞானேஸ்வரன் வெளியேற்றப்பட்டார்.

இந்த அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தை (UNHCR) மீறியுள்ளது. ஞானேஸ்வரனை வெளியேற்றுவதற்கு எதிராக தலையிடுமாறு கோரி, ஜூலை 15 இல், UNHCR க்கு விண்ணப்பிக்கப்பட்டது. அவர் நாடு கடத்தப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், UNHCR சம்பிரதாயத்திற்காக அவரை நாடு கடத்த வேண்டாமென ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்ததாக வெளியானது.

ஜெனீவா பத்திரிகையாளர் கூட்டத்தில் UNHCR செய்தி தொடர்பாளர் அண்ட்ரெஜ் மஹிகிக் கூறுகையில், நாடு கடத்திய அந்த நடவடிக்கை "குடும்ப ஒற்றுமையின் அடிப்படை உரிமையையும், அத்துடன் குழந்தையின் முக்கிய நலன்கள் மீதான அடிப்படை கொள்கைகளையும்" மீறி இருப்பதாக தெரிவித்தார்.

"நடைமுறைகள் மற்றும் தடுப்புமுறைகளை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும்" ஆஸ்திரேலியாவின் கொள்கை 2013 இல் இருந்து அகதி குடும்பங்களைப் பிரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளதாக மஹிகிக் தெரிவித்தார். “கடல் வழியாக ஆஸ்திரேலியா வந்தடைந்த தஞ்சம் கோருவோர்கள், அவர்களின் மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் உட்பட ஆஸ்திரேலியாவில் அவர்களின் விருப்பத்திற்குரியவர்களுடன் மீண்டும் இணைவதைத் தடுத்துள்ளது,” என்றார்.

அந்த UNHCR பிரதிநிதி குறிப்பிட்டார்: “இந்த சமீபத்திய சம்பவமானது குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேர்வதைத் தடுப்பதுடன், அதற்கு அப்பாற்பட்டு இது வேறுவிதமாக அவர்களை காலவரையின்றி செயலூக்கத்துடன் பிரித்து விடுகிறது.”

ஞானேஸ்வரனும் அவர் குடும்பமும் கையாளப்பட்ட விதம் ட்ரம்ப் நிர்வாகத்தின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை ஒத்துள்ளது, இதைக் கொண்டு அவர் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான மக்கள் போராட்டங்கள் ட்ரம்ப் அவரது உத்தரவைத் திரும்பப் பெற செய்திருந்தாலும், 2,000 க்கும் அதிகமான குழந்தைகள் இன்னமும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் அமெரிக்கா எங்கிலும் கூடாரங்களிலோ அல்லது தடுப்புக்காவல் மையங்களிலோ வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடைமுறைகள் ஆஸ்திரேலியாவில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அடுத்தடுத்து வந்த தொழிற் கட்சி மற்றும் தாராளவாத-தேசிய அரசாங்கங்களின் கொள்கைகள், ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு மீண்டும் ஒன்றுசேர்வதற்கான உரிமையை மறுத்துள்ளன. 2012 இல், பசுமை கட்சி ஆதரவிலான கில்லார்ட் தொழிற் கட்சி அரசாங்கம் ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து தஞ்சம் கோரிய அனைத்து அகதிகளுக்கும் நுழைவனுமதி வழங்க தடை விதித்தது, இதனால் அவர்கள் தற்காலிக இணைப்பு நுழைவனுமதிகளைப் (bridging visas) பெற நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நுழைவனுமதிகள் குடும்பங்கள் மீண்டும் ஒன்றுசேர்வதற்கான உரிமையை பறித்ததோடு மட்டுமின்றி, அது வேலை செய்வதிலிருந்தும் அவர்களைத் தடுத்தது, மேலும் வறுமை மட்டத்திற்கும் குறைவான உதவித்தொகையாக வாரத்திற்கு வெறும் 270 டாலரை அவர்களுக்கு வழங்கியது.

அந்தாண்டு ஆகஸ்டில் கில்லார்ட் அரசாங்கம், ஆரம்பத்தில் சுமார் 700 பேரை அனுப்பியும், பின்னர் பெருந்திரளான அகதிகளைக் கொழும்புக்கு நாடு கடத்த தொடங்கியதன் மூலமாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ இன் எதேச்சதிகார இலங்கை அரசாங்கத்துடன் புவிசார் மூலோபாய உறவுகளைப் பலப்படுத்த நகர்ந்தது.

டிசம்பர் 2012 இல், “மக்கள் கடத்தப்படுவதை" எதிர்க்கும் மோசடி பதாகையின் கீழ், அப்போதைய தொழிற் கட்சி வெளியுறவுத்துறை அமைச்சர் பாப் கோர், படகு மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் கோரும் எந்தவொரு இலங்கையரையும் ஆஸ்திரேலிய கடற்படை பிடித்து திருப்பி அனுப்பும் என்று அறிவித்தார்.

தஞ்சம் கோருபவர்கள் "சித்திரவதை, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை" உட்பட, சிறையில் மிகவும் கடுமையான நிலைமைகளை முகங்கொடுக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்ற போதும் கூட, கடந்த செப்டம்பரில், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தஞ்சம் கோருவோரை இலங்கைக்குப் பலவந்தமாக திருப்பி அனுப்ப ஒப்புதல் வழங்கியது.

ஈவிரக்கமின்றி இருப்பதில் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு குறைவின்றி இருக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய இலங்கை அரசாங்கம் இந்த ஏற்பாடுகளைத் தொடர்ந்து ஒழுங்குபடுத்தி வருகிறது.

ஆயிரக் கணக்கில் இல்லையென்றாலும், நூற்றுக் கணக்கான இலங்கை அகதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள் அல்லது நாடு கடத்தப்படுகிறார்கள்: ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தாண்டு மார்ச் மாதம், நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை சிறை பிடித்தது, அவர்கள் நாடு கடத்தப்படும் விளிம்பில் இருந்தனர், ஆனால் அக்குடும்பம் வாழ்ந்து வந்த ஒரு சிறிய கிராமப்புற நகரமான பிலொலாவில் குடியிருப்போர் தொடுத்த பலமான நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டது.

பெருநிறுவன உயரடுக்குள் மற்றும் அவர்களுக்ககாக சேவையாற்றும் அரசாங்கங்கள் சீரழித்துள்ள சமூக நிலைமைகளுக்காக உலகெங்கிலும் அகதிகள் பலிக்கடா ஆக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவிலும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் ஆஸ்திரேலியாவிலும், குடும்பங்கள் பிரிக்கப்படுகின்ற, கடலில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறந்து மடியும் அல்லது காலவரையின்றி அடைத்து வைக்கப்படும் கொடூரமான காட்சிகளைத் தொழிலாளர்கள் கண்டு வருகிறார்கள். வாழ்க்கை நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், இத்தகைய கொள்கைகள் மிகவும் பரந்தளவில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக திருப்பி விடப்படும்.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் இதர கட்டுரை:

அகதிகள் ஐரோப்பிய பொறியில் சிக்கியுள்ளனர்

[9 July 2018]