ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Three years since Syriza’s referendum on EU austerity in Greece

கிரீஸில் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீதான சிரிசாவின் கருத்து வாக்கெடுப்புக்குப் பின்னர் மூன்று ஆண்டுகள்

Alex Lantier
6 July 2018

ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீது கிரீஸின் சிரிசா (“தீவிர இடது கூட்டணி”) அரசாங்கம் நடத்திய கருத்து வாக்கெடுப்பின் மூன்றாம் நினைவாண்டை நேற்று குறித்தது. மில்லியன் கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் பெருவாரியாக வழங்கிய "வேண்டாம்" வாக்குகளை சிரிசா நசுக்கியமை, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மூலோபாய அனுபவமாகும். ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் முன்பினும் பரந்த அடுக்குகள் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த மூலோபாய அனுபவம் அதிகரித்தளவில் உலகம் முழுமைக்கும் பொருந்துகிறது.

ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்கள் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் இருந்து 30 சதவீதத்திற்கும் அதிகமாக வாழ்க்கை தரங்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றிருந்த நிலையில், அவற்றிற்கு எதிராக கிரீஸ் எங்கிலும் ஓராண்டு நடந்த பொதுத்துறை, துறைமுக மற்றும் தொலைக்காட்சித்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னர் ஜனவரி 2015 இல் சிரிசா பதவியேற்றது.

சிரிசா ஐரோப்பிய ஒன்றிய புரிந்துணர்வை முறித்துவிட்டு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவுகளை மறுபேரம் செய்வதற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முதலாளித்துவ கட்டமைப்புக்குள் மக்களின் வாழ்க்கைகளை மேம்படுத்துவதற்கும் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர், அதன் முன்னோக்கு தோல்வியடைந்தது. அது, ஆழ்ந்த புதிய வெட்டுக்களை செய்ய வேண்டும் அல்லது கிரீஸைத் திவால்நிலைமைக்கு மூழ்கடிக்கும் வகையில் கடன்கள் மறுக்கப்படுவதை முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்ற இடைவிடாத ஐரோப்பிய ஒன்றிய கோரிக்கைகளை எதிர்கொண்டது. பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் ஜூலை 5, 2015 இல் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகள் மீது ஒரு கருத்து வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தார்.

அதன் பின்னர் கட்டவிழ்ந்த சம்பவங்கள், அதிகாரத்திற்கான ஒரு புரட்சிகரமான சோசலிச போராட்டம் மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு முன்னிருக்கும் ஒரே பாதை என்ற ஒரு கூர்மையான படிப்பினையை வழங்கின. செல்வச்செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் அடிப்படையில், பின்நவீனத்துவம், பாலினம் சார்ந்த பாகுபாடு மற்றும் இன அடையாள அரசியலில் தத்துவரீதியில் வேரூன்றிய சிரிசா போன்ற திவாலான, மார்க்சிச-விரோத கட்சிகளின் ஒட்டுமொத்த சர்வதேச அடுக்குகளில் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்கும் வர்க்க இடைவெளி விரிவார்ந்த விதத்தில் அம்பலமானது.

அந்த கருத்து வாக்கெடுப்பின் மூலமாக, தொழிலாள வர்க்கம் அது போராடுவதற்குத் தயாராக இருப்பதைத் தெளிவுபடுத்தியது. ஐரோப்பிய ஒன்றிய வங்கி பிணையெடுப்புகளுக்கு எதிரான வாக்கெடுப்புகள் ஒரு சகிக்கவியலாத பேரழிவை உண்டாக்கும், அதாவது அரசும் வங்கிகளும் திவாலாகிவிடும், யூரோ செலாவணியிலிருந்து கிரீஸ் வெளியேற்றப்படும் என்றெல்லாம் கூறி, "வேண்டும்" வாக்குகளுக்கான ஒட்டுமொத்த ஊடக பிரச்சாரத்தையும் அது மறுத்ததளித்தது. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், 61 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் சிக்கன நடவடிக்கைகள் "வேண்டாம்" என்பதற்கு வாக்களித்தனர்.

ஆனால் சிரிசா அதன் சொந்த கருத்து வாக்கெடுப்பையே காட்டிக்கொடுத்து விடையிறுத்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த முறிவும் கிடையாது என்றும், சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான பிற கட்சிகளுடன், சமூக-ஜனநாயகக் PASOK மற்றும் வலதுசாரி புதிய ஜனநாயகம் (ND) கட்சியை சந்திக்க இருப்பதாகவும் சிப்ராஸ் அறிவித்தார். பின்னர் ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களில், அவர் ஓய்வூதியங்கள், கூலிகள் மற்றும் மருத்துவ கவனிப்பில் 13 பில்லியன் யூரோ மதிப்பிலான ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்களைச் செய்யும், நாடெங்கிலுமான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைத் தனியார்மயப்படுத்தும் ஒரு சட்டமசோதாவில் கையெழுத்திட இருந்தார்.

தொழிலாள வர்க்கம், போலி இடதுகளால் அமைக்கப்பட்ட ஓர் அரசியல் பொறியில் இருப்பதைக் கண்டது. “இடது" என்று கூறிய கட்சியைத் தேர்ந்தெடுத்த அது, சிக்கன நடவடிக்கை, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஏகாதிபத்திய-தலைமையிலான போர்களை ஆதரிக்கும் வலதுசாரி கொள்கைகளைத் திணிக்க தீர்மானகரமாக இருக்கும் ஓர் அரசாங்கத்தை முகங்கொடுத்தது.

அந்த கருத்து வாக்கெடுப்பு பொய்களின் அடிப்படையில் இருந்தது. “வேண்டாம்" வாக்குகள் பெற்று, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக அவரது பேரம்பேசும் நிலைப்பாட்டை பலப்படுத்திக் கொள்வதற்காகவே அதற்கு அழைப்புவிடுத்ததாக சிப்ராஸ் தெரிவித்தார்: “கருத்து வாக்கெடுப்புக்கான நமது நோக்கம் அதைத் தொடர்ந்து பேரம்பேசுவதற்காகவே ஆகும், அதில் நாம் நன்கு பலம் பெற்றிருப்போம்.”

உண்மையில், சிப்ராஸ் கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கத் தொடங்கியதும், சர்வதேச அளவில் சிப்ராஸின் ஆதரவாளர்களே கூட அவர் ஓர் எரிச்சலூட்டும் உத்தியாக கருத்து வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்திருந்ததை ஒப்புக் கொண்டனர்.

ஸ்பெயினின் பொடெமோஸ் இனதும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியினதும் பிரிட்டனின் பப்லோவாத கூட்டாளி தாரிக் அலி எழுதினார்: “சிப்ராஸூம் அவரது உள்வட்டாரங்களும் 'வேண்டும்' வாக்குகளை அல்லது மிகச் சிறிய வித்தியாசத்தில் 'வேண்டாம்' வாக்குகளை எதிர்நோக்கி இருந்தனர் என்பதில் எந்த இரகசியமும் இல்லை. … எப்படி பார்த்தாலும் சிப்ராஸ் எதற்காக கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும்? 'அவர் மிகவும் கடுமையான சித்தாந்தவாதி,' என்று மேர்க்கெல் தனது ஆலோசகரிடம் குறை கூறியிருந்தார். அது மட்டுமே என்றாலும். அதுவொரு கணக்கிட்ட அபாயமாக இருந்தது. 'வேண்டும்' வாக்கு முகாம் ஜெயிக்குமென கருதிய அவர், ஐரோப்பிய ஒன்றிய தலையாட்டிகளே அரசை நடத்தட்டும் என்று இராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார்.”

"வேண்டும்" வாக்குகள் வந்தால் பின் அவர் மகிழ்ச்சியாக பதவி விலகுவதாக அந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புக்கான பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்த சிரிசாவின் நிதி அமைச்சர் யானிஸ் வாருஃபாக்கிஸ், Adults in the Room என்ற அவரது சமீபத்திய நூலில், சிரிசாவின் பாசாங்குத்தனமான கருத்து வாக்கெடுப்பு வெற்றி பெற்ற அந்த இரவு சிரிசாவில் எந்தளவுக்கு அச்சமும், பீதியும், கோபமும் விரவி இருந்தது என்பதை நினைவுகூர்கிறார்.

அன்றிரவு அவர் பிரதம மந்திரியின் மாக்சிமோஸ் இல்லத்திற்குச் சென்ற போது, வாருஃபாக்கிஸ் எழுதுகிறார், “மாக்சிமோஸ் இல்லம் ஒரு பிணவறை அளவுக்கு உறைந்தும், கல்லறையைப் போல நிசப்தமாகவும் இருந்தது.” அவர் சிப்ராஸைச் சந்தித்த போது, அவர் முந்தைய கிரேக்க அரசியல்வாதிகள் கொல்லப்பட்டதைக் குறித்து பேசியதாக குறிப்பிட்டார். வாருஃபாகிக்ஸின் தகவல்களின்படி, “ஆட்சிக் கவிழ்ப்பு சதி போன்று ஏதாவது நடக்கக்கூடும், குடியரசின் ஜனாதிபதி, ஸ்ரோனாரஸ், உளவுத்துறை சேவைகள் மற்றும் நமது அரசாங்க உறுப்பினர்களும் 'தயார் நிலையில்' இருப்பதாக எனக்கு தெரிவித்துள்ளனர்,' என்று சிப்ராஸ் எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளை அவர் திணிக்கத் தவறினால், கேர்னல்களின் பாசிசவாத இராணுவ ஆட்சிக்குழுவை நிறுவிய சிஐஏ ஆதரவிலான 1967 இராணுவ எழுச்சிக்குப் பின்னர் கிரீஸில் நடக்கும் முதல் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் அவரது சொந்த அரசாங்கத்தின் பிரிவுகளே இணையக்கூடும் என்ற அந்த பிற்போக்குத்தனமான அச்சுறுத்தலுடன், சிப்ராஸ் பின்னர் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவான போக்கை வரைந்தார்.

இந்த வரலாற்று காட்டிக்கொடுப்பு, சிரிசா பதவியேற்பதற்கு முன்னரே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வழங்கிய எச்சரிக்கைகளை உறுதிப்படுத்தியது. சிரிசா தொழிலாளர்களுக்கு கடும் விரோதமானது என்பதை நிரூபிக்குமென ICFI மட்டுமே எச்சரித்தது. அமெரிக்க சர்வதேச சோசலிச அமைப்பின் கிரேக்க பிரதிநிதிகள் தங்களை முழுமையாக சிரிசாவுக்குள் ஒருங்கிணைத்திருந்த நிலையில், இக்கட்சியை அவர்கள் அரசியல்ரீதியில் "பிரதியிட முடியாத" ஒன்றாக மற்றும் "ஒட்டுமொத்தமாக இடது மற்றும் நமது மக்களின் இறுதி வெற்றிக்கான … முன்நிபந்தனை" என்று வர்ணித்திருந்த நிலையில், அதுபோன்ற அரசு-முதலாளித்துவ குழுக்கள் மற்றும் ஸ்ராலினிச கட்சிகளுக்கு எதிரான பல தசாப்த கால ட்ரொட்ஸ்கிச போராட்டத்தின் வர்க்க படிப்பினைகளின் அடிப்படையில் ICFI இன் மதிப்பீடு அமைத்திருந்தது.

சிப்ராஸ் பதவியேற்றதும், ICFI எழுதியது, “உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையில், சிரிசா அரசாங்கம் நெருக்கடியிலிருந்து வெளி வருவதற்கான ஒரு பாதையைப் பிரதிநிதித்துவம் செய்யாது; அதற்கு மாறாக, அது ஒரு மிகப்பெரும் அபாயத்தையே பிரதிநிதித்துவம் செய்யும். சிரிசா இடதுசாரி முகத்திரை இட்டிருந்தாலும், அது நடுத்தர வர்க்கத்தின் செல்வச்செழிப்பான அடுக்குகளைச் சார்ந்துள்ள ஒரு முதலாளித்துவ கட்சியாகும். அதன் கொள்கைகள், இந்த சமூக ஒழுங்கைப் பேணுவதன் மூலமாக தங்களின் தனிச்சலுகைகளை பாதுகாக்க முனையும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாட்டாளர்களால் தீர்மானிக்கப்படுகின்றன.”

சிப்ராஸ் அழைப்புவிடுத்த அந்த கருத்து வாக்கெடுப்பானது, அவரும் சிரிசாவும் சண்டையிட இறங்கி இருப்பதை உறுதிப்படுத்துவதாக உலகெங்கிலுமான போலி-இடது அமைப்புகள் புகழ்ந்து தள்ளிய அதேவேளையில், ஜூன் 27, 2015 அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிடுகையில், அது “தொழிலாளர்களையும், நடுத்தர வர்க்கத்தின் பரந்த பிரிவுகளையும் விலையாக கொடுத்து கிரீஸை வங்கிகள் கொள்ளையடிப்பதற்கு சட்டபூர்வ ஜனநாயக மூடுதிரையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிற்போக்குத்தனமான மோசடி" என்று எச்சரித்தது.

அதில் ஒரேயொரு வார்த்தை கூட மாற்ற வேண்டியதில்லை. அப்போதிருந்து, பத்து பில்லியன் கணக்கான யூரோ சமூக வெட்டுக்களைத் திணித்தும் மற்றும் யேமனில் அமெரிக்க ஆதரவிலான இரத்தந்தோய்ந்த போரைத் தொடுக்க சவூதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்தும், சிரிசா முற்றிலுமாக வலதுசாரி போக்கை பின்தொடர்ந்து வந்துள்ளது. தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களைத் தடுக்க அது ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாது, மாறாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மூர்க்கமான புலம்பெயர்வோர்-விரோத கொள்கையின் அதே போக்கில் இருந்து, “எல்லைப்புற அகதிகள்" சிறை முகாம்களைச் செயல்படுத்துகிறது, இதில் சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து தப்பி வந்த ஆயிரக் கணக்கான அகதிகள் கொடூரமான நிலைமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

போலி-இடது கட்சிகள் சிரிசாவைப் பாராட்டுவதன் மூலமாக, அவையும் இதேபோன்ற கொள்கைகளைத் தான் மேற்கொள்ளும் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. உண்மையில், சிரிசாவின் மிக நெருக்கமான கூட்டாளி பொடெமோஸ், இப்போது, சிக்கன கொள்கைகள், இராணுவ ஆயத்தப்படுத்தல் மற்றும் முந்தைய வலதுசாரி ஸ்பானிய அரசாங்கத்திற்கு எதிரான கட்டலான் அரசியல் கைதிகளைச் சிறையில் அடைப்பதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறுபான்மை சமூக-ஜனநாயக அரசாங்கத்தின் பிரதான முண்டுகோலாக விளங்குகிறது.

சிரிசா குறித்து கிரேக்க தொழிலாளர்களுக்கு எச்சரிக்கையில், ICFI, ஒரு புரட்சிகர மாற்றீட்டைக் கட்டமைப்பதற்காக போராடியது. போல்ஷிவிக் கட்சி மற்றும் 1917 அக்டோபர் புரட்சியின் பாரம்பரியங்களுக்குத் திரும்புவது மட்டுமே தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு நம்பகமான மூலோபாயத்தை வழங்கும் என்பதையே சிரிசாவின் அனுபவம் அடிக்கோடிடுகிறது. "கிரேக்கத்தில் சிரிசா காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்" என்ற அதன் அறிக்கையில், ICFI வலியுறுத்தியது: … தொழிலாள வர்க்கம் புதிய 'இடது' முதலாளித்துவ அரசாங்கங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாக தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஒரு நிஜமான புரட்சிகரக் கொள்கை மூலமாக, கிரீஸிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தைப் போராட்டத்தில் அணிதிரட்டுவது மட்டுமே முன்னோக்கிய ஒரே பாதையாகும். இதற்கு முதலாளித்துவ வர்க்கத்தின் மீதான ஒரு நேரடி தாக்குதலும், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதும், உற்பத்தி சக்திகள் மற்றும் பிரதான வங்கிகளை உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்துவதற்காக அவற்றை கைப்பற்றுவதும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களின் அரசுகளை உருவாக்குவதும் அவசியமாகிறது. இதுபோன்ற போராட்டங்களுக்கு, சிரிசா போன்ற கட்சிகளுக்கு எதிரான சளைக்காத போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை வழங்க மார்க்சிச கட்சிகளைக் கட்டமைக்க வேண்டியுள்ளது.

இதுவே சிரிசா அனுபவத்தின் மிக அடிப்படை படிப்பினையாகும். ஆனால் சிரிசாவின் வரலாறு அரசியல்ரீதியில் குற்றகரமாக இருக்கின்றபோதும், இது நாள் வரையில் அது ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் உள்ள போலி-இடது அமைப்புகளின் தொகுப்புக்கு ஒரு முன்மாதிரியாக சேவையாற்றுவதுடன், அவையும் இதேபோன்ற காட்டிக்கொடுப்புகளை நடத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அழைப்பாணைகளுக்காக காத்திருக்கின்றன.

சிரிசா போன்ற போலி-இடது கட்சிகளுக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் தலைமை கொடுக்க உண்மையான புரட்சிகர மார்க்சிச கட்சிகளைக் கட்டமைப்பதில் மட்டுந்தான் முன்னோக்கிய பாதை உள்ளது. இப்போது கிரீஸிலும், ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ICFI இன் பிரிவுகளைக் கட்டமைப்பதை நோக்கி திரும்ப வேண்டும்.