ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Victims of police attack on Tuticorin protests speak out

இந்தியா: தூத்துக்குடி ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக பேசினர்

By Sasi Kumar and Moses Rajkumar 
5 July 2018

தென் இந்திய கடலோர நகரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிராக நடந்த பெரும் ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட பொலிஸ் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவதற்கு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் அங்கு சென்றனர். இந்த ஆலை, எண்ணற்ற இறப்புகளையும் பிற சுகாதார பிரச்சினைகளையும் விளைவிக்கும் அபாயகரமான தொழிற்சாலை கழிவுகளை பல தசாப்தங்களாக வெளியேற்றி வந்துள்ளது.

மே 22 அன்று, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் என 22,000 பேர் ஒன்றுகூடி இந்த உருக்காலையை உடனடியாக மூட வேண்டுமென கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் (அரசாங்க முகவர்) அலுவலகம் நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஒரு நாடுகடந்த நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் ஆல் நடத்தப்படும் இந்த துணை நிறுவனத்திற்கு எதிரான தொடர் ஆர்ப்பாட்டங்களின் 100 வது நாளாக அது இருந்தது.

அப்போது கூட்டத்தை நோக்கி பொலிஸ் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்ததில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 100 பேர் படுகாயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து, உருக்காலை மற்றும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பை மௌனமாக்கும் முயற்சியில் பொலிஸ் வீடுகளுக்குச் சென்று இரவு சோதனைகளை நடத்தி விசாரணை செய்து “சந்தேகத்திற்குரியவர்களை” கைது செய்து வருகிறது.

இந்நிலையில், பல உள்ளூர் மக்கள் அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், கடந்த ஒன்றரை மாதமாக எண்ணற்ற மக்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பிரச்சினை குறித்து ஸ்ராலினிச இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-Marxist-CPM) அழைப்பு விடுத்திருந்த ஜூன் 23 பொது கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு எதிராகவும் தூத்துக்குடி பொலிஸ் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளனர். அத்துடன், அந்தக் கூட்டத்தை நடத்துவது குறித்து நீதிமன்ற உத்திரவை மீறியுள்ளனர் என்று குற்றம்சாட்டி பங்கேற்பாளர்களுக்கு எதிராக வழக்குகளையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட கூட்டத்தை நடத்த பொலிஸ் அனுமதி மறுத்த பின்னர், கூட்ட ஒழுங்கமைப்பாளர்கள் இறுதியில் உயர் நீதிமன்றத்தை அணுகி அக்கூட்டத்தை நடத்த அனுமதி பெற்றனர். இருப்பினும் நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் ஜனநாயக விரோதமாகவே இருந்தது, அதன்படி கூட்டத்தில் 1,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதுடன், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே கூட்டம் நடத்தப்பட வேண்டும் மேலும் அக்கூட்டத்தில் இரண்டு பேர் மட்டுமே உரையாற்ற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியல் ஸ்தாபகத்தின் ஒரு அங்கமாக இருந்து வரும் ஸ்ராலினிச CPM  தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீன அணிதிரள்வையும் எதிர்க்கிறது. CPM, அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (Communist Party of India-CPI) இணைந்து கொண்டு பொலிஸ் படுகொலைக்கு எதிரான வெகுஜன கோபத்தை திசை திருப்ப வேலை செய்து வருவதுடன், அரசியல் ரீதியாக இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரசிற்கும், திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் பிற பிராந்திய முதலாளித்துவ கட்சிகளுக்கும் கீழ்படிய செய்யும் சேவையிலும் ஈடுபட்டுள்ளது.

மே 22 படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, காங்கிரசுடனும் மற்றும் உள்ளூர் மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களின் அழிவில் பெரும் இலாபத்தை வேதாந்தா குழுவினர் ஈட்டுவதற்கு  முன்னரே அனுமதியளித்து சதி செய்த தமிழ்நாட்டை தளமாகக் கொண்ட கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் (DMK) இணைந்து, CPM மும் CPI யும் கூட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

பொலிஸ் தாக்குதலில் காயமடைந்து உயிர்தப்பியவர்களிடம் பேச உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் தூத்துக்குடி மருத்தவமனைக்கு சென்றதோடு, ஏனைய பாதிக்கப்பட்டவர்களையும் சந்திக்க திரேஸ்புரம் கிராமத்திற்கும் சென்றனர். அப்போது அவர்களை நான்கு பொலிசார்கள் பின்தொடர்ந்ததோடு, WSWS நிருபர்களுடன் பேசிய உள்ளூர்வாசிகளில் ஒருவரின் வீட்டையும் பின்னர் சோதனை செய்துள்ளனர்.

உருக்காலை மற்றும் பொலிஸ் தாக்குதல் மீதான தீவிர எதிர்ப்பை எதிர்கொண்ட நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (All India Anna Dravida Munnettra Kazhagam-AIADMK) மாநில அரசாங்கம் அந்த ஆலையை மூடுவதற்கு ஆணை பிறப்பித்தது (பார்க்கவும்: “இந்திய அதிகாரிகள் தூத்துக்குடியில் மாசுபடுத்தும் தாமிர ஆலையை மூடினர்”). இருப்பினும், தொடரும் பொலிஸ் அச்சுறுத்தல், அவ்வாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கக்கூடும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

மருத்துவமனையில், பொலிஸ் படுகொலை பற்றிய WSWS கட்டுரைகளின் நகல்களை காயமடைந்தவர்கள் பெற்றுக் கொண்டனர் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் குரல் எழுப்பினர்.தங்கம்

தங்கம், 35 வயது, ஒரு தனியார் பள்ளியில் சமையல்காரராக பணிபுரியும் இவர், 40 நாட்களாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் ஆவார். இவர், “இந்த ஸ்டெர்லைட் ஆலை உள்ளூர் மக்களை பாதித்ததுடன், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சினைகளையும் மக்களுக்கு ஏற்படுத்திய காரணத்தை அறிந்து தான் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன்,” என்றும், “எனது அயலவர்களில் ஒரு சிறு குழந்தை புற்றுநோய் பாதிப்பினால் இறந்து போனது. மேலும், ஸ்டெர்லைட் நச்சுப் பொருட்களினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் இங்கு உள்ளனர்” என்றும் தெரிவித்தார்.

“பொலிஸ் ஒவ்வொருவரையும் கொடூரமாகத் தாக்கினர். சில அரசியல்வாதிகள் எங்களை தீவிரவாதிகள் என்கின்றனர், ஆனால் எங்கள் உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாங்கள் போராடுகிறோம். நாங்கள் பெண்கள் என்பதைக் கூட இலட்சியம் செய்யாமல் பொலிஸ் எங்களை வன்மமாக தாக்கினர். எனது கை கடுமையாக முறிந்து போய்விட்டது, ஆனால் அரசாங்க வைத்தியசாலை அதிகாரிகளோ பலத்த காயமுற்ற பலரது குரலுக்கும் செவி சாய்க்காமல், அவர்களது காயங்கள் குணமடைவதற்கு முன்பாகவே அவர்களை மருத்துவமனையில் இருந்து வெகு விரைவாக விடுவித்தனர்.”

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று சொந்தச் செலவில் மருத்துவம் பார்க்கும் படி கட்டாயப்படுத்தப்பட்டது குறித்து தங்கம் கோபமடைந்தார். “மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 105 பேரில், வெறும் 10 பேர் மட்டுமே நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர், அதிலும் அவர்கள் அனைவரும் சரீரரீதியாக இயலாமையாக இருந்தார்கள் என்பதனால் தான் அனுமதிக்கப்பட்டனர்.”

“அரசாங்கம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவானது என்பதுடன், இதுவரை எந்தவொரு இழப்பீட்டையும் நான் பெறவில்லை” என்று தங்கம் கூறினார். மேலும், “ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமானால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இன்னும் பத்து மாதங்களில் நான் குணமடைந்து விடுவேன், ஆனால் பொலிஸ் தாக்குதலினால் பலரின் உடல் உறுப்புக்களும் சேதப்படுத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலைமைகளில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகள் பற்றியும் தங்கம் பேசினார். “எனது மாத ஊதியம் 5,000 ரூபாய் [அதாவது மாதத்திற்கு 73 அமெரிக்க டாலர்கள்] மட்டுமே என்பதுடன், எனது கணவரோ மூன்று-சக்கர வாகன ஓட்டுநராக உள்ளார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக எங்கள் குடும்பத்திற்கு எவ்வித வருமானமும் இல்லை… இந்நிலையில் எனது இரண்டு குழந்தைகளுக்கான பள்ளிக்கூட மற்றும் நோட்டு புத்தக கட்டணங்களை என்னால் செலுத்த முடியவில்லை என்பதால், அவர்கள் பள்ளிக்கும் செல்ல முடியாமல் உள்ளனர்.”

பரமசிவம்

பரமசிவம், 43 வயது, ஆட்டோ-ரிக்சா ஓட்டுநரான இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் வெறுக்கிறேன். அரசியல்வாதிகள் மக்களுக்காக இல்லை. [பிரதம மந்திரி] மோடியும், [தமிழ்நாடு முதலமைச்சர்] எடப்பாடியும் ஒரு செல்வந்தரான ஸ்டெர்லைட் உரிமையாளருக்காக பொலிஸ் துப்பாக்கி சூட்டிற்கு உத்திரவிட்டு, 13 அப்பாவி மக்களை கொன்றுவிட்டனர்.” 

“மேலும், சென்னை மற்றும் சேலம் இடையே ஒரு நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்காக நில அபகரிப்பு செய்யப்பட்டதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தையும் தமிழ்நாடு அரசாங்கம் சமீபத்தில் நசுக்கியுள்ளது. அதற்கு ஈடாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையும் மிகவும் குறைவானது என்ற நிலையில், தங்களது நிலங்களை காப்பாற்ற அவர்கள் போராடினர். எனினும், அரசாங்கம் அவர்களது உரிமைகளை நசுக்கியது. உழைக்கும் பெருமக்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று நீங்கள் கூறுவதை நான் ஒப்புக் கொள்கிறேன்” என்று மேலும் தெரிவித்தார்.

மேலும், பரமசிவம் இதையும் சேர்த்துக் கூறினார்: “நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசித்து வருகிறேன். அங்கு தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு காற்றும் கூட மாசுபட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று எடப்பாடி தெரிவித்தார், ஆனால், அந்த நிறுவனம் மீண்டும் விரைவில் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது. பெரும்பாலான தூத்துக்குடி வாழ் மக்கள் இந்த ஆலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது நெருங்கிய தோழரின் மகள் சமீபத்தில் புற்றுநோய் பாதிப்பினால் இறந்துவிட்டார்.” 

பிரின்ஸ்டன்

பிரின்ஸ்டன், 22 வயது, வி.வி. டைட்டானியம் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் பொலிஸ் தாக்குதலில் படு காயமடைந்ததால் அவரது கால் அகற்றப்பட்டுவிட்டது. இவர், “அன்று நான் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, வேலைக்கு சென்று கொண்டிருந்தேன், என்றாலும் பொலிஸ் என்னையும் சுட்டுவிட்டனர். உண்மை நிலைமைகளையும் என்ன நடந்தது என்பதையும் ஊடகங்கள் மூடி மறைத்துவிட்டன. இப்போது நான் எனது ஒரு காலை இழந்துள்ள நிலையில் எனக்கு யாரும் வேலை தரமாட்டார்கள். ஒரே காலுடன் இருக்கும் ஒருவருடன் வாழ யார் விரும்புவார்கள்? எனது வாழ்க்கை தொலைந்துவிட்டது. குறைந்த இழப்பீடு கொடுத்து இதை ஈடுகட்ட முயலும் அரசாங்கத்தின் வழியை நான் விரும்பவில்லை, மேலும் இதை ஒரு மனித உரிமை மீறலாகவே நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

“மக்களை காப்பாற்றத்தான் இந்த பொலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று எடப்பாடி கூறுகிறார். உண்மையாகவா? கொல்லப்பட்ட 13 பேரும்  உடல் உறுப்புக்கள் சேதப்படுத்தப்பட்டவர்களும் அவர்களுக்கு என்ன செய்தார்கள்? படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் கதி என்ன?... இதுதான் அரசாங்கம் மக்களுக்கு ஆற்றும் சேவையா? ஒவ்வொரு அரசியல்வாதியையும் நான் வெறுக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தானே அவர்கள் போராடினர், ஆனால் அரசாங்கமோ அவர்களை சுட்டுத்தள்ளிவிட்டது, ஏனென்றால் இதுபோல மீண்டும் மக்கள் எழுந்து போராடக் கூடாது என அவர்கள் கருதுகின்றனர். இதைத்தான் ஜனநாயக நாடு என்று கூறுகிறார்கள்!”

தங்கா

தங்கா, 17 வயது, பொலிஸ் தடியடியினால் கை முறிந்து போன இவர் பின்வருமாறு தெரிவித்தார்: “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், நான் மீண்டும் போராடுவேன். எனது கை உடைந்து போயிருந்தாலும் கூட அதை நான் இலட்சியம் செய்ய மாட்டேன். ரஜினி [பிரபல தமிழ் நடிகர் மற்றும் தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ள ரஜினிகாந்த்], ஆர்ப்பாட்டக்காரர்களை ‘சமூக விரோதிகள்’ என்று குறிப்பிட்டத்தை நான் எதிர்க்கிறேன். அவர் ஒரு பணக்காரர், அதனால் தான் அவர் பொலிஸ் நடவடிக்கைகளை பாதுகாத்தார். செல்வந்தர் நலன்களையே பொலிஸ் பாதுகாக்கிறது என்ற தங்களது கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

“நான் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன், ஏனென்றால் அனைவருமே ஊழல்வாதிகள் தான். ஆரம்பத்தில் இருந்தே DMK மற்றும் AIADMK இரண்டு கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலை கட்டுமானத்திற்கு ஆதரவாக இருந்து வரும் ஊழல்வாதிகள் ஆவர். இந்நிலையில், இந்த உருக்காலைக்கு எதிராக தற்போது பல கட்சிகளும் நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் போலித்தனமானவையே.”  

பொற்செழியன், 52 வயது, மின்சாரத்துறை ஒப்பந்தத் தொழிலாளியான இவர், உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், “அனைத்து கட்சிகளும் மற்றும் பல பத்திரிகையாளர்களும் இங்கு வந்து செய்திகளை சேகரித்துச் சென்றனர், ஆனால் திரும்ப எவரும் வரவில்லை என்பதுடன், அவர்கள் எதை கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய தகவல் எதையும் எங்களுக்கு அளிக்கவில்லை. நீங்கள் [WSWS] அச்சடித்த பத்திரிகைகளை தந்துள்ளீர்கள், இது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

“எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்காக போராடவில்லை. CPI மற்றும் CPM இரு கட்சிகளும் தங்களை கம்யூனிஸ்டுகள் என அழைத்துக் கொள்கின்றன, எனினும் அவர்களுக்கும் AIADMK மற்றும் DMK கட்சிகளுக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை.

“CPI மற்றும் CPM ஆகிய இரண்டு கட்சிகளும் ஒப்பந்த தொழிலாளர் முறையை நீக்குவது குறித்து ஒருபோதும் போராடவில்லை. நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக இருந்து வருகிறேன்… ஒரு நேரத்தில், வரையறுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களை அவர்கள் மேற்கொண்டனர், ஆனால் மேற்கு வங்கத்தில், வெளிநாட்டு நிறுவன பயன்பாட்டிற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 22 பொலிஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜான்சி ராணி என்பவரது வீட்டிற்கு WSWS நிருபர்கள் சென்று, 55 வயதான அவரது சகோதரி சகாயராணியை சந்தித்தனர்.


சகாயராணி

“எனது சகோதரி இந்த ஆர்ப்பாட்டத்தில் தீவிரமாக ஈடுபடவில்லை, ஆனால் அதன் பார்வையாளராக மட்டும் தான் இருந்தார்” என்று அழுதுகொண்டே சகாயராணி விவரித்தார். “பொலிஸ் எனது சகோதரியை சுட்டுக் கொன்றுவிட்டதுடன், அவரது உடலையும் 16 நாட்களாக அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். பல நாட்களாகி அவரது உடல் கடுமையாக சிதைந்து போயிருந்ததால் எங்களது குடும்பத்தினரால் அவரை அடையாளம் காண முடியவில்லை. அத்துடன், அவரது உடலை பெறுவதற்கு சட்டபூர்வ வழக்கு ஒன்றையும் நாங்கள் தொடர வேண்டியிருந்தது.

“எனது வாழ் நாளில் இதுபோன்றதொரு நிகழ்வை நான் கண்டதில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரையும் காட்டுமிராண்டித்தனமாக பொலிஸ் தாக்கினர் என்பதுடன், கண்காணிப்பு காமிராக்களையும் மூன்றுச்சக்கர வாகனங்களையும் கூட உடைத்து சேதப்படுத்தினர். பொலிஸூக்கு இந்த உரிமையை அளித்தது யார்? மக்களுக்காக தான் பொலிஸ் என்று அரசாங்கம் கூறுகிறது, மாறாக செல்வந்தர்களுக்காகத் தான் பொலிஸ் என்பது தான் உண்மை.”

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

தூத்துக்குடி படுகொலையும், மோடியின் இந்தியாவும்
[26 May 2018]