ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the secret service and the far-right AfD control German politics

இரகசிய உளவுத்துறையும் அதிவலது AfD கட்சியும் ஜேர்மன் அரசியலை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்துள்ளன

By Peter Schwarz
24 August 2018

ஆகஸ்ட் 17 அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஜேர்மன் இரகசிய உளவுத்துறையால் (அரசியலமைப்பு பாதுகாப்புக்கான மத்திய அலுவலகம் அல்லது BfV ஆல்) அது கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டது.

ஜூலை இறுதியில் வெளியிடப்பட்ட "அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கை 2017”, முதலாளித்துவம் மற்றும் அதன் சமூக விளைவுகளைக் குறித்த எவ்விதமான சோசலிச விமர்சனத்தையும் "இடதுசாரி தீவிரவாதமாக" மற்றும் "அரசியலமைப்புக்கு விரோதமானதாக" வகைப்படுத்துகிறது. சட்டத்தை SGP மீறுகிறது என்றோ அல்லது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றோ எந்த குற்றச்சாட்டையும் BfV முன்வைக்கவில்லை என்ற உண்மைக்கு மத்தியில், அரசு கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும் "இடதுசாரி தீவிரவாத கட்சியாக" ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) பட்டியலிடப்பட்டுள்ளது. உண்மையில் அந்த அறிக்கையானது, SGP சட்டபூர்வ வழிவகைகள் மூலமாகவே —அதாவது "தேர்தல்களில் பங்கெடுப்பது" மற்றும் "விரிவுரைகள்" மூலமாகவே— அதன் நோக்கங்களைப் பின்தொடர்கிறது என்பதை வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது.

அதேநேரத்தில், இரகசிய உளவுத்துறை அறிக்கை அதிவலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) மற்றும் அதன் பாசிசவாத தொடர்புகள் குறித்து ஒன்றும் கூறவில்லை. நாஜிக்கு வக்காலத்துவாங்கும் Björn Höcke, புதிய-வலது சித்தாந்தவாதி Götz Kubitschek, இனவாத பெஹிடா இயக்கம் மற்றும் அதிவலது பிரசுரமான Junge Freiheit மற்றும் Compact ஆகியவை குறித்து இந்த அறிக்கையில் ஒன்றும் வரவில்லை, அது "இடதுசாரி தீவிரவாதிகள்" எனக் குற்றஞ்சாட்டப்படுபவர்களால் AfD பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டுமே குறிப்பிடுகிறது.

இதற்கிடையே, BfV மற்றும் அதன் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் AfD உடன் நெருக்கமாக கூடி இயங்கி வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தும் பல புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மன் உள்துறை அமைச்சக தகவல்களின்படி, மாஸன் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பதவியேற்றதில் இருந்து AfD உட்பட ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளுடனும் சுமார் 200 முறை விவாதங்கள் நடத்தியுள்ளார். ஏறத்தாழ அனைத்து உரையாடல்களுமே இரகசியமாகவும், மாஸனின் முன்முயற்சியினாலும் நடந்திருந்தன.

ஜூலையில், AfD இன் முன்னாள் அங்கத்தவர் பிரான்ஸிஸ்கா ஷ்ரைபர் அவரது AfD உள்ளே (Inside AfD) என்ற நூலில், AfD இன் தலைவராக ஃப்றவுக்க பிட்ரி இருந்த போதே அவருடன் மாஸன் விவாதங்கள் நடத்தி இருந்ததாக குறிப்பிட்டார். AfD ஜேர்மன் நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்னரே, மாஸன் 2015 இல் இரண்டு முறை பிட்ரியைச் சந்தித்திருந்தார். ஷ்ரைபர் இன் தகவல்படி, BfV ஆல் AfD கண்காணிக்கப்படாமல் எவ்வாறு தடுப்பது என்பதை மாஸன் அப்பெண்மணிக்கு அறிவுறுத்தி இருந்தார்—இந்த கூற்றை மாஸன் மறுக்கிறார்.

“கட்சிக்கு ஆதரவாக நாட்டம் கொண்டுள்ளவரும் மற்றும் அதன் காரணமாக கட்சி கண்காணிக்கப்படுவதைத் விரும்பாதவருமான ஹன்ஸ்-கியோர்க் மாஸன் போன்ற ஒருவர், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான கூட்டாட்சி அலுவலகத்தின் தலைவராக இருப்பது AfD க்கு அதிஷ்டம்" என்று பிட்ரி மீண்டும் மீண்டும் அப்பெண்மணிக்கு கூறியதாக, ஷ்ரைபர் உறுதிமொழி அறிக்கையிலேயே உறுதிப்படுத்திவிடுகிறார்.

பிட்ரியை அடுத்து AfD இன் தலைவராக வந்த அலெக்சாண்டர் கௌலாண்டும், அவர் மாஸனைச் சந்தித்ததை உறுதிப்படுத்தி உள்ளார். அந்த சந்திப்பு, AfD நாடாளுமன்றக் குழுவில் ஒரு "ரஷ்ய உளவாளி" இருக்கலாம் என்ற "சந்தேகத்தைத்" தீர்த்துக் கொள்ளவே நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பின்னர் மாஸன் “அதுவொன்றும் பிரச்சினையில்லை,” என்று அவருக்கு உறுதிப்படுத்தியதாக கௌலாண்ட் தெரிவித்திருந்தார்.

“மாஸன் அதிவலது AfD க்கு நெருக்கமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள்" இருப்பதாக இப்போது Süddeutsche Zeitung உம் கூட ஒப்புக் கொள்கிறது. “பகிரங்கமாக அரசியலமைப்புக்கு விரோதமான கூறுபாடுகளுடன் AfD தொடர்பு வைத்திருந்ததற்காக, அரசியலமைப்பு பாதுகாப்புக்கான பல அரசு அலுவலகங்கள் அதைக் கண்காணிக்க விரும்பின என்பது,” 2018 இளவேனிலில் வெளியானது. ஆனால் மாஸன் முன்பு செய்ததைப் போலவே, AfD ஐ கண்காணிப்பதற்கு எதிராக பேசினார்.

AfD இன் இப்போதைய தலைவர் கௌலாண்ட், மாஸனை முழுமையாக பாராட்டுகிறார். “நான் திரு. மாஸனை ஓர் இலட்சிய அரசு அதிகாரியாக பார்க்கிறேன்,” என்று கௌலாண்ட் கூறியதாக Süddeutsche Zeitung அவரை மேற்கோளிடுகிறது.

ஒரு முன்னணி AfD அதிகாரியுடன் மற்றொரு சந்திப்பு நடந்ததாக கடந்த வாரம் taz பத்திரிகை குறிப்பிட்டது. AfD துணை தலைவர் ஸ்டீபன் பிராண்ட்னரின் நாடாளுமன்ற பதவி குறித்து ஒரு மணி நேரம் உரையாடுவதற்காக இந்தாண்டு ஜூனில் மாஸன் அவரைச் சந்தித்தார். பிராண்ட்னர் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் (Bundestag) சட்ட விவகார குழுவின் தலைவராவார். இந்த பதவியைப் பெற்றதற்காக அவர் நாடாளுமன்ற துணை-தலைவர் தோமஸ் ஓப்பர்மன் (SPD) க்கு கடமைப்பட்டுள்ளார், இவர் தான் ஓர் இரகசிய தேர்தலில் அந்த பதவிக்கு அவரை பரிந்துரைத்தவர்.

சட்ட விவகார குழுவின் பணிகள் குறித்தும் மற்றும் தற்போதைய BfV அறிக்கை குறித்தும் மாஸன் உடன் அவர் பேசியதாக பிராண்ட்னர் taz க்கு தெரிவித்தார். இருவரும் அதை இரகசியமாக வைக்க உடன்பட்டிருப்பதால் அச்சந்திப்பு குறித்த விபரங்களை அவர் தரவில்லை. அச்சந்திப்பு குறித்து BfV உம் எதுவும் கருத்துரைக்க மறுத்துவிட்டது. “நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்த இரகசிய விவாதங்கள் மீது BfV ஒருபோதும் கருத்துரைப்பதில்லை,” என்றொரு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

SGP ஐ இலக்கில் வைக்கும் முடிவானது நேரடியாக அதிவலதுசாரி சக்திகளை அடிப்படையாக கொண்ட அரசு எந்திர சூழ்ச்சியின் பாகமாக உள்ளது என்பதையே மாஸன் மற்றும் மூத்த AfD அங்கத்தவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் தெளிவுபடுத்துகின்றன. உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் (CSU) இன் கட்டுப்பாட்டின் கீழ் BfV வருகிறது, BfV இன் 2017 அறிக்கைக்கு சீகோவர் முன்னுரையும் எழுதியுள்ளார்.

சீகோவர் அவரது முன்னுரையில், போலிஸ் மற்றும் உளவுத்துறை அரசைக் கட்டமைப்பதற்கு வாதிடுகிறார், இது "தேசிய மற்றும் பிராந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நடைமுறையளவில் அதிகாரங்களை" வழங்குகிறது. ஜேர்மனி "பாதுகாப்பின் வேறுபட்ட துறைகளில் கண்டறியவியலா பகுதிகளை [உருவாக்க] அனுமதிக்காது" என்றார்.

ஜேர்மனியின் ஆளும் மகா கூட்டணி (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம், கிறிஸ்துவ சமூக ஒன்றியம், மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் கூட்டணி) முழுமையாக AfD இன் அரசியலை ஏற்றுக் கொண்டுள்ளது, அதுவும் குறிப்பாக அகதிகள் விடயத்தில். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 12.6 சதவீத வாக்குகள் பெற்ற AfD, மக்களின் பரந்த அடுக்குகளால் வெறுக்கப்படுகிறது என்றபோதும், ஜேர்மன் அரசியல் வாழ்வில் அது பெருமளவில் மேலாதிக்கம் செலுத்துகிறது, ஜேர்மன் அரசியல் வாழ்வு அனைத்து நாடாளுமன்ற கட்சிகளது ஒரு சூழ்ச்சி தன்மையை ஏற்றுள்ளது.

மாஸன் AfD உடன் மட்டும் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை, அவர் எதிர்கட்சிகள் என்றழைக்கப்படும் அனைத்துடனும் கூடி ஆலோசனை செய்கிறார். Die Zeit இன் சமீபத்திய பதிப்பில் வெளியிடப்பட்டவாறு, மாஸன் "கிரிகோர் கீசி, சாரா வாகன்கினெக்ட் மற்றும் கத்தரின் கோரிங் எக்கார்ட் போன்ற இடது கட்சி மற்றும் பசுமைக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களையும் வழமையாக சந்திக்கிறார். இந்த உரையாடல்கள் சில நேரங்களில் தனிப்பட்டரீதீயில் உணவுவிடுதிகளிலும் நடக்கிறது, இதற்கான செலவுகளைப் பெரும்பாலும் BfV செலுத்துகிறது, அல்லது சில சந்தர்ப்பங்களில், மாஸன் கொலோன் நகரில் உள்ள அவர் தலைமையகத்திற்கு நாடாளுமன்றவாதிகளை அழைத்து பேசுகிறார்.”

BfV, வேறெந்த அமைப்பையும்விட ஜேர்மன் உயரடுக்குகளின் அதிவலதுசாரி தொடர்ச்சியாக இருக்கின்றது. 1950 களில் அது ஸ்தாபிக்கப்பட்ட போது, அந்த முகமை கெஸ்டாபோவின் பல முன்னாள் அங்கத்தவர்களைப் பணியில் அமர்த்தியது. சமீபத்திய ஆண்டுகளில், தேசிய சோசலிச பாரம்பரியத்தின் அதன் வேர்கள் முன்பினும் அதிக பகிரங்கமாக மேலெழுந்துள்ளன.

2012 கோடைகாலத்தில் அந்த முகமை ஆழ்ந்த நெருக்கடியில் இருந்த போது, அப்போது தான் மாஸன் BfV இன் தலைவராக பதவியேற்றார். மூன்று காலாண்டுக்கு முன்னர், நவ-பாசிசவாத பயங்கரவாத பிரிவான தேசிய சோசலிச இரகசிய அமைப்பு (National Socialist Underground) அம்பலப்படுத்தப்பட்டு, அக்குழுவைச் சுற்றி BfV பல நிழலுலக செயல்பாட்டாளர்களைச் செயல்பாட்டில் கொண்டிருந்ததும் வெளியானது. அப்போது BfV ஒட்டுமொத்த கோப்புகளையும் கிழித்தெறிய நகர்ந்த நிலையில், மாஸனுக்கு முன்பிருந்த ஹைன்ஸ் ஃபுரொம் இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இப்போதோ, BfV ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை உளவுபார்க்கின்ற அதேவேளையில், அதிவலது AfD உடன் நெருக்கமாக அணிசேர்க்கும் ஓர் அரசியல் கருவியாக BfV ஐ மாஸன் மாற்றியுள்ளார்.

இதன் விளைவுகள் என்னவென்று தெரியும். Die Zeit எழுதுகிறது: “ஒரு கட்சியை உளவுபார்ப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவு" “அரசியல் விளைவுகளோடு சேர்ந்த, ஓர் அவசியமான அரசியல் முடிவாக" உள்ளது. அது தொடர்ந்து எழுதுகிறது: “BfV, பின்னர், வெறுமனே அங்கத்தவர்களையும், அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில அமைப்புகளையும் கண்காணிக்கலாம், முக்கிய தருணங்களில் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்கலாம், பேச்சுக்களைப் பதிவு செய்யலாம், சந்தேகத்திற்குரியவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்கலாம் என்பதற்காக மட்டுமல்ல. மாறாக அனைத்திற்கும் மேலாக ஏனென்றால் கண்காணிப்பானது ஒரு கட்சிக்கு முத்திரை குத்துகின்றது என்பதற்காகவும் தான்.”

BfV இன் நடவடிக்கையானது "சமூக சமத்துவமின்மை, இராணுவவாதம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடும் எவரொருவருக்கு" எதிராகவும், மற்றும் "ஒரு சோசலிச முன்னோக்கை அறிவுறுத்துபவர்களுக்கு" எதிராகவும் திரும்பியதாகும் என்று SGP அதன் அறிக்கையில் எச்சரித்தது. ஆளும் வர்க்கம் "1930 களின் ஏதேச்சதிகார கொள்கைகளுக்குத் திரும்புவதன் மூலமாகவும், சோசலிஸ்டுகளை ஒடுக்குவதன் மூலமும் மற்றும் அதிவலது கொள்கைகளை ஏற்பதன் மூலமும்,” அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க மற்றும் இளைஞர்களின் தீவிரப்பாட்டுக்கு விடையிறுத்து வருகிறது. “இந்த நெருக்கடி 'ஜேர்மன் முதலாளித்துவத்தின் நிஜமான வர்ணத்தை அம்பலப்படுத்த அதன் 'ஜனநாயக' முகத்திரையைக் கிழித்து வருகிறது.”

அரசு எந்திரத்தின் இந்த அதிவலது சூழ்ச்சியை எதிர்த்து, BfV மற்றும் இந்த மகா கூட்டணியின் தாக்குதலைத் தோற்கடிக்க இதுவே சரியாக தருணம். இராணுவவாதம் மற்றும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஒரு போலிஸ் அரசை நோக்கிய நகர்வுகளை எதிர்க்க முயலும் அனைவருக்கும் SGP அழைப்பு விடுக்கிறது. BfV க்கு எதிரான எங்கள் அறிக்கைகளை வினியோகியுங்கள், எங்களைத் தொடர்பு கொண்டு ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான போராட்டத்தில் செயலூக்கத்துடன் இணையுங்கள்.