ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One year after WSWS open letter to Google
Facebook escalates censorship of left-wing, anti-war organizations

கூகுளுக்கு WSWS பகிரங்க கடிதம் எழுதி ஓராண்டுக்குப் பின்னர்

இடதுசாரி, போர்-எதிர்ப்பு அமைப்புகள் மீது பேஸ்புக் தணிக்கையைத் தீவிரப்படுத்துகிறது

Andre Damon
23 August 2018

ஓராண்டுக்கு முன்னர் இதே வாரம், கூகுள் நிறுவனம் அதன் இணைய தணிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கோரி உலக சோசலிச வலைத்தளம் அந்த ஏகபோக தேடுபொறி நிறுவனத்திற்குப் பகிரங்க கடிதம் ஒன்றை பிரசுரித்தது.

“அதிகாரபூர்வ" செய்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதே நோக்கம் என்று கூறி கூகுள் நிறுவனம் அதன் தேடல் மென்பொருள் வழிமுறை அல்காரிதங்களில் செய்த மாற்றம் இடதுசாரி, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு வலைத் தளங்களைத் தேடி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமானளவுக்குக் குறைவதற்கு இட்டுச் சென்றிருந்ததை அக்கடிதம் ஆவணப்படுத்தியது. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் எழுதிய அக்கடிதம், கூகுள் நிறுவனம் “இணைய அரசியல் தணிக்கையில் ஈடுபட்டு,” இருப்பதை எடுத்துக்காட்டியது.

ஓராண்டுக்குப் பின்னர், கூகுளுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுக்கள் சரியானவை என்பதும் முற்றிலும் தீர்க்கதரிசமானவை என்பதும் தெளிவாகி உள்ளன. கூகுள் எடுத்த நடவடிக்கைகள், பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் உட்பட அனைத்து அமெரிக்க தொழில்நுட்ப ஏகபோக நிறுவனங்களும் ஏற்றுக் கொண்ட ஒரு கடுமையான பெருநிறுவன-அரசு தணிக்கை முறையைத் தொடங்கி வைத்தன. “ரஷ்ய தலையீடு" மற்றும் "போலி செய்திகளை" எதிர்ப்பதற்காக என்ற சாக்குபோக்கின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு பிரச்சார நடவடிக்கை முன்பினும் அதிக பகிரங்கமாக இடதுசாரி கண்ணோட்டங்களை இலக்கில் வைத்து வருகின்றன.

ஜனநாயக உரிமைகள் மீதான சமீபத்திய மற்றும் மிகவும் அதீதமான தாக்குதல் செவ்வாயன்று நடந்தது, அன்று நூற்றுக் கணக்கான பயனர் கணக்குகளையும் பக்கங்களையும் பேஸ்புக் நீக்குவதாக அறிவித்தது, அவற்றில் பல மத்தியக் கிழக்கில் அமெரிக்க, சவூதி மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களின் குற்றங்களை எதிர்ப்பவையாக இருந்தன, அவ்வாறான கணக்குகள் ஈரான் மற்றும் ரஷ்ய "செல்வாக்கு கொண்ட பிரச்சாரத்தின்" விளைவு என்று பேஸ்புக் வாதிட்டது.

முன்னாள் உளவுத்துறை செயல்பாட்டாளர்களை அதிகளவில் பணியில் அமர்த்தியுள்ள இணைய பாதுகாப்பு நிறுவனமான FireEye உடன் சேர்ந்து தான் அதன் அழிக்கும் நடவடிக்கையை பேஸ்புக் மேற்கொண்ட நிலையில், அந்நிறுவனத்தின் கருத்துப்படி, “பாலஸ்தீனர்களுக்கு ஆதரவையும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பையும்" வெளிப்படுத்திய, “அமெரிக்க செனட்டர் பேர்ணி சாண்டர்ஸை ஆதரித்த அமெரிக்க தாராளவாதிகள்" என்று சில பேஸ்புக் கணக்குகள் கூறிக் கொண்டனவாம்.

அதன் அறிவிப்பு, இடதுசாரி கண்ணோட்டங்களை "வெளிநாட்டு செல்வாக்கு" கொண்ட நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தும் அளவுக்கு இன்னும் ஒருபடி மேலே சென்றது. பைனான்சியல் டைம்ஸ் அறிவித்தது, “அமெரிக்காவில், அமெரிக்க செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் க்கு ஆதரவானதாக மற்றும் உரிமைக்காக கிளர்ந்தெழு (Rise Against the Right) என்றழைக்கப்பட்ட ஒரு போலி அமைப்புக்கு ஆதரவானதாக கூறிக் கொண்ட கணக்குகளை FireEye நிறுவனம் கண்டறிந்தது. பிரிட்டனில், தொழிற்கட்சி தலைவர் ஜெர்மி கோர்பினை ஆதரித்து பதிவு வெளியிடும் பிரிட்டிஷ் இடது மற்றும் பிரிட்டிஷ் முற்போக்கு முன்னணி என்றழைக்கப்படும் ஜோடிக்கப்பட்ட அமைப்புகளை அந்நிறுவனம் கண்டறிந்தது,” என்று எழுதியது.

தணிக்கை நடவடிக்கைக்கு தலைமை கொடுத்து வரும் வேர்ஜினியா ஜனநாயக கட்சியாளர் மார்க் வார்னர், இணைய பெருநிறுவனங்கள் இணைய தணிக்கைக்கு நகர்வதானது 2016 தேர்தல்களில் ரஷ்ய "தலையீடு" என்ற ஆரம்ப சாக்குபோக்குகளை விட மிகவும் பரந்தது என்று தெளிவுபடுத்தினார். “சமூக ஊடக கைப்புரட்டு பிரச்சினை செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கின் ஒரேயொரு இணைய நிறுவனத்துடன் மட்டுப்பட்டதல்ல, இந்த உண்மை இப்போது அதற்கும் அப்பாற்பட்டது என்பதில் ஐயமில்லை,” என்றார். “கிரெம்ளினின் 2016 ஆண்டுக்கான கையேட்டை இப்போது ஈரானியர்களும் பின்தொடர்கிறார்கள்,” என்றார்.

“ஈரானிய காரணகர்த்தாக்களிடம் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கிறது என்பதில் மிதமாக நம்பிக்கை" கொண்டிருப்பதாக FireEye திட்டவட்டமாக தெரிவித்தது. “இந்நடவடிக்கை வேறு இடங்களில் இருந்தும் உருவாக்கப்பட்டிருக்கலாம்" அல்லது "உண்மையான இணைய நடவடிக்கையாக" இருப்பதற்கான சாத்தியக்கூறும் உள்ளது என்பதையும் அந்நிறுவனம் சேர்த்துக் கொண்டது.

அந்த பயனர் கணக்குகள் எங்கிருந்து உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை "உண்மையானவையா" இல்லையா என்பதைத் தீர்மானிப்பது பேஸ்புக்கின் வேலையில்லை. பேஸ்புக் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பேர்க் செய்தியாளர்களுடன் ஒரு தொலைபேசி வழி கூட்டத்தில் தொடர்ந்து கூறுகையில், “ரஷ்யாவுடன் இணைப்பு கொண்ட அமெரிக்க அரசின் சிலருடைய மற்றும் ஏனையரின்" சில பயனர் கணக்குகள் நீக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார். அமெரிக்க அரசின் மேலாதிக்க பிரிவுகள் அமெரிக்க வெளியுறவு கொள்கையை எதிர்க்கும் எவரொருவரையும் கிரெம்ளின் முகவராக முத்திரை குத்த முனைந்துள்ள நிலையில், இதுபோன்றவொரு பரந்த வரையறை அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தின் மீதான எந்தவொரு பொதுவான விமர்சனத்திற்கும் நீடிக்கப்படலாம்.

“ஈரானுடன் தொடர்புடையதாக" அது கூறிய பக்கங்கள் மற்றும் கணக்குகளை நீக்கிய அதே நாள், ஒரு புனைப்பெயரில் எழுதி வந்த WSWS பங்களிப்பாளர் ஒருவரின் நீண்டகால பேஸ்புக் கணக்கையும் அது நீக்கியது, அவரது அடையாளத்தை நிரூபிக்கும் வகையில் அரசு அடையாளம் வழங்கினால் மட்டுமே அது அவர் கணக்கை மீண்டும் மீளமர்த்துமென பேஸ்புக் அறிவித்தது.

இதே தரமுறை அனைவருக்கும் அனுசரிக்கப்பட்டால், மில்லியன் கணக்கான மக்களால் அவர்கள் என்ன பெயரால் அறியப்படுகிறார்களோ அதே பெயர்களைத் தான் அவர்கள் பயன்படுத்த வேண்டுமென்றால், சமகாலத்திய எழுத்தாளர்களான ஸ்டீபன் கிங் (ரிச்சர்ட் பாச்மன் என்ற பெயரில் எழுதுகிறார்), அன்னி ரைஸ் (இவர் அன்னி ராம்ப்ளிங் என்ற பெயரில் எழுதுகிறார்) மற்றும் இன்னும் கணக்கற்றவர்களது சமூக பதிவுகளும் "பொய்யானவை" என்றாகிவிடும். விளாடிமீர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி உட்பட புரட்சிகர இயக்கத்தின் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் சிலர் பிரத்யேகமாக அவர்களின் புனைப்பெயரால் அறியப்பட்டிருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்க தாராளவாத ஆவணங்கள் மற்றும் கூட்டாட்சி-விரோத ஆவணங்கள் அனைத்தும் புனைப்பெயர்களைப் பயன்படுத்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்டன.

அரசு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் பேஸ்புக், முதல் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மற்றும் சர்வதேச மக்கள் உரிமை சட்டங்களின் கீழ் யாருக்குக் கருத்து சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் விதத்தில், நீதிபதியாகவும், நீதியரசர் சபையாகவும் மற்றும் தீர்ப்பளிப்பவராகவும் சேவையாற்றுகிறது. அது, விசாரணையின்றி, முறையீடின்றி, தகவல் எதுவும் வழங்காமல், கருத்துக்களைப் "பொய்யானது" என்று அறிவித்து அவை எழுதப்படும் பயனர் கணக்குகளை நீக்குவதாக அறிவிக்க அதற்கு உரிமை இருப்பதாக வாதிடுகிறது.

இம்மாதம் வாஷிங்டனில் நடந்த பாசிசவாத "Unite the Right 2” ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான இடதுசாரி எதிர்ப்பு-போராட்டத்தை செல்சியா மேனிங் உட்பட பிரபல இடதுசாரி அரசியல் செயல்பாட்டாளர்கள் அங்கீகரித்திருந்த நிலையில், அதன் உத்தியோகப்பூர்வ பக்கத்தை பேஸ்புக் கடந்த மாதம் அழித்தது. இந்நிகழ்வுக்கான பக்கத்துடன் இணைந்த இக்கணக்கு "ஒருங்கிணைந்த உண்மையற்ற நடவடிக்கை" என்று குறிப்பிட்டதே, அழிக்கப்பட்டதற்கான காரண விளக்கமாக இருந்தது.

“அதன் பயனர்களின் நம்பகத்தன்மையைப் பூஜ்ஜியத்திலிருந்து 1 வரை அளவிடுவதை” தீர்மானிக்கும் ஓர் உள்ளார்ந்த தரவரிசை முறையை பேஸ்புக் செயல்படுத்துவதாக இவ்வாரம் வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது. “நம்பத்தகுந்ததல்ல" என்று முத்திரை குத்தப்பட்டவை தவிர்க்கவியலாமல் அழிக்க தகுதியுடையவையாகிவிடும்.

சிறிது சிறிதாக என்ன அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது என்றால், ஒவ்வொருவரையும், எந்தவொரு நேரத்திலும், எந்தவொரு காரணத்திற்காகவும், அவர்களின் கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்கள் "உண்மைக்குப்புறம்பானவை" மற்றும் "முரண்பாடானவை" என்று கூறி மவுனமாக்குவதற்கான அமெரிக்க தொழில்நுட்ப ஏகபோகங்களின் இயங்குமுறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

தனியார் கட்டுப்பாட்டிலான சமூக ஊடக சூழல் அமைப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும் இதுபோன்றவொரு இயங்குமுறை, பின்னர், இணைய நடுநிலைமையை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களின் தனியுடைமை வலையமைப்புகள் மீது அவர்களுக்கு கண்காணிப்பு வேலை செய்ய "பொறுப்பிருப்பதாக" கூறி, பொது இணைய தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாக அணுகுவதையும் இணைய சேவை வழங்குனர்கள் தடுத்துவிடக்கூடும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், WSWS அதன் பகிரங்க கடிதம் வெளியிட்டு ஓராண்டுக்குப் பின்னர், கூகுள், பேஸ்புக், ட்வீட்டர் ஆகியவற்றுக்காக எல்லா இயங்குமுறைகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்பதோடு, இவை இணையச் சேவை வழங்குனர் எந்தவித சட்ட பொறுப்பும் இன்றி, மேற்பார்வையும் இல்லாமல் அல்லது மக்களுக்கே தெரியாமல் யாரொருவருக்கும் தடைவிதிக்க, மவுனமாக்க, மேற்பார்வை செய்ய இட்டுச் செல்கிறது.

ஆனால் பகிரங்க கடிதம் வெளியிடப்பட்டதற்குப் பிந்தைய ஆண்டில் இருந்து, மற்றொரு நிகழ்வுபோக்கும் மேலெழுந்துள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலையில் தொடங்கி, அதைத் தொடர்ந்து ஜேர்மனியில் கனரக தொழில்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தங்கள், ஐரோப்பா எங்கிலும் ரைன்எயர் விமானச்சேவை விமானிகளின் வேலைநிறுத்தங்கள், UPS தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளின் தொழிலாளர்களிடையேயும் அதிகரித்து வரும் எதிர்ப்பும் கோபமும் என உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் இந்த தொழிலாள வர்க்க இயக்கம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் இணைந்து விடுவதை தடுப்பதே தணிக்கையைத் தீவிரப்படுத்துவதற்கான இந்நகர்வுகளின் இலக்காகும்.

ஆனால் தொழிலாள வர்க்கத்தின் இந்த இயக்கம் தணிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கான அரசியல் அடித்தளத்தையும் உருவாக்குகிறது. தொழிலாளர்கள் அவர்களின் முதலாளிமார்கள் மற்றும் அவர்களின் தொழிற்சங்க ஒத்துழைப்பாளர்களுடன் மோதலில் ஈடுபடுகையில், அவர்கள் அரசியல் தணிக்கைக்கு எதிரான எதிர்ப்பைத் தங்களின் பதாகைகளில் உள்ளடக்க வேண்டும், சோசலிசத்திற்கான போராட்டத்தின் முக்கிய கூறுபாடாக சமூக ஊடக ஏகபோக நிறுவனங்களின் சுரண்டலைப் பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர போராட வேண்டும்.

இந்தாண்டு ஜனவரியில், உலக சோசலிச வலைத் தளம் "இணையத் தணிக்கைக்கு எதிராக போராட ஒரு சர்வதேச கூட்டணியில்" இணையுமாறு "சோசலிச, போர்-எதிர்ப்பு, இடதுசாரி மற்றும் முற்போக்கு வலைத் தளங்கள், அமைப்புகள் மற்றும் நடவடிக்கையாளர்களுக்கு" அழைப்புவிடுத்து ஒரு பகிரங்க கடிதம் வெளியிட்டது. இந்த முறையீடு முன்பினும் அதிகமாக இப்போது பொருத்தமுடையதாக உள்ளது. இணையம் மீதான தொழில்நுட்ப ஏகாபோகம் மற்றும் உளவுத்துறை முகமைகளின் பிடியை எதிர்த்து போராட விரும்பும் ஒவ்வொருவரும் தணிக்கைக்கு எதிரான பகிரங்க கடிதம் இந்த போராட்டத்தில் இணைய எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்!