ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Growing support for socialism in the United States

அமெரிக்காவில் சோசலிசத்திற்கு அதிகரித்து வரும் ஆதரவு

Joseph Kishore
14 August 2018

புள்ளிவிபரங்கள் எடுக்கத் தொடங்கியதில் இருந்து, முதல்முறையாக, 18-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் பாதிக்கும் குறைவானவர்களே முதலாளித்துவத்தின் மீது ஒரு சாதகமான கண்ணோட்டம் கொண்டிருப்பதாகவும், அதேவேளையில் பாதிக்கும் அதிகமானவர்கள் சோசலிசத்தின் மீது ஒரு சாதகமான கண்ணோட்டம் கொண்டிருப்பதாகவும் நேற்று வெளியிடப்பட்ட Gallup கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. மீண்டும் முதல்முறையாக, முக்கியமாக ஜனநாயக கட்சி தரப்பில் சாய்ந்திருந்த வாக்காளர்களில் அதிகமானவர்கள் முதலாளித்துவத்தை விட சோசலிசத்தின் மீதே சாதகமான கண்ணோட்டம் கொண்டிருப்பதாக அந்த கருத்துக்கணிப்பு கண்டறிந்தது.

முதலாளித்துவத்தை சாதகமானதாக பார்க்கும் இளைஞர்களின் சதவீதம், 2010 இல் 68 சதவீதத்தில் இருந்து 2016 இல் 57 சதவீதமாகவும், 2018 இல் 45 சதவீதமாகவும் (வெறும் எட்டாண்டுகளில் மலைப்பூட்டும் அளவுக்கு 23 சதவீத வீழ்ச்சியாக) தொடர்ந்து செங்குத்தாக சரிந்து வந்துள்ளது. சோசலிசத்தை அனுகூலமாக பார்க்கும் இளைஞர்களின் சதவீதமோ இந்த காலக்கட்டத்தில் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாக இருந்துள்ளது, 6 சதவீத புள்ளி இடைவெளியுடன் சோசலிசத்திற்கான ஆதரவு 2018 இல் 51 சதவீதத்தில் நிற்கிறது.

இதேபோக்குத்தான், எல்லா வயது குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் மற்றும் "ஜனநாயகக் கட்சி சார்பான கட்சி-சார்ப்பற்றவர்கள்" இடையிலும் காணப்படுகிறது, இவர்களிடையே 2010 இல் 53 சதவீதமாக இருந்த முதலாளித்துவம் மீதான சாதகமான கண்ணோட்டம் 2018 இல் 47 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது, அதேவேளையில் இவர்களிடையே சோசலிசம் மீது சாதகமான கண்ணோட்டம் கொண்டவர்களின் சதவீதம் 53 இல் இருந்து 57 க்கு அதிகரித்து, சோசலிசத்திற்கு ஆதரவாக 10 சதவீத புள்ளி இடைவெளியைக் கொண்டுள்ளது.

Gallup கருத்துக்கணிப்பின்படி, ஒட்டுமொத்தமாக அதிக அமெரிக்கர்கள் இன்னமும் முதலாளித்துவம் மீது ஒரு சாதகமான கண்ணோட்டம் கொண்டிருக்கிறார்கள், என்றாலும் இந்தாண்டின் 56 சதவீத சாதகமான விகிதம் நான்கு புள்ளிகள் குறைந்து மிகக் குறைந்த பதிவாக இருந்தது. பொருளாதார வார்த்தைகளின் ஒரு பட்டியலை Gallup உள்ளடக்கி இருந்தது, அவை ஒவ்வொன்றையும் குறித்து அவர்கள் சாதகமான கருத்தை கொண்டிருக்கிறார்களா அல்லது பாதகமான கருத்தை கொண்டிருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. இந்த வார்த்தைகளில், “சோசலிசம்" என்பது மட்டுமே அதிகளவில் அதன் சாதகமான கருத்தில் இருந்தது, அதேவேளையில் "சுயதொழிலதிபர்கள்,” “சுதந்திர நிறுவனம்,” “முதலாளித்துவம்,” “சிறு வணிகம்,” “கூட்டாட்சி அரசு,” மற்றும் "பெரு வணிகம்" ஆகிய அனைத்தும் கருத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தன.

Gallup புள்ளிவிபரங்கள் கணக்கில் எடுத்த காலகட்டம் (2010-2018) மிக முக்கியமானது. அது பெரிதும் 2008 நிதிய நெருக்கடிக்குப் பிந்தைய காலகட்டம் என்பதோடு, "நம்பிக்கை,” “மாற்றம்,” ஆகியவற்றிற்கு வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்து, ஆனால் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் செல்வவளத்தை தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பணக்காரர்களுக்குக் கைமாற்றுவதற்கு தலைமை தாங்கிய பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் பதவி காலத்திற்கு உரியதாக இருந்தது. பொருளாதாரம் "இந்தளவுக்கு ஒருபோதும் சிறப்பாக இருந்ததில்லை" என்று பிரகடனப்படுத்தி ஒபாமா பதவியிலிருந்து இறங்கினார், ஆனால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களோ தெளிவாக எதிர்விதமாக உணர்கிறார்கள்.

சோசலிசத்திற்கு ஆதரவு வளர்ந்திருப்பதும், முதலாளித்துவத்திற்கான ஆதரவு சரிந்திருப்பதும், கடந்த மாதம் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) நிறைவேற்றிய ஒரு தீர்மான மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது. “தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் கணிசமான பிரிவுகளிடையே" “முதலாளித்துவம் உள்ளார்ந்தே நேர்மையற்று உள்ளது என்றும், இந்த பொருளாதார அமைப்புமுறையில் அடிப்படை மாற்றங்கள் அவசியப்படுகின்றன" என்றும் "அதிகரித்த உணர்வு உள்ளது.” “இந்த பரந்த அடித்தளத்திலான உணர்வு முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கி ஒரு பாரிய அரசியல் இயக்கமாக இன்னும் அபிவிருத்தி அடையவில்லை என்றாலும், சோசலிசம் மீதான ஆர்வமும், ஆதரவும் வேகமாக அதிகரித்து வருகிறது,” என்று அத்தீர்மானம் குறிப்பிட்டது.

சோசலிசம் மீது அதிகரித்து வரும் ஆர்வம் ஆளும் வர்க்கத்தை அச்சமூட்டுகிறது. அது, இந்தாண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதிலும் பரவிய ஆசிரியர் வேலைநிறுத்தங்கள் மற்றும் அடுத்த பல வாரங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில் மீண்டும் அது எழுவதற்கான அச்சுறுத்தலில் இருந்து, Teamsters சங்கம் ஆதரித்த விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களுக்கு UPS தொழிலாளர்களிடையே இருந்த பாரிய எதிர்ப்பு வரையில், வாகனத்துறை தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளிடையேயும் அதிகரித்து வரும் கோபம் வரையில், வர்க்க போராட்ட மீளெழுச்சியின் ஆரம்ப வெளிப்பாடுகளுடன் பொருந்தி உள்ளது.

இதற்கு விடையிறுப்பாக, ஆளும் வர்க்கம் —அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும்— (ட்ரம்ப் நிர்வாகத்தால் விதைக்கப்பட்ட சக்திகள் உட்பட) அதிவலது தேசியவாத இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலமாகவோ அல்லது அடிப்படை ஜனநாயக உரிமைகளை வழிக்கொழிக்க ஆளும் வர்க்கத்தின் பாரம்பரிய கட்சிகளைக் கொண்டே காய் நகர்த்துவதன் மூலமாகவோ முன்பினும் மிக நேரடியாக எதேச்சதிகார ஆட்சி வடிவங்களைத் திணிக்க நகர்ந்து வருகிறது. அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி தான் "போலி செய்திகள்" மற்றும் "ரஷ்ய ஊடுருவலை,” எதிர்ப்பதற்காக என்ற போர்வையில் பெரியளவில் இணைய தணிக்கையைக் கோருவதில் முன்னிலை எடுத்துள்ளது, இது, முன்பினும் அதிக வெளிப்படையாக இடதுசாரி, சோசலிச மற்றும் போர்-எதிர்ப்பு பிரசுரங்களை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

முதலாளித்துவத்திற்கு எதிரான பாரிய எதிர்ப்பை எதிர்கொள்வதிலும் திசைதிருப்பி விடுவதிலும் ஆளும் வர்க்கம் மற்றொரு வழிவகையும் கொண்டுள்ளது: அதாவது, குழப்புவதற்காகவும் நிலைநோக்கு பிறழச் செய்வதற்காகவும் "சோசலிசம்" என்ற பதத்தைப் பயன்படுத்தும் பல்வேறு போலி-சோசலிச அரசியல் இயக்கங்கள் மற்றும் தனிநபர்களை ஊக்குவிப்பது. அமெரிக்காவில், 2016 தேர்தலில் பேர்ணி சாண்டர்ஸ் இந்த பாத்திரம் வகித்தார், இவர், "பில்லியனர் வர்க்கத்திற்கு" எதிராக ஓர் "அரசியல் புரட்சி" குறித்து பேசினார், ஆனால் சாண்டர்ஸ் (அவரே எதிர்பாராமலும் விருப்பமின்றியும் கிடைத்த) குறிப்பிடத்தக்க ஆதரவை, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்பின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்குப் பின்னால் திசைதிருப்புவதற்காக மட்டுமே பயன்படுத்தினார்.

இதே பாத்திரத்தை இப்போது அமெரிக்காவின் ஜனநாயக சோசலிசவாதிகள் அமைப்பு (DSA) வகித்து வருகிறது. அதன் தோற்றுவாய்களில் இருந்தே, DSA ஜனநாயகக் கட்சியின் ஒரு கன்னை என்பதற்கு அதிகமாக இருக்கவில்லை. 1982 இல் DSA ஐ ஸ்தாபித்த மிக்கெல் ஹாரிங்டன் அதன் அரசியலை "சாத்தியமானளவுக்கு இடதுசாரி" என்பதாக வரையறுத்தது, இதன் மூலமாக அது முதலாளித்துவ, பூர்ஷூவா அரசியலுக்கு ஏற்புடைய "இடதுசாரி" என்பதை அர்த்தப்படுத்தியது. அப்போதும் சரி இப்போதும் சரி அது ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ளவில்லை, மாறாக ஜனநாயகக் கட்சியின் ஒரு துணை அமைப்பாக அது செயல்பட்டு வந்துள்ளது.

2016 இல் 7,000 ஆக இருந்த DSA உறுப்பினர் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 47,000 ஆக வேகமாக அதிகரித்துள்ளது. அனேகமாக அந்த அமைப்பு அதன் சார்பில் இரண்டு உறுப்பினர்களையாவது அடுத்த நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கும், ஜூனில் நடந்த ஜனநாயகக் கட்சியின் நியூ யோர்க் நாடாளுமன்ற சபை வேட்பாளர் தேர்தலில், தற்போது பதவியிலிருக்கும் நாடாளுமன்றவாதி ஜோசப் கிரௌலெயைத் தோற்கடித்த Alexandria Ocasio-Cortez மற்றும் கடந்த ஆண்டு இராஜினாமா செய்த நீண்டகால ஜனநாயகக் கட்சி/DSA உறுப்பினர் ஜோன் கொன்யெர்ஸ் இன் பிறப்பிடமான டெட்ராய்டின் 13 வது நாடாளுமன்ற மாவட்டத்தில் கடந்த வாரம் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் வென்ற Rashida Tlaib ஆகியோர் அவ்விருவராக இருக்கலாம்.

DSA இன் வளர்ச்சி ஒன்றொன்றுக்கு ஒன்று முரண்பாடான இரண்டு நிகழ்ச்சிபோக்குகளை பிரதிபலிக்கிறது. ஒருபுறம், இளைஞர் அடுக்கின் இடதை நோக்கிய நகர்வு ஒரு சோசலிச எதிர்ப்பை எதிர்பார்க்கிறது, மறுபுறம் ஜனநாயகக் கட்சி மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் ஒரு கன்னையால் அந்த அமைப்பு செயலூக்கத்துடன் ஊக்குவிக்கப்படுகிறது. DSA உடன் இணைப்பு கொண்ட Jacobin சஞ்சிகை, இடதை இலக்கில் வைத்துள்ள கூகுளின் தணிக்கை மென்பொருள் வழிமுறை அல்காரிதத்தில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளது, அதேவேளையில் அதன் பதிப்பாசிரியர் பாஸ்கர் சுன்கராவுக்கு நியூ யோர்க் டைம்ஸ் அதன் பக்கங்களைத் திறந்துவிட்டுள்ளது.

சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) மற்றும் சோசலிச மாற்றீடு ஆகிய அமைப்புகள் உட்பட, DSA ஒரு பரந்த குழு அமைப்புகளின் பாகமாக உள்ளது, இவை தொழிலாள வர்க்கத்திற்காக அல்ல, மாறாக உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட பிரிவுகளுக்காக பேசுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு அவை பரிந்துரைப்பதானது, ஜனநாயக கட்சியை ஆதரிப்பதுடனும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது பெருநிறுவன தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியிலான மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதுடனும் இணைந்துள்ளன.

தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களிடையே சோசலிசத்திற்குப் பாரியளவில் ஆதரவுக்களம் உள்ளது என்பதற்கு Gallup கருத்துக்கணிப்பு சமீபத்திய அறிகுறி மட்டுமே ஆகும். பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் கொள்கைகளுடன் தொழிலாளர்கள் மோதலுக்குள் நுழைகையில், இந்த ஆதரவுக்களம் இன்னும் விரிவடையும். ஆனால் சோசலிசம் என்பது எதை அர்த்தப்படுத்துகிறது மற்றும் எவ்வாறு அதை அடையப் பெறுவது என்பதைக் குறித்து அங்கே மட்டுப்படுத்தப்பட்ட புரிதலே உள்ளது. முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கான அவர்களின் திட்டங்களை முன்னெடுத்துள்ளதால், இப்போதைய நிலையில், அது தவறாக வழிநடத்தப்படலாம் மற்றும் ஒடுக்கப்படலாம் என்ற ஐயுறவு நிலவுகிறது.

உண்மையான சோசலிசம் தெளிவாகவும் உறுதியான தீர்மானத்துடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். உண்மையான சோசலிசம் சமூக சமத்துவ கோட்பாட்டின் அடித்தளத்தில் அமைந்திருக்கும், தொழிலாள வர்க்கம் மீதான சுரண்டலில் இருந்தும் மற்றும் வறுமைப்படுத்தியதில் இருந்தும் செல்வந்தர்களால் ஏகபோகமாக்கப்பட்ட பாரிய பெரும் செல்வவளம் கைப்பற்றப்பட்டு, சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விடப்படும் என்று சமூக சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

உண்மையான சோசலிசம் என்பது ஒவ்வொரு நாட்டில் உள்ள தொழிலாளர்களும் ஒரேமாதிரியான சமூக நலன்கள் மற்றும் ஒரே வர்க்க எதிரிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சர்வதேசமயமானதாகும். ஒரு சோசலிச இயக்கமானது, எவ்விடத்தில் இருக்கும் தொழிலாளர்களும் அவர்கள் விரும்பிய இடத்தில் வாழ்வதையும் வேலை செய்வதையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் எல்லைகளைத் திறந்துவிடுவதற்காக போராடுவதன் அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை முன்னெடுக்க வேண்டும்.

உண்மையான சோசலிசம் என்பது, உலகை ஓர் அணுஆயுத பேரழிவில் வளைத்து அச்சுறுத்தும் இந்த முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் உள்ளார்ந்த முரண்பாடுகளின் விளைபொருளாக விளங்கும், ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து பிரிக்கவியலாததாக விளங்குகிறது.

உண்மையான சோசலிசம், உலக மக்கள்தொகையில் பாரிய பெரும்பான்மையாக விளங்கும் தொழிலாள வர்க்க நலன்களை அடித்தளத்தில் கொண்டிருக்கும். அது தேசியவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறது என்பதோடு, தொழிலாளர்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை பிளவுபடுத்தி அவர்களை முதலாளித்துவ அமைப்புமுறைக்கு அடிபணிய செய்ய முயலும் இனவாத மற்றும் பால்ரீதியான அடையாள அரசியலையும் எதிர்க்கிறது.

உண்மையான சோசலிசம் புரட்சிகரமானது. அது ஆளும் வர்க்கத்தால் சகித்துக் கொள்ளவியலாத மிருதுவான சீர்திருத்தங்களை முன்மொழிவதல்ல, மாறாக மிகப்பெரும் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான ஜனநாயக கட்டுப்பாட்டை ஸ்தாபிப்பதன் மூலமாக முதலாளித்துவ சொத்து உறவுகளைத் தூக்கியெறியும் புரட்சியை முன்மொழிகிறது. அது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பொருளாதார வாழ்வை தனியார் இலாபத்திற்காக அல்ல மாறாக சமூக தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கமைக்க, அதிகாரத்தைக் கைப்பற்றி தொழிலாளர்களின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளை எதிர்த்து, தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் அணித்திரட்டுவதற்காக போராடுகிறது.

ரஷ்ய புரட்சியின் லெனின் உடன் துணை-தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் 80 ஆண்டுகளுக்கு முன்னர் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் மார்க்சிசத்தின் அனைத்து உருதிரிப்புகளுக்கு எதிராகவும் அது புரட்சிகர சோசலிச சர்வதேசவாதத்திற்காக போராடி வந்துள்ளது. இன்று உலகெங்கிலும் சோசலிச சமத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உருவடிவமாக விளங்கும் ட்ரொட்ஸ்கிசமே சோசலிசமாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சமரசத்திற்கிடமற்ற புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குடன் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் அபிவிருத்தி அடைந்து வரும் புறநிலை இயக்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கான போராட்டத்தை முன்நகர்த்திச் செல்கிறது. 2018 தேர்தல்களில், அது மிச்சிகனின் 12 வது நாடாளுமன்ற மாவட்டத்திலும் அதற்கு அங்காலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டு செல்ல, அங்கே நைல்ஸ் நிமூத்தை நிறுத்தி உள்ளது.

உண்மையான சோசலிசத்திற்கான போராட்டம் என்பது சோசலிச சமத்துவக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதர கட்சிகள் மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைந்து அவற்றைக் கட்டியெழுப்புவதை அர்த்தப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியில் இணைய, இங்கே பார்வையிடவும். IYSSE இல் இணைய இங்கே பார்வையிடவும்.