ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The global implications of the Turkish lira crisis

துருக்கிய லீரா நெருக்கடியின் உலகளாவிய தாக்கங்கள்

Nick Beams
16 August 2018

2008 உலகளாவிய நிதி நெருக்கடி தொடங்கியதன் பத்தாவது ஆண்டுதினம் நெருங்குகையில், துருக்கிய செலாவணியான லீராவைச் சுற்றி நிகழ்ந்து வரும் கொந்தளிப்பானது அந்த முறிவை உண்டாக்கிய அனைத்து நிலைமைகளும் இன்னும் நீடிக்கின்றன என்பதற்கு எச்சரிக்கை மணி ஒலிக்கிறது.

உண்மையில், அந்த நிதியஉருகுதலுக்கு விடையிறுப்பாக, பிரதான முதலாளித்துவ நாடுகளது அரசுகளும் மத்திய வங்கிகளும் எடுத்த நடவடிக்கைகளே அவற்றைத் தீவிரப்படுத்தி உள்ளன. இது மற்றொரு நிதிய பேரழிவு வெடிப்பதற்கு களம் அமைத்துள்ளது, அனேகமாக இது பத்தாண்டுகளுக்கு முன்னர் வெடித்ததை விட இன்னும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருக்கலாம்.

உலகளாவிய நிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சியமை, அத்துடன் அந்த பொறிவை ஏற்படுத்துவதற்குக் காரணமான ஊகவணிக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த அதே நிதியியல் அமைப்புகளுக்கு ஒரு பிரமாண்ட வெகுமதியை உருவாக்கிய அதி-மலிவு வட்டி விகித முறையை வழங்கியமை என இவையொரு புதிய நிதியியல் சீட்டுக்கட்டு மாளிகையை உருவாக்கியுள்ளது.

ஆனால் 2008 இல் கற்பனை செய்யவியலாத ஒரு அளவிற்கு உலகின் அனைத்து முன்னணி பொருளாதாரங்களும், தொடர்ந்து தீவிரமடைந்து வரும் பொருளாதார மோதல் சுழற்சியில் சிக்கியுள்ளன. இந்த உலகளாவிய வர்த்தக போரில் ட்ரம்ப் வெள்ளை மாளிகை முன்னிலையில் உள்ளது, அது அதன் நண்பர்கள் மற்றும் எதிரிகளை ஒருபோல விலையாக கொடுத்து அமெரிக்காவின் புவிசார்அரசியல் மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதற்கான அதன் முனைவில், துருக்கிக்கு எதிராக தொடங்கிய தாக்குதலைப் போன்ற வர்த்தக தடையாணைகள் மற்றும் இறக்குமதி தீர்வை உயர்வுகள் போன்றவற்றை ஓர் உள்ளார்ந்த அம்சமாக காண்கிறது.

கடந்த பத்தாண்டில் உலக பொருளாதாரத்தின் தன்மை ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்குள் சென்றுள்ளது. இதில் பொருளாதார வளர்ச்சியானது, அது நிகழ்ந்து வரும் அளவைக்கொண்டு பார்க்கையில், அது உற்பத்தி வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளின் மூலமாக உந்தப்படவில்லை, மாறாக பணமானது ஊகவணிகத்தினதும் ஒட்டுண்ணித்தனத்தினதும் நடவடிக்கை மூலம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாய்ந்ததன் மூலமாக உந்தப்பட்டுள்ளது.

அதற்கேற்ப, பணமானது துருக்கி போன்ற எழுச்சிபெற்று வரும் சந்தைகள் என்றழைக்கப்படுவதற்கு உள்ளே பாய்ந்துள்ளது, அந்த அரசுகளும் பெருநிறுவனங்களும் டாலர்-அடிப்படையிலான கடன்கள் மற்றும் பிற வெளிநாட்டு செலாவணி கடன்களை மிகவும் மலிவான விகிதங்களில் பெற்றுக்கொள்வதிலிருந்து விளைந்த, அதிக வட்டிவிகித இலாபத்திற்கான சாத்தியக்கூறும் வேகமான வளர்ச்சி விகிதமும் விரைவான இலாபங்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

வெள்ளமென பாய்ந்த இந்த பணத்தின் அளவு சர்வதேச நிதியியல் அமைப்பு தொகுத்தளித்த புள்ளிவிபரங்களால் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதன் புள்ளிவிபரங்களின்படி, 30 மிகப்பெரிய எழுச்சி பெற்று வரும் சந்தைகளின் ஒருங்கிணைந்த கடன்நிலை (indebtedness) 2011 இன் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 163 சதவீதத்தில் இருந்ததில் இருந்து இந்தாண்டின் முதல் காலாண்டில் 211 சதவீதமாக உயர்ந்தது. பணத்தின் அடிப்படையில் இது, எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கடன்களில் 40 ட்ரில்லியன் டாலர் அதிகரிப்பாகும்.

வட்டிவிகிதங்களும் அமெரிக்க டாலர் மதிப்பும் குறைவாக இருக்கும் வரையில், இந்த நடைமுறை தொடரும். ஆனால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கும் "பணத்தைப் பாய்ச்சும்" அதன் திட்டத்தை நிறுத்துவதற்கும் நகர்கையில், அதன் விளைவாக டாலர் மேல் நோக்கி நகருகையில், டாலர் மதிப்பிலான கடன் சுமை வேகமாக உயரும் என்பதே இதன் அர்த்தம். இது அனைத்து வழிகளிலும் வெளியேறுவதற்கான நெருக்குதலை உருவாக்கி உள்ளது, இதை துருக்கி லீரா மதிப்பு இந்தாண்டு ஏறத்தாழ 40 சதவீதம் சரிந்திருப்பதில் பார்க்கலாம்.

ஆனால், இது வரையில் நடந்துள்ள இன்னும் நிறைய பரந்த நிகழ்வுகளில், துருக்கிய நெருக்கடியானது மிகவும் வெளிப்படையான வெளிப்பாடு மட்டுந்தான். தென் ஆபிரிக்க ரான்ட் (rand) கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது, பிரேசிலின் ரியல் (real) இந்தாண்டு முழுவதும் கீழ்நோக்கிய அழுத்தத்தின் கீழ் உள்ளதுடன், இவ்வாரம் இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வரலாற்றிலேயே அதன் குறைந்த மட்டத்திற்கு வீழ்ந்தது. துருக்கிய நெருக்கடி வெடித்துள்ள நிலையில், அர்ஜென்டினா செலாவணி பெசோவின் (peso) வீழ்ச்சியைத் தடுக்கும் முயற்சிக்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஜூனில் அவசர உதவி கோரியிருந்த அந்நாடு, நிதி வெளியேறுவதைத் தடுப்பதற்காக அதன் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 5 சதவீத புள்ளிகள் உயர்த்தி 45 சதவீதத்திற்குக் கொண்டு சென்றது.

எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களின் கொந்தளிப்பானது, 1997-98 ஆசிய நிதியியல் நெருக்கடியுடன் மலைப்பூட்டும் அளவிற்கு ஒத்ததன்மையைக் கொண்டுள்ளது, அப்போது தாய்லாந்து செலாவணி பஹ்த் (baht) பொறிந்த போது அப்பிராந்தியம் எங்கிலும் செலாவணிகளின் வீழ்ச்சியைத் தொடங்கி வைத்தது. பூகோளமயமாக்கல் பாதையில் வெறுமனே ஒரு "சிறிய தவறு" என்று அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனால் விவரிக்கப்பட்ட ஆசிய நெருக்கடி அப்பிராந்தியம் எங்கிலும் ஓர் ஆழ்ந்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதையொட்டி அது ரஷ்ய செலாவணி ரூபிள் (rouble) நெருக்கடிக்கு இட்டுச் சென்றது, அது அமெரிக்க நீண்டகால முதலீட்டு நிதி நிறுவனம் Long Term Capital Management இன் பொறிவில் ஒரு மத்திய பாத்திரம் வகித்த நிலையில், அதன் தோல்வி ஒட்டுமொத்த அமெரிக்க நிதியியல் அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியைத் தூண்டிவிடலாம் என்று அஞ்சி நியூயோர்க் பெடரல் ரிசர்வ் ஆல் அதற்குப் பிணை வழங்கப்பட்டது.

இதேபோல, துருக்கி மற்றும் பிற எழுச்சி பெற்று வரும் சந்தைகளில் இருந்து "தொற்றுதலைப்" பரப்பும் அனைத்து அம்சங்களும் இப்போதைய இந்த நிலைமையிலும் உள்ளதுடன், நூறு பில்லியன் கணக்கான டாலர்களை பிரதான ஐரோப்பிய வங்கிகளில் கடன்களுக்காக வழங்கியுள்ள நிலையில் அவை மிகவும் முன்னேறிய மட்டத்தில் உள்ளன.

ஆனால் முந்தைய நெருக்கடிகளுடன் ஒத்தத்தன்மைகள் இருந்தாலும் கூட, முக்கிய வித்தியாசங்களும் உள்ளன. இவை புவிசார் அரசியல் சூழலுடன் சம்பந்தப்பட்டுள்ளன, இவை, அனைத்திற்கும் மேலாக, பிரதான சக்திகள் அவை தலைமை தாங்கிய இந்த பொருளாதார அமைப்புமுறையின் முரண்பாடுகளை ஒருங்கிணைந்து எதைக் கொண்டு நெறிமுறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் முயன்றனவோ அந்த போருக்குப் பிந்தைய அனைத்து ஏற்பாடுகளும் இயங்குமுறைகளும் இன்று சிதைந்துள்ளதால் குணாம்சப்பட்டுள்ளது.

பெருமந்த நிலைமைக்கு இட்டுச் சென்ற கொள்கைகளான அண்டை நாடுகளைப் பலிக்கொடுத்து தான் செழிக்கும் கொள்கைகளுக்கு ஒருபோதும் மீண்டும் திரும்புவதில்லை என்று 2008 இல் இருந்து தொடர்ந்து கூறப்பட்டு வந்த சூளுரைகள் ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்கா தொடங்கி வைத்த இறக்குமதி தீர்வை மற்றும் வர்த்தக போர் முறைமைகள் மீதான கசப்புணர்வால் கடந்த ஜூன் மாதம் பிரதான சக்திகளின் ஜி7 குழுக் கூட்டம் முறிந்து போனது.

மூன்று மாதங்களுக்கும் குறைவான நாளில், இந்த உடைவின் விளைவுகள் தெளிவாக தெரிகின்றன. மத்தியக் கிழக்கில் அதன் வெளிநாட்டு கொள்கை மற்றும் இராணுவ நோக்கங்களுக்கு ஏற்ப துருக்கியை அடிபணிய செய்வதற்கான முயற்சியில் அதன் மீது திணிக்கப்பட்ட உருக்கு இறக்குமதி தீர்வை வரிகளை இரட்டிப்பாக்க ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவு தான், லீரா நெருக்கடிக்கான உடனடி தூண்டுதல் என்பது மிகவும் முக்கியமானது. முந்தைய நெருக்கடிகளில் போல , அமெரிக்கா ஏனைய பிரதான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து, நிலைமையைத் தணிக்க முயல தலையீடு செய்யலாமென பரவலாக குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலின் கீழ் அக்கொள்கை கைவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் துருக்கிய தலையீட்டால், அந்நாட்டில் பலமாக முதலீடு செய்துள்ள ஐரோப்பிய வங்கிகளுக்கு என்ன விளைவுகள் கிடைக்குமென அமெரிக்காவுக்கு நன்கு தெரியும். ஆனால் பொருளாதார உறவுகளைப் பொறுத்த வரையில் ட்ரம்ப் ஐரோப்பாவை ஒரு "எதிரி" என்று பண்புமயப்படுத்தி உள்ள நிலைமைகளின் கீழ், அது தனக்கு ஒரு கூடுதல் ஆதாயமாக மாறிவிடுமென்றே வாஷிங்டன் கருதுகிறது.

வர்த்தக போரின் வளர்ச்சி அமெரிக்காவோடு நின்றுவிடவில்லை. போருக்குப் பிந்தைய பொருளாதார இயங்குமுறைகள் மற்றும் நிதியியல் நெறிமுறைகளின் முறிவால், ஒவ்வொரு பிரதான சக்தியும் அதன் சொந்த நலன்களைப் பார்த்து வருகின்றன, இது பொருளாதார போர்முறை தீவிரமடைவதற்கும் இறுதியாக இராணுவ மோதலுக்கும் இட்டுச் செல்கிறது. உலகளாவிய பொருளாதாரத்திற்கும் உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக மற்றும் வல்லரசுகளாக பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாடு முன்பினும் அதிகமாக தெளிவான புலப்பாட்டு வடிவங்களைப் பெற்று வருகின்றன.

ஆனால் அவை அவற்றின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களில் ஆழமாக பிளவுபட்டிருந்தாலும், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் ஓர் இன்றியமையா பிரச்சினையில் ஒற்றுமையாக உள்ளன. உலக முதலாளித்துவ நடைமுறைகளில் நிகழ்ந்து வரும் உடைவின் அடுத்த கட்டம் என்னவாக இருந்தாலும், அதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்வதற்கு அவசியமான என்னென்ன வழிவகைகள் உள்ளதோ அவை அவற்றை பரிசீலிக்க முனையும்.

இது தான் கடந்த தசாப்தத்தின் படிப்பினையாகும், இது, ஒவ்வொரு நாட்டிலும், கூலிகள், சமூக நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான ஆழ்ந்த தாக்குதலைக் கண்டுள்ளது, அதேவேளையில் செல்வவளம் உயர் வருவாய் மட்டத்தில் மறுபகிர்வு செய்யப்பட்டுள்ளதால், சமூக சமத்துவமின்மை முன்பில்லாத உயரங்களுக்கு அதிகரித்துள்ளது.

2008 இல், உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசுகள், அனைத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு, தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபக கட்சிகள் மூலமாக பல தசாப்தங்களாக வர்க்க போராட்டம் ஒடுக்கப்பட்டதில் இருந்து மிகப்பெரும் ஆதாயமடைந்திருந்தன. இந்த ஒட்டுண்ணித்தனமான மற்றும் குற்றகரமான நிதியியல் மூலதனத்தின் சார்பாக அவை செய்திருந்த மீட்பு நடவடிக்கைகள், இவை எல்லாம் இல்லாமல் சாத்தியமாகி இருக்காது.

ஆனால் நிலைமைகள் இப்போது மாறி வருகின்றன. 2018 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வர்க்க போராட்டத்தின் மீள்எழுச்சியைக் கண்டுள்ளது. 2008 க்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அந்த பொறிவை உண்டாக்கிய நிலைமைகளைச் சீராக்க ஒன்றும் செய்யப் போவதில்லை என்பதும், விரைவிலேயோ அல்லது தாமதமாகவோ மற்றொரு நெருக்கடி வெடிக்கும் என்பதும் அரசுகள், அரசு எந்திரங்கள் மற்றும் நிதியியலின் உயரடுக்கிற்கு நன்கு தெரியும். அதனால் தான், இராணுவ-போலிஸ் வன்முறை மற்றும் தணிக்கையின் அடிப்படையில் முன்பினும் அதிக சர்வாதிபத்திய வடிவங்களை அபிவிருத்தி செய்வதன் மூலமாக இதுபோன்றவொரு நிலைமைக்கு அவர்கள் தயாரிப்புகளைச் செய்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் அது தள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்களுக்கு அதன் தயாரிப்புகளைத் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டும். அதன் போராட்டத்திற்குத் தலைமை கொடுப்பதற்கு, பிற்போக்குத்தனமான தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியே மிகவும் அடிப்படை மட்டத்தில் சுயாதீனமான அமைப்பு வடிவங்களை அபிவிருத்தி செய்வதும், ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதும் மற்றும் சோசலிச புரட்சிக்கான உலக கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டமைப்பதையும் இது உள்ளடக்கி உள்ளது.