ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Financial parasitism and the American oligarchy

நிதியியல் ஒட்டுண்ணித்தனமும், அமெரிக்க செல்வந்த தட்டும்

Patrick Martin
2 August 2018

பெரும் செல்வந்தர்களுக்கு இன்னும் 100 பில்லியன் டாலர் வாரியிறைப்பதற்கு அழுத்தமளிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தினது திட்டங்கள் குறித்த செய்திகள், தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அவசர எதார்த்தத்தை அடிக்கோடிடுகிறது: முன்பினும் அதிகமாக தனிநபரின் செல்வ வளத்தைத் திரட்டுவதற்கான ஆளும் உயரடுக்கின் முடிவில்லா கோரிக்கைகளை இனியும் அமெரிக்க சமுதாயம் தாங்க முடியாது.

இது, நிச்சயமாக, ஓர் உலகளாவிய பிரச்சினையாகும். கடந்த ஆண்டு ஆக்ஸ்ஃபோம் ஆய்வு ஒன்று கண்டறிந்ததைப் போல, எட்டு பில்லியனர்கள் மனிதயினத்தின் பாதி ஏழைகளை விட, அதாவது 3.6 பில்லியன் மக்களை விட அதிக செல்வ வளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். அந்த எட்டு பேரில் அறுவர் அமெரிக்கர்கள், உழைக்கும் மக்களின் தேவைகளுக்கும் மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் தணியாத அபிலாஷைகளுக்கும் இடையிலான மோதல் அமெரிக்காவை விட வேறெங்கிலும் இந்தளவுக்கு பெரிதாக இருக்க முடியாது.

ஒரேயொரு மிகப் பெரிய பில்லியனர், உலகின் மிகப் பெரிய செல்வந்தரான அமசனின் ஜெஃப் பெஸோஸ் மட்டுமே 2018 இல் அவர் சொத்துக்களில் அண்மித்து 50 பில்லியன் டாலர் உயர்வைப் பார்த்துள்ளார்—இது அந்நிறுவனத்தின் 5 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 100,000 டாலர் கொடுப்பனவாக கொடுக்க போதுமானதாகும்.

மற்றொரு பாரிய வரிக்கொடைக்கான முன்மொழிவு செல்வ வளத்தை மறுபங்கீடு செய்யும் இருகட்சிகளது திட்டநிரலின் சமீபத்திய வெளிப்பாடாகும், இந்த மறுபங்கீடுகள் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி என இருகட்சியின் கீழும் கடந்த பல தசாப்தங்களின் போக்கில் நடத்தப்பட்டுள்ளது. உண்மையில், 2008 பொருளாதார பொறிவை அடுத்து ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தான், செல்வந்தர்களுக்குப் பிணையெடுப்பை வடிவமைப்பதற்கான பிரதான இயங்குமுறையாக நிதியியல் சந்தைகளைப் பெருக்க வைக்க ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் ஒதுக்கப்பட்டு, மிகப்பெரிய பரிமாற்றம் நடத்தப்பட்டது.

ரூஸ்வெல்ட் பயிலகம் மற்றும் தேசிய வேலைவாய்ப்பு சட்ட திட்டம் வழங்கிய ஒரு சமீபத்திய அறிக்கை, அமெரிக்க பொருளாதாரத்தின் தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் மலைப்பூட்டும் மட்டத்தை அம்பலப்படுத்துகிறது. அந்த அறிக்கை பங்குகள் வாங்கிவிற்றல்களை ஒட்டுமொத்தமாகவும், மூன்று பிரதான தொழில்துறைகளான உணவகத்துறை, சில்லறை விற்பனை மற்றும் உணவு உற்பத்தி ஆகியவற்றை விரிவாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியது.

கடந்த 25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டினது நிர்வாகங்கள் முன்னெடுத்த நிதியியல் நெறிமுறை தளர்வின் கீழ், பங்கு வாங்கிவிற்றல்கள் 1980 களின் தொடக்கத்தில் 5 சதவீதத்திற்கும் குறைவாக வருவாய் ஈட்டியதிலிருந்து 2012 இல் 54 சதவீதம் வருவாய் ஈட்டும் அளவுக்கும், இன்று அண்மித்து 60 சதவீதத்திற்கும் உயர்ந்துள்ளன.

இதுபோன்ற புள்ளிவிபரங்களானது, மிகப்பெரிய பெருநிறுவன இலாபங்கள் பெருந்திரளான மக்களுக்கு "பாயும்" ஏனென்றால் நிறுவனங்கள் இந்த இலாபங்களைப் புதிய எந்திரங்கள் வாங்குவதற்கும் மற்றும் புதிய தொழிலாளர்களை நியமிப்பதிலும் முதலீடு செய்யும் என்று அறிவுறுத்திய முதலாளித்துவ-சார்பு புராணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றன. உண்மையில், அவை அவற்றின் இலாபங்களில் பாதிக்கும் அதிகமானதை பெரியளவில் பங்குகள் வைத்திருப்பவர்களையும் உயர்மட்ட நிர்வாகிகளையும் கொழிக்க வைக்கவே செலவிடப்பட்டன, இவர்கள் பங்குகளில் பெரும் பெரும்பான்மை பங்குகளை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க விதத்தில், உணவக சேவைத்துறை அது இலாபங்களில் ஈட்டியதை விட பங்கு வாங்கிவிற்றதில் 136.5 சதவீதம் அதிகமாக செலவிட்டிருந்தது. இதன் அர்த்தம், இத்துறை நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக பணம் வாங்கி, கடனில் சென்றன. மெக்டொனால்ட், YUM ரகங்கள் (Taco Bell, KFC, Pizza Hut), ஸ்டார்பக்ஸ், ரெஸ்டாரன்ட் பிராண்ட்ஸ் இன்டர்நேஷனல் (பர்கர் கிங், டிம் ஹார்டன்ஸ்) மற்றும் டாமினோ பிட்சா ஆகியவை பங்குகள் வாங்கிவிற்றதில் ஈடுபட்ட முதல் ஐந்து உணவகச் சேவை நிறுவனங்களில் உள்ளடங்குகின்றன. இதே பணம் தொழிலாளர்களிடையே பங்கிடப்பட்டிருந்தால், அது கூலிகளை 25 சதவீதம் அதிகரித்திருக்கும்.

சில்லறை வர்த்தக தொழில்துறை நிகர இலாபத்தில் 79.2 சதவீதத்தைப் பங்கு வாங்கிவிற்றதில் செலவிட்டது, வோல்மார்ட், சிவிஎஸ், டார்கட், லொவ்'ஸ் மற்றும் ஹோம் டிபாட் போன்ற நிறுவனங்கள் அதற்கு பதிலாக அனைத்து தொழிலாளர்களுக்கும் 63 சதவீதம் உயர்வுகளை வழங்கி இருக்கலாம். உணவு உற்பத்தித் துறையை (பெப்சிகோ, கிராஃப்ட்ஹென்ஸ், டைசன் புட்ஸ் மற்றும் அர்செர் டேனியல் மிட்லாண்ட், இதர பிற நிறுவனங்கள்) பொறுத்த வரையில், பங்குகள் வாங்கிவிற்பதற்கு சென்ற நிகர இலாபத்தில் 58 சதவீதம் ஒப்பீட்டளவிலான புள்ளிவிபரங்களாக உள்ளன, ஆனால் இலாபங்கள் இன்னும் அதிகமாக இருந்ததுடன், இவை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் 79 சதவீத சம்பள உயர்வு கிடைத்திருக்கும்.

பங்குகள் வாங்கிவிற்பது குறிப்பாக தலைமை செயலதிகாரிகளைச் செழிப்பாக்குகின்றன, இவர்கள் பொதுவாக தங்களின் வருவாயின் பெரும்பகுதிகளைப் பங்குகளாக பெறுகிறார்கள், அவ்விதத்தில் வாங்கிவிற்பது விலை அதிகரிக்கையில் ஆதாயமடைகிறார்கள். பெரும்பான்மை ஊகவணிக வருவாய்களை அறுவடை செய்யும் தலைமை செயலதிகாரிகளின் பெயர்கள் இந்த வாரம் Politico அறிக்கையில் வெளியான போது, ஓரக்கல் நிறுவனத்தின் சாஃப்ரா காட்ஸ் (250 மில்லியன் டாலர்), ஓரக்கல் நிறுவனத்தையே சேர்ந்த தோமஸ் குரியன் (85 மில்லியன் டாலர்) மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் அஜய் பாங்கா ஆகியோர் அதில் இடம் பெற்றிருந்தனர்.

மற்றொரு உண்மையும் பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தால் மிகப் பெரியளவிலான தொகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை அம்பலப்படுத்துகிறது. இவ்வார ஆரம்பத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிடுகையில், உலகளாவிய நிதியியல் பொறிவின் உச்சத்தில் 2008 இல் பங்கு விருப்பத்தெரிவைப் பெற்ற 350 கோல்ட்மன் சாச்ஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், இந்த விருப்பத்தெரிவு இந்தாண்டு காலாவதியாகும் காலத்திற்குள் 3 பில்லியன் டாலர்கள் குவித்திருப்பார்கள் என்று அறிவித்தது.

வெள்ளமென பங்குகள் வாங்கி விற்கப்படுவதானது, ஜனநாயக கட்சியினரின் ஒத்துழைப்போடு கடந்த டிசம்பரில் ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சி காங்கிரஸ் மூலமாக முன்னுக்கு கொண்டு வரப்பட்ட 1.5 ட்ரில்லியன் டாலர் மிகப் பெரிய வரி வெட்டால் தூண்டிவிடப்பட்டதாகும். பங்குகள் வாங்கிவிற்பது, பங்கு ஆதாயங்கள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் பிற நிதியியல் தந்திரங்கள் மூலமாக பெருநிறுவன அமெரிக்கா பங்குதாரர்களின் பைகளுக்குள் 2.5 ட்ரில்லியன் டாலரைப் பாய்ச்சி வருகிறது.

வரி வெட்டு பிரதானமாக பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமான வரிகளுக்கு கொடுக்கப்பட்டது என்பதன் மீதும், மூலதன ஆதாய வரி விகிதம் மாற்றப்படவில்லை என்பதன் மீதும் மிகப் பெரிய செல்வந்தர்களின் பிரிவுகளில் வெளிப்படையாகவே சிறிது சீற்றம் இருந்தது. இதற்கு விடையிறுப்பாக தான், ட்ரம்ப் நிர்வாகம் முந்தைய நடவடிக்கையை மாற்றுவதற்கு அது தயாரிப்பு செய்து வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளதுடன், செல்வந்தர்கள் விலை பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் மூலதன ஆதாயங்கள் மீது வரி, அதாவது பங்குகள், பத்திரங்கள் மற்றும் மற்ற நிதியியல் சொத்துக்களை வாங்கி விற்பதிலிருந்து பெறப்படும் இலாபங்கள் மீது வரி விதிப்பதற்கான விதிகளை மாற்றும் ஒரு நிர்வாக நடவடிக்கையையும் பரிசீலித்து வருகிறது.

இது மூலதன ஆதாய வரியை மூன்றில் ஒரு பங்கை அல்லது பத்தாண்டுகளுக்கு 102 பில்லியன் டாலரை வெட்டும். இந்த தொகையில் மூன்றில் இரண்டு பங்குகள் அல்லது 66 பில்லியன் டாலர் உயர்மட்டத்தில் உள்ள 0.1 சதவீத அமெரிக்கர்களின் வசமாகும்.

இதே நிர்வாகம் தான், அமெரிக்காவில் பாதுகாப்பும் ஒரு நல்வாழ்வும் தேடி வரும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களைப் பூதாகரமாக காட்டி, அவர்களை "சட்டவிரோத அன்னியர்கள்" ஏனென்றால் அவர்களிடம் ஆவணமில்லை என்றும் கூறுகிறது. ஆனால் பில்லியனர்களின் நலன்கள் என்று வருகையில், எது சட்டபூர்வமானது என்பது குறித்து எந்த அக்கறையும் இருப்பதில்லை, அவர்களின் செல்வ வளத்தை எப்படி சிறப்பாக பெருக செய்வது என்பது மட்டுந்தான் அக்கறை கொள்கிறது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் பிற்போக்கான சமூக கொள்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்கள் மற்றும் கடிவாளமற்ற இராணுவவாதத்திற்கு எதிராக அதிகரித்து வரும் மக்கள் விரோதத்திற்கு முன்னால், ட்ரம்ப் நிர்வாகத்தை தாக்கு பிடித்து வைத்திருப்பது எது என்றால், பெயரளவிற்கான எதிர்ப்பு இயல்பு தான். ஜனநாயக கட்சியானது வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கட்சியாகும், இது பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ட்ரம்பை விட குறைவாக ஒன்றும் அர்பணித்து கொண்டதில்லை.

அமெரிக்க மற்றும் உலக பொருளாதாரம் மீது பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கு ஆட்சி செலுத்தும் வரையில், ஒரேயொரு சமூக பிரச்சினையைக் கூட தீர்க்க முடியாது. இத்தகைய சமூக ஒட்டுண்ணிகளின் மேலாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது என்பது அவர்களின் செல்வ வளம் மற்றும் அதிகாரத்தைப் பேணி விரிவாக்குவதற்காக இருக்கும் பொருளாதார அமைப்புமுறையை, அதாவது முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது.

கட்டுரை ஆசிரியர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

Oracle CEO pockets $250 million after Trump tax cut
[31 July 2018]