ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Podemos backs state cover-up in Barcelona terror attack

பார்சிலோனா பயங்கரவாத தாக்குதலின் அரசு மூடிமறைப்பை பொடெமோஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier
9 August 2018

ஆகஸ்ட் 17, 2017 இல் பார்சிலோனாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஓராண்டுக்குப் பின்னர், அந்த ஸ்பெயின் தாக்குதல்களில் அரசு உடந்தையாய் இருந்ததை உத்தியோகபூர்வமாக மூடிமறைக்கும் நடவடிக்கைகளில் பொடெமோஸ் கட்சியும் இணைந்துள்ளது. கடந்தாண்டு அத்தாக்குதலுக்குப் பிந்தைய அணிவகுப்பில் ஸ்பானிய அரசர் இஸ்லாமியவாதிகளுடனான அவரின் தொடர்புகளை மறுத்திருந்த நிலையில், அரசுக்கும் அத்தாக்குதலை நடத்திய ஈராக் மற்றும் சிரியா போராளிகள் குழுக்களது இஸ்லாமிய அரசுக்கும் (IS) இடையிலான தொடர்புகள் குறித்து வெளியாகி வரும் புதிய வெளியீடுகள் மீது வாய்மூடி இருக்கும் பொடேமாஸ் கட்சி, அதேவேளையில் இந்தாண்டின் நினைவுதின அணிவகுப்பிற்கும் ஸ்பானிய அரசரையே தலைமை தாங்க அனுமதிக்க வேண்டுமென கோரி வருகிறது.

அத்தாக்குதல் குறித்து அரசுக்கு முன்பே தெரிந்திருந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் செய்திகள் தொடர்ந்து முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஸ்பானிய தேசிய உளவுத்துறையின் தலைமை முகமை (CNI) கடந்த ஆண்டு El Pais க்கு தெரிவிக்கையில், அத்தாக்குதலுக்குப் பின்புல மூளையாக செயல்பட்ட மதகுரு அப்தெல்பாகி எஸ்-சாட்டி அத்தாக்குதலுக்கு சற்று முன்னர் வரையில் CNI இன் உளவாளியாக நிதியுதவி பெற்று வந்தார் என்ற செய்திகளை உறுதிப்படுத்தியது. அத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கும் குறைந்த நாட்களுக்கு முன்னதாக பார்சிலோனா பிரிவினது அங்கத்தவர்கள் பிரான்சுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவர்களைப் பிரெஞ்சு உளவுப்பிரிவு கண்காணித்ததைப் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரார்ட் கொலொமும் ஒப்புக் கொண்டார்.

2014 இல் எஸ்-சாட்டி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர், அவர் போதைப் பொருள் கடத்தலுக்காக நான்காண்டுகள் சிறையில் இருந்தபோது, CNI அதிகாரிகளும் மற்றும் Guardia Civil துணை இராணுவப்போலிஸ் (Guardia Civil paramilitary police) அதிகாரிகளும் நான்கு முறைகளுக்குக் குறைவின்றி "போலிஸ் விசாரணைகளுக்காக" அவரைச் சந்தித்தனர் என்பதை El Pais இப்போது வெளியிட்டுள்ளது. இந்த நேர்காணல்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் 2012 இல், பின்னர் மார்ச் 2014 இல் நடந்தன. அவரைச் சந்தித்த முகவர்களின் அடையாள எண்கள், முதல் மூன்று சந்திப்புகளில் இரண்டு Guardia Civil போலிஸ்காரர்களுடையது மற்றும் கடைசி சந்திப்புகளில் இரண்டு CNI முகவர்களுடையது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

El Pais தகவல்களின்படி, கட்டலான் போலிஸ் Mossos d’Esquadra உம் எஸ்-சாட்டி சிறையில் இருந்தபோது அவரது அனைத்து போன் தொடர்புகளையும் சேகரித்து, அத்தாக்குதலில் "சம்பந்தப்பட்டவர்களின்" அடையாளங்களைக் கண்டறிந்தது. அவர்களில் ஒருவர் தான் எஸ்-சாட்டி உடன் ஒரே சிறையில் இருந்த Bennaceur Ameskour, இவரின் கைவிரல் ரேகைகள், IS தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்து வந்த அல்கனார் வீட்டில் இருந்த அகராதி ஒன்றில் கண்டறியப்பட்டது. அந்த வீட்டில் இருந்த குண்டு தயாரிப்புக்கான பொருட்கள் வெடித்து, அதில் எஸ்-சாட்டி உயிரிழந்ததால், IS பிரிவே நடவடிக்கையில் இறங்க வேண்டியாகி இருந்தது.

உயிர்பிழைத்திருந்த ஒரேயொருவர், மொஹமத் ஹௌலி, பிரான்சில் மற்றொரு IS பயங்கரவாத பிரிவு இருப்பதாக பார்சிலோனா பயங்கரவாத சிறையில் போலிசுக்குக் கூறியதாக நேற்று செய்தி வெளியானது. அவர் கூறினார், “எட்டு அல்லது ஒன்பது நபர்கள் … ஆயுதங்கள் வாங்குவதற்கும்,” பிரான்ஸை ஒட்டிய ஸ்பெயின் எல்லைக்கு அருகே “Lloret del Mar இல் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கும் அன்டோர்ரா வழியாக ஸ்பெயின் வருவார்களென நினைக்கிறேன்.” ஹௌலி இதை Mossos d’Esquadra க்கும் மற்றும் நீதிபதி பெர்னான்டோ ஆண்ட்ரூவுக்கும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இத்தகைய வெளிப்படுத்தல்கள் வெடிப்பார்ந்தவை. 16 நபர்கள் கொல்லப்பட்டு 152 நபர்கள் காயப்பட்ட அந்த பயங்கரவாத தாக்குதல்களில் அரசு உடந்தையாய் இருந்ததற்கு பார்சிலோனாவில் கடும் கோபம் நிலவுகிறது. சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்ததின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான நேட்டோ போருக்கு இடையே, IS போராளிகள் குழுக்கள் நேட்டோ அதிகாரிகள் மற்றும் பாரசீக வளைகுடா எண்ணெய் ஷேக் ஆட்சிகளின் மறைமுக ஆதரவுடனே மேலெழுந்தன என்பது அங்கே பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

இப்போது ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்லாமிய வலையமைப்புகளை வளர்த்து ஆளாக்கிய ஏகாதிபத்திய போர்கள் மீது மக்கள் கோபம் கொண்டிருந்ததால், பார்சிலோனாவில் அத்தாக்குதலுக்குப் பின்னர் வெகு விரைவிலையே ஸ்பானிய அரசர் ஆறாம் பிலிப் கலந்து கொண்ட ஒரு பாரிய அணிவகுப்பு ஐரோப்பாவில் இதுவரையில் இல்லாத ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக வெடித்தது. பார்சிலோனாவில் 500,000 மக்கள் அணிவகுத்த போது, “உங்கள் கொள்கைகள், எங்கள் உயிரிழப்புகள்,” “வெளியேறு!”, "பிலிப், நீங்கள் சமாதானம் விரும்பினால், ஆயுதக் கடத்தலில் ஈடுபடாதீர்கள்,” என்ற கூச்சல்களை அந்த அரசர் சந்தித்தார்.

இந்த வெளியீடுகளுக்கும் மற்றும் இந்தாண்டின் நினைவுதின அணிவகுப்புக்கான தயாரிப்புக்கும் பொடெமோஸ் காட்டும் எதிர்வினையானது, இந்த ஜனரஞ்சகவாத, போலி-இடது கட்சி போலிஸ் எந்திரத்துடன் அணிசேர்ந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது. அது போர்-எதிர்ப்புணர்வுக்கு எந்த முறையீடும் செய்யவில்லை என்பதோடு, பெருந்திரளான மக்களை அரசு குற்றகரமாக்குவதையும் எதிர்க்கவில்லை. அதற்கு மாறாக அது, அரசரை மக்கள் மதிப்புடன் நடத்த வேண்டுமென்று கோருவதுடன், அத்தாக்குதல்களின் இந்தாண்டு நினைவுதினத்தில் அவர் பங்கு பெறுவது நியாயமானதே என்றும் வலியுறுத்தி வருகிறது.

பொடெமோஸ் இன் செனட் செய்தி தொடர்பாளர் மற்றும் மாட்ரிட் பிராந்திய பொதுச் செயலாளர் Ramón Espinar, Telecinco இல் செவ்வாயன்று பேசுகையில், அரசர் அந்த அணிவகுப்புக்குத் தலைமை தாங்குவது அரசியல் சார்ந்ததில்லை என்று வலியுறுத்தி, அரசர் அணிவகுப்புக்குத் தலைமை ஏற்க வேண்டுமென கோரினார். “ஆறாம் பிலிப் அரசு தலைவர் என்பதால், அவர் இது மாதிரியான நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும், இது அரசியல் சாராத ஒரு விடயம்,” என்றார்.

ஆறாம் பிலிப்பைப் பார்சிலோனாவில் வரவேற்க மறுத்த கட்டலான் பிராந்திய தலைவர் Quim Torra ஐ Espinar விமர்சித்தார். “அவர் இன்னொரு தவறு செய்து வருகிறார். … அரசியல் போராட்டத்தின் விடயம், கருத்துக்கள், மதிப்புகள் மற்றும் திட்டங்களின் தளத்தில் உள்ளது, தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதில் அல்ல” என்றார்.

கடந்த ஆண்டு வெடித்த போர்-எதிர்ப்புணர்வு மீது பொடெமோஸின் வெறுப்பைத் தெளிவுபடுத்தும் வகையில், இத்தகைய அணிவகுப்புகள் "கருத்து வேறுபாடுகளை முன்னுக்குக் கொண்டு வருவதற்கான நேரமில்லை" என்பதையும் Espinar சேர்த்துக் கொண்டார். அது "நம் அனைவரையும் பொறுத்த வரையில் பாதிக்கப்பட்டவர்களுடன், அது அரசு தலைவராக இருக்கட்டும் அல்லது யாராக இருந்தாலும், எந்தவொரு சித்தாந்தமாக இருந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக" இருக்க வேண்டும். “… பின் நீங்கள் வீட்டுக்குச் செல்லும் போது, நீங்கள் ஒரு முடியாட்சி ஆதரவாளராக, ஒரு குடியரசு ஆதரவாளராக, ஒரு பிரிவினைவாத ஆதரவாளராக அல்லது ஸ்பானிய நபராகவே கூட, நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அவ்வாறு இருந்து கொள்ளலாம்,” என்றார்.

இது மத்திய கிழக்கில் நேட்டோ போர் முனைவுக்கான, மற்றும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் போர்-எதிர்ப்புணர்வு மீதான விரோதத்திற்கு ஓர் அப்பட்டமான ஆதரவு அறிக்கையாகும். பயங்கரவாத தாக்குதலை மேற்பார்வை செய்து வந்தவர்கள் "அரசியல் சார்பற்றவர்கள்" என்ற Espinar இன் வாதம் மோசடியானது. அரசுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த IS தாக்குதல்கள், நவம்பர் 2015 பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் பிரான்சில் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கிய ஓர் அவசரகால சட்டத்தை திணிக்கவும், கடந்த ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சட்டத்தைத் திணிப்பதன் மீதான பேச்சுக்களைத் தொடங்கவும், ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் போலிஸ் அதிகாரங்களை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டன.

Espinar இன் நிலைப்பாடு அனைத்தினும் மேலாக குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்தாண்டின் நினைவுதின அணிவகுப்பில் என்ன நடக்கும் என்பது குறித்து அதிகார வட்டடாரங்களில் அச்சம் அதிகரித்து வருகிறது. அக்டோபர் 1, 2017 கட்டலான் சுதந்திர சர்வஜன வாக்கெடுப்பில் அமைதியான வாக்காளர்கள் மீது பாரிய போலிஸ் ஒடுக்குமுறையை ஆறாம் பிலிப் ஆக்ரோஷமாக ஆதரித்ததும், அந்த அரசர் ஓராண்டுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் பார்சிலோனாவில் பரந்தளவில் வெறுக்கப்படுகிறார்.

பொடெமோஸ் போன்ற ஜனரஞ்சகவாத, போலி-இடது கட்சிகள், சிரியப் போர் மற்றும் ஐரோப்பிய பயங்கரவாத தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட அரசின் உடந்தைத்தனம் மற்றும் அரசியல் குற்றகரத்தன்மையை மூடிமறைப்பதன் மூலம், போர் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கின்றன. கல்வித்துறை, ஊடகங்கள் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் செல்வாக்கான நடுத்தர வர்க்க போர்-ஆதரவு பிரிவுகளை அடித்தளமாக கொண்டுள்ள அவை, உள்ளுணர்வாக ஐரோப்பிய இராணுவவாதத்தின் நலன்களுடன் அடையாளம் காணப்படுகின்றன.

பல பில்லியன் யூரோ மதிப்பிலான கட்டுமான நிறுவனம் Lafarge மீது நடந்து வரும் ஒரு விசாரணை, பிரான்ஸ் எல்லையை கடந்து, IS உடனான அதன் நெருங்கிய தொடர்புகளை அம்பலப்படுத்தி உள்ளது. Lafarge நிர்வாகிகள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி வழங்குவதாகவும், மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களில் உடந்தையாய் இருப்பதாகவும் மாஜிஸ்ட்ரேட்டுகள் குற்றஞ்சாட்டி இருப்பது, அது இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பத்து மில்லியன் கணக்கான யூரோக்களை பாய்ச்சியுள்ள அதேவேளையில், பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் எலிசே ஜனாதிபதி மாளிகையுடன் நெருக்கமாக இயங்குவதையும் எடுத்துக்காட்டுகிறது. பொடெமோஸின் பிரெஞ்சு கூட்டாளியான ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் இயக்கம் (LFI), Lafarge மோசடியில் அம்பலமான அரசு உடந்தைத்தனம் மீது செவிடாகி விட்டதைப் போல மவுனமாக உள்ளது.

யேமனுக்கு எதிரான அமெரிக்க-ஆதரவிலான சவூதி போர் அல் கொய்தா துருப்புகளைப் பரந்தளவில் பயன்படுத்துவதைச் சார்ந்துள்ளதாகவும், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க கைப்பாவை ஆட்சி IS துருப்புகளைப் பாதுகாப்பதாகவும் சமீபத்திய செய்திகள் ஆவணப்படுத்துகின்றன.

இது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) அழைப்பினது முக்கியத்துவத்தையும் மற்றும் மத்திய கிழக்கில் நேட்டோவுக்கும் அதன் இஸ்லாமிய பினாமி போராளிகளுக்கும் இடையிலான உறவுகளை அது அம்பலப்படுத்தி இருப்பதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிடுகிறது. இதில், மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர் முனைவை ஆதரித்து இடம் கொடுக்கும் அனைத்து தேசியவாத போலி-இடது அமைப்புகளுக்கு எதிராகவும் ICFI போராடி வருகிறது.

ஸ்பெயினில், பார்சிலோனாவில் உள்ள டோர்ராவின் பிராந்திய அரசாங்கத்தை உருவாக்கிய கட்டலான் தேசியவாத குழுக்களும் இதில் உள்ளடங்கும். நிலைமையைத் தணிய செய்யும் ஒரு முயற்சியாக அவை எஸ்-சாட்டி உடனான CNI இன் உறவுகள் குறித்து விசாரிக்குமாறு பெப்ரவரியில் கோரின, பின்னர் விசாரணையை CNI மறுத்ததை ஏற்றுக் கொண்டதுடன், மார்ச்சில், மூடிய-கதவுகளுக்குப் பின்னால் சம்பிரதாயத்திற்காக கேள்விக்கு பதிலளிக்கும் CNI அதிகாரிகளின் முன்மொழிவையும் அவை ஏற்றுக் கொண்டன. அதன்பின்னர், அந்த விசாரணையை அடுத்து, கட்டலான் தேசியவாத துணை தலைவர் Jordi Xuclá முன்வந்து, அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக மக்களுக்குத் தெரிவித்தார்.

ஸ்பானிய உளவுத்துறையிடம் இருந்து அவருக்கு கிடைத்த தகவல்களைப் புகழ்ந்துரைத்த Xuclá, அது "முற்றிலும் ஆக்கபூர்வமான வழியில் போதுமானளவுக்கு தகவல் வழங்கி" இருந்ததாக அப்பட்டமாக அறிவித்தார்.