ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-backed Saudi regime set to behead female activist and four others

அமெரிக்க ஆதரவிலான சவூதி ஆட்சி, பெண் நடவடிக்கையாளர் மற்றும் இன்னும் நான்கு நபர்களைத் தலை துண்டித்து கொல்ல உள்ளது

Bill Van Auken
25 August 2018

சவூதி அரேபியாவின் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், அந்நாட்டின் முடியாட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தமை, அந்த ஆட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியமை மற்றும் சமூக ஊடகங்களில் அவர்களின் போராட்டங்களது காணொளிகளைப் பதிவிட்டமை ஆகிய "குற்றங்களுக்காக" 29 வயதான அரசியல் நடவடிக்கையாளர் இஸ்ரா அல்-கொம்ஹாம், அவர் கணவர், மௌசா அல்-ஹசெம் ஆகியோருடன் இன்னும் மூன்று நபர்களையும் தலை துண்டித்து கொல்லும் மரண தண்டனையை கோரியுள்ளனர்.

குற்றகரமான அரசியல் நடவடிக்கை என்ற அடிப்படையில் முதல்முறையாக ஒரு சவூதி பெண்ணை உள்ளடக்கி உள்ள இந்த மரண தண்டனைகள், அரபு உலகில் வாஷிங்டனின் மிக நெருக்கமான கூட்டாளியாக விளங்கும் ஒரு குற்றகரமான ஆட்சியின் அடையாளமாகும்.

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இட்டு சென்ற போராட்டங்கள், அந்நாட்டின் ஷியா சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையினரது பிறப்பிடமான, சவூதி மன்னராட்சியின் எண்ணெய் வளம் மிக்க கிழக்கு மாகாணத்தின் கடிஃப் துறைமுக நகரில் நடந்தது. 2011 இல் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த போராட்டங்கள், உத்தியோகபூர்வமாக அரசு-ஆதரிக்கும் அதிதீவிர பழமைவாத சுன்னி பிரிவான வாஹ்ஹாபிசத்தின் (Wahhabism) மத கோட்பாட்டுடன் பிணைந்த இந்த முடியாட்சியால், ஷியா மக்களுக்கு எதிராக திட்டமிட்டு பாரபட்சம் காட்டுவது மற்றும் ஒடுக்குவதைச் சவால் விடுக்கின்றன.

எண்ணெய் வளம் இருந்தாலும் கூட ஆழமாக வறுமைக்குட்பட்ட ஒரு பிரதேசத்தின் சமூக நிலைமைகளில், முன்னேற்றம், சமத்துவம், கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு, ஒரு போலிஸ் அரசு ஒடுக்குமுறையைக் கொண்டு பதிலளிக்கப்பட்டுள்ளது, இதனால் அந்த ஒட்டுமொத்த சமூகங்களும் இராணுவ முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 6, 2015 இரவு பாதுகாப்புப் படைகள் இஸ்ரா அல்-கொம்ஹாம் மற்றும் அவர் கணவரின் வீட்டில் புகுந்து சோதனை நடத்தி, அவர்களைக் கைது செய்தன. அப்போதிருந்து 32 மாதங்களாக, அவர்களுக்கு எதிராக எந்தவொரு அதிகாரபூர்வ குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலேயே, அவ்வேளையில் பெரும்பாலும் ஒரு வழக்கறிஞரை கூட ஏற்பாடு செய்துக் கொள்ள முடியாமல் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். ஒரு தொழிலாள வர்க்க பின்புலத்திலிருந்து வந்த கொம்ஹாமின் குடும்பத்திடம் ஒரு வழக்கறிஞருக்கு செலுத்துமளவுக்குப் பணம் இல்லை. அவரைக் காப்பாற்ற ஒரு வழக்கறிஞர் தானே முன்வந்ததும் அவர் தந்தை தான் பொதுமக்களிடம் இருந்து நிதி சேகரிக்கத் தொடங்கினார்.

அவரும் அவரின் சக-பிரதிவாதிகளையும் ஜோடிக்கப்பட்ட பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைப்பதற்காக, 2008 இல் அமைக்கப்பட்ட சவூதி ஆட்சியின் சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கில் இழுக்கப்பட்டனர். நடைமுறையளவில் பிரதிவாதிகளுக்கு உரிமைகளே இல்லாத, ஒரு கண்துடைப்பு வழக்குக்கு ஒத்த அந்நீதிமன்ற விசாரணைகளில், முடியாட்சியால் முன்கூட்டியே தீர்ப்பும் மரண தண்டனையும் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

அந்த நீதிமன்றம் இழிவார்ந்த 2017 பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த பணிக்கப்பட்டுள்ளது, சவூதி அரசரை மற்றும் அரியணைக்கு அடுத்த வாரிசாக மகுடம் தரிக்கவுள்ள 33 வயதான இளவரசர் மொஹம்மத் பின் சல்மானை அவமானப்படுத்துவதை அச்சட்டம் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக வரையறுக்கிறது.

இதே நீதிமன்றம் தான் 2014 இல் பிரபல ஷியா மதத் தலைவர் நிம்ர் அல்-நிம்ர் மற்றும் இன்னும் ஏழு ஷியைட் நடவடிக்கையாளர்களுக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் ஜனவரி 2016 இல் ஒரே நாளில் 47 பேருக்கு மொத்தமாக நிறைவேற்றப்பட்ட தண்டனையில் கொல்லப்பட்டார்கள். இந்த நீதிமன்றம் 2016 இல் இதேபோன்ற ஜோடிக்கப்பட்ட அரசியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் இன்னும் 14 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

மக்களைப் பீதியூட்டி, சவூதியின் அரச மாளிகை நடத்தும் கேள்விக்கிடமற்ற ஆட்சிக்கு எழக்கூடிய எந்தவொரு எதிர்ப்பையும் மிரட்டும் ஒரு முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களை அந்த ஆட்சி வழமையாக தலையற்ற சடலங்களாக்கி உள்ளது.

இதே விதத்தில் தான் இப்போது அந்த ஆட்சி முதல்முறையாக அரசியல் எதிர்ப்பின் பேரில் குற்றஞ்சாட்டி ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க முன்மொழிகிறது. எத்தனையோ பெண்கள் ஏனைய நடவடிக்கைகளுக்காக குற்றவாளிகளாக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். வேறொரு ஆணுடன் பாலியல் தொடர்பு கொள்ளும் பெண்கள் குற்றவாளியாக்கப்பட்டு வழமையாக கல்லால் அடித்து கொல்லப்படுகின்றனர். தண்டனை நிறைவேற்றும் சவூதி அரேபியர் ஒருவர் சவூதி நாளிதழ் Sabq க்குத் தெரிவிக்கையில், லை துண்டித்து கொல்வதற்கு ஆண்களை விட பெண்களின் எதிர்ப்பை அதிகமாக பார்த்திருப்பதாகவும், இதனால் அவர்களைத் தலையில் சுட்டு கொல்ல வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.

பூமியில் வேறெந்த நாட்டையும் விட சவூதி அரேபியா தான் தலா மிக அதிக நபர்களை மரண தண்டனையில் கொல்கிறது. கடந்த ஆண்டு அண்மித்து 150 பேர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையை இந்தாண்டு எண்ணிக்கை விஞ்சிவிடுமென தெரிகிறது, ஏனெனில் 2018 ஆம் முதல் காலாண்டை கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் தலை துண்டிப்பு தண்டனைகள் அதிகரித்துள்ளன.

முடியாட்சிக்கான அரசியல் எதிர்ப்புக்கு அப்பாற்பட்டு, நாத்திகம், தெய்வ நிந்தனை, பிறன்மனை புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி அல்லது மாந்திரீகம் ஆகியவையும் சவூதி நீதிமன்றங்களில் குற்றமாக காணப்பட்டு, இதுபோன்ற மரண தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

இஸ்ரா அல்-கொம்ஹாம் மற்றும் அவரின் சக-பிரதிவாதிகள் மீதான மரண தண்டனை குறித்து ட்ரம்ப் நிர்வாகம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. ஒப்பீட்டளவில் ஊடகங்களும் வாய்மூடி உள்ளன. அவர்களின் கதியைக் குறித்து கண்டித்து எந்த பெரிய தலையங்கமும் வரவில்லை.

சவூதி பெண்கள் —ஒரு கார் விலைகொடுத்து வாங்கக்கூடியவர்களாக இருந்தால்— கார் ஓட்டுவதற்கு அரியணை இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் கோட்பாட்டுரீதியில் அனுமதியளித்து அறிமுகப்படுத்திய "சீர்திருத்தங்கள்" மீது அமெரிக்க பெருநிறுவன ஊடகங்கள் எந்தளவுக்கு செய்திகளை வாரியிறைத்தனவோ அதில் ஒரு துளியளவுக்குக் கூட இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. சம உரிமையை அறிவுறுத்திய சவூதி பெண் நடவடிக்கையாளர்கள் பாதுகாப்பு படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் உண்மை குறித்து சிறிதும் குறிப்பிடவில்லை, அவர்களில் இன்னும் 14 பேர் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

ஒடுக்குமுறைக்கு எதிராக பேசியதற்காக ஒரு சவூதி பெண்மணி மீதான மரண தண்டனை அச்சுறுத்தல் குறித்து #MeToo இயக்கத்துடன் அடையாளம் காணப்படும் பிரமுகர்கள் வாய்மூடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெண்களின் பாதுகாப்புக்காக என்று கூறும் அவர்கள் முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களுடன் எந்த விதத்திலாவது முரண்பாட்டுக்கு வருபவர்களுக்கோ ஒருபோதும் கரம் நீட்டுவதில்லை.

ஏப்ரலில், பின் சல்மான் அமெரிக்கா விஜயம் செய்திருந்த போது அவர் ட்ரம்ப் நிர்வாகத்தால் மட்டுமல்ல, மாறாக அமசன் தலைமை செயலதிகாரி ஜெஃப் பெஸோஸ் தொடங்கி ஓப்ரா வின்ஃப்ரி, பில் கேட்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் வரை அமெரிக்க பில்லியனர்களின் ஒரு கூட்டத்தாலும் ஊடகங்களாலும் உபசரிக்கப்பட்டார்.

இந்த அரசு குற்றவாளி மற்றும் கொலைகாரரை மதித்து மரியாதை செய்ததில் எரிசக்தி பெருநிறுவன முதலாளிமார்களின் இலாப நலன்கள் மட்டுமல்ல, ஆயுத உற்பத்தியாளர்கள், வங்கிகள் மற்றும் சவூதி அரேபியாவின் எண்ணெய் வளத்திலிருந்து இலாபமீட்ட முயலும் எண்ணற்ற பிற பெருநிறுவனங்களது இலாப நலன்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

ஜனநாயகக் கட்சி நிர்வாகங்களும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களும் ஒன்றுபோல சவூதி முடியாட்சியைக் கோரப் பற்களுடன் ஆயுதமேந்த செய்து, ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமாக உலகின் மிகவும் பிற்போக்குத்தனமான ஆட்சிகளில் ஒன்றான இந்த சவூதி முடியாட்சியை மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கைக்கு ஓர் அச்சாணியாக ஆதரித்தன. அப்பிராந்தியதில் ஈரானிய செல்வாக்கைக் குறைத்து அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்தும் நோக்கத்திற்காக சவூதி அரேபியா மற்றும் இஸ்ரேல் இரண்டையும் உள்ளடக்கிய ஈரானிய-எதிர்ப்பு கூட்டணிக்கு ஒட்டுபோடும் முயற்சியில், ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஆக்ரோஷத்தை அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆதரவு தீவிரமாக்கப்பட்டு மட்டுமே உள்ளது.

அமைதியாக போராடியதற்காக ஒரு சவூதி பெண்மணி மற்றும் அவரின் சக-பிரதிவாதிகளைத் தலையைத் துண்டிப்பதற்கான அச்சுறுத்தல் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் மவுனமாக இருப்பதைப் போலவே, ஒபாமா நிர்வாகமும் அது பதவியில் இருந்தபோது அரசியல் கைதிகளின் பாரிய மரண தண்டனைக்கு எந்த குறிப்பிடத்தக்க விடையிறுப்பும் காட்டவில்லை. அதற்கு பதிலாக, ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வெள்ளை மாளிகைகள் இரண்டுமே அந்த ஆட்சியுடன் நூறு பில்லியன் கணக்கான ஆயுத உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளன.

இதேபோல, வறிய நாடான யெமனுக்கு எதிராக சவூதி படைகள் தலைமையிலான இனப்படுகொலைக்கு-நெருக்கமான போருக்கு இந்த இரண்டு நிர்வாகங்களுமே இன்றியமையாத விதத்தில் இராணுவ ஆதரவை வழங்கின, அங்கே அந்நாட்டில் சுமார் 16,000 பேர் கொல்லப்பட்டதுடன், 8.5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பட்டினியின் விளிம்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

வியாழனன்று, 27 அப்பாவி மக்கள் —அவர்களில் 22 பேர் குழந்தைகள்— சவூதி விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் அறிவித்தன, முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்ட Hodeidah துறைமுக நகர அண்டைப்பகுதியில் நடந்த சண்டையிலிருந்து தப்பிப் பிழைத்து சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் வாகனம் அந்த விமானத் தாக்குதலில் தகர்க்கப்பட்டது. இந்த அட்டூழியம் ஆகஸ்ட் 9 தாக்குதலுக்கு வெறும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நடந்தது, அதில் அமெரிக்கா வினியோகித்த ஒரு குண்டு பள்ளிக் குழந்தைகளின் ஒரு பேருந்தை சின்னாபின்னமாக சிதைத்ததில் 40 குழந்தைகள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர். இந்த பாரிய படுகொலை நடவடிக்கைகள் ஊடகங்களில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டன என்பதோடு, அந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு அமெரிக்காவினது ஆதரவில் இது எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை.

சவூதி அரச சர்வாதிகாரம், அதன் நாசகரமான குற்றங்கள் மற்றும் அவற்றுக்கான அமெரிக்க ஆதரவு ஆகியவை, வெனிசூலாவில் இருந்து, சிரியா வரையில், ஈரான், ரஷ்யா மற்றும் சீனா வரையிலான வாஷிங்டனின் சூறையாடும் நோக்கங்களை நியாயப்படுத்துவதற்கு அதனால் பரப்பப்படும் "மனித உரிமைகள்" பிரச்சாரம் அனைத்தையும் அளவிடுவதற்குப் பொருத்தமான அளவுகோலாக விளங்குகின்றன.