ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US complicit in air strike that murdered dozens of children in Yemen

யேமனில் டஜன் கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட விமானத் தாக்குதலில் அமெரிக்கா உடந்தையாய் இருந்துள்ளது

Bill Van Auken
10 August 2018

எண்ணெய் வளம் மிகுந்ததும் மற்றும் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் கொண்டதுமான மத்திய கிழக்கின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டைப் பலப்படுத்தும் நோக்கில், ஆக்கிரமிப்பு போர்களை நியாயப்படுத்தக் கையிலெடுக்கப்பட்ட ஒரு சாக்குபோக்கான "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" தொடங்கி 17 ஆண்டுகளில், வாஷிங்டனும் அதன் உள்நாட்டு பினாமிகளும் எண்ணற்ற அட்டூழியங்களை நடத்தி உள்ளன.

ஈராக், லிபியா மற்றும் சிரியா உட்பட ஒட்டுமொத்த நாடுகளும் சீரழிக்கப்பட்டு, மொசூல் மற்றும் ரக்கா உட்பட ஒட்டுமொத்த நகரங்களும் எரிந்து போன இடிபாடுகளாக குறைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையோ மில்லியன்களில் உள்ளது, அதேவேளையில் தங்களின் வீடுகளை விட்டு விரட்டப்பட்டவர்களில் பல பத்து மில்லியன் கணக்கானவர்கள் உள்ளடங்குவர்.

இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளின் குற்றகரத்தன்மையைப் பிரத்யேகமாக தொகுத்தளிக்கும் குறிப்பிடத்தக்க படுமோசமான காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளும், மனித வாழ்வை இழிவுபடுத்தும் நடவடிக்கைகளும் இன்னமும் கூட அங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வியாழக்கிழமை ஒரு சவூதி போர்விமானம், அமெரிக்கா வழங்கியிருந்த இந்த விமானம், யேமன் மீது நடத்திய குண்டுவீச்சும் அதுபோன்றதே, அது அமெரிக்க-தயாரிப்பு குண்டுகளையும் ஏவுகணைகளையும் வீசியதுடன், அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் உதவியோடு அவை அவற்றின் இலக்கை நோக்கி வழிநடத்தப்பட்டன, மேலும் அமெரிக்க எரிபொருள்-நிரப்பு விமானம் மூலமாக வானிலேயே அவற்றிற்கு எரிபொருளும் நிரப்பப்பட்டது.

யேமனின் வடக்கு மாகாணமான சாடாவின் தாஹ்யன் நகர மையத்தில் கூட்ட நெரிசலான ஒரு சந்தை பகுதியே இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.

போர்விமானங்கள் அந்நகரத்தின் மேலே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக பறந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர், ஆகவே அத்தாக்குதலுக்கு கட்டளையிட்டவர்கள் அவர்கள் எங்கே தாக்க இருக்கிறார்கள் என்பதைக் குறித்து தெளிவாக தெரிந்து வைத்திருந்தார்கள். கூட்ட நெரிசலான ஒரு சந்தை இலக்கில் வைக்கப்படாது என்று கருதியதால் தாங்கள் தங்களின் வேலைகளில் ஈடுபட்டிருந்ததாக அங்கே குடியிருப்போர் தெரிவித்தனர்.

கோடை விடுமுறை முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஒரு வருடாந்தர கொண்டாட்டத்திற்காக, பள்ளிக் குழந்தைகளை ஏற்றியவாறு அவர்களின் கோடை கால முகாமிலிருந்து ஒரு மசூதியை நோக்கி அச்சந்தை வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து சவூதி போர்விமானத்தால் நேரடியாக தாக்கப்பட்டது.

சர்வதேச செஞ்சிலுவைக் குழு குறிப்பிடுகையில், அப்பேருந்தின் உடைந்து சிதைந்த சிதைவுகளில் இருந்து வெளியில் இழுக்கப்பட்ட 29 குழந்தைகள் உயிரற்ற சடலங்களாக அதன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தது. இந்த குழந்தைகளில் பெரும்பான்மையினர் 10 வயதுக்கு குறைவானவர்கள், அவர்களில் சிலர் ஏறத்தாழ எட்டு வயதினர்.

சாடாவின் மருத்துவ அலுவலர் தகவல்படி, அப்பேருந்துக்கு அருகே வீதிகளில் இருந்தவர்கள் உட்பட அந்த விமானத் தாக்குதல்களில் 47 பேர் கொல்லப்பட்டிருந்தனர். குறைந்தபட்சம் 77 பேர் காயமடைந்திருந்தனர், மரண எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற வகையில் அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சாடாவில் Red Crescent அலுவலக நிர்வாக இயக்குனர் ஹாசன் முவ்லெஃப் வியாழனன்று காலை அத்தாக்குதல் நடந்து ஒரு மணி நேத்தில் அவ்விடத்திற்கு வந்தார். அவர் என்ன பார்த்தாரோ அதை அவர் விவரிக்கையில், “அப்பகுதி எங்கிலும் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன, எங்கே பார்த்தாலும் மரண ஓலங்களும், அழுகைகளுமாக இருந்தன. அந்த பள்ளிப் பேருந்து முற்றிலுமாக எரிந்து அழிந்து போயிருந்திருந்தது,” என்றார். அக்குழந்தைகளின் உடல்களில் பல கண்டுபிடிக்கவே முடியாதளவுக்கு கருகி போயிருந்ததுடன், காயமடைந்தவர்கள் மீது உலோக துண்டுகள் செருகி இருந்தன என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

“அவர்களின் உடல்களின் சில பாகங்கள் அப்பேருந்தில் இருந்து 100 மீட்டர் தள்ளி சிதறிக் கிடந்தன,” என்று நேரில் பார்த்த மற்றொருவர் தெரிவித்தார்.

தவிர்க்கவியலாமல் அப்பாவி குழந்தைகளுக்கு எதிரான இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றம் பெரிதும் அமெரிக்க பெருநிறுவன ஊடங்களால், அதாவது அமெரிக்க போர்கள் மற்றும் அவற்றின் "துணை விளைவுகளை" விற்பனை செய்வதிலும், நியாயப்படுத்துவதிலும் அனுபவமுள்ள உடந்தையாளர்களான இவற்றால், புறக்கணிக்கப்படும். அமெரிக்க அரசு மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளைப் பொறுத்த வரையில், அவை விமானத் தாக்குதலை மட்டும் பாதுகாக்கவில்லை, மாறாக மனித படுகொலைகளுக்குப் பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்துகின்றன.

தெற்கு சவூதி நகரமான ஜிஜானை நோக்கி யேமனின் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஓர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு நியாயமான பதிலடியாகத்தான் இந்த பாரிய படுகொலை நடவடிக்கை நடத்தப்பட்டதாக அறிவித்து, சவூதி முடியாட்சியும் அதன் கூலிப்படை இராணுவமும் ஓர் அறிக்கை வெளியிட்டன. அந்த ஏவுகணை யேமனுக்கு உள்ளேயே குறுக்கீடு செய்யப்பட்டு தடுக்கப்பட்டது, அதன் சிதறிய சிதைவுகளில் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

சவூதியர்களும் அவர்களின் கூட்டாளிகளும் 2015 இல் யேமனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, அவர்கள் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் வசிப்பிட பகுதிகள் மீதும், அத்துடன் மின்நிலையங்கள், நீர் நிலைகள், கழிவுநீர் வெளியேற்றும் வசதிகள் மற்றும் இதர அத்தியாவசிய உள்கட்டமைப்புகள் மீது குண்டுவீசி உள்ளனர், இவற்றில் பெரும்பாலும் 16,000 யேமனியர்கள் கொல்லப்பட்டு, இவர்கள் இராணுவ வன்முறையில் உயிரிழந்துள்ளனர். அந்த மூன்றாண்டுகளில் யேமனில் இருந்து ஏவப்பட்ட எந்த ஏவுகணையும் சவூதி அரேபியாவில் குறிப்பிடத்தக்க எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை.

சவூதி இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் துர்கி அல்-மல்கியை ஒரு பொய்யராக எடுத்துக்காட்டுவதற்கு போதிய ஆதாரமாக, அவர், சாடா மீதான வியாழக்கிழமை தாக்குதல் "ஒரு சட்டப்பூர்வ இராணுவ நடவடிக்கையாகும் … அது சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்கவே நடத்தப்பட்டது" என்று அறிவித்து ஓர் அறிவிக்கை வெளியிட்டார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டம்" வாஷிங்டன் மீதும் மற்றும் அதன் கூட்டாளிகள் மீதும் எந்த தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதையும், அத்துடன் வெள்ளை மாளிகையில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய இரண்டினது ஒரு நிர்வாகம் மாற்றி ஒன்றில் போர் குற்றவாளிகளே பதவிக்கு வருகிறார்கள் என்பதையும் அவர் புரிந்து வைத்திருப்பதால், ஐயத்திற்கிடமின்றி அவர் தைரியத்தை உணர்கிறார்.

சாடா படுகொலைக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தலைவர் இராணுவ ஜெனரல் ஜோசப் வொடெல் பென்டகன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அமெரிக்க-ஆதரவிலான சவூதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளிகளின் படைகள் "பெரிதும் யேமனில் நடந்துள்ள கொடூரமான மனிதாபிமான நிலைமைகளை விஞ்சாத விதத்தில் அவற்றின் நடவடிக்கைகளை நடத்தி" வருகின்றன என்று செய்தியாளர்களுக்கு உறுதிப்படுத்தினார்.

அந்த தளபதி யாரை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? சவூதி குண்டுவீச்சு நடவடிக்கையும் அமெரிக்க-ஆதரவிலான கடற்படை சுற்றிவளைப்பும் ஏற்கனவே கடுமையாக வறுமைப்பட்ட அந்த நாட்டில் மில்லியன் கணக்கான மக்களைப் பட்டினியில் விளிம்பிற்குக் கொண்டு வந்துள்ளன. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 50,000 யேமன் குழந்தைகள் பட்டினியில் உயிரிழந்தனர். யேமன் உள்கட்டமைப்பையும் அத்துடன் மருத்துவ கவனிப்பு வசதிகளையும் பொறுப்பின்றி சிதைத்ததே காலாரா தொற்றுநோய் பரவுவதற்கு காரணமாகும், அது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்குப் பரவியுள்ளது, அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், அதில் 2,300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

வொடெல், ஹௌதியர்கள் மீது பழி சுமத்தச் சென்றார், அவர்கள் “ஹொதிதாஹ் நகரில் தடைகளையும் மற்றும் இதர பொருட்களையும் ஏற்படுத்தி வைப்பது, உண்மையில் பெரிதும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுபவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதை மெதுவாக்கி உள்ளது,” என மேற்கோளிட்டார்.

சவூதியின் விமானப்படை பலத்தின் ஆதரவுடனும் மற்றும் அல் கொய்தாவிலிருந்து நியமிக்கப்பட்டவர்களை அதிரடிப்படைகளாக பயன்படுத்தியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படைகள் நடத்திய மூர்க்கமான தாக்குதலுக்கு ஹௌதியர்களும் மற்றும் துறைமுக நகரமான ஹொதிதாஹ் வாழ் மக்களின் எதிர்ப்பை அந்த "தடைகள்" எடுத்துக்காட்டுகின்றன. கடந்த விழாயனன்று, ஒரு மருத்துவமனை மற்றும் ஹொதிதாஹ் மீன் சந்தை மீதான தாக்குதல்கள் குறைந்தபட்சம் 55 அப்பாவி மக்களைக் கொன்றதுடன், அதில் 170 பேர் காயமடைந்ததாக ICRC குறிப்பிட்டது.

யேமனில் மிகவும் மக்கள் நெரிசல் மிகுந்த நகரமான ஹொதிதாஹ் மீதான அமெரிக்க-ஆதரவு முற்றுகையின் விளைவாக ஏறக்குறைய 250,000 பேர் கொல்லப்படலாம், மேலும், அந்த இராணுவ நடவடிக்கை யேமன் மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வினியோகத்தை முடக்கினால் இந்த எண்ணிக்கை மில்லியன்களைக் கூட எட்டக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

வொடெல், அதே பென்டகன் பத்திரிகையாளர் சந்திப்பில், ஜனாதிபதி அப்த் ரப்பாஹ் மன்சூர் ஹாதியின் கைப்பாவை ஆட்சியை மீண்டும் நிறுவுவதற்கான சவூதி அரேபியாவின் முயற்சிக்கு ஹௌதியர்கள் மற்றும் பெருந்திரளான யேமன் மக்களின் எதிர்ப்பு, ஈரானிய புரட்சிப்படையின் ஈரான் குத்ஸ் படை தலைவர் மேஜர் ஜெனரல் குசெம் சொலெய்மன் ஆல் வழிநடத்தப்படுவதாக தெரிவித்தார்.

உண்மையில் சொலெய்மன் யேமனில் தென்பட்டாரா என்றொரு நிருபர் சவால் விடுத்ததற்கு வொடெல் விடையிறுக்கையில், “நல்லது, இங்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், இதையெல்லாம் தூண்டிவிட்டு வரும் குத்ஸ் படை தான் இங்கே பிரதான நடவடிக்கையாளராக உள்ளது … அவர் தான் இதற்கு பொறுப்பாகிறார்,” என்றார்.

இந்த அமெரிக்க தளபதி என்ன "சொல்ல வருகிறாரோ" அது முழு முட்டாள்தனமானது, இது அவருக்கும் தெரியும். எது என்னவாக இருந்தாலும் இதுவரையில் யேமனில் எந்தவொரு ஈரானிய இருப்பும் இருப்பதற்கோ அல்லது ஹௌதியர்களுக்கு தெஹ்ரானிடம் இருந்து எந்தவொரு குறிப்பிடத்தக்க இராணுவ ஆதரவு வழங்கப்படுவதற்கோ எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் வாஷிங்டனும் சவூதி அரேபியாவும் அவற்றின் இறுக்கமான கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கைப்பாவை ஆட்சியைத் தவிர வேறு யாரும் யேமனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை அப்பிராந்தியத்தில் அவர்களின் மேலாதிக்கத்திற்கு ஓர் அச்சுறுத்தலாக பார்க்கின்றன.

உண்மையில் யேமனில் என்ன நடந்து வருகிறதோ அதில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அதைக் காட்டிலும் அதிகமாக வாஷிங்டனின் குற்றகரமான தலையீட்டின் நோக்கங்கள் இன்னும் அதிகமானவை என்பதையே இத்தளபதியின் பொய்கள் எடுத்துரைக்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுக்கு எதிராக ஒரு புதிய மற்றும் இன்னும் அதிக அபாயகரமான போருக்குரிய அதன் தயாரிப்புகளின் பாகமாக யேமன் மக்களைப் படுகொலை செய்தும், பட்டினியில் கிடத்தியும் வருகிறது.

சிரியாவுக்குள் ஈரானிய படைகளுக்கு எதிராக இஸ்ரேல் மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல்கள் நடத்துவதை வாஷிங்டன் ஊக்குவிப்பதையும் மற்றும் போருக்கு வழி வகுக்கக்கூடிய ஈரானிய-விரோத தடையாணைகளை வாஷிங்டன் திணிப்பதையும் மிக நெருக்கத்திற்குக் கொண்டு வந்துள்ள இதுபோன்றவொரு பேரழிவுகரமான மோதலில், அடுத்து என்ன நிகழும் என்பதை அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

ஒரு பிராந்தியம் தழுவிய மற்றும் உலகளாவிய போருக்கான அச்சுறுத்தலானது, இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பி விடப்பட்ட தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை இந்நாளின் மிக அவசர அரசியல் பணியாக முன்னிறுத்துகிறது.