ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Left Party leader launches right-wing nationalist movement

ஜேர்மன் இடது கட்சித் தலைவர் வலதுசாரி தேசியவாத இயக்கத்தை தொடக்குகிறார்

By Ulrich Rippert
7 September 2018

சாரா வாகென்கினெக்ட் (Sahra Wagenknecht)  மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் செவ்வாய்கிழமையன்று “எழுந்து நில்” (Aufstehen) என்ற கதம்பகூட்டு அரசியல் இயக்கத்தை தொடங்கியபோது இரண்டு விடயங்கள் தனித்து வெளிப்பட்டன. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இடது கட்சி கன்னையின் தலைவராக இருக்கும் வாகென்கினெக்ட் தனது சுருக்கமான செய்திக்குறிப்பில், இந்த இயக்கம் “கீழிருந்து” உருவாகிவந்திருப்பதாக, அதாவது இது ஒரு “அடிமட்டக் காரியாளர்களது” இயக்கம் என்பதாய் வலியுறுத்தினார்.

உண்மையில், இந்த “கீழ்மட்டத்திலிருந்தான இயக்க”மாக சொல்லப்பட்டதன் உத்தியோகபூர்வ தொடக்கம் மிக உயர்நிலையில்- பேர்லினில் உள்ள கூட்டரசாங்க செய்தியாளர் சந்திப்பு அரங்கத்தில் நடத்தப்பட்டது. இந்த 'புனிதமான' இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஒரு சாதாரண பத்திரிகையாளர் அடையாளஅட்டை மட்டும் போதாது, அத்துடன் யார் கேள்வி கேட்க வேண்டும் என்பதை கூட்டரசாங்க செய்தியாளர் சந்திப்பு அமைப்பின் தலைவர் முழுவதாய் அவரின் சொந்த யோசனையின் படி முடிவுசெய்வார். சான்சலர் அலுவலகத்தில் இருந்து சிறிதளவு தூரத்தில் இருக்கும் இந்த அரங்கு சான்சலர் அல்லது அவரது செய்தித்தொடர்பாளர்கள் உத்தியோகப்பூர்வ அரசாங்க செய்தியாளர் சந்திப்புகளை நடத்தும் இடமாகும்.

வாகென்கினெக்ட் அவரது ஜனரஞ்சக இயக்கத்தின் ஸ்தாபகத்தை செவ்வாய்கிழமையன்று அறிவித்தபோது ஊடகங்கள் பெருமளவு ஆர்வம் காட்டின. பேர்லினில் இருந்து இயங்குகின்ற அத்தனை முக்கிய செய்தித்தொலைக்காட்சிகளும் செய்தியாளர்களும் அவ்வரங்கில் கூடியிருந்தனர்.

மேடையில் “கீழ்மட்டத்திலிருந்தானவர்கள்” எவருமில்லை. மாறாக, அரசியல் பழையதலைகள் தான் ஒவ்வொருவராக வந்து தத்தமது கட்சிகளுக்கு வாக்குகள் தொலைந்து போனதையும் தொடர்ந்து சரிந்து செல்வதையும் கூறி புலம்பிக் கொண்டிருந்தனர்.

வாகென்கினெக்ட் உம் கூட சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இருந்து வெளியேறிய வாக்காளர்களின் பகுதிகளை வெல்வதற்கு இடது கட்சியால் முடியாமல் போனதைக் குறித்துப் புகாரிட்டார். வடக்கு ஜேர்மன் நகரான பிளென்ஸ்பேர்க் இன் மேயரும், சென்ற SPD கட்சி காங்கிரஸில் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒரு வேட்பாளராகப் போட்டியிட்டவருமான, சிமோன் லாங்க, SPD செல்வாக்கை இழந்ததால் அவர் எச்சரிக்கையடைந்ததாக கூறினார்.

லாங்கவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பசுமைக் கட்சியின் ஒரு ஸ்தாபக உறுப்பினரான லுட்கர் வொல்மார், அவரது கட்சி அரசியல் பிரதான நீரோட்டத்துக்கு “ஏற்றபடி தம்மை இசைவாக்கம் செய்துகொண்ட விதத்தை” தான் ஏற்கவில்லை என்று அறிவித்தார். வெளியுறவுத் துறை அலுவலகம் பசுமைக் கட்சியின் தலைவரான ஜோஸ்கா பிஷ்ஷரின் தலைமையில் இயங்கிய சமயத்தில் வொல்மரும் ஒரு வெளியுறவுச் செயலராக இருந்திருக்கிறார். அந்த பதவியில் அவர் முந்தைய அமைதிவாத நிலைப்பாடுகளை எல்லாம் தூக்கிவீசிவிட்டு கொசோவோவிலும் ஆப்கானிஸ்தானிலும் போர்களில் ஜேர்மன் பங்கேற்க வக்காலத்து வாங்கியவராவார்.

“சிவப்பு-சிவப்பு-பச்சை” கூட்டணியின் இந்த பிரதிநிதிகள் பேராசியர் பேர்ண்ட் ஸ்ரேகமான் மற்றும் ஹம்பேர்க்கைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப நிபுணர் ஹன்ஸ் அல்பர்ஸ் ஸ்ரேகமான் ஆகியோரால் ஆதரிக்கப்பட்டனர். இந்த “கீழிருந்தான இயக்கத்தின்” வழிகாட்டல் ஆன்மா என்று ஸ்ரேகமான் தன்னை பகட்டாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் இன்னுமொரு உறுத்தும் விடயமாக இருந்தது என்னவென்றால், இது கெம்னிட்ஸ் நிகழ்வுகளுக்கு அண்மையில் நடந்ததாகும். கெம்னிட்ஸில் சென்ற வாரத்தில் வலது-சாரி தீவிரவாதிகளும் பாசிச குண்டர்களும் வீதியில் இறங்கி வெளிநாட்டினரை வேட்டையாடியதை போலிஸ் வேடிக்கை பார்த்தது. இதற்கான பதிலிறுப்பில், அதி-வலது அணிதிரள்வுக்கான வெகுஜன எதிர்ப்பின் ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக திங்களன்று 70,000 பேர் ஒரு இசைநிகழ்ச்சியில் ஒன்றுகூடினர்.

வாகென்கினெக்ட் இன் செய்தியாளர் சந்திப்பு நீண்டநாட்கள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது என்றபோதும் கூட, ஒரு உண்மையான அடிமட்டக் காரியாளர் இயக்கமாக ஜேர்மனியெங்குமான நகரங்களில் இனவாதம் மற்றும் வெளிநாட்டினர் வெறுப்புக்கு எதிராய் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களது எதிர்ப்பு பெருகிச் செல்வதற்கான ஒரு எதிர்வினையாகவே இச்சந்திப்பு  தென்பட்டது.

புதிய இயக்கத்தின் ஸ்தாபகர்களால் செய்தியாளர் சந்திப்பில் விநியோகிக்கப்பட்டிருக்கும் ஐந்து-பக்க அழைப்பு இந்த முடிவை ஊர்ஜிதப்படுத்துகிறது. வாகென்கினெக்ட்டின் திட்டமானது, முதலாளித்துவத்துக்கு எதிரான ஒரு இடதுசாரி முன்முயற்சி அல்ல, மாறாக வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக செலுத்தப்பட்ட ஒரு வலது-சாரி தேசியவாத தாக்குதலே என்பதை இது தெளிவாக்குகிறது.

ஏற்கனவே, சென்ற மே மாதத்தில் புதிய இயக்கம் குறித்து விடுத்த தனது முதல் அறிக்கையிலேயே, வாகென்கினெக்ட் ஜேர்மனியின் சமூகப் பிரச்சினைகளுக்கு அகதிகள் மீதே பழிசுமத்தியிருந்தார். நாட்டின் பொது நிர்வாகம், நகரங்கள் மற்றும் சமூகங்கள் அகதிகளால் நிரம்பிவழிவதாக அந்த அறிக்கையில் அவர் புகார்கூறியிருந்தார். ஏற்கனவே இருக்கின்ற “பற்றாக்குறையான சமூக வீட்டுவசதி, பளுமிகுந்து விட்ட பள்ளிகள் மற்றும் போதாநிலையுடனான அன்றாடப்பராமரிப்பு இடங்கள்” ஆகியவற்றின் பிரச்சினை, குடியேறிகளின் கட்டுப்பாடற்ற வரவால் மேலும் மோசமடைந்து, இது “ஏற்கனவே அனுகூலமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு” தீங்கு பயத்திருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்த கூற்றைத் தொடர்ந்து பின்வரும் வாசகம் இடம்பெற்றிருந்தது: “ஒரு வெறுப்படைந்த தீவிரப்பட்ட இஸ்லாம் போதகர்கள் ஐந்துவயது பிள்ளைகளுக்கு சமூகத்துடன் ஒன்றுபடுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகின்ற ஒரு உலகக் கண்ணோட்டத்தை கற்றுக் கொடுக்கையில் அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது சமூக சூழல் நஞ்சாவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது.”

சமீபத்திய அறிக்கை “வெறுப்பு இஸ்லாமிய போதகர்களை” மற்றும் குழந்தைகளை கவர்ந்து இழுப்பவர்களை பற்றி குறிப்பிடவில்லை என்றாலும் அரசியல் நிலைப்பாடு அதேமாதிரியாகத்தான் இருக்கிறது. பெருகும் சமூகத் துன்பங்களுக்கு அகதிகள் தான் மறுபடியும் பொறுப்பாக்கப்படுகிறார்கள்.

புதிய உரை மிகத் தீவிரமான சமூகப் பிரச்சினைகளை பட்டியலிடுகிறது. மற்ற விபரங்களுடன் சேர்ந்து, ஜேர்மனியின் மக்கள்தொகையில் பாதிப்பேர் 1990களின் இறுதியில் இருந்ததைக் காட்டிலும் குறைவானதொரு உண்மையான வருவாயையே கொண்டிருக்கின்றனர் என்பதையும் அது குறிப்பிடுகிறது. அதனைத் தொடர்ந்து வரும் வாசகம்: “சுதந்திரமான நகர்வும் குடியேற்றமும் தான் குறைந்த-ஊதிய வேலைகளுக்கான அதிகரித்த போட்டிக்கான பிரதான மூலகாரணமாக இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.”

இந்த வெளிநாட்டினர் வெறுப்பு நிலைப்பாடு இரண்டு பத்திகள் கடந்து  மீண்டும் கூறப்படுகிறது. சமூக ஒன்றிணைவின் அழிவு, பெருகும் அதிருப்தி, மற்றும் கையாலாகாத்தனமாக உணர்வது ஆகியவை வெறுப்புக்கும் சகிப்பின்மைக்கும் விளைநிலம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிக்கை திட்டவட்டம் செய்கிறது. சமூகநலன்புரி அரசின் நெருக்கடி மற்றும் உலகளாவிய ஸ்திரமின்மை ஆகியவை தான் வருங்காலம் குறித்த அச்சங்களுக்கு பிரதான காரணங்களாய் இருப்பதாக அது ஒப்புக்கொள்கிறது. உடனேயே “அகதிகள் பிரச்சினை இன்னும் கூடுதல் நிச்சயமற்றநிலைக்கு இட்டுச்சென்றிருக்கிறது” என்று சேர்த்துக் கொள்கிறது.

வாகென்கினெக்ட் இன் கருத்துப்படி, அகதிகள் குடியேற்றத்தை சான்சலர் அங்கேலா மேர்கெல் கையாளுகின்ற விதம் பொறுப்பற்றதாகும். “நகரங்களும், சமூகங்களும் மற்றும் தன்னார்வலர்களும்” அவரவர் சொந்தத்தில் பராமரித்துக் கொள்ளும்படி விடப்பட்டு, “நிலவும் பல பிரச்சினைகளும்” குடியேற்றத்தால் மோசமடையச் செய்யப்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச்சென்றிருப்பதாக அவர் கூறுகிறார்.

“ஒரு புதிய சமாதானக் கொள்கைக்காக”, “பாதுகாப்பான வேலை, நல்ல சம்பளங்கள், கண்ணியமான ஓய்வூதியங்கள்”, “தனியார்மயமாக்கத்தை நிறுத்து”, “விலங்குகள் மற்றும் தாவர உலகத்தைப் பாதுகார்” மற்றும் “ஜனநாயகத்தைக் காப்பாற்று” போன்ற தலைப்புகளுடனான கோரிக்கைகளது ஒரு பட்டியல்வரிசையானது, கடந்த தசாப்தங்களில் தோற்றுப்போன சீர்திருத்த வாக்குறுதிகளை மீண்டும் புத்துயிர்ப்பு செய்து கொடுப்பதுபோல் தென்படுகின்றது.

கோரிக்கைகள் உறுதிப்படக்கூறப்படும் இடங்களில் எல்லாம் வேலைத்திட்டத்தின் முற்றிலும் பிற்போக்கான உள்ளடக்கம் வெளிப்படையாகிறது. “புதிய அமைதிக் கொள்கை”யின் இருதயத்தானமாக இருப்பது “ஒரு ஐரோப்பிய பாதுகாப்பு சமூகத்தின் பகுதியாக” ஜேர்மன் இராணுவத்தை [Bundeswehr] அபிவிருத்தி செய்வதற்கான கோரிக்கை —அதாவது சரியாக கூட்டரசாங்க பெரும் கூட்டணி அரசாங்கத்தின் இராணுவக் கொள்கைக்கு பொருந்திப் போகின்றதொரு கோரிக்கை— ஆகும்.

ஐரோப்பாவை பொறுத்தவரை இந்த கோரிக்கையானது, “இறையாண்மை ஜனநாயகங்களது ஒரு ஐக்கியப்பட்ட ஐரோப்பாவிலான ஒரு ஐரோப்பிய ஜேர்மனி”க்கு அழைப்புவிடுக்கிறது. ஏற்கெனவே அவரது மே மாத விண்ணப்பத்தில் இடம்பெற்றிருந்த, “கலாச்சார தன்னாட்சியை பராமரிக்கின்ற அதேவேளையில் பாரம்பரியம் மற்றும் அடையாளத்திற்கான மரியாதையுடன்” என்ற ஒரு கூடுதல் ஷரத்து, அது அதிவலது ஜேர்மனிக்கான-மாற்றீடின் (AfD) கொள்கையை மிக வெளிப்பட எதிரொலிக்கிறது என்ற காரணத்தால் விடப்பட்டிருக்கிறது. ஆயினும் இத்தகைய “இறையாண்மை ஜனநாயகங்களது ஒரு ஐரோப்பா” 1960களில் பிரெஞ்சு ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோலினால் முன்வைக்கப்பட்ட “தந்தைநாடுகளது ஒரு ஐரோப்பா” என்ற கோரிக்கையை —இது அதன்பின் வரிசையாக பல வலது-சாரி தேசியவாதக் கட்சிகளால் கையிலெடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையாக இருந்தது— ஒத்திருக்கிறது.

செவ்வாய்கிழமை விடுக்கப்பட்ட அழைப்பு முற்றிலும் தேசியவாதரீதியானதாகவும் முதலாளித்துவ ஆதரவானதாகவும் இருந்தது. “சோசலிசம்” மற்றும் “சோசலிஸ்ட்” ஆகிய வார்த்தைகளே தென்படவில்லை. “உலக நிதி முதலாளித்துவம்” மீதான விமர்சனமானது “ஜேர்மன் உள்நாட்டு சந்தை”யை கட்டியெழுப்புவது மற்றும் அதிகரித்த அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கான கோரிக்கைகளுடன் கலந்திருக்கிறது. போலிசுக்கும் நீதித்துறைக்கும் கூடுதல் ஊழியர்களும் மேம்பட்ட சாதனங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்கிறது.

ஆகவே AfD தலைவரான அலெக்சாண்டர் கௌலாண்ட் இந்த புதிய இயக்கத்தை முழுமையாக பாராட்டியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. “கட்சி அரசியல் குழிபறிப்பு சண்டையை வெல்வதற்கும் அதன்மூலமாக ஒரு இடது நிலைப்பாட்டுப்புள்ளியில் இருந்தும் அரசியல் கருத்துவிவாதத்தில் இருக்கக் கூடிய உண்மையான பிரச்சினைகளுக்கு உத்வேகம் கொடுப்பதற்குமான வாய்ப்பை” இந்த முன்னெடுப்பு கொண்டிருப்பதாக கௌலாண்ட் செவ்வாயன்று அறிவித்தார். “இடது கருத்துக்களை ஓரந்தள்ளிவிட்டு பச்சாதாபம் மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பால் மக்களது பரந்த பிரிவுகளது உண்மையான கவலைகளையும் தேவைகளையும் அடையாளம் காணுவதற்கு” தகைமைகொண்ட ஒரு அரசியல்வாதியாக அதே AfD அறிக்கையில் அவர், வாகென்கினெக்ட்டை பாராட்டினார்.

அதி-வலதுசாரி வார இதழான Junge Freiheit உம் கூட வாகென்கினெக்ட்டை  ஒரு புதிய தேசியவாதத்தின் பிரதிநிதியாகக் கொண்டாடியது. இந்த செய்தியிதழின் சமீபத்திய பதிப்பு “திரும்பவும் தேசத்திற்கு?” என்ற தலைப்புடன் முகப்பு பக்கத்தில் வாகென்கினெக்ட்டை  பிரசுரித்திருந்தது.

தேசிய அரசுக்கான அவரது உறுதிப்பாட்டின் மூலமாக வாகென்கினெக்ட்  “நெடுங்காலத்திற்கு முன்பாக புதைக்கப்பட்டு விட்டிருந்த இடது-சாரி பாரம்பரியத்தை மீட்டெடுக்க” முயல்வதாக அந்த கட்டுரை அறிவிக்கிறது. அந்த செய்தியிதழின் நிறுவனரும் தலைமை வருணனையாளருமான டீட்டார் ஸ்ரைன், முகப்புப் பக்க வருணனையில், வாகென்கினெக்ட் ஆல் முன்னெடுக்கப்படும் இயக்கமானது “தேசிய அரசுக்குத் திரும்புவது குறித்த விவாதத்திற்கு” அழுத்தமளித்துக் கொண்டிருப்பதாகவும், அது வரவேற்கப்பட வேண்டியதாகும் என்றும் எழுதுகிறார். இல்லாதுபோனால், “கட்டுப்பாடற்ற குடியேற்றம்” மற்றும் அதன் சமூகப் பின்விளைவுகளது “பாரிய பிரச்சினைகள் மீதான ஒரு பரந்த சமூக விவாதம் இல்லாதநிலையில்” தீவிர அரசியல் கிளர்ச்சிகள் தோன்றும் என்கிறார்.

“உள்முக முரண்பாடுகள், பிளவுகள் மற்றும் எதிர்ப்பு உடனடியாக தோன்றுவதால் குறுகிய-காலமே உயிர்வாழ்ந்தாலும் கூட” வாகென்கினெக்ட் இன் முன்முயற்சியானது மிகப்பெரும் முக்கியத்துவம் கொண்டதாக ஸ்ரைன் வலியுறுத்துகிறார். வாகென்கினெக்ட் இடதை மட்டுமல்லாமல் “நடுவிலிருப்பவர்கள் மற்றும் பழமைவாதிகளையும் கூட நெருக்குதலின் கீழ் அமர்த்தியிருக்கிறார். அது நல்ல விடயம்”.

Junge Freiheit இன் அதே பதிப்பின் இன்னுமொரு கட்டுரையில், கார்ல்ஹைன்ஸ் வைஸ்மான் உம் இதேபோல வாகென்கினெக்ட் இன் முன்முயற்சியைப் பாராட்டுகிறார். வைஸ்மான் ஜேர்மன் “புதிய வலது” இன் ஒரு முன்னிலைப் பிரதிநிதி ஆவார். ஹொட்ஸ் கூபிட்ஷெக் உடன் இணைந்து, இவர் அதி-வலது சிந்தனை முகாமான அரசுக் கொள்கைக்கான நிறுவனத்தை (Institut für Staatspolitik - IfS) ஸ்தாபித்திருப்பதுடன் ஏர்ன்ஸ்ட் யுங்கர், கார்ல் ஷிமிட், ஆர்துர் மொல்லர் வன் டென் புறூக் மற்றும் “பழமைவாத புரட்சி”யின் மற்ற பிரதிநிதிகளது வலது தத்துவங்களை புதுப்பிப்பதற்கும் பரப்புவதற்கும் உறுதிபூண்டிருக்கிறார்.

வாகென்கினெக்ட் மற்றும் அவரது கணவர் ஒஸ்கார் லாஃபொன்டைன் இன் வலது-சாரி தேசியவாதக் கண்ணோட்டங்கள் ஒன்றும் புதியவை அல்ல என்பதை வைஸ்மான் சுட்டிக்காட்டுகிறார். ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பே, “வெளிநாட்டுத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு அவர்களது வேலைகளை எடுத்துக் கொண்டு விடுவதால்” தந்தைகளும் பெண்களும் வேலையில்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று “சர்ச்சையான வசனத்தை” கெம்னிட்ஸில் ஒரு பேரணியில் லாஃபொன்டைன் கூறியிருந்தார்.

“குடியேற்ற விடயத்தில் ஜேர்மனியின் இயலுமை களைப்படைந்து விட்டிருக்கிறது” என்பதையும் எல்லை பாதுகாப்பு “அரசின் சுயமாகவே அதிகாரங்களுக்குரியது” என்பதையும் பகிரங்கமாக அறிவித்தமைக்காக அவர் வாகென்கினெக்ட்டை பாராட்டுகிறார். அடிப்படையாக, “வாகென்கினெக்ட் முன்னெடுக்கும் இயக்கத்திற்கு நிகராகச் சொல்லக் கூடிய ஒரே இயக்கம் 2017 பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஜோன்-லுக் மெலோன்சோன் ஸ்தாபித்த ‘அடிபணியா பிரான்ஸ்’ (La France insoumise) இயக்கம் மட்டுமே” என்று அவர் எழுதுகிறார். ஆயினும் மெலோன்சோன், பிரான்சில் ஒருபோதும் முழுமையாக அகன்றிராத ஆனால் ஜேர்மனியில் ஒருபோதும் இருந்திராத, ஒரு தேசியவாத ஜாக்கோபினிசத்தில் இருந்து தேற்றம் பெற முடிந்தது என்பது வைஸ்மானின் கருத்தாக இருக்கிறது.

ஜேர்மனியில் தேசியவாதத்தின் பாரம்பரியம் பயங்கரமானதாகும். சமூக வாய்வீச்சு மற்றும் தேசியவாதத்தின் கலவையானது ஒரு தாட்சண்யமற்ற தர்க்கத்தைக் கொண்டதாகவும், ஒரு அதி வலது, பாசிச திசையில் தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்வதாகவும் இருக்கிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த வலது-சாரி தாக்குதலை வெறுப்புடனும் பகைமையுடனும் எதிர்த்துநிற்க வேண்டும்.

சமூக சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமானது இடது கட்சிக்கும் அதன் போலி-இடது ஆதரவாளர்களுக்கும் சமரசமற்ற எதிர்ப்பை காட்டுகின்ற ஒரு சர்வதேச சோசலிச தொழிலாளர்’ கட்சியைக் கட்டியெழுப்புவதை அவசியமாக்குகிறது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) நிலைப்பாடு சரியென்பதற்கு ஒரு வலதுசாரி அரசியல் கூட்டினை கட்டியெழுப்புவதற்கான வாகென்கினெக்ட்  இன் முயற்சி ஊர்ஜிதமளிக்கிறது.