ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UN condemns Burma’s persecution of Rohingya minority

ரோஹிங்கியா சிறுபான்மையினர் மீதான பர்மாவின் துன்புறுத்தலை ஐ.நா. கண்டிக்கிறது

By Oscar Grenfell 
30 August 2018

பர்மாவில், ரோஹிங்கியா முஸ்லீம் சிறுபான்மை இனத்தவர் மீதான அந்நாட்டின் துன்புறுத்தலில் அவர்களது பாத்திரம் தொடர்பான இனப்படுகொலை குறித்து ஆறு மூத்த பர்மியத் தளபதிகளை குற்றம்சாட்டுவதற்கு அழைப்பு விடுத்து திங்களன்று, ஐ.நா. உண்மையைக் கண்டறியும் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை, கடந்த ஆண்டு ஒட்டுமொத்த இன அழிப்பைத் தொடங்கிய பர்மிய ஆட்சிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் கடுமையான கண்டனத்தைத் தெரிவிப்பதாக உள்ளது.

பாரிய படுகொலைகள், ஒட்டுமொத்தமாக கிராமங்களை அழித்தது மற்றும் நாட்டின் வடமேற்கில் அமைந்துள்ள ராக்கினி மாகாணத்தில் இருந்து நூறாயிரக்கணக்கான ரோஹிங்கியாக்களை இடம்பெயர்வதற்கு நிர்ப்பந்தித்தது போன்றவற்றை ஆவணப்படுத்திய ஒரு தொடர்ச்சியான அறிக்கைகளைப் பின்பற்றி ஐ.நா. அமைப்பின் இந்த கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி, ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவதாக சாக்குக் காட்டி, ராக்கினி மாகாணம் முழுவதும் ஒரு தொடர்ச்சியான கொடூரமான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர். பர்மாவில் பல தசாப்தங்களாக, அல்லது பல நூற்றாண்டுகளாகக் கூட வாழ்ந்து வந்த ரோஹிங்கியாக்களை, “வங்காளிகள்” அல்லது “சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள்” என்று பர்மிய அரசாங்கம் முத்திரை குத்தி, அண்டை நாடான பங்களாதேஷிற்கு அவர்களை நாடுகடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

பர்மிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளானது, “கொடூரமான மற்றும் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையினால் அதிர்ச்சியூட்டுகின்ற” “மொத்த மனித உரிமை மீறல்களாகவும்,” மேலும், “சர்வதேச சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமின்றி மிகக் கடுமையான குற்றங்களாக” கருதப்படுவனவாகவும் இருந்தன என்று ஐ.நா. அறிக்கை கண்டனம் செய்துள்ளது.

இராணுவ ஆதரவிலான சிவிலிய அரசாங்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் இராணுவத்தின் தலைமைத் தளபதியான மின் ஆங் ஹ்ளைங் உட்பட, ஆறு மூத்த தளபதிகளின் பெயர்களை இந்த அறிக்கை குறிப்பிட்டது. இனப்படுகொலைகளை மேற்பார்வையிட்டதற்காக புலன்விசாரணை செய்யப்பட்ட மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவராக ஹ்ளைங் இருப்பதாக அறிக்கை பரிந்துரைத்தது.

ஆகஸ்ட், 2017ல் நடந்த சிறியளவிலான கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு முன்னர் ராக்கினிக்குள் மிருகத்தனமான இராணுவ ஊடுருவலை நிகழ்த்த இராணுவத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் திட்டமிடப்பட்டு இருந்ததைக் குறிப்பிட்டு, “கிளர்ச்சியாளர்களின்” தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பிற்காக பதிலடி நடவடிக்கைகளை தாங்கள் எடுத்ததாக இராணுவத்தினர் கூறியதை இந்த குழு நிராகரித்து.

இராணுவத் தாக்குதலின் ஒருங்கிணைந்த தன்மை, அவைகளில் பலவும் “அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரேமாதிரி” இருந்தன என்ற உண்மையை நிரூபணம் செய்ததாக அறிக்கைத் தெரிவித்தது. பல்வேறு கிராமங்களிலும், இராணுவ அதிகாரிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆண்கள் மற்றும் சிறுவர்களை சுற்றி வளைப்பது மற்றும் பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது, பின்னர் ஒட்டுமொத்த கிராமத்தை எரித்து விடுவது என்ற ஒரே மாதிரியான செயல்முறைதான் ஆய்வு செய்யப்பட்ட பல வழக்குகளிலும் நிகழ்ந்துள்ளது.

ஐ.நா. குழுவின்படி, கிட்டத்தட்ட 400 கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதுடன், முக்கால் மில்லியனுக்கு நெருக்கமாக ரோஹிங்கியாக்கள் தப்பியோடும் நிலைக்கும், அதிலும் அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷில் அகதிகள் முகாம்களில் சிக்கித் தவிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 10,000 என்பது “குறைந்தது” எனவும் அது குறிப்பிட்டது.

குறிப்பாக, இந்த அறிக்கை, முதல் தேசிய ஆலோசகரான ஆங் சாங் சூ கீ உட்பட, பர்மாவின் சிவிலிய அரசாங்கத்தை இந்தப் படுகொலைகளுக்கு பொறுப்பாக்கியது.

மேற்கு நாடுகளில் பல தசாப்தங்களாக ஜனநாயகத்திற்கான ஒரு வீரப் போராளியாக சூ கீ உயர்வு படுத்தப்பட்டு வந்திருக்கிறார். திறந்த இராணுவ சர்வாதிகாரத்தில் இருந்து, 2011ல் பெயரளவிலான சிவிலிய ஆட்சி வரையிலான ஒப்புக்கான நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஒரு தசாப்தகாலம் நீண்ட வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய அரசாங்கத்தில் முன்னணி பாத்திரத்தை அவர் விரைவாக ஏற்றுக்கொண்டார்.

அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளால் மேற்பார்வை செய்யப்பட்டு வந்த பர்மிய அரசியலில் இராணுவ தளபதிகளின் மேலாதிக்கப் பாத்திரத்தை இந்த மாற்றம் பராமரித்தது. பர்மா உடனான உறவுகளை சீர்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்காக நாடக பாணியிலான தேர்தல்கள் பயன்படுத்தப்பட்டன.

சீனாவுடனான பர்மாவின் நெருங்கிய உறவுகளைக் கீழறுப்பதும், மேலும், சீனாவிற்கு எதிரானப் போருக்கானத் தயாரிப்பில், பெய்ஜிங் மீதான அமெரிக்கத் தலைமையிலான இராணுவச் சுற்றிவளைப்புக்குள் பூகோள-மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளை இழுத்துப் போடுவதும் தான் வாஷிங்டனின் குறிக்கோளாக இருந்தது. இது, ஒபாமா நிர்வாகத்தின் கீழ், 2011ம் ஆண்டு ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்க இராணுவக் கட்டியெழுப்பலை, “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்று அமெரிக்கா தொடங்கிய இந்த கட்டி எழுப்பல் சீனாவிற்கு எதிராக பிராந்தியம் முழுவதுமாக இராணுவ மூலோபாய கூட்டுக்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியது.

சீனாவுடனான பர்மாவின் வளர்ந்துவரும் பொருளாதார மற்றும் இராணுவ உறவுகள் குறித்து வாஷிங்டனில் அதிகரித்துவரும் கவலைகளுடன் ஐ.நா. அறிக்கையும் ஒத்துப்போகிறது. எல்லா வழக்குகளையும் போல, அமெரிக்காவும் ஏனைய பிரதான சக்திகளும் விடுக்கும் போர்க் குற்றங்கள் மீதான கண்டனம் என்பது, முற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், எப்பொழுதும் அவர்களது சொந்த சூறையாடும் பூகோள மூலோபாய நலன்களுடன் ஒத்துப் போவதாகவும் உள்ளன.

உயர்மட்ட இராணுவத் தளபதிகளை இலக்கு வைக்கும் பொருளாதாரத் தடைகளை விஸ்தரிப்பது உட்பட, பர்மிய ஆட்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திடம் இருந்து வந்த அழைப்புக்களுடன் ஐ.நா. கண்டுபிடிப்புகளும் சேர்ந்து கொண்டுள்ளன. பெய்ஜிங் சுற்றுவட்டப் பாதையில் இருந்து வெளியேற நிர்பந்திக்க பர்மா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழிமுறையாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புடனும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் Washington Post ல் ஞாயிறன்று வெளியான ஒரு ஆசிரியத் தலையங்கம், பர்மிய இராணுவத்தின் நடவடிக்கைகளை “இன அழிப்பு” என்று முத்திரை குத்துவதன் மூலமாக, ஐ.நா. வின் செயல்பாடுகளை அப்படியே பின்பற்ற ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுத்தது.

ரோஹிங்கியாக்களை துன்புறுத்துவதை “இன அழிப்பு” என முன்பே வெள்ளை மாளிகை முத்திரை குத்தியுள்ளது. இருப்பினும், “இனப்படுகொலை” என்ற வெளிப்படையான வார்த்தைப் பிரயோகம், இராணுவ உயர்மட்டத்திற்கு எதிராக கடுமையானப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும். பரந்த பொருளாதாரத் தடைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸூக்கு இன்னும் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு தொடக்கத்தில், ஐந்து இராணுவத் தளபதிகள் மற்றும் இரண்டு இராணுவப் பிரிவினரும் அமெரிக்க கருவூலப் பொருளாதாரத் தடைகளால் தாக்கப்பட்டுள்ளனர். 

பர்மாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் பற்றி Washington Post பத்திரிகையில் காட்டப்படும் பரபரப்பான எதிர்ப்பு என்பது முற்றிலும் பாசாங்குத்தனமானது. ஹவுத்தி சிறுபான்மை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபிய ஆட்சி ஒரு இன அழிப்பு நடவடிக்கையாக, யேமனில் நிகழ்த்திய அமெரிக்க ஆதரவிலான குண்டுத் தாக்குதல் குறித்து இது காதடைத்துப்போய் மௌனம் சாதிக்கிறது.

பஷார் அல் அசாத்தின் அரசாங்கத்திற்கு எதிரான நீண்டகால ஆட்சி மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிரியாவிற்கு எதிராக எப்போதைக்கும் அதிகமான நேரடியான அமெரிக்க தலையீட்டிற்காக இந்த செய்தித்தாள் கிளர்த்தெழுந்துள்ளது, மேலும், ரஷ்யா உடனான அமெரிக்க மோதலை விரிவாக்குவது தொடர்பான, அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்பின் சில பிரிவுகளின் பிரச்சாரத்தில் இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது.

சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கு பற்றி எச்சரித்த Washington Post கட்டுரையில் பர்மாவிற்கு எதிரான அதன் நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் கீழ் உண்மையான கவலைகள் இருக்கின்றன.

இந்தக் கட்டுரை இவ்வாறு குறிப்பிட்டது: “இந்தியப் பெருங்கடலில் வளம் பொருந்திய அண்டை நாடுகளிலுள்ள அதன் நிறுவனங்களையும், மற்றும் இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் மிகுந்த பல வலிமைக்கான பயிற்சிகளை விமர்சிப்பதை தணிப்பதற்கான முயற்சிகள் தொடர்பாக ஒரு மூலோபாய பங்குதாரரையும் பாதுகாப்பாக அணுகுவதை பெய்ஜிங் எதிர்பார்க்கிறது.”

“யுரேஷியா முழுவதிலும் உள்கட்டமைப்பை உருவாக்கவும், வர்த்தக உறவுகளை ஆழப்படுத்தவும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கையெழுத்திட்ட சாலை இணைப்புத் திட்டத்தில் (Belt and Road plan) ஒரு முக்கிய பங்கை பர்மா பெற்றுள்ளது” என இது குறிப்பிட்டது. ராக்கினி மாகாணத்தில் உள்ள Kyaukpyu எனும் மாபெரும் இந்தியப் பெருங்கடல் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது உட்பட, சீன-மியான்மர் (பர்மா) பொருளாதார வழித்தடம் அமைக்க பெய்ஜிங் முயன்று வருகிறது.

இந்த சாலை இணைப்புத் திட்ட முன்னெடுப்பு குறித்து வாஷிங்டன் வெளிப்படையாக விரோதமாக உள்ளது, அதாவது, பூகோள-மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த யுரேஷிய நிலப்பகுதி முழுவதிலும் தடையற்ற மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதற்கான அதன் முயற்சிகளுக்கு ஒரு நேரடி சவாலாக வாஷிங்டன் இதைக் கருதுகிறது. இது நடைமுறைக்கு வந்திருக்குமானால், அமெரிக்க மேலாதிக்கப் பொருளாதார வர்த்தக முகாம்களையும் பிராந்திய நிறுவனங்களையும் விஞ்சிவிடக்கூடிய வகையிலான வர்த்தக உறவுகளை இத்திட்டம் எளிதாக்கும்.

சீனாவுக்கும் பர்மாவுக்கும் இடையிலான ஆழமடைந்துவரும் உறவுகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது பற்றி அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதை Washington Post பத்திரிகையின் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்த ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுள்ள வெளிப்படையான தயக்கம், மற்றும் பர்மாவை இலக்கு வைக்கும் சட்டமியற்றலைத் தடுக்க, குடியரசுக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் மிட்ச் மெக்கோனெல் கூறிய முயற்சிகள் போன்றவற்றின் மூலம் இவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழாம்களில் உள்ள முக்கிய மூலோபாய ஆய்வாளர்களை மேற்கோளிட்டுக் காட்டி, இக் கட்டுரை, பர்மிய இராணுவத் தலைவர்கள் மற்றும் சிவிலியத் தலைவர்கள் மீதான அதன் அழுத்த அதிகரிப்புடன் அமெரிக்க அழுத்தங்களும் மிக விரைவாக முன்னேறுமானால், அது, “பெய்ஜிங் சுற்றுவட்டப் பாதைக்குள் அவற்றை மேலும் இழுக்கும்” அபாயத்தைக் கொடுக்கும் என்பதுடன், “ஒரு எழுச்சியடையும் பெரும்சக்தியாக தகுதிபெறச் செய்யும் வகையில் பிராந்திய கௌரவத்தை மீளப்பெறுவதற்கு சீனாவை அனுமதிக்கக்” கூடும் என்று கட்டுரை குறிப்பிட்டது.  

வேறுவிதமாகக் கூறினால், பர்மாவை நோக்கிய அமெரிக்க மூலோபாயம் என்பது, இப்பிராந்தியம் முழுவதிலும் மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்வதன் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சார்பாக அவர்களது சொந்த சூறையாடும் நலன்கள் மீதான ஒரு அச்சுறுத்தலாகவே சீனாவின் பொருளாதார வளர்ச்சி பார்க்கப்படுகின்றது.