ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China retaliates against US trade war measures

அமெரிக்க வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு எதிரான சீனப் பதிலடி

By Peter Symonds 
19 September 2018

200 பில்லியன் டாலர் மதிப்புடைய சீனப் பொருட்கள் மீது மற்றொரு பகுதியான சுங்கவரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் இந்த வாரம் எடுத்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, சீன அரசாங்கம் நேற்று, 60 பில்லியன் டாலர் மதிப்புடைய அமெரிக்க இறக்குமதிகள் மீது புதிய சுங்கவரிகளை அறிவித்துள்ளது.

50 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களின் மீது ஏற்கனவே அமெரிக்கா திணித்துள்ள சுங்கவரிகள் குறித்துதான் சீனா இவ்வாறு பதிலிறுத்துள்ளது. பெருகிவரும் வர்த்தகப் போர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் என்றல்லாமல், சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மையை உயர்த்துவதுடன் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கும் எரியூட்டுகிறது.

அமெரிக்க சுங்கவரி விதிப்பின் சமீபத்திய சுற்று அமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான தற்காலிக முன்மொழிவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவுள்ளது. “சமாதானம், சமத்துவம் மற்றும் நன்னம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் அப்பேச்சுவார்த்தைகள் நடக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்,” ஆனால், “அமெரிக்காவின் நடவடிக்கையில் எந்தவிதமான நேர்மையும் நன்னம்பிக்கையும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீனாவின் பாதுகாப்புகள் ஒழுங்கமைப்பின் (China’s securities regulator) துணைத் தலைவரான ஃபாங் ஜிங்ஹாய், பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலைக்கு ட்ரம்ப் “நஞ்சூட்டி” உள்ளார் என எச்சரித்தார். மேலும், “ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக தாக்கும் ஒரு தொழிலதிபர் என்பதுடன், சீனா மீது கடும் அழுத்தத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம் எங்களது பேச்சுவார்த்தைகளில் இருந்து சலுகைகளைப் பெறமுடியும் என அவர் நினைக்கிறார். இப்படிப்பட்ட தந்திரோபாயம் சீனாவுடன் வேலை செய்யாது என்றே நான் கருதுகிறேன்,” என்றவர் கூறினார்.

நேற்று, துறைமுக நகரம் தியான்ஜினில் நடந்த உலகப் பொருளாதார அரங்கில் (World Economic Forum) பேசிய ஃபாங், சீனாவின் உயர்மட்ட வர்த்தகப் பிரதிநிதியும் மற்றும் ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கான மூத்த பொருளாதார ஆலோசகருமான துணைப் பிரதமர் லியூ ஹே க்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.

சீன சுங்கவரிகளின் சமீபத்திய மட்டம் என்பது, ட்ரம்ப் நிர்வாகம் ஆரம்பத்தில் நிர்ணயித்த 10 சதவிகித வரி வசூலிப்பை அநுசரித்து விதிக்கப்பட்டவை, ஆனால் அதுவே சீனாவுடன் ஒரு உடன்படிக்கை எட்டப்படாதபட்சத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் 25 சதவிகிதமாக அதிகரிக்கப்படக்கூடும். அதாவது, முன்பு முன்மொழியப்பட்ட வரி விதிப்பு விகிதங்களான 5, 10, 20 மற்றும் 25 சதவிகிதங்களுக்கு மாறாக, 5 மற்றும் 10 சதவிகிதம் என சுமத்தப்பட்ட சுங்கவரி விதிப்புகளுக்குத்தான் பெய்ஜிங் பதிலிறுத்துள்ளது.

சீனா, அமெரிக்காவிடம் இருந்து பெறும் அதன் இறக்குமதியின் மொத்த மதிப்பு வெறும் 130 பில்லியன் டாலராக மட்டும் இருப்பதால் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீது கண்டிப்பான கறாராக அதேஅளவு சமமான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நிலையில் அது இல்லை. அதன் விளைவாக, அமெரிக்க பொருளாதாரத்தின் ஏனைய பகுதிகளில் திருப்பித் தாக்குவதற்கு பெய்ஜிங் முனையக்கூடும்.

பெய்ஜிங் ட்ரம்ப்பினது ஆதரவு தேர்தல் தளத்தை இலக்கு வைத்தது என்று கூறப்படுவதைத் செய்யுமானால், அவரது பங்கிற்கு ட்ரம்ப், 267 பில்லியன் டாலர் மதிப்பிலான சீனப் பொருட்கள் மீது மூன்றாவது சுற்று சுங்கவரி விதிப்பை திணிப்பதன் மூலமாக வர்த்தகப் போரை இன்னும் வியத்தகு அளவிற்குத் தீவிரப்படுத்த அச்சுறுத்தியுள்ளார். இத்தகைய சுங்கவரிகள் தொடருமானால், அமெரிக்காவிற்கான சீனாவின் அனைத்து ஏற்றுமதிகள் மீதான தண்டனைக்குரிய நடவடிக்கைகளை எடுப்பதில் வாஷிங்டன் நிச்சயமாக தீவிரமாக இருக்கும்.

“எனக்கு விசுவாசமாகவுள்ள எங்களது விவசாயிகள், பண்ணைத் தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களை தாக்குவதன் மூலமாக எங்கள் தேர்தலில் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்த அவர்கள் தீவிரமாக முயன்று வருவதாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது,” என்று ட்ரம்ப் நேற்று குறிப்பிட்டார். பின்னர், மேலும் பரந்தளவில் அவர் தாக்குதலுக்குள்ளாகி,  “நாங்கள் உலகிற்கான உண்டியல் வங்கியாக இருக்கிறோம்,” என்றும், “நாங்கள் சீனாவால் அகற்றப்பட்டுவிட்டோம், அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் அகற்றப்பட்டுவிட்டோம்…” என்றும் கூறினார்.

உக்கிரமடைந்து வரும் இந்த வர்த்தகப் போர் உலகெங்கிலுமாக கவலைகளுக்கான வெளிப்பாடுகளைத் தூண்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மால்ம்ஸ்ட்ரோம் செய்தி ஊடகத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்: “இந்த விரைவான அதிகரிப்பு என்பது மிகவும் துரதிருஷ்டமானது. வர்த்தகப் போர்கள் என்பவை நல்லவை அல்ல என்பதுடன், அவற்றை வெற்றிக் கொள்வதும் அவ்வளவு எளிதானதல்ல.” இந்நிலையில், சீனாவிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக சபை (European Union Chamber of Commerce), அமெரிக்க-சீன வர்த்தகப் போரானது “இப்போது உலகளவிலான விநியோகிப்பு சங்கிலித் தொடர்களை கடுமையாக பாதிப்பதாக” இருக்கிறது என எச்சரித்து நேற்று ஒரு அறிக்கை விடுத்தது.

“70 ஆண்டுகளாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை தாங்கிப்பிடித்துவந்த சர்வதேச வர்த்தக அமைப்பை அமெரிக்கா சீர்குலைத்து வருகிறது” என்று வழக்கத்திற்கு மாறான நயமற்ற அறிக்கையுடன், உயர்மட்ட ஆஸ்திரேலிய அதிகாரியான ஃபிரான்செஸ் ஆடம்சன் எச்சரித்தார். வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை செயலராக இருக்கும் ஆடம்சன், உலகெங்கிலுமாக வர்த்தகத் தடைகள் அதிகரிக்குமானால், ஆஸ்திரேலியா போன்ற, “சிறிய திறந்த பொருளாதாரங்கள்” பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

கடந்த வாரம் ஒரு ட்வீட்டில், சீனப் பொருளாதாரத்தை கீழறுக்க நோக்கம் கொண்ட ஒரு பொருளாதாரப் போரை எந்த விலை கொடுத்தும் தொடுக்க அவர் உள்நோக்கம் கொண்டிருப்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். “நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கும் அளவிற்கு எங்கள் மீது எந்தவித அழுத்தமும் இல்லை, மாறாக எங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ளும் அளவிற்கு அவர்கள் தான் அழுத்தத்திற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்,” என்று பெருமையாகப் பேசினார். மேலும், “எங்களது சந்தைகளோ பெருகி வருகின்றன, ஆனால் அவர்களது சந்தைகளோ சரிந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் விரைவில் பில்லியன்களில் வரி வசூலிப்புகளைப் பெறுவோம் என்பதுடன், உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்வோம்” என்றும் தம்பட்டமடித்தார்.

அமெரிக்க வர்த்தகப் போர் நடவடிக்கைகளின் விளைவாக சீனப் பொருளாதாரம் அழுத்தத்தில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் உண்மையில் காணப்படுகின்றன. ஷங்காய் கூட்டு குறியீடு உடனான உலகின் மிகமோசமான சந்தை செயல்பாட்டிற்கு மத்தியில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சீனாவின் பங்குச் சந்தை சுமார் 20 சதவிகித அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஜூன் மாதம் மத்தியில் இருந்து சுமார் 6 சதவிகித அளவிற்கு சீனாவின் யுவான் பலவீனமடைந்துள்ளது, இது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தைச் சரியீடு செய்வதின் பகுதியாகக் கொண்டுள்ளது.

வீடுகள், தொழிற்சாலைகள், இரயில்வே மற்றும் கடந்த மாதம் மெதுவான விகிதத்திலான சாதனை வளர்ச்சி கொண்ட இதர நிலையான சொத்துக்கள் ஆகியவற்றின் மீதான முதலீடுகளுடன் சீனப் பொருளாதாரம் சரிந்து வருவதை பொருளாதார தகவல் தரவு கடந்த வாரம் சுட்டிக்காட்டியது. ஆண்டின் முதல் எட்டு மாத காலம் வரையிலும் 5.3 சதவிகித அளவிற்கு நிலையான சொத்து முதலீடு வளர்ச்சி கண்டது, குறைந்த பட்சம் 1995ம் ஆண்டு முதல் மிகக் குறைந்த சதவிகிதமாகும் மற்றும் ஐந்தாவது தொடர்ச்சியான இதுவரை இல்லா குறைவு ஆகும்.

இருப்பினும், அமெரிக்க கோரிக்கைகள் சீனாவை ஒரு சாத்தியமற்ற நிலையில் வைத்துள்ளன. சீனாவுடனான அமெரிக்க வர்த்தக உபரிகளை குறைப்பதற்கு மட்டுமாக வர்த்தக சலுகைகளை ட்ரம்ப் நிர்வாகம் கோரவில்லை, மாறாக, சீனா அதன் “சீனத் தயாரிப்பு 2025 (Made in China 2025)” திட்டத்தின் கீழ் மிகுந்த போட்டிக்குரிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்யும் அதன் முயற்சிகளை நிறுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறது. புத்திஜீவித சொத்து “திருட்டை” நிறுத்துவதற்கு கோரிக்கை விடுக்கும் சாக்குப்போக்கில், அமெரிக்க தொழில்நுட்ப மேலாதிக்கத்திற்கு சீனாவால் சவால் செய்ய முடியவில்லை என்பதை உறுதி செய்ய அமெரிக்கா முனைந்து வருகிறது.

போர் வெறிகொண்ட, அரசுக்கு சொந்தமான Global Times பத்திரிகை திங்களன்று, சீன ஆளும் வட்டாரங்களில் காணப்படும் உறுதி அவர்கள் அடிபணிவதாக இல்லை என சீன ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதில் இருந்து கருத்துக்களை எடுத்து வெளியிட்டுள்ளது. “எப்பொழுதாயினும் எந்தவித எதிர்மறையான அறிகுறிகள் இருந்தாலும், சீனப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தை கவனிப்பதற்கு மக்கள் முற்படுகிறார்கள்,” என்று ஷென்சேனைத் தளமாகக் கொண்ட Yingda Securities இன் தலைமை பொருளாதார நிபுணர் லீ டாக்ஸியாவோ கூறினார். “சீனப் பொருளாதாரம் என்பது உலகில் இன்னமும் அதிவேகமாக வளர்ந்துவரும் ஒரு பொருளாதாரம் என்பதையும், நாங்கள் சுமார் 3 டிரில்லியன் டாலர் அந்நிய செலாவணி இருப்புக்களை கொண்டிருக்கிறோம் என்பதையும், மற்றும் சீனா ஒரு பெரிய உள்நாட்டு சந்தையை கொண்டுள்ளது என்பதையும் அவர்கள் எப்போதும் மறந்துவிடுகின்றனர்” என்றும் தெரிவித்தார்.

Financial Times பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை, ட்ரம்ப் கற்பனை செய்யும் அளவிற்கு அமெரிக்க வர்த்தக அழுத்தத்தினால் பாதிக்கப்படக்கூடியதாக சீனா இல்லை என்பதை குறிப்பிட்டுக் காட்டியது. “அமெரிக்க சுங்கவரிகளுக்கு சீனப் பொருளாதாரம் தாக்கத்திற்கு உள்ளாதல் மட்டுப்பட்டதாகவே உள்ளது. மற்ற பெரும் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும் போது, அனைத்து நாடுகளுக்குமான மொத்த ஏற்றுமதிகள் கடந்த ஆண்டு சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவிகிதத்தை சமன் செய்தது, ஆனால் 2006ல் உச்சபட்சமாக இருந்த 35 சதவிகிதத்தில் இருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு மட்டுமான ஏற்றுமதிகள் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 4 சதவிகிதம் தான் என கணக்கிடப்பட்டது.”

இந்தக் கட்டுரை, சீனாவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழில்களாக வெளிநாட்டு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிறுவனங்கள் இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியது. சீன பங்குதாரர்களுடனான கூட்டு வணிக நிறுவனங்கள் உட்பட, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உடனான பெருநிறுவனங்கள், கடந்த ஆண்டு சீனப் பொருட்கள் ஏற்றுமதியில் 43 சதவிகிதத்தை கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டது. மீதமுள்ள சதவிகிதத்தில், தனியாருக்குச் சொந்தமான சீன நிறுவனங்கள் 44 சதவிகித ஏற்றுமதிக்கும், மேலும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் வெறும் 10 சதவிகித ஏற்றுமதிக்கும் பங்களித்துள்ளன.

“வாஷிங்டனில் உள்ள கருத்துக்களுக்கு மாறாக, சீனாவால் அதன் புதைந்த குதிக்கால்களை தோண்டியெடுக்க முடியும் - எடுக்கும்,” என்று சீனாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் (American Chamber of Commerce) தலைவர் பில் ஜரித் Financial Times பத்திரிகைக்கு தெரிவித்தார். “இந்த கீழ்நோக்கிய சுழற்சி பற்றி நாம் முன்னரே எச்சரித்துள்ளோம், இப்போது உண்மையில் அது உருவெடுப்பதாகத் தெரிகிறது.”

அமெரிக்க சுங்கவரி விதிப்புக்களும் சீனாவின் பதிலடியான நடவடிக்கைகளும் 25 சதவிகித மட்டத்தைக் காட்டிலும் 10 சதவிகித மட்டத்தைக் கணக்கில் கொண்டிருந்தது என்றாலும், உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒரு முழுமையான பொருளாதாரப் போர் இன்னும் அபிவிருத்தி செய்யப்படுவதை நிறுத்த அல்லது மெதுவாக்கக்கூடிய ஒரு உடன்படிக்கை எட்டப்படுவதற்கான எந்தவித அடையாளமும் அங்கு இல்லை. இந்நிலையில், 1930 களில் இருந்ததைப் போல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான பேரழிவுகர தாக்கங்களைக் கொண்ட உலக யுத்தத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு வெடிப்புறும் பொருளாதார மோதலுக்கான அபாயம் உள்ளது.

ஆசிரியர் பின்வரும் கட்டுரையையும் பரிந்துரைக்கிறார்:

அமெரிக்க-சீன வர்த்தகப் போரின் தாக்கங்கள்

 [18 September 2018]