ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron whitewashes French state murder of Maurice Audin

மொரிஸ் ஒடான் பிரெஞ்சு அரசால் கொலை செய்யப்பட்டதை மக்ரோன் பூசி மறைக்கிறார்

By Francis Dubois and Alex Lantier
1 October 2018


மொரிஸ் ஒடான்

உரக்கவும் எந்தவித பின்விளைவுகள் இன்றியும் ஒப்புக்கொள்ளப்படுகின்ற குற்றம், வருங்காலத்தில் அந்தக் குற்றவாளியின் தரப்பில் நல்ல நடத்தைக்கான ஒரு உத்தரவாதமாக இருக்காது. இதுவே, இளம் கணித அறிஞரான மொரிஸ் ஒடான் 1957 இல் அல்ஜீரியப் போரின்போது அல்ஜியர்ஸில் அவரது அரசியல் நிலைப்பாடுகளுக்காக பிரெஞ்சு அரசினால் சித்தரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார் என்பதை, சென்ற மாதத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஒப்புக் கொண்டபோது அளித்த எண்ணப்பதிவாக இருக்கிறது.  

எண்ணற்ற தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால், மக்ரோன், ஒடானின் விதவை மனைவியிடம் பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு அறிக்கையை நேரடியாக வழங்கினார். ஒடான் “அவரை கைது செய்த துருப்புகளால் சித்திரவதை செய்யப்பட்டு பின் கொல்லப்பட்டார் அல்லது சாகும் வரை சித்திரவதை செய்யப்பட்டார்” என்று அந்த அறிக்கை ஒப்புக்கொள்கிறது.

மக்ரோன் அதன்பின் இந்தக் குற்றத்தை பூசிமெழுகினார், அல்ஜீரியப் போரின் போது பிரெஞ்சு அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பெருந்தொகை சித்திரவதை மற்றும் கொலைகளுக்கு ஒரு சட்டரீதியான அடித்தளம் ஒன்று அங்கே இருந்தது என்று அவர் கூறினார். “காணாமல் போதல்களுக்கு சாதகமாய் இருந்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக சித்திரவதை செய்வதை அனுமதித்த ஒரு சட்டரீதியாக நிறுவப்பட்ட அமைப்புமுறை ஒன்றினால் மொரிஸ் ஒடானின் மரணம் சாத்தியமாக்கப்பட்டிருந்தது என்பதை உணர்வதில்” வரலாற்றாசிரியர்கள் அனைவரும் உடன்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதன் அர்த்தம் தேசிய முன்னணியின் (FN) ஸ்தாபகரும் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென்னின் தந்தையுமான ஜோன்-மரி லு பென் போன்ற, அல்ஜீரியாவில் ஒடுக்குமுறையை நடத்திய அதிகாரிகளுக்கு இந்த ஒப்புதல் எந்த பின்விளைவுகளையும் கொண்டிருக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, ஒடானின் அரசுக் கொலையின் நீதித்துறை உள்ளடக்கம் சட்டபூர்வமானது என்பதை மக்ரோன் வலியுறுத்துகிறார் என்றால், அதன் காரணம் ஒடான் கொல்லப்பட இட்டுச் சென்ற 1955-56 அவசரகால சட்டம் தான் இன்று மக்ரோனின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் இராணுவவாதத்தின் கொள்கைகளையும் தாங்கி நிற்கிறது.

மக்ரோனும் அவருக்கு முன்னிருந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கமும் வெகுஜன வேவுபார்ப்பை அங்கீகரிக்கும் சட்டங்களையும் பழைய தொழிலாளர் சட்டப்பிரிவை இடைநிறுத்தி வைக்கும் தொழிலாளர் சட்டத்தையும் 2015-17 அவசரகால நிலையின் போதே திணித்தனர். தேசிய நாடாளுமன்றம் அல்ஜீரியாவில் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை நசுக்குவதற்காகவே குறிப்பாக 1955 இல் அவசரகால நிலை சட்டத்தை உருவாக்கியிருந்தது. 1955 சட்டமானது, சித்திரவதை மற்றும் கொலையை ஊக்குவிக்கும் 1956 “சிறப்பு அதிகாரங்கள்” உத்தரவு உள்ளிட அந்த சமயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏராளமான அவசர நடவடிக்கைகளின் பகுதியாக இருந்தது.

“துரதிர்ஷ்டவசமாக இந்த அமைப்புமுறைதான் சித்திரவதை உள்ளிட்ட சிலசமயங்களது பயங்கரமான நடவடிக்கைகளுக்கு மூலமாக இருந்தது” என்றார் மக்ரோன். “சித்திரவதைப் பயன்பாட்டை தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் தவறியதன் மூலமாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட ஆண், பெண்களது உயிர்வாழ்வை ஆபத்தில் விட்டிருந்தன. ஆயினும் இறுதி ஆய்வில், மனித உரிமைகளையும், எல்லாவற்றுக்கும் முதலில், அவர்களது இறையாண்மையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களது உருரீதியான முழுமையையும் பாதுகாப்பதற்கான பொறுப்பு அவர்களிடமே [இராணுவ-போலிஸ் எந்திரம்] இருக்கிறது.”

இது ஒரு போலிஸ் அரசின் ஜனாதிபதியின் கண்ணோட்டமே அன்றி, ஒரு ஜனநாயகக் குடியரசின் ஜனாதிபதியின் கண்ணோட்டமாகாது. எச்சரிக்கை, தமது உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்கின்ற நம்பிக்கையுடன் போலிசுக்கு கட்டுப்பாடற்ற முற்றுமுதலான அதிகாரங்களைக் கொடுத்த நாடுகள், பிரதிபலனாய் எப்போதும் இரத்தக்களரியான சர்வாதிகாரங்களையே பெற்றிருக்கின்றன. அரசுக்கு எதிராகவும் ஆளும் வர்க்கங்களுக்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கின்ற கடமை விழுவது போலிசின் தோள்களில் அல்ல, மாறாக மக்களின் எல்லாவற்றிற்கும் மேல் தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் ஆகும்.

ஒடானின் படுகொலை ஏகாதிபத்தியப் போரின் தாக்கங்கள் குறித்த ஒரு எச்சரிக்கையாகும். மாலி தொடங்கி மத்திய கிழக்கு நெடுகிலும் ஆப்கானிஸ்தான் வரை நீள்கின்ற போர்களை பிரான்சும் நேட்டோவும் நடத்துகின்ற நிலையில், 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் இவை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. நாடுகளையும் ஒட்டுமொத்த பிராந்தியங்களையும் பலவந்தமாக மேலாதிக்கம் செய்ய மிக சக்திவாய்ந்த முதலாளித்துவ அரசுகள் செய்கின்ற முயற்சிகள் குற்றவியல்தன்மை கொண்டதும் முழுக்க முழுக்க பிற்போக்கானதுமாகும். வெளிநாட்டு மக்களுக்கும் தமது சொந்த குடிமக்களுக்கும் எதிரான குற்றங்களில் இது ஏகாதிபத்திய அரசுகளை –அவை உத்தியோகபூர்வமாக நாடாளுமன்ற-ஜனநாயக ஆட்சிகளாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி–  சம்பந்தப்படுத்துகிறது.

அப்பேதைய பிரதம மந்திரி கீ மொலே (Guy Mollet) இன் சமூக-ஜனநாயக அரசாங்கம் தன்னிச்சையான அதிகாரங்களை வழங்கியிருந்த தளபதி மாஸ்சு (Jacques Emile Massu), பாரசூட் துருப்பு பிரிவின் தலைவராக அல்ஜீயர்ஸை ஆக்கிரமித்திருந்த நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்சில் அமைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற ஆட்சியின் கீழ் ஒடான் மரணமடைந்தார். அல்ஜீரிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு உறுப்பினரான ஒடான், அதன் பிரெஞ்சு ஸ்ராலினிச சகோதரக் கட்சியான PCF, மொலேயையும் சிறப்பு அதிகாரங்களையும் ஆதரித்தது என்ற நிலையிலும், அல்ஜீரிய சுதந்திரத்தை ஆதரித்தார். 1957 ஜூனில், மாஸ்சு மற்றும் அவரது துணை அதிகாரியான போல் ஓஸ்சாரெஸ் (Paul Aussaresses) ஆல் ஒடான் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.  

இந்தக் கொலை, அரை மில்லியன் உயிர்களை காவுகொண்ட ஒரு போரின் பரந்த குற்றவியல் தன்மையை அடையாளப்படுத்தியதாய் அமைந்தது. அந்த சமயத்தில் 10 மில்லியனாக இருந்த அல்ஜீரியாவின் மக்கள்தொகையில், பிரான்ஸ் 3 மில்லியன் பேரை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தது. அத்துடன், இந்தப் போரின் போது 25,000 பிரெஞ்சு துருப்புகளும் கொல்லப்பட்டனர், 60,000 பேர் காயமடைந்தனர். போரில் பங்குபெற்ற 1.5 மில்லியன் பிரெஞ்சு துருப்புகளில் –பெரும்பாலும் கட்டாய இராணுவச் சேவையில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள்– பலரும் அவர்கள் பார்த்தவற்றையும், செய்தவற்றையும் கொண்டு மன அதிர்ச்சி விலகாமல் திரும்பி வந்தனர்.

இந்தப் போர் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை உள்ளநிலையில் காட்டியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு தசாப்தம் கூட முழுதாக கழிந்திராத நிலையில், மக்ரேப்பில் (வடக்கு ஆபிரிக்கா) தனது நவகாலனித்துவ கொள்ளையைப் பராமரிக்கும் ஒரு முயற்சியில், பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் நாஜி கெஸ்டபோ இழைத்திருந்த குற்றங்களில் பலவற்றையும் இழைத்தது. ஆயிரக்கணக்கான முன்னாள் SS சிப்பாய்கள் அல்லது நாஜி இராணுவத்தின் “பிரஷ்ய வீரர்கள்” பிரெஞ்சு வெளிநாட்டுப் படையணிகளில் சேர்க்கப்பட்டு இந்தோசீனாவிலும் அல்ஜீரியாவிலும் பிரெஞ்சு காலனித்துவ போர்களில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது முதலாக, அடுத்தடுத்து வந்த பிரெஞ்சு அரசாங்கங்கள், வலது-சாரி அரசாங்கமாய் இருந்தாலும் சமூக ஜனநாயக அரசாங்கமாக இருந்தாலும், பிரெஞ்சு மற்றும் உலக மக்களின் அபிப்ராயத்தில் ஏகாதிபத்தியத்தையும் இராணுவவாதத்தையும் வெள்ளைப்பூச்சில் காண்பிக்கும் பொருட்டு ஒடானின் கொலையில் அரசின் பொறுப்பை மனச்சாட்சியற்று மறுத்து வந்திருக்கின்றன. ஆனால் அந்த சமயத்தின் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களது பரந்த எண்ணிக்கையினருக்கு, அல்ஜீரியாவில் இழைக்கப்பட்ட குற்றங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டு கோலின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட பிரெஞ்சு முதலாளித்துவ ஆட்சியையும் ஸ்ராலினிஸ்டுகளையும் ஆழமாய் மதிப்பிழக்கச் செய்தது.

அல்ஜீயர்ஸ் யுத்தத்தின் ”மாதிரி”, அதாவது பெருந்தொகை கைதுகள் மற்றும் சித்திரவதைகள், சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டது. இலத்தீன் அமெரிக்காவிலும், சிஐஏ இன் இரத்தம்தோய்ந்த ஆபரேஷன் பீனிக்ஸ் நடவடிக்கையின் போது வியட்நாமிலும் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க இராணுவப் படைகளுக்கு ஓஸ்சாரெஸ் கிளர்ச்சித்தடுப்பு மூலோபாயங்களை வட கரோலினா Fort Bragg இல் கற்றுக்கொடுத்தார். “ஒரு புரட்சிகரப் போரில் மக்கள்தான் எதிரி” என்றும் சித்திரவதைக்கு இலக்கானவர்கள் “கொல்லப்பட்டு விட வேண்டும்” என்றும் அங்கே அவர் விளக்கினார். அதேநேரத்தில் உலகெங்கிலும் வியட்நாம் போருக்கு எதிராக ஒரு பரந்த போர் எதிர்ப்பு இயக்கம் அபிவிருத்தி கண்டு கொண்டிருந்தது.

ஒடான் குறித்த மக்ரோனின் உரைக்கு பிரான்சில் கிட்டியிருக்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு ஒரு எச்சரிக்கையாகும்: போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு புதிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசர அவசியமாகும். 1968 மே-ஜுன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னரான 50 ஆண்டுகளில், ட்ரொட்ஸ்கிச-விரோதமும் 1968க்குப் பிந்தைய மாணவர் இயக்கத்தில் இருந்து “இடது” கட்சிகளின் தலைமைப் பொறுப்புகளுக்குள் எடுக்கப்பட்டிருந்தவர்களது பெருகிய வசதியும் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்க்கையை மிகவும் வலதுக்கு நகர்த்தியிருக்கின்றன. இப்போது, மக்ரோன் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் போலிஸ் அரசைப் பாதுகாப்பதற்காக அரசியல் ஸ்தாபகமும் ஊடகங்களும் உள்ளுணர்வோடும் உடனடியாகவும் நெருக்கமாகிக் கொண்டிருக்கின்றன.  Le Monde மக்ரோனின் அறிக்கையை “அல்ஜீரியப் போர், மக்ரோனின் வரலாற்றுச்சிறப்புமிக்க சமிக்கை” என்ற தலைப்பின் கீழ் பாராட்டியது. வரலாற்றாசிரியர் பெஞ்சமின் ஸ்டோராவை —இவர், 1971 இல் ட்ரொட்ஸ்கிசத்துடனும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடனும் முறித்துக் கொள்வதற்கு முன்பாக அல்ஜீரியப் போரை எதிர்த்திருந்த ஒரு கட்சியான பியர் லம்பேர் இன் OCI இன் ஒரு முன்னாள் உறுப்பினராவார்— அது மேற்கோளிட்டது. “வரலாற்று அங்கீகரிப்பின் முடிவுகளது மகத்தான பாரம்பரியத்தில்” மக்ரோன் இருப்பதாக ஸ்டோரா குதூகலித்தார்.

மக்ரோனின் சமிக்கையை PCF உம் மகிழ்ச்சியுடன் பாராட்டியது. PCF இன் தேசியச் செயலாளரான பியர் லோரோண்ட் “உண்மைக்கும் நீதிக்கும் கிடைத்த ஒரு வரலாற்றுப்பெரும் வெற்றி”க்கு வணக்கம் செலுத்தினார், ஸ்ராலினிச தினசரியான L’Humanité “ஒரு அற்புதமான வெற்றி”யை பாராட்டியது.

லிபியாவிலும் சிரியாவிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் “மனிதாபிமான” போர்களை ஆதரித்திருந்த, பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியின் (NPA) Tendance Claire கன்னையானது, மக்ரோனின் அழைப்பு “ஒரு அற்புதமான வெற்றியைக் குறிக்கிறது” என்றும் “எதிர்பார்க்கப்படும் மட்டத்தில் அது இருக்கிறது” என்றும் எழுதியது. “உண்மைக்காக சண்டையிட்டதற்காக” L’Humanité ஐ பாராட்டிய அது, மக்ரோனின் அறிக்கை “ஒரு மிகப்பெரும் வரலாற்று மற்றும் அரசியல் எடை”யை கொண்டிருப்பதாக எழுதியது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளது முடிவுகளுக்கு அடிப்படையில் நேரெதிரான முடிவுகளுக்கே சோசலிச சமத்துவக் கட்சி (The Parti de l’égalité socialiste) வருகிறது. அல்ஜீரியப் போரின் உதாரணமானது, ஒரு ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் போருக்கு எதிரான ஒரு வெகுஜன இயக்கம் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தையே சுட்டிக்காட்டுகிறது. உத்தியோகபூர்வ வட்டாரங்கள் பாரிய வேவுபார்ப்புக்கும் ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது கட்சிகளுக்கும் வலுவூட்டுகின்ற நிலையில், ஒடானின் கொலையானது அவசரகால நிலை மற்றும் போலிஸ்-அரசு ஆட்சியை எதிர்ப்பதற்கான அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.