ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fascistic candidate Jair Bolsonaro places first in Brazilian presidential election

பிரேசிலிய ஜனாதிபதி தேர்தலில் பாசிசவாத வேட்பாளர் ஜயர் போல்சொனாரோ முதலிடத்தில் இருக்கிறார்

By Miguel Andrade
8 October 2018

ஞாயிறன்று நடத்தப்பட்ட பிரேசிலிய பொது தேர்தல்கள், அமெரிக்க ஆதரவிலான 1964-1985 இராணுவ சர்வாதிகாரம் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய மிகவும் வலதுசாரி காங்கிரஸை ஏற்படுத்தும் வகையில், பாசிசவாத முன்னாள் இராணுவப் படை தளபதி ஜயர் போல்சொனாரோவுக்கு இந்த ஜனாதிபதி போட்டியில் பரந்த முன்னணி இடத்தை வழங்கியது.

வாக்குப்பதிவில் முற்றுமுதலான பெரும்பான்மை பெறாத போல்சொனாரோ, அக்டோபர் 28 இல் தொழிலாளர் கட்சி (PT) வேட்பாளர் பெர்னாண்டோ ஹாடாட் க்கு எதிராக இரண்டாம் சுற்று தேர்தலைச் சந்திக்கிறார். போல்சொனாரோ 46 சதவீத வாக்குகள் வென்றிருந்தார், முதல் சுற்றில் ஜெயிப்பதற்கு வெறும் 4 சதவீத வாக்குகளே பற்றாக்குறையாக இருந்தது. சவோ பாவ்லோ நகர முன்னாள் தலைவரான ஹாடாட், ஏறக்குறைய 30 மில்லியன் வாக்குகளுக்கு ஒத்த, 29 சதவீதத்துடன், வெகு தொலைவில் இரண்டாமிடத்தில் இருந்தார். வாக்குப்பதிவைத் தவிர்த்தவர்களின் எண்ணிக்கை மற்றும் செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை 40 மில்லியனாக மிக அதிகமாக இருந்தன, பிரேசிலில் வாக்களிப்பது கட்டாயம் என்பதுடன் மீண்டும் மீண்டும் வாக்களிப்பைப் புறக்கணிப்பவர்கள் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள், கடவுச்சீட்டு முடக்கப்படும், மிகவும் முக்கியமாக, உள்நாட்டு அரசு சேவைகள் கிடைக்காது என்பதை வைத்து பார்த்தால் இது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

பிரேசிலின் மிகப் பழைய முதலாளித்துவ கட்சியான ஜனநாயக தொழிற் கட்சியின் சிரோ கோம்ஸ் (Ciro Gomes) 12 சதவீத வாக்குகள் பெற்றார். சர்வாதிகாரி Getúlio Vargas இன் 1937-1945 பெருநிறுவனவாத அரசியலின் வழிவந்த இக் கட்சி, 1964-85 இராணுவ ஆட்சிக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்புடன் தொடர்புபட்டது.

பிரேசிலின் முன்னாள் பாரம்பரிய வலதுசாரி கட்சியான பிரேசிலிய சமூக ஜனநாயகக் கட்சியின் (PSDB) Geraldo Alckmin, அவர் கட்சியின் வாக்காளர்கள் வட்டம் ஒன்றுமில்லாமல் போனதைக் கண்டார்- அது 2014 இல் PT க்கு எதிராக பெற்ற 48 சதவீத வாக்குகளில் இருந்து ஞாயிறன்று வாக்கெடுப்பில் வெறும் 5 சதவீதத்திற்குச் சரிந்தது. பிரேசிலின் மிகப் பெரிய தனியார் வங்கியின் சக்தி வாய்ந்த வாரிசுதாரர் Neca Setúbal போன்ற பெருவணிக பிரிவுகளின் ஆதரவை 2010 இல் இருந்து பெற்றிருந்த தொழிலாளர் கட்சியின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் மரீனா சில்வாவின் வாக்குகள், 2014 இல் அவர் பெற்ற 21 சதவீத வாக்குகளில் இருந்து வெறும் ஒரு சதவீதத்திற்குச் சரிந்தது.

தொழிலாளர் கட்சியின் பிரதான சுய-பிரகடன "இடது" எதிர்ப்பும், போலி-இடது மோரேனோவாத-பப்லோவாத கூட்டணியுமான சோசலிசம் மற்றும் சுதந்திர கட்சி (PSOL) 2014 இல் பெற்ற 1.6 சதவீத வாக்குகளில் இருந்து சரிந்து வெறும் 0.6 சதவீத வாக்குகள் பெற்றதுடன், 2006 இல் அதன் முதல் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் நவ-தாராளவாத கொள்கைகள் மீதான அதன் விமர்சனத்தின் அடிப்படையில் அது வென்றிருந்த 7 சதவீத வாக்குகளை விட வெகுதூரத்தில் நின்றது.

இந்த தேர்தல்கள் பிரேசிலின் வரலாற்றிலேயே மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்டிருந்தன, பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1929 பொறிவுக்குப் பின்னர் 2015 மற்றும் 2016 க்கு இடையே மிகப் பெரியளவில் வீழ்ச்சி அடைந்ததுடன், பின்னர் அதன் வரலாற்றிலேயே மிக மெதுவான மீட்சியைக் கண்டது, வேலைவாய்ப்பும் நடுத்தர வருமானமும் 2027 இல் தான் அவற்றின் 2013 இலிருந்த மட்டங்களுக்கு திரும்புமென முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் மதிப்பிட்டனர்.

அரசுத்துறையின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் பெட்ரோபாஸ் ஐ சுற்றி நடந்திருந்த பாரியளவிலான ஊழல் மோசடிகளால் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் முற்றிலும் மதிப்பிழந்துள்ளது, "லாவா ஜாட்டோ" (Car Wash) விசாரணை என்றழைக்கப்பட்ட ஒரு விசாரணையில் அம்பலமான அந்த ஊழலில், இதுவரை 12 பில்லியன் ரியாஸ் (4 பில்லியன் டாலர்) மக்கள் பணத்திலிருந்து கையூட்டு மற்றும் உபகாரங்களுக்காக வழங்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்திட்டம் தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் தொழில்துறை, உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்-வணிக ஏகபோகங்களைச் சொந்தமாக கொண்டுள்ள தேசிய பெருநிறுவனங்களுக்கு ஆதரவான "தேசிய பாதுகாவலர்கள்" (national champions) கொள்கை என்றழைக்கப்பட்டதன் உள்ளார்ந்த பாகமாக இருந்ததாக கூடுதலாக எடுத்துக்காட்டப்பட்டது, இந்நிறுவனங்களின் விரிவாக்கம் 2000 களின் பின்பகுதியில் பண்டங்களின் உற்பத்தி அதிகரிப்பால் சாத்தியமாகி இருந்தது.

பாரிய ஊழல் திட்டங்களை மற்றும் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தை மேற்பார்வையிட்டு வந்துள்ள தொழிலாளர் கட்சியிடமிருந்து (PT) தொழிலாள வர்க்க வாக்காளர்கள், வரலாற்றுரீதியில் அது செல்வாக்கு கொண்டிருந்த பிராந்தியங்களில், பிரதானமாக நாட்டின் தொழில்துறை தெற்கில் ஒட்டுமொத்தமாக விலகிச் சென்றிருந்தனர், அங்கே அக்கட்சி, மக்களால் லூலா என்றழைக்கப்பட்ட ஜனாதிபதி Luiz Inácio Lula da Silva தலைமையில் 2002 இல் முதன்முதலில் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பிந்தைய மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றது.

"சிகாகோ சிறுவன்" Joaquim Levy ஐ அவரது நிதி அமைச்சராக நியமித்து தனது இரண்டாவது பதவிகாலத்தின் முதல் நாளைத் தொடங்கியவரும் மற்றும் லூலாவுக்கு அடுத்து வந்தவருமான தொழிலாளர் கட்சி ஜனாதிபதி டில்மா ரூஸ்செஃப் திணித்த கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிராக பெருந்திரளான இளைஞர்கள் மற்றும் தொழிலாளர் வர்க்க போராட்டங்களுடன் சேர்ந்து, தொழிலாளர் கட்சிக்கான ஆதரவு சரிந்தமை, 2016 இல் ரூஸ்செஃப் ஐ பதவி நீக்கக் குற்றவிசாரணைக்கு அழுத்தமளிக்க அதிவலதைப் பலப்படுத்தியது. அவர் வெளியேற்றப்பட்டமை, வங்கியாளர்கள், வேளாண்துறை வணிக முதலாளிமார்கள் மற்றும் தொழிலதிபர்களால் "தொந்தரவுக்குரியதாக" ஆரம்பத்தில் எதிர்க்கப்பட்ட போதினும், இறுதியில் அவர் நடைமுறைப்படுத்தி இருந்த சிக்கன நடவடிக்கைகளையே தீவிரப்படுத்துவதற்காக, அவர்களின் ஆதரவைப் பெற்றது.

"லாவா ஜாட்டோ" விசாரணை ஆரம்பமாகியதும், முதலும் முக்கியமாக லூலா உட்பட தொழிலாளர் கட்சி பிரதிநிதிகளுடன் ஊழல் தொடர்புகள் வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட வணிகர்களின் முடிவில்லா கணக்குகள், தொழிலாளர் கட்சியை பலவீனப்படுத்துவதற்கும், இறுதியில் லூலா அவரே சிறையில் அடைக்கப்படுவதற்கும் கூடுதல் வழிவகைகளை வழங்கின. பெட்ரோபாஸ் ஒப்பந்தங்களில் மோசடி செய்ததற்கு பிரதிபலனாக கடற்கரை முகத்துவாரத்தில் அவருக்கு ஓர் ஆடம்பர வசிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டிருந்தது என்ற குற்றச்சாட்டு மீது லூலாவுக்குக் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டமை மேற்கொண்டும் தொழிலாளர் கட்சியின் நிலைமையை கீழறுத்ததுடன், இது லூலாவைத் தேர்தல் போட்டியிலிருந்தே வெளியேற்றியது. ஆரம்பத்தில் அவர் 30 சதவீத ஆதரவுடன் முன்னிலை ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோதும், வாக்களித்தவர்களில் 50 சதவீதத்தினரின் நிராகரிப்பை அவர் முகங்கொடுத்தார், அதேவேளையில் ஒரு தெளிவான பெரும்பான்மை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு அதன் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது.

பிரேசிலிய சொத்திருப்புகளைச் சீனாவுக்கு “விற்பதற்கு” எதிரான அதிதீவிர-தேசியவாத கோபம், ஆபிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சீன முதலீடுகள் (இவை “கையூட்டுகள்” என்று கண்டனம் செய்யப்பட்டன) ஆகியவற்றுடன் சேர்ந்து, ஊழல்-எதிர்ப்பு வாய்சவடால், அத்துடன் சேர்ந்து குற்றத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகள் மற்றும் புலம்பெயர்வு-விரோத வாய்வீச்சுக்கள் ஆகியவை தொழிலாளர் கட்சிக்கு எதிரான அதிவலதுசாரிகளின் சிலுவைப்போரின் கைக்கருவியாக சேவையாற்றி உள்ளன. இது, புறக்கணிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை நோக்கி, முக்கியமாக வீழ்ச்சி அடைந்து வரும் அல்லது போராடி கொண்டிருக்கும் தொழில்துறை பிராந்தியங்களை நோக்கி நனவுபூர்வமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்த "லாவா ஜாட்டோ" விசாரணை வலதை நோக்கிய ஆக்ரோஷமான திருப்பத்துக்கு ஒரு பிரதான கருவியாக மாறியிருந்தது. ரூஸ்செஃப் மீதான 2016 பதவி நீக்க குற்றவிசாரணைக்குப் பின்னர், அவரின் துணை ஜனாதிபதியும் அவரை அடுத்து பதவிக்கு வந்தவருமான மிக்கெல் டெமெர் நிறுவனங்களுக்கு ஒளிவுமறைவற்ற ஒப்பந்த வேலைகளை அனுமதித்து தொழிலாளர் சீர்திருத்தத்தை திணித்த அதேவேளையில் அவர் சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைச் சிதைத்து வந்தார். அவரது அரசாங்கம் பின்னர் ஓர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக 20 ஆண்டுகால சமூக செலவு நிறுத்தி வைப்பைத் திணித்தார். ஒவ்வொரு தாக்குதலின் முன்னாலும், தொழிலாளர் கட்சி தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்ட முடியாமல், அணித்திரட்ட விருப்பமில்லாமல் இருந்தது. அதனுடன் இணைந்திருந்த தொழிற்சங்க கூட்டமைப்பு CUT உடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்திடையே ஆழ்ந்த போர்குணம் இருந்த போதும் கூட, அது பல பொது வேலைநிறுத்தங்களைக் கடைசி நிமிடத்தில் இரத்து செய்தது, அவ்விதத்தில் அது அதிதீவிர-தேசியவாத, அதிவலது கோரிக்கைகளை தொழிலாளர்களுக்கு முன்வைப்பதை பலப்படுத்தியது.

பிரேசிலின் ஆளும் வர்க்கம் தொழிலாளர்கள் மீது ஒரு வர்க்க போர் தொடுக்க தீர்மானகரமாக இருந்த நிலையில், PSDB மற்றும் தொழிலாளர் கட்சிக்கு இடையே தொங்கி கொண்டிருந்த வணிக வட்டாரங்களிடமிருந்து போல்சொனாரோ தீர்க்கமான ஆதரவைப் பெற்றுள்ளார், “புனித விவிலியம், மாட்டிறைச்சி, தோட்டாக்கள்" என்று மிகவும் பிரபலமாக அழைக்கப்பட்ட அவ்விரு கட்சிகளது வேட்பாளர்கள் 13 ஆண்டுகால தொழிலாளர் கட்சி ஆட்சியின் போது காங்கிரஸில் மூன்று பங்கு இடம் பெற்றிருந்ததுடன், அதன் அரசாங்கங்கள் பல சந்தர்ப்பங்களில் வலதுசாரி கொள்கைகளுக்கு தீர்க்கமான ஆதரவை வழங்கின.

மிக முக்கியமாக, அந்த வேட்பாளர்கள் தான் பாசிசவாத போல்சொனாரோவின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தனர், அவர் 1991 இல் இருந்து தொடர்ந்து ஏழு முறை கீழ்சபையில் ரியோ டி ஜெனிவா மாநில பிரதிநிதியாக பதவியில் இருந்துள்ளார்.

1999 இல், அப்போதைய வெனிசூலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸின் "ஒரு பார்வையாளராக" இருக்க விரும்புவதாக தெரிவித்தார், அவரை "இலத்தீன் அமெரிக்காவின் நம்பிக்கையாக" அறிவித்தார், அவரும் சரி சாவேசும் சரி "கம்யூனிச-எதிர்ப்பாளர்கள்" கிடையாது என்றார். இத்தகைய "தேசியவாத" நிலைப்பாடுகளாக இருக்கக்கூடியவற்றின் காரணமாகத்தான், போல்சொனாரோ தொழிலாளர் கட்சி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் சகித்துக் கொண்டிருக்கப்பட்டார் என்பது மட்டுமல்ல, மாறாக ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக தொழிலாளர் கட்சி அரசாங்கம் மட்டுமே மேற்கொண்டு வந்த 2003 ஓய்வூதிய சீர்திருத்தம் போன்ற நவதாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு முக்கிய வாக்குவங்கியாக கருதப்பட்டார், அந்த சீர்திருத்தங்கள் எல்லாம் மோசடியான வலதுசாரி ஜனரஞ்சகவாத மற்றும் தேசியவாத முறையீட்டை வடிவமைக்க அவரை அனுமதித்தன.

2014 உலக கோப்பை கால்பந்தாட்டம் மற்றும் 2016 கோடைகால ஒலிம்பிக்கை நடத்துவதற்கான உள்கட்டமைப்புகளைக் கட்டமைப்பதற்காக மக்களை வெளியேற்றுவதற்கும், தொழிலாள வர்க்க அண்டைபகுதிகளில் மருத்துவம், கல்விக்கு நிதியைக் குறைத்ததற்கும் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எழுந்த பாரிய எதிர்ப்பின் முன்னால், தொழிலாளர் கட்சி நடைமுறையளவில் மத்திய அரசின் காபந்து அரசாக மாற்றிய ஒரு நகரமான ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்த போல்சொனாரோ, தொழிலாளர் கட்சி தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்ததன் மீதிருந்த பரந்த கருதுகோளை பெருவணிகங்களுக்காக சுரண்டிக் கொள்ள முடிந்தது. அவரால் குற்றத்தின் மீதிருந்த அச்சத்தைத் துப்பாக்கி-சார்பான, இராணுவ-சார்பான அதீத வாய்வீச்சைக் கொண்டு சுரண்ட முடிந்தது—அவர்கள் துப்பாக்கியைக் கொண்டு சுடுவதைப் போல விரல்களைச் சுட்டிக்காட்டும் அடையாளக் குறி அந்த வேட்பாளராலும் அவர் ஆதரவாளர்களாலும் பயன்படுத்தப்பட்டது. போல்சொனாரோ குற்றவாளிகளைக் கொல்வதை பொலிஸிற்கு சுலபமாக்குவதற்கும் அழைப்புவிடுத்துள்ளார், இந்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு 5,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளனர்.

போல்சொனாரோ தொழிலாளர் கட்சியின் அவருக்கு எதிரான போட்டியாளர் ஹெடாட் உடன் ஒப்பிடுகையில், கருத்துக்கணிப்புகளில் 45 சதவீத நிராகரிப்பு விகிதத்தை முகங்கொடுக்கிறார். இந்த பரவலான நிராகரிப்பாளர்கள் அக்டோபர் 28 இல் அவரைத் தோற்கடிக்க போதுமானதாக இருப்பார்கள் என்றால், இதன் விளைவு இராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்ததற்குப் பிந்தைய மிகவும் வலதுசாரி அரசாங்கத்தின் தலைமையில் தொழிலாளர் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வரும்.

கருத்துக்கணிப்புகளில் அவரின் தோல்வி சட்டபூர்வமானதல்ல என்று குறிப்பிட்டுள்ள போல்சொனாரோ, ஆதரவுக்காக பகிரங்கமாக இராணுவத்திற்கு முறையிட்டுள்ளார் — இது சர்வாதிகாரம் நீக்கப்பட்டதற்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் சமீபத்தில் அரசியல் குறுக்கீடு செய்துள்ளது.

தொழிலாளர் கட்சி ஆதரவுக்காக பெருவணிகங்களுக்கு முறையிட்டுள்ள அதேவேளையில், PSDB இன் தார்மீக மதிப்பிழந்த வலதுசாரி "ஜனநாயக" அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி O Globo வலையமைப்பு மற்றும் Veja சஞ்சிகை போன்ற போல்சொனாரோ-விரோத அறிக்கைகளை நடத்தி வரும் மதிப்பிழந்த ஊடக பெருங்குழுமங்களையும் கூட தழுவி, “பாசிச-விரோத கூட்டணியை" ஒருங்கிணைந்து பிணைப்பதற்காக முயலுகின்ற அதேவேளையில், முற்றிலும் ஒரு முதலாளித்துவ கட்சியான அது, தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவொரு வர்க்க முறையீடு செய்ய விரும்பவும் இல்லை அல்லது அவ்வாறு முறையீடு செய்ய கூடிய நிலையிலும் இல்லை.

தொழிலாளர் கட்சியின் கொள்கைகள் அதிவலதை மட்டுமே பலப்படுத்தும் என்பதுடன், 1964 இல் தொடங்கி இரண்டு தசாப்தங்களாக அந்நாட்டை ஆட்சி செய்த ஓர் ஆட்சியை விட இரத்தக்களரியான சர்வாதிகாரம் ஒன்று திரும்பி வரும் அச்சுறுத்தலை மட்டுமே அதிகரிக்கின்றது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரேசிலிய பிரிவைக் கட்டமைப்பதன் மூலமாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையைக் கட்டமைப்பதே இத்தகைய அபாயங்களுக்கான ஒரே பதிலாகும்.