ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The “new cold war,” censorship, and the future of the internet

“புதிய பனிப்போரும்", தணிக்கையும் மற்றும் இணையத்தின் எதிர்காலமும்

Andre Damon
17 October 2018

இணைய தணிக்கை மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் மோதல்கள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், “இணையத்தின் உடைவு" குறித்து எச்சரித்து நியூ யோர்க் டைம்ஸ் முக்கிய தலையங்க அறிக்கை ஒன்றை செவ்வாய்கிழமை பிரசுரித்தது. “விடயங்கள் இதே பாதையில் போய் கொண்டிருந்தால்,” “புதிய பனிப்போரில் இன்னொரு முன்னணி வகிக்கும் பாத்திரம் என்றில்லாமல், அடுத்த தசாப்தம் இணையம் புறக்கணிக்கப்படுவதை காணும்,” என்று அப்பத்திரிகை எச்சரிக்கிறது.

அந்த தலையங்கம் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet இன் தலைவர் எரிக் ஷிமித் இன் ஓர் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டுவதைப் போல குறிப்பிட்டு தொடங்குகிறது, அதாவது அவர் குறிப்பிடுகிறார், டைம்ஸின் வார்த்தைகளில், “அடுத்த 10 இல் இருந்து 15 ஆண்டுகளில், இணையம் அனேகமாக இரண்டாக உடையக் கூடும்—ஒன்று சீனா தலைமையிலான இணையம், மற்றொன்று அமெரிக்கா தலைமையிலான இணையம்.”

டைம்ஸ் தகவல்களின்படி, "இணையம் உலகளவில் நீடித்திருக்குமா என்பதை வைத்து [ஷிமித்] நிஜமாகவே கேலி செய்வதாக தெரியவில்லை.” இந்த மதிப்பீட்டுடன் உடன்படுகின்ற அதேவேளையில், அப்பத்திரிகை இதையும் சேர்த்துக் கொள்கிறது, “அவ்வாறு எதுவாயினும் நடந்தாலும், திரு. ஷிமித் சிந்தனையில் உள்ள பிழை என்னவென்றால் அவர் சுலபமாக ஐரோப்பிய இணையம் குறித்து கைவிட்டுள்ளார், அது முன்பை விட அதிகரித்து கொண்டே இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில்நுட்ப நெறிமுறை செயல்திட்டத்தைச் சுற்றி கைகூடி வருகிறது. அனைத்து அறிகுறிகளும், எதிர்காலத்தில் மூன்று இணையங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.”

சீனாவில் மட்டுமல்ல, இந்த மொத்த “மண்டலங்களிலும்" தணிக்கை என்பது பொதுவானதாக இருக்குமென்று டைம்ஸ் எச்சரிக்கிறது. “இணைய தணிக்கை மற்றும் உளவுபார்ப்பு ஒருசமயத்தில் ஒடுக்குமுறை அரசாங்கங்களின் தனித்தன்மைகளாக இருந்தன—எகிப்து, ஈரான் மற்றும் சீனா பிரதான எடுத்துக்காட்டுகளாகும்.” ஆனால் இப்போது இது "ஜனநாயக-விரோத சக்திகளின் களத்தில் மட்டும் இல்லை" என்பது தெளிவாகி உள்ளது.

செனட்டர் மார்க் வார்னர் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் ஷிகிஃப் உட்பட ஜனநாயக கட்சியின் முன்னணி பிரமுகர்களுடன் சேர்ந்து, டைம்ஸ், அண்மித்து இரண்டு ஆண்டுகளாக, இணைய தணிக்கைக்கான அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் முயற்சிகளை நியாயப்படுத்துவதில் முன்னிலையில் இருந்துள்ளது என்ற உண்மையைக் கொண்டு பார்த்தால், அதன் எச்சரிக்கை முரண்நகையாக உள்ளது. அண்மித்து இரண்டு ஆண்டுகளாக, டைம்ஸ், அமெரிக்க அரசியலில் "ரஷ்ய தலையீட்டை" எதிர்கொள்வதற்காக என்ற பெயரில், தணிக்கை நடவடிக்ககளை ஊக்குவித்து, தூண்டிவிட முனைந்து வந்துள்ளது.

இந்த பிரச்சாரம், ஏப்ரல் 2017 இல் கூகுள் பொறியியல் பிரிவு துணை தலைவர் பென் கோம்ஸ் அறிவித்த, “Project Owl” என்று அறியப்பட்ட ஒரு முனைவுடன் தொடங்கி, தொடர்ச்சியான அதிகரித்த தணிக்கை நடவடிக்கைளில் விளைந்துள்ளது, இத்திட்டம் அதன் தேடுபொறி முடிவுகளில் உலக சோசலிச வலைத் தளம் உட்பட இடதுசாரி வலைத் தளங்களை புதைந்து போக செய்தது.

பேஸ்புக் மற்றும் ட்வீட்டரும் இதே நடவடிக்கைகளைப் பின்தொடர்கின்றன, அவற்றின் பயனர் செய்தி ஓடைகளில் எதிர்ப்பு பக்கங்களை நிலை தாழ்த்தி இருப்பதுடன், கடந்த வாரம்தான், மில்லியன் கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட இடதுசாரி செய்தி பக்கங்களின் கணக்குகளை மூடின. டைம்ஸ் இந்த நடவடிக்கைகளின் ஒவ்வொரு படியையும் உற்சாகப்படுத்தியதுடன், பேஸ்புக் நீக்கிய அரசியல் பக்கங்களை "ஸ்பாம்" என்றும், “உள்நாட்டு பிழையான தகவல்" என்றும் முத்திரை குத்தும் அளவுக்குச் சென்றது.

டைம்ஸ் மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கமும் இப்போது அவற்றின் சொந்த தகர்ப்பு பொறியை உயர்த்திப் பிடித்து வருகின்றன. அமெரிக்க அரசு மற்றும் உளவுத்துறை எந்திரம் இணையத்தை ஆயுதமயப்படுத்த முனைந்துள்ள நிலையில், மற்றய சக்திகளும் அதையே செய்து வருகின்ற நிலையில், இணையம் என்பது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கான போர்க்களமாக மாறி உள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள், குறிப்பாக கூகுள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்களுக்கு ஏற்ப அவற்றின் அனைத்து நடவடிக்கைகளையும் வடிவமைக்கவில்லை என்பது தான் டைம்ஸ் ஐ எரிச்சலூட்டுகிறது.

டைம்ஸ் எழுதுகிறது, “அமெரிக்க பெருநிறுவனங்கள்,” “பால்கன்மயப்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க மிகச் சிறிதளவே செயலாற்றுகின்றன, அதற்கு பதிலாக அவை அவற்றின் செயல்பாடுகளை விரிவாக்க என்னென்ன அவசியமோ அதை செய்கின்றன. … இணையத்தின் எதிர்காலம் முப்பரிமாண பனிப்போர் என்றால், சிலிக்கான் தொழில் மண்டலம் அந்த மூன்று உலகங்களிலும் பணம் சம்பாதிக்க விரும்புகின்றன.”

அமெரிக்க அரசாங்கத்திற்குள் முன்னணி பிரமுகர்களது எதிர்ப்பு அறைகூவல் இருந்தாலும், சீன அரசாங்கம் திணிக்கும் விதிகளின் கீழ் சீனாவிலும் அந்நிறுவனம் செயல்படும் என்று அது வலியுறுத்துவது தான் கூகுள் மீது டைம்ஸை கோபமூட்டுகிறது.

சீனச் சந்தைக்கான தணிக்கை செய்யப்பட்ட தேடுபொறியை உருவாக்குவதென்ற அந்நிறுவனத்தின் திட்டங்கள், உண்மையில் அந்நிறுவனம் பகிரங்கமாக சுட்டிக்காட்டியவற்றோடு சேர்ந்து இன்னும் கூடுதலானவை என்பதை தெளிவுபடுத்திய ஒரு கசியவிடப்பட்ட கோம்ஸ் உரையை டைம்ஸ் சுட்டிக்காட்டியது. “கூகுள் க்கு உள்ளிருந்து திரு. கோம்ஸின் கசியவிடப்பட்ட உரை ஒரு நேரத்தில் ஏறத்தாழ அச்சமூட்டும் விதத்தில் ஒலித்தது. 'இந்த உலகம் இதற்கு முன்னர் நாம் ஒருபோதும் வாழ்ந்திராத ஓர் உலகமாக இருக்கும்,' என்று திரு. கோம்ஸ் பணியாளர்களுக்குத் தெரிவித்தார். 'அனைவருக்கும் நான் கூறுவது, நாம் கூலிக்கு மாரடிக்கும் பலரை உருவாக்கி உள்ளோம், நாம் அவர்களைத் தான் தக்க வைத்துள்ளோம்.'”

உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கு திரு. கோம்ஸின் "அச்சமூட்டும்" திட்டங்கள் பரிச்சயமானவையே, இவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இணைய தணிக்கை மீதான கூகுள் நடவடிக்கையில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளார். அவர் அமெரிக்காவிற்குள் அரசியல் எதிர்ப்பை ஒடுக்க செயல்பட்டு வந்த போது, டைம்ஸ் ஒருபோதும் அவர் பெயரைக் குறிப்பிட்டதில்லை, அது அவர் தலைமேற்றிருந்த தணிக்கை திட்டத்தைப் பாதுகாத்தது.

ஆனால் இப்போது கூகுள் சீன அரசுடன் கூட்டு சேர்ந்து தணிக்கையை நடைமுறைப்படுத்த முயலுகையில், டைம்ஸ் "விரல்விட்டு எண்ணக்கூடிய களங்கள் மற்றும் சேவைகளின் பலத்தைக்" குறித்து குறை கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க உளவுத்துறை எந்திரத்திற்காக பேசுகின்ற, டைம்ஸ், அந்நிறுவனம் தங்களுக்காக மட்டும் செயல்பட வேண்டுமென நினைக்கிறது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் "வெளிநாட்டு குறுக்கீட்டை" தடுப்பதற்காக என்ற பெயரில் உள்நாட்டு அரசியல் எதிர்ப்பைத் தணிக்க வேண்டுமென அது விரும்புகிறது. ஆனால் சீன உகூர்கள் மத்தியில் பிரிவினைவாத உணர்வுகளை ஊக்குவிப்பதற்கான அமெரிக்க ஆதரவிலான பிரச்சாரம் உட்பட, டைம்ஸ் இதை சூசகமாக குறிப்பிடுகிறது, அதே நிறுவனங்கள் அமெரிக்கர்களின் “குறுக்கீட்டை” தடுக்க வெளிநாட்டு அரசாங்கங்களுடன் கூடி செயலாற்றுவதை நிராகரிக்க வேண்டுமென அது விரும்புகிறது.

டைம்ஸூம், அது யாருக்காக பேசுகிறதோ அந்த அமெரிக்க ஆளும் உயரடுக்கும், இணையத்தின் விதிகள் அமெரிக்காவில் எழுதப்படும் வரையில், சொல்லாடல்களை அமெரிக்க ஆளும் வர்கம் கட்டுப்படுத்த முடியும் வரையில், இணையத்தை "உலகளாவியதாக" வைத்திருக்க விரும்புகின்றன. ஏனைய அரசுகளும் ஏனைய ஆளும் உயரடுக்குகளும் அவர்களின் சொந்த உள்நாட்டு மற்றும் புவிசார்அரசியல் நலன்களுடன் பிணைந்த, அவற்றின் சொந்த விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நகர்கையில், அதை அதனால் சகித்துக் கொள்ளவியலாததாக கருதுகிறது.

டைம்ஸ் பாசாங்குத்தனம் ஒருபுறம் இருக்க, அது சுட்டிக்காட்டும் சூழல் மிகவும் யதார்த்தமானதும்—மற்றும் அபாயகரமானதும் ஆகும். இணையம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகவும் சக்தி வாய்ந்த இயங்குமுறையாக உருவானது, அவ்விதத்தில் அது தேசிய பிளவுகளையும் மற்றும் தொழில் நிபுணத்துவம் கொண்ட "வாயில்காப்போன்களின்"—அதாவது ஸ்தாபக ஊடகங்களின் கட்டுப்பாட்டுக்குக் குழிபறித்தது. கையடக்க கருவிகள் மற்றும் சமூக ஊடக தளங்களின் பெருக்கத்துடன் சேர்ந்து, பரந்த மதிப்பார்ந்த தகவல்கள் இப்போது உலகெங்கிலுமான தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் கிடைத்து வருகின்றன.

இந்த அபிவிருத்தி முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளைப் பீதியூட்டுகிறது. குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கம், இரண்டு முனையில் போர் செய்து வருகிறது. அது உள்நாட்டு எதிர்ப்பை ஒடுக்க அமெரிக்காவை மையமாக கொண்ட சமூக ஊடக மற்றும் இணைய நிறுவனங்களுக்கு அழுத்தமளிக்க விரும்புகின்ற அதேவேளையில், அதன் போட்டியாளர்கள் மற்றும் விரோதிகள், சீனாவில் ஆகட்டும் அல்லது ஐரோப்பாவில் ஆகட்டும், அவர்களின் சொந்த கட்டுப்பாட்டு இயங்குமுறைகளை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளை கீழறுக்க விரும்புகிறது.

சுதந்திரமான சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த இணையத்திற்கான அச்சுறுத்தல் முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடாகும்—அதாவது பூகோளமயப்பட்ட பொருளாதாரத்திற்கும் தேசிய-அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான, சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் மற்றும் பொருளாதார வாழ்வைத் தனியார் இலாப திரட்சிக்காக அடிபணிய வைப்பதற்கும் இடையிலான முரண்பாடாகும். தகவல்தொடர்பு அமைப்புமுறைகள் உலகளாவியவை, ஆனால் அவை எதிர்விரோத ஆளும் வர்க்கங்களால் சூழ்ச்சியுடன் கையாளப்படுகின்றன. தகவல் பரவல் இயல்பிலேயே விடுதலை அடையச் செய்யக்கூடியவை, ஆனால் அதன் பரவலுக்கான உள்கட்டமைப்பு பலம் வாய்ந்த பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஒரு சுதந்திரமான மற்றும் உலகளாவிய இணையத்தைப் பாதுகாக்க தகைமை கொண்ட சமூக சக்தி தொழிலாள வர்க்கமாகும், உண்மையான ஒரே சர்வதேச வர்க்கமான இதன் நலன்கள் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறைக்கான எதிர்ப்புடன் பிணைந்துள்ளன. தணிக்கைக்கு எதிரான போராட்டமானது மனிதயினம் வென்றுள்ள சமூக, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப சாதனைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும். அது போர், சமத்துவமின்மை மற்றும் எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்துடன் தவிர்க்கவியலாமல் பிணைந்துள்ளது.

சுருக்கமாக கூறுவதானால் இதுவொரு புரட்சிகர பிரச்சினை. சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகளின் இரு-முனை போருக்கு முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஒரே-முனை போரைக் கொண்டு விடையிறுக்க வேண்டும். சமத்துவம் மற்றும் உற்பத்தி மீதான ஜனநாயக கட்டுப்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் உலகளாவிய சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக, இணையம் பாதுகாப்பான அடித்தளங்களில் நிறுவப்பட வேண்டும்.