ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German neo-Nazi group arrested after far-right riot in Chemnitz

கெம்னிட்ஸ் வலதுசாரி வன்முறைக்கு பின்னர் ஜேர்மன் நவ-நாஜி குழு கைது செய்யப்பட்டது

By Johannes Stern
2 October 2018

ஜேர்மன் மாநிலங்களான சாக்சோனி மற்றும் பாவேரியாவில் அரசு வழக்குத்தொடுனர் அலுவலகம், ஒரு வலதுசாரி பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதற்காக திங்களன்று ஏழு நபர்களைச் சந்தேகத்தின் பேரின் கைது செய்ய உத்தரவிட்டது. 20-30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், செப்டம்பர் 14 இல் கெம்னிட்ஸில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டியான் கே உடன் சேர்ந்து சட்டவிரோதமாக "புரட்சி கெம்னிட்ஸ்" என்ற பெயரில் ஒரு குழுவை ஸ்தாபித்ததாக பொலிஸ் விசாரணைகள் தெரிவித்தன. வெளிநாட்டவர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டு, இவர்கள் அக்டோபர் 3 இல் ஜேர்மன் ஐக்கிய தினத்தில் ஓர் ஆயுதமேந்திய நடவடிக்கையை நடத்தவும் ஓர் அதிவலது கிளர்ச்சியை மேற்கொள்ளவும் திட்டமிட்டு வந்தனர்.

அரசு வழக்குத்தொடுனர் அலுவலகத்தின் ஒரு பெண் செய்தி தொடர்பாளர் ஃபிரவ்க்க கோலர் அறிவிக்கையில், “அவர்கள் வெளிநாட்டவர்கள் மீது மட்டுமல்ல, குறிப்பாக அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராகவும் வன்முறையான தாக்குதல்கள் மற்றும் ஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கு ஒன்று கூடியிருந்தார்கள்" என்பது அந்த வலதுசாரி தீவிரவாதிகளின் தகவல் தொடர்புகளில் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார். “ஏற்கனவே ஆயுதங்கள் பெறுவதற்காக கவனத்துடன் செயல்பட்டு வந்த அந்த குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், நன்கு வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின்படி செயற்பட்டனர்" என்பதும் அவர்களின் தகவல் தொடர்புகளில் ஊர்ஜிதப்பட்டது.

ஆகவே "செப்டம்பர் 14 இல் [கெம்னிட்ஸின்] Schlossteichinsel நகரில் நடந்த தாக்குதல் அக்டோபர் 3 இல் நடத்த திட்டமிட்டிருந்த ஒரு நடவடிக்கைக்கான வெள்ளோட்டமாக இருந்தது" என்று அறியப்படுகிறது. அந்த வலதுசாரி தீவிரவாதிகள் அக்டோபர் 3 இல் என்ன திட்டமிட்டிருந்தார்கள் என்பது குறித்து அரசு வழக்குத்தொடுனர்கள் அலுவலகத்திற்கு துல்லியமாக இன்னும் தெரிவில்லை, ஆனால் விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் "கால்பந்தாட்ட மைதானங்களில் நடந்த அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள், நவ-நாஜி வட்டாரம் மற்றும் சாக்சோனியின் மொட்டைத்தலையர்களின் வட்டாரங்களின் பாகமாக இருந்தனர்" என்பதோடு, “சாக்சோனியில் அதிவலது வட்டாரத்தின் முன்னணி பிரமுகர்களாக" தங்களை அவர்கள் கருதினார்கள்.

செப்டம்பர் 14 இல் வலதுசாரி தீவிரவாத Pro Chemnitz இயக்கத்தின் ஒரு பேரணிக்குப் பின்னர், குடிமக்களின் ஒரு ஆயுதபாணிகள் என்று சுயமாக நியமித்துக் கொண்ட ஒரு குழு, புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடதுசாரி நபர்கள் மீது கண்ணாடி போத்தில்கள், இரும்பு வளையம் தாங்கிய கையுறைகள் மற்றும் மின் அதிர்வு கருவிகளைக் கொண்டு தாக்கியது, இதில் 26 வயதான ஈரானியர் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.

ஒட்டுக்கேட்கப்பட்ட அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள், அக்டோபர் 3 இல் அக்குழு என்ன திட்டமிட்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன.

Der Spiegel பத்திரிகை செய்திகளின், அந்த வலதுசாரி தீவிரவாதிகள் "ஒரு புரட்சிக்கு திட்டமிட" அழைப்புவிடுத்த Telegram குழு என்ற ஒன்றுடன் அவர்களின் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர், அங்கே அவர்கள் ஒரு வன்முறையான "அமைப்புமுறை மாற்றம்" குறித்து பெருமையாக கருத்து பரிமாறி இருந்தனர். இந்த இலக்கை அடைவதற்கு, “வன்முறைக்குப் பொறுப்பேற்க தயாரானவர்கள் மட்டும்" நியமிக்கப்பட இருந்தார்கள். அவர்கள் வெளிப்படையாகவே பகுதியாக-தானியங்கிமயப்பட்ட ஆயுதங்களைப் பெறவும் முனைந்தனர். Der Spiegel தகவல்களின்படி, அக்டோபர் 3 நடவடிக்கை ஜேர்மன் வரலாறில் ஒரு "திருப்புமுனையை" பிரதிநிதித்துவம் செய்யும் என்று அந்த நவ-நாஜிக்கள் கருத்து பரிமாறி இருந்தனர்.

Süddeutsche Zeitung பத்திரிகையின் செய்திகளின்படி, அந்த பயங்கரவாத குழு ஒரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு திட்டமிட்டு வந்தது என்ற உண்மை, "கூட்டாட்சி குடியரசின் வரலாற்றிலேயே மிக அபாயகர பயங்கரவாத குழுவான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கத்தை (NSU) விட பெரிய விருப்பங்களைக் கொண்டிருந்தது" என்பதில் எடுத்துக்காட்டப்படுகிறது. “புரட்சி கெம்னிட்ஸ்" அங்கத்தவர்கள் "NSU குற்றவாளிகள் Uwe Mundlos, Uwe Böhnhardt, மற்றும் Beate Tzschäpe போல வெறுமனே அச்சம் மற்றும் பயங்கரவாதத்தைப் பரப்புவது குறித்து மட்டும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை, மாறாக ஒட்டுமொத்தமாக சமூகத்தை மாற்றுவதைக் குறித்தும், NSU வெறுமனே கத்துக்குட்டிகளின் மற்றும் இரத்தக்கறைப்படிந்த ஆரம்ப பயிற்சியாளர்களின் ஒரு கூட்டம் மட்டுந்தான்,” என்றும் அவர்கள் பேசியிருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன.

மத்திய அரசு மற்றும் சாக்சோனி மாநில அரசாங்கங்களின் பிரதிநிதிகள் பாசாங்குத்தனமாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், அதிவலதுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் தலைவர்களாக கூட தங்களைக் காட்டிக் கொள்ள முயன்றார்கள். “வலதுசாரி பயங்கரவாதம் ஒரு நிஜமான மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தலை முன்நிறுத்துகிறது. போக்கிரிகள், நவ-நாஜிக்கள் மற்றும் மொட்டையர்கள் அச்சத்தை மற்றும் வெறுக்கத்தக்க வன்முறை நடவடிக்கைகளைப் பரப்புவதற்காக அபாயகரமான குழுக்களாக அணிசேர்ந்து வருகிறார்கள்,” என்று சமூக ஜனநாயகக் கட்சி நீதித்துறை அமைச்சர் காத்ரீனா பார்லே தெரிவித்தார்.

சாக்சோனியின் SPD தலைவரும் துணை முதல்வருமான மார்ட்டின் டுலிக் தெரிவித்தார், “பயங்கரவாத அச்சுறுத்தல்களின் முன்னால் அரசு உடனடியாக, தீர்க்கமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” கெம்னிட்ஸ் இல் இந்த விரைவான விடையிறுப்பானது, சாக்சோனியில் மற்றும் மத்திய அரசு மட்டத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது என்பதையும் டுலிக் சேர்த்துக் கொண்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் சீகோவர் (கிறிஸ்துவ சமூக ஒன்றியம், CSU), “வலதுசாரி தீவிர கொள்கையினர் மற்றும் தீவிரவாதிகளை நோக்கிய நமது பூஜ்ஜிய-சகிப்புத்தன்மை கொள்கைக்கு ஏற்ப செயல்பட்டிருக்கிறோம். மேலும் நீதித்துறை மற்றும் போலிஸ் உறுதியாக தலையீடு செய்கின்றன என்பது இவ்விதத்தில் இவ்விடயத்தில் சரியாக உள்ளது,” என்று பெருமைபீற்றினார்.

சீகோவர் யாரை ஏமாற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்? வேறு யாரையும் விட, இந்த CSU தலைவர் தான், அதிவலது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் திட்டமிட அவர்களை நடைமுறையளவில் ஊக்குவித்து கொண்டிருக்கின்ற மத்திய அரசாங்கத்தின் வலதுசாரி மற்றும் அகதிகள்-விரோத கொள்கைகளுக்கு ஆளுருவாக விளங்குகிறார். ஒரு மாதத்திற்கு முன்னர் கெம்னிட்ஸில் அதிவலது அட்டூழியங்களுக்குப் பின்னர், இதில் நவ-நாஜி குண்டர்கள் வெளிநாட்டவர்களை விரட்டி வேட்டையாடியதுடன் ஒரு யூத உணவு விடுதியைத் தாக்கி இருந்த நிலையில், சீகோவர், “புலம்பெயர்வு பிரச்சினை தான்" “இந்நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலக்காரணம்" என்று அறிவித்தார்.

“நான் ஓர் அரசு அமைச்சராக இல்லாமல் ஒரு குடிமகனாக இருந்தால், நானும் வீதிகளில் இறங்கி இருப்பேன்,” என்று குறிப்பிட்டு, அந்த பாசிசவாத கும்பலுக்கு சீகோவர் அவரின் முழு ஆதரவை வழங்கினார்.

யதார்த்தத்தில், இந்த சமீபத்திய சம்பவங்கள், அரசாங்கம், அரசு எந்திரம் மற்றும் வெறித்தனமான வலதுசாரி தீவிரவாதிகளுக்கு இடையிலான நெருக்கமான தொடர்புகளை மீண்டும் அம்பலப்படுத்துகின்றன. குறிப்பாக ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறை அந்த நவ-நாஜி வட்டாரத்தில் ஆழ்ந்த வேர்களைக் கொண்டிருப்பதுடன், பல வலதுசாரி தீவிரவாத வன்முறை நடவடிக்கைகளில் உடந்தையாக இருந்துள்ளது. டஜன் கணக்கான இரகசிய சேவை மற்றும் போலிஸ் உளவாளிகள் NSU பயங்கரவாத குழுவின் வெளிவட்டத்தில் இருந்து செயல்பட்டனர், அக்குழு ஒன்பது புலம்பெயர்ந்தோரை மற்றும் போலிஸ் அதிகாரி ஒருவரையும் கொன்றது. அவற்றில் ஒரு படுகொலையின் போது ஹெஸ்ச மாநில உளவுத்துறை முகமையின் ஒரு பணியாளரும் அங்கிருந்தார். துரின்னிங்கியா தாய்நாட்டு பாதுகாப்புபடை என்பதிலிருந்து தான் NSU மேலெழுந்தது என்ற நிலையில், இரகசிய சேவையின் நிதியுதவியுடன் தான் ஸ்தாபிக்கப்பட்டது.

“புரட்சி கெம்னிட்ஸ்" குழுவின் எழுச்சியானது இரகசிய சேவையின் பாத்திரம் குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது. கெம்னிட்ஸ் போராட்டங்களுக்குப் பின்னர், உள்நாட்டு உளவுச்சேவையின் தலைவராக இருந்த ஹன்ஸ்-கியோர்க் மாஸன், பத்திரிகையாளர்கள், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் மீதான எந்தவொரு தாக்குதலையும் நிராகரித்தார். கெம்னிட்ஸ் இன் வேட்டையாடலை ஆவணப்படுத்திய காணொளிகளைப் "போலிச் செய்திகள்" என்றவர் ஆத்திரமூட்டும் வகையில் வர்ணித்தார். "அரசாங்கம் மற்றும் அரசு எந்திரத்தில் உள்ள மிக அதிவலது சக்திகளைப் பலப்படுத்தும் நோக்கில் ஒரு திட்டமிட்ட அரசியல் ஆத்திரமூட்டல்" என்று மாஸனின் கருத்துக்களை WSWS ஒரு கட்டுரையில் வர்ணித்தது. கெம்னிட்ஸில் இரகசிய சேவைக்கும் வலதுசாரி தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளில் இருந்து மாஸன் கவனத்தைத் திசைதிருப்ப விரும்பினாரா என்ற கேள்வி இப்போது நேரடியாக முன்வருகிறது.

மாஸன் அவரே அதிவலது வட்டாரங்களுடன் பரவலான தொடர்புகளைக் கொண்டுள்ளார். அவர் ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) இன் ஓர் ஆதரவாளராவார், இதன் நவ-பாசிசவாத பிரிவு கெம்னிட்ஸில் நவ-நாஜிக்களுடன் சேர்ந்து அணிவகுத்தது. அந்த அதிவலது கட்சியும் அதன் வலதுசாரி தீவிரவாத ஆதரவாளர்கள் பலரும் கண்காணிப்பில் இருத்தப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்த மாஸன் பல முறை முன்னணி AfD அரசியல்வாதிகளைச் சந்தித்தார். மறுபுறம், அதிவலதின் வளர்ச்சியை எதிர்த்து போராட விரும்புபவர்களை சமீபத்திய இரகசிய சேவை அறிக்கை "இடதுசாரி தீவிரவாதிகள்" என குற்றஞ்சாட்டி இருந்தது.

“புரட்சி கெம்னிட்ஸ்" அங்கத்தவர்களைக் குறித்து இன்னும் முழுமையாக தெரிய வரவில்லை. ஆனால், ஊடக செய்திகளின்படி, அதன் அங்கத்தவர்களில் ஒருவர், நிச்சயமாக Tom W., ஒரு தசாப்தத்திற்கு முன்னர் அதிவலது சகோதரத்துவ "Sturm 34” இயக்கத்தின் முன்னணி அங்கத்தவராக நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். 2009 இல் ஜேர்மன் பிராந்திய செய்தி நிறுவனம் SWR குறிப்பிட்டவாறு, “Sturm 34” இன் துணை-ஸ்தாபகர்களில் ஒருவரான Matthias Rott கெம்னிட்ஸின் ஓர் இரகசிய சேவை உளவாளியாக இருந்தார்.

அரசு எந்திரத்திற்கும் வலதுசாரி தீவிரவாத சக்திகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள், கடந்த வாரயிறுதியில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அரசு விஜயத்தின் போதும் காட்சிக்கு வந்தன. எர்டோகானின் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க ஒழுங்கமைத்த போலிஸாரில் தமது பெயர்களை பதியும்போது, சாக்சோனியின் சிறப்புப்படை பிரிவின் போலிஸ் அதிகாரிகள் ஆத்திரமூட்டும் விதத்தில் NSU அங்கத்தவர்களில் ஒருவரான Uwe Böhnhardt ன் பெயரை தமது பெயருக்கு பதிலாக பயன்படுத்தினர்.