ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government staggered by Interior Minister Collomb’s resignation

உள்துறை அமைச்சர் கொலொம்ப்பின் இராஜினாமாவினால் பிரெஞ்சு அரசாங்கம் தள்ளாடுகிறது

By Francis Dubois
8 October 2018

பிரான்சின் ஐந்தாவது குடியரசில் இதுவரை முன் ஒருபோதும் நிகழ்ந்திராத நிலைமைகளின் கீழ், அரசாங்கத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமைச்சரான ஜெரார்ட் கொலொம்ப் அக்டோபர் 2 அன்று இராஜினாமா செய்தது, ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அரசாங்கத்தின் உச்சபட்ச பலவீனத்தையும் ஆழ்ந்த நெருக்கடியையும் அம்பலப்படுத்தியுள்ளது.

அக்டோபர் 1 அன்று கொலொம்ப்பின் இராஜினாமாவை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ள மக்ரோன் மறுத்த பின்னரும் கூட, அடுத்த நாளில் அதை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி கொலொம்ப் மீண்டும் அதனைச் சமர்ப்பித்தார். ஒரு பிரதியீட்டிற்காக மக்ரோன் காத்திருந்த போதும், வெளிப்படையாக ஆச்சரியத்துடன் பிரதமர் எடுவார்ட் பிலிப்பை நிர்பந்தித்து இந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார். அதனால், பிலிப் திட்டமிட்டிருந்த அவரது உத்தியோகபூர்வ தென் ஆபிரிக்க விஜயத்தை இரத்து செய்யவும் பின்னர் நிர்பந்திக்கப்பட்டார்.

2020ல் லியோனில் நகராட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என கூறப்படும் நிலையில், மே 2019 ஐரோப்பியத் தேர்தல்களுக்குப் பின்னர் அரசாங்கத்தை விட்டு அவர் விலக விரும்பியதாக கடந்த மாதம் ஏற்கனவே கொலொம்ப் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு பிரான்சின் சக்திவாய்ந்த உள்துறை அமைச்சகத்தை தீவிரமாக தலைமையற்ற நிலைக்குத் தள்ளியது. 

மக்ரோன் தலைமையிலான பிரச்சாரத்திற்கான முதல் ஆதரவாளர்களில் ஒருவரது வெளியேற்றம் மற்றும் கடந்த ஆண்டு மக்ரோனின் தேர்வுக்குப் பின்னர் நிர்வாகத்தின் ஒரு தூணாக இருந்த மக்ரோன்-கொலொம்ப் கூட்டணி திடீரென முறிவுற்றது போன்றவை, ஜனாதிபதியை நேரடியாக கீழறுத்துவிட்டன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், ஒட்டுமொத்த பிரெஞ்சு உயரடுக்கையும் இது தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியது. இந்த அரசாங்கம், ஜனநாயக உரிமைகள் மீதான பல அடிப்படைத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்தும், பல தலைமுறைகளாக தொழிலாளர்களின் போராட்டங்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஓய்வூதியங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் வேலைவாய்ப்பற்றோர் காப்பீடு ஆகிய நலன்களை உள்ளடக்கிய அடிப்படை சமூகத் திட்டங்களில் வெட்டுக்களை ஏற்படுத்தியும் வருகின்ற நிலையில் அரசாங்கத்தின் ஸ்திரமற்றத் தன்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கொலொம்ப்பின் இராஜினாமா குறித்த சூழ்நிலைகள் பற்றி பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்தன. “அவரது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டில், முன்னாள் உள்துறை அமைச்சர் குடியரசுக் கட்சி ஜனாதிபதியை பகிரங்கமாக எதிர்த்து அவரை பின்வாங்கச் செய்துவிட்டார். அக்டோபர் 4 அன்று, ஐந்தாம் குடியரசில் 60வது பிறந்த தினத்தை நாம் கொண்டாடும் முதல் நபராவார்,” என்று லூ மொண்ட் பத்திரிகை எழுதியது. மேலும், “இமானுவல் மக்ரோனின் முன்னாள் கூட்டாளியின் வெளியேற்றத்துடன், அரசின் தலைமையிடத்தில் உண்மையில் ஒரு அதிகார நெருக்கடி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது” என்றும் சேர்த்துக் கொண்டது.

அமைச்சர்களை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசியலமைப்பு அவரைப் பொறுப்பாக்கியிருந்தாலும், நாடாளுமன்ற பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு முட்டாளாகத் தோற்றமளிக்கும் அரசாங்கத்தின் தலைவரான எடுவார்ட் பிலிப்பின் காணக்கூடிய கையாலாகத்தன்மையைப் பற்றி செய்தித்தாள்களும் கூட எச்சரித்திருந்த நிலையில், அவரது நியமனம் என்பது முற்றிலும் வியப்புக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது,”

கொலொம்ப் அவரது பதவியை விட்டு விலகியது தொடர்பாக பரந்த ஊடக குற்றச்சாட்டுக்கள் எதிரொலித்தபோதும், மக்ரோன் மற்றும் பிலிப்புக்குப் பின்னர், “மூன்றாவது பாதிப்பாளராக இருந்த அவரும், அரசு நிர்வாகம் என அறியப்படுவதன் மீதான தனது நடவடிக்கைகளின் தாக்கங்களைப் பற்றி நன்றாக அவர் அறிந்திருந்தும் அவ்வாறு அவர் செய்தமை ஒரு அதிசயமாக இருந்தது” என்றும் செய்தித்தாள்கள் சேர்த்துக் கூறின.

கொலோம்ப் அவரது வெளியேற்றத்திற்குப் பின்னர், ஜனாதிபதி இடமிருந்து உடனடியாக தன்னை விலக்கிக் கொண்டார். மக்ரோனின் கட்சியான குடியரசு அணிவகுப்பு இயக்கம் (LRM) தன்னை கைவிட்டுவிட்ட நிலையில், லியோன் நகராட்சித் தேர்தல்களில் கட்சி சாராத ஒரு வேட்பாளராக போட்டியிட தான் நோக்கம் கொண்டிருப்பதையும் அவர் அறிவித்தார். மேலும் கடந்த பல நாட்களாக, மக்ரோன் தலைமை மீதான நம்பகத்தன்மை பற்றி கொலொம்பும் அவரது கூட்டாளிகளும் இணைந்து கடுமையான அல்லது எச்சரிக்கும் தன்மையிலான பல கருத்துக்களை பத்திரிகைகளில் விடுத்து வந்தனர்.

கொலொம்ப் அவரது இராஜினாமாவுக்கு சற்று முன்னதாக பின்வருமாறு கூறியதாக கொலொம்ப்பின் கூட்டாளிகள் La Dépêche du Midi  பத்திரிகைக்குத் தெரிவித்தனர்: “மக்ரோனுடன் ஆரம்பத்தில் இருந்து இருந்துவந்த ஃபெரோண்ட், காஸ்ட்டனேர், கிறிவோ மற்றும் நான் போன்றவர்களே இப்போது வரை மக்ரோனிடம் வெளிப்படையாக பேசக்கூடியவர்கள்… அவர் என்னை வெறுக்கிறார். ஆனால், அவர் முன்பாக அனைவரும் இப்போது மண்டியிட்டாலும், முடிவில் அவர் தனிமைப்படுத்தப்படுவார், ஏனென்றால் எலிசே ஜனாதிபதி மாளிகையில் அமர்ந்திருப்பது என்பது இயல்பாகவே மக்களை தனிமைப்படுத்துகிறது.”

“களத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றிய செய்திகளை அவருக்கு தெரிவிக்க நான் முயன்றேன்” என்பதால் மக்ரோன் உடனான எனது உறவு வெடித்துவிட்டது என LCI தொலைக்காட்சியில் கொலொம்ப் தானே அறிவித்தார். மேலும் அவர் BFM தொலைக்காட்சியில், மக்ரோன் “கடவுள்களின் சாபமாக இறுமாப்பினால் பாதிக்கப்பட்ட ஒரு நபராக இருப்பார்… ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீ தன்னைதானே அளவிற்கு அதிகமாக நம்பும்போது, உன்னுடைய பாதையில் உள்ள அனைத்தையும் அகற்றிவிடலாம் என்று நீ முடிவுக்குவருவாய். கடவுள்களை அழிக்கப் போகிறவர்கள் முதலில் குருட்டுத்தனமாக அடிப்பார்கள் என்று ஒரு பழமொழி உள்ளது” என்றும் சேர்த்துக் கூறினார்.

அனைத்திற்கும் மேலாக, கொலொம்ப்பின் வெளியேற்றம், பொலிஸ் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு படையினருக்கு மத்தியிலான நீடித்த மற்றும் பரந்த அடிப்படையிலான ஆர்ப்பாட்டங்களுக்கும் புகார்களுக்கும் மத்தியில் நிகழ்ந்துள்ளது.

2016ம் ஆண்டு முடிவிலும் மற்றும் 2017ம் ஆண்டிலும் நடந்த பொலிஸின் பொது ஆர்ப்பாட்டங்களில் இது ஏற்கனவே வெடித்துள்ளது என்ற நிலையில், தற்போது நடைபெறும் பொலிஸ் “கிளர்ச்சி” பற்றி அக்டோபர் 3 அன்று உள்துறை அமைச்சகத்தில் அவர் ஆற்றிய இராஜினாமா உரையில் கொலொம்ப் அதை குறிப்பிட்டுள்ளார். அவசரகாலநிலை பிரகடனம் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்றழைக்கப்படுவதன் கீழ், தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களை அடக்குவதற்கு அதிக நிதி மற்றும் அங்கீகாரம் கோரி, பிரான்சில் பல இடங்களில் ஆயிரக்கணக்கான பொலிஸ்காரர்கள் பல முறை அணிவகுத்தனர்.

இந்த கோடையில், அரசாங்கத்தை முற்றிலும் ஸ்திரம்குலையச் செய்த பெனல்லா விவகாரத்திலும் இந்த எதிர்ப்பு வெடித்தது. மக்ரோனின் ஒரு நெருக்கமான உதவியாளரான அலெக்சாண்டர் பெனல்லா மே தினத்தன்று தன்னை ஒரு பொலிஸாக காட்டிக் கொண்டு அமைதியாக சென்றுகொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கிய நிலையில் இது எழுந்தபோது, மக்ரோனுக்கு எதிராக பிரான்சின் பெரும்பாலான நாடாளுமன்ற எதிர்க்கட்சியினர் பொலிஸை பாராட்டினர்.

இந்த விவகாரம் குறித்து வலதுசாரி குடியரசுக் கட்சியுடன் (LR) ஒரு வெளிப்படையான கூட்டணிக்கு அறிவித்தவரும், மரின் லூ பென் இன் நவ-பாசிசவாத தேசிய பேரணியுடன் (முன்னர் தேசிய முன்னணி எனப்பட்ட) இணைந்து வேலை செய்தவருமான அடிபணியா பிரான்ஸ் (Unsubmissive France –LFI) கட்சியின் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் இந்த நடவடிக்கைக்கு தலைமை வகித்தார். மே தினத்தன்று பொலிஸ் ஒடுக்குமுறைக்கு ஆதரவளிக்கும் சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர்.

நீண்டகாலமாக பிரெஞ்சு அரசாங்கத்தின் ஒரு முக்கிய சமூக அடித்தளமாக இருக்கும் பொலிஸ் படையின் முக்கிய பிரிவுகளின் ஆதரவை உண்மையில் மக்ரோன் இழந்து விட்டார் என்பதை இந்த நிகழ்வு உறுதி செய்துள்ளது.

பல்வேறு அதிவலது ஆத்திரமூட்டல்களுக்கான வளமான அடித்தளமாக தற்போது நடைபெறும் பொலிஸ் ஆர்ப்பாட்டங்கள் இருந்தாலும், முற்போக்கான முறையில் அவற்றை காட்டவும், குடியரசின் ஜனநாயகவாத ஆதரவாளர்களாக பொலிசுக்கு சான்றுகொடுக்கவும் மெலோன்சோன் முயன்றுவருகிறார்.

உண்மையில், நிறைவேற்று அதிகாரிகளின் மதிப்பிழந்த தன்மையை எதிர்கொள்கையில், தொழிலாளர்களின் போராட்டங்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமானவர்களையும் படிப்படியாக ஒடுக்குவதற்கு பொலிசார் தயாரிப்பு செய்து வருகின்றனர். அவரது கடந்த வார இராஜினாமா உரையில், பொலிஸ் “பாதுகாப்பிற்கு உறுதியளிக்க” வேண்டும் என்றும், இந்த மாவட்டங்களில் “குடியரசின் மறுவெற்றி” குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, தொழிலாள வர்க்க புறநகர்ப்பகுதிகளில் மிகுந்த பொலிஸ் தலையீடு அவசியம் என கொலொம்ப் வலியுறுத்தினார்.

கொலொம்ப்பின் வெளியேற்றம் என்பதை, மூழ்கும் கப்பலில் இருந்து மக்ரோனின் நீண்டகால ஆதரவாளர்களில் ஒருவர் விலகிவிட்டார் என்பதாக மட்டும் சாதாரணமான கருதிவிட முடியாது. சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலோ உலோவுக்கு பின்னர், ஒரே மாதத்தில் இராஜினாமா செய்த இரண்டாவது இடத்தில் இருக்கும் அமைச்சராவார். இரயில்வே வேலைநிறுத்தத்திற்கும் மற்றும் தேசிய இரயில்வே (National Railways-SNCF) தனியார்மயமாக்கத்திற்கும் பின்னர், மக்ரோனின் புகழ் ஆவியாகிப்போனது. அவரது கொள்கைகள் தங்களது நலன்களை மேம்படுத்துமென வெறும் 6 சதவிகித பிரெஞ்சு மக்கள் மட்டுமே நம்புகின்றனர் என்பதை Elabe கருத்துக்கணிப்பு தெரியப்படுத்தியுள்ளது.

கொலொம்ப்பின் வெளியேற்றம், மக்ரோன் அரசாங்கத்தின் மாபெரும் பலவீனத்தை உறுதிப்படுத்துகிறது, அதிலும், பிரான்சில் பெருமளவில் அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோனின் திட்டங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் ஆழ்ந்த எதிர்ப்பை அடிப்படையாக கொண்டது.

பொலிசாரின் அருகே இணைந்து அணிவகுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் அடிபணியா பிரான்ஸ் (LFI) அதிகாரிகளின் அணிவகுப்பு என்பது, மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் அவர்களது போராட்டத்தில் ஒரு புதிய அடியை எடுக்க வேண்டிய அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி விவரித்தது போல, சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவ-பொலிஸ் ஆட்சிக்கான உந்துதலை தடுத்துநிறுத்த, தொழிற்சங்கங்கள் திணித்திருக்கும் இரும்புப் பிடிக்குள் இருந்து கொண்டு அவர்களால் போராட முடியாது-ஏற்கனவே பெரும்பாலும் தொழிலாளர்கள் வெளியேறத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், தொழிலாளர்களுக்கான சொந்த நடவடிக்கைக் குழுக்களை கட்டமைப்பதும், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றும் அவசியத்தை எழுப்பும் ஒரு இயக்கத்தை தயார் செய்வதும் தான் தற்போதைய பணியாகும்.