ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hitler’s resurrection in Germany

ஜேர்மனியில் ஹிட்லரை மீட்டுயிர்ப்பித்தல்

Peter Schwarz
12 October 2018

ஜேர்மனியின் நாஜி தலைவர் ஒரு பேர்லின் பாதாள அறையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டு எழுபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அடோல்ஃப் ஹிட்லரின் வார்த்தைகளும் கருத்துக்களும் ஜேர்மனியின் மிகவும் பிரபல தினசரி நாளிதழ்களில் ஒன்றில் மீட்டுயிர்ப்பிக்கப்படுகின்றன.

தசாப்தங்களுக்கும், அவரின் பாசிசவாத மற்றும் யூத-எதிர்ப்புவாத அட்டூழியங்களுக்கு ஜேர்மனியில் தடை விதிக்கப்பட்டன என்றளவுக்கு, ஹிட்லரின் ஆட்சியில் முன்னொருபோதும் இல்லாதளவில் குற்றங்கள் நடத்தப்பட்டிருந்தன. அவரது அழிவார்ந்த அறிக்கையான Mein Kampf ஐ பிரசுரிப்பதற்கு ஜேர்மனி அரசாங்கம் 70 ஆண்டுகளாக தடை விதித்து வைத்திருந்தது, 2016 இல் தான் ஓர் உரைவிளக்கம் மீண்டும் வெளியானது.

ஆனால் இப்போதோ ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சி தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் பரந்த சர்வதேச பதிப்புகளைக் கொண்ட ஜேர்மன் பத்திரிகையான Frankfurter Allgemeine Zeitung (FAZ) இன் விருந்தினர் பக்கத்தில் அக்டோபர் 6 இல் எழுதிய ஒரு கட்டுரை, பெரிதும் பேர்லினின் சிமென்ஸ் தொழிலாளர்களுக்கு ஹிட்லர் ஆற்றிய நவம்பர் 1933 உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது.

“கௌலாண்டின் வரிகள் வெளிப்படையாகவே ஹிட்லரின் வரிகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன,” என்று Tagesspiegel இல் வரலாற்றாளர் வொல்ஃப்காங் பென்ஸ் கருத்துரைத்தார். “AfD தலைவர் FAZ க்கு அவரின் விருந்தினர் பக்க கட்டுரை எழுதுகையில், அவர் மேசையில் இருந்து நாஜி தலைவரின் 1933 உரைக்கு ஒரு விளக்க உரை எழுதியதாக தெரிகிறது.”

நாஜிசம் மற்றும் யூத-எதிர்ப்புவாதம் சம்பந்தமாக அங்கீகரிக்கத்தக்க ஒரு நபராக விளங்கும் பென்ஸ், “1933 இல் இருந்ததைப் போன்ற அதே உத்வேகம் வீசுவதாக ஒருவர் ஐயப்படக்கூடும்,” என்று கருத்துரைத்தார். “தேசியவாத இயக்கம், NSDAP [நாஜி கட்சி] மற்றும் அதன் எடுபிடிகளை முன்நகலாக கொண்டு,” ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி நாஜி சகாப்தத்தின் "எச்சசொச்சங்களை மெருகேற்றி" வழங்கியிருப்பதாக அது தோற்றமளிக்ககூடும் என்றார்.

கௌலாண்ட் FAZ இல், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி "ஒரு புதிய நகர்புற உயரடுக்கிற்கு" எதிராக "பாரம்பரிய நடுத்தர வர்க்கம்" மற்றும் "சாமானிய மக்கள் என்றழைக்கப்படுபவர்களின்" நலன்களை பாதுகாக்கிறது என்ற அடித்தளத்தில் அவர் கட்சியின் "ஜனரஞ்சகவாதத்தை" நியாயப்படுத்துகிறார். இந்த "பூகோளமயப்பட்ட வர்க்கத்தின்" அங்கத்தவர்கள் "ஏறத்தாழ பெரும்பாலும் பெரிய நகரங்களில் வாழ்பவர்கள், சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள், அவர்கள் வேலைகளை மாற்றிக் கொள்ளும் போது பேர்லினில் இருந்து இலண்டனுக்கும் சிங்கப்பூருக்கும் நகர்ந்து விடுவார்கள், அவர்கள் அதேபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், விடுதிகள், கடைகள் மற்றும் தனியார் பள்ளிகளை ஒவ்வொரு இடத்திலும் காண்கிறார்கள். … இதன் விளைவாக, இந்த புதிய உயரடுக்குக்கு பூர்வீக மண்ணுடனான பிணைப்பு பலவீனமாக உள்ளது. ஒதுங்கி இருக்கும் ஓர் சமாந்திரமான சமூகத்தில், அவர்கள் தங்களை உலக குடிமக்களாக உணர்கிறார்கள்,” என்று கௌலாண்ட் குறிப்பிடுகிறார்.

1933 இல், ஒரு "சிறிய, வேர்களற்ற சர்வதேச குழுவை" நிந்திக்க ஹிட்லர் இதேபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருந்தார், அது மக்களை ஒருவருக்கு ஒருவர் வசைபாட செய்தது: “இவர்கள் எல்லாயிடத்திலும் இருப்பவர்கள், உள்நாட்டில் ஓரிடத்தில் இருக்க மாட்டார்கள், மாறாக இன்று பேர்லினில் இருப்பவர்கள், நாளை புரூசெல்ஸில், நாளை மறுநாள் பாரீசில், பின்னர் பிராக்கில் அல்லது இலண்டனில் இருக்கிறார்கள், ஒவ்வொரு இடத்தையும் அவர்களின் தாயகமாக கருதுகிறார்கள்.” அவர் முன்னிருந்தவர்களின் முன்னால் அவர் கூறினார் [“யூதர்கள்!” என்ற கூச்சல் இடைமறித்தது] “உண்மையில் இவர்களை மட்டுந்தான் சர்வதேச கூறுபாடுகளாக கவனிக்க வேண்டியுள்ளது ஏனென்றால் இவர்கள் எந்தவொரு இடத்திலும் தொழில் செய்வார்கள்,” என்றார்.

இந்த "சர்வதேச குழுவுக்கு" எதிராக "மக்களை", ஒரு தேசிய கூறுபாட்டை, ஹிட்லர் எதிர்நிறுத்தினார்: “... மக்கள் அவர்களின் மண்ணோடு பிணைந்தவர்கள், அவர்களின் தாயகத்துடன் பிணைந்தவர்கள், அவர்களின் அரசு, தேசத்தின் வாழ்க்கை வாய்ப்புகளுடன் பிணைந்தவர்கள். மக்கள் அவர்களைப் பின்பற்ற முடியாது.” கௌலாண்டின் "மெருகூட்டிய" வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “... இவர்களுக்கு தங்களின் தாயகம் இன்னமும் மதிப்புடையதாக உள்ளது, தாங்கள் வாழுமிடம், இதற்குள் தான் புலம்பெயர்ந்தவர்கள் வெள்ளமென புகுந்து வருகிறார்கள் என்பதால் தங்களின் தாயகத்தை முதலில் இழக்கின்றனர். இவர்களால் சர்வசாதாரணமாக நகர்ந்து விட முடியாது, எங்கே வேண்டுமானாலும் சென்று கோல்ஃப் விளையாட்டை விளையாடி விட முடியாது.”

இந்த தொனியில் அடியிலிருக்கும் யூத-எதிர்ப்புவாதம் வெளிப்படையாக உள்ளது. பிடிங்கி நடக்கூடிய "பல்நோக்குத்தன்மை கொண்ட" யூதர்களின் பிம்பம் நாஜி பிரச்சாரம் எங்கிலும் ஒரு சிவப்பு நூலிழையாக ஓடுகிறது. ஆனால் ஹிட்லரிடம் இருந்து கௌலாண்ட் கடன் வாங்கியிருப்பவை, அதை விட ஒருபடி கூடுதலாக செல்கிறது. தேசம் மற்றும் தாயக வழிபாடு—இரத்தமும் மண்ணும்—பாசிசம் மற்றும் நாசிச சித்தாந்தத்தின் மூலமையத்தை உருவாக்கி இருந்தன.

நாஜிக்களின் வெறிப்பிடித்த தேசியவாதம் முதலாளித்துவ உலகளாவிய பொருளாதாரத்தின் வீச்சிலிருந்து ஜேர்மன் நடுத்தர வர்க்கத்தையோ அல்லது தொழிலாள வர்க்கத்தையோ காப்பாற்றிவிடவில்லை; அது ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களுக்காக இரண்டாம் உலக போரின் போர்க்கள பலிபீடத்திற்கு அவர்களை அனுப்பியது. அந்நேரத்தில், இந்த வெறிப்பிடித்த தேசியவாதம் புரட்சிகர தொழிலாளர்களின் இயக்கத்தால் எதிர்க்கப்பட்டது, இது "உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற போர் முழக்கத்துடன் 1848 இல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் "கம்யூனிஸ்ட் அறிக்கையை" பிரசுரித்ததில் இருந்து சர்வதேசமயப்பட்டதாக இருந்தது.

முதலாளித்துவ தேசியவாதமானது நிலப்பிரபுத்துவ துண்டாடல்கள் மற்றும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருந்த வரையில், அது முற்போக்கான மற்றும் ஜனநாயக போக்குகளுடன் பிணைந்திருந்தது. ஆனால் இந்த சகாப்தம் 19 ஆம் நூற்றாண்டுடன் முடிந்துவிட்டது. தேசிய-அரசானது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் சர்வதேச முன்னேற்றத்தை மற்றும் ஒருங்கிணைப்பை மிகவும் சுருக்குவதாக மாறியது. ஜேர்மனியும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளும் அவர்களின் போட்டியாளர்களை விலையாக கொடுத்து உலகை பலவந்தமாக மறுபங்கீடு செய்ய முனைந்தன. இதுதான் முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களுக்கான காரணமாக இருந்தது.

“தேசியவாத பிரேதங்களில் இருந்து வரும் தொற்றுயிரிகளுக்குக் காப்பு மருந்திடுவதன் மூலம் பொருளாதார வாழ்வைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள், இரத்த நஞ்சூட்டலாய் விளைகிறது, இது பாசிசம் என்ற பெயரைத் தாங்கியுள்ளது,” என்று நவம்பர் 1933 இல் லியோன் ட்ரொட்ஸ்கி, ஹிட்லர் சீமென்ஸில் உரை வழங்கிய அதே மாதம், எழுதினார். “உலக அரங்கில் எரிமலைக்கு ஒத்த வெடிப்புகள் மற்றும் பிரமாண்டமான மோதல்களுக்குத் தயாரிப்பு செய்து வரும் பாசிசவாத தேசியவாதம், பேரழிவுகளைத் தவிர வேறொன்றையும் தாங்கியிராது.” (தேசியவாதம் மற்றும் பொருளாதார வாழ்வு") ஏழாண்டுகளுக்குப் பின்னர், ஹிட்லர் போலாந்து மீது படையெடுத்தார், இரண்டாம் உலக போர் தொடங்கியது.

ஹிட்லரின் இரத்தம்-மற்றும்-மண் சித்தாந்தத்தை வாந்தியெடுக்க, முன்னணி ஜேர்மன் பத்திரிகை ஒன்று AfD தலைவருக்கு அதன் பக்கங்களை வழங்கியுள்ளது என்ற உண்மையானது, ஜேர்மனியில் தீவிர வலதின் மீள்வருகை எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது. அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்கள், வர்த்தக போர் மற்றும் சமூக மோதல்களை முகங்கொடுத்துள்ள ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் அதன் குற்றகரமான பாரம்பரியங்களுக்குத் திரும்பி வருகிறது.

FAZ இன் பதிப்பாசிரியர்கள் யாருக்கு களம் அமைத்து கொடுத்து வருகிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். AfD இல் இணைவதற்கு முன்னர் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) Stahlhelm பிரிவு [இரும்பு தலைகவச பிரிவு] என்றழைக்கப்பட்டதில் தனது அரசியல் வாழ்வின் 40 ஆண்டுகளைச் செலவிட்டிருந்த கௌலாண்ட், அக்கட்சியின் தலைமையை அதீத வலதுசாரி மற்றும் Bernd Höcke போன்ற பாசிச சக்திகளுக்குத் திறந்து விட்டுள்ளார். அரசியல்ரீதியில் அவர் எங்கே நிற்கிறார் என்பது அவரது இந்தாண்டு ஜூன் மாத அறிக்கையில், ஹிட்லரும் நாஜிக்களும் "ஆயிர ஆண்டுகால வெற்றிகரமான ஜேர்மன் வரலாற்றில் வெறும் பறவையின் எச்சத்திற்கு நிகரானவை" என்றுரைத்ததில் எடுத்துக்காட்டப்பட்டது.

இந்த பொது தேர்தலில் ஜேர்மனிக்கான மாற்றீடு வெறும் 12.6 சதவீத வாக்குகளே பெற்றது என்றபோதும், இப்போது அது கூட்டாட்சி அரசியலுக்குத் தொனியை அமைத்து வருகிறது. பொலிஸ் மற்றும் இரகசிய சேவைகளுக்கு அதிகரிக்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கான (Bundeswehr) செலவுகள் உயர்த்தப்பட்டமை ஆகியவற்றுடன் சேர்ந்து, கிறிஸ்துவ ஜனநாயக கட்சியினர் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினரின் மகா கூட்டணியினது அகதிகள் கொள்கை அதன் கையொப்பத்தை ஏந்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும், 1930 களின் நாஜிக்களைப் போலன்றி, AfD ஒரு பாசிசவாத பாரிய இயக்கத்திற்குத் தலைமை கொடுக்கவில்லை. அது மக்களின் பரந்த பிரிவுகளால் நிராகரிக்கப்படுகிறது. பல நகரங்களில், அங்கே வலதுசாரி அபாயத்திற்கு எதிராக அடிக்கடி பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. முனீச்சில் மட்டும், பத்தாயிரக் கணக்கானவர்கள் அரசு அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதற்கும், சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்திற்கு எதிராகவும் மூன்று முறை போராடியுள்ளனர், பேர்லினில், சனியன்று இனவாதத்திற்கு எதிராக போராட 40,000 பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த எதிர்ப்பு, ஜேர்மன் மக்களிடையே நிலவும் பாரிய சமூக அதிருப்தியைப் போலவே, உத்தியோகபூர்வ அரசியலில் எந்த அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. மத்திய நாடாளுமன்றத்தில் (Bundestag) இடம் பெற்றுள்ள கட்சிகள், பெருநிறுவன ஊடங்களுடன் சேர்ந்து, பகிரங்கமானவே AfD இன் அரசியலை ஏற்று வருகின்றன. இந்த மகா கூட்டணி கட்டமைப்பிற்குள், சமூக ஜனநாயகக் கட்சி AfD இன் வலதுசாரி கொள்கையைப் பின்தொடர்கிறது. இடது கட்சி ஒரு தேசியவாத போக்கிற்கும் வக்காலத்து வாங்குகிறது; கௌலாண்ட் அவரே கூட அவரது FAZ கட்டுரையில் இடது கட்சி தலைவர் சாரா வாகன்கினெக்ட் ஐ வெளிப்படையாக பாராட்டினார்.

இந்த செல்வ செழிப்பான வர்க்கத்தின் முந்தைய பல தாராளவாத பிரதிநிதிகள் AfD இன் முன்னால் முதுகு வளைந்து அடிபணிந்துள்ளனர். சரியான உதாரணங்களில் பசுமை கட்சி அரசியல்வாதி போரிஸ் பால்மர் மற்றும் Spiegel கட்டுரையாளரும் Freitag இன் பதிப்பாசிரியருமான ஜேகொப் ஆகஸ்டீன் ஆகியோர் உள்ளடங்குவர். கௌலாண்ட் "ஒரு புத்திசாலித்தனமான எழுத்துக்களை" எழுதியுள்ளதாக அறிவித்த இவர்கள், “AfD உடன் கூடி ஆட்சி செலுத்த" அழைப்பு விடுத்தனர்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei – SGP) சமீபத்தில் கிறிஸ்டோபர் வாண்ட்ரியரின் "அவர்கள் ஏன் திரும்ப வந்துள்ளார்?” என்ற நூலைப் பிரசுரித்தது. இந்நூல், பல்கலைக்கழகங்கள், ஊடங்கள் மற்றும் அரசியலில் வலதை நோக்கி திரும்பியதன் மூலமாக பல ஆண்டுகளாக எவ்வாறு திட்டமிட்டு AfD இன் வளர்ச்சிக்குத் தயாரிப்பு செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

2014 இன் தொடக்கத்தில், ஊடகங்கள் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் அமைப்பான IYSSE க்கு எதிராக வெறி கொண்டு ஒரு வேட்டையாடலை நடத்தின, ஏனென்றால் இந்த அமைப்புகள் வாராந்தர சஞ்சிகை Der Spiegel இல் ஹிட்லர் "வக்கிரமானவர் இல்லை" என்று வாதிட்ட வலதுசாரி தீவிரவாத வரலாற்றாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கியை விமர்சித்திருந்தன.

இந்த தாக்குதலில் FAZ முன்னணி பாத்திரம் வகித்தது: அப்பத்திரிகையின் இப்போதைய துணை பதிப்பாசிரியர் Jürgen Kaube, “ட்ரொட்ஸ்கிச மிரட்டல்" என்று கூறி அதற்கு எதிராக பார்பெரோவ்ஸ்கியைப் பாதுகாத்தார். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி முன்கணித்ததைப் போல, நாஜிக்களின் குற்றங்களைக் குறைத்ததுக் காட்டியமை ஜேர்மனியில் வலதுசாரி, இராணுவவாத மற்றும் எதேச்சதிகார அரசியலின் மீளெழுச்சிக்கு வழி வகுத்தது.

இந்த அபிவிருத்தி ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எங்கிலும், முதலாளித்துவ ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரவாதத்திற்கும் பாசிசவாதத்தைப் புதுப்பிப்பதற்கும் திரும்பி வருகிறார்கள்.

ஜேர்மனியில் இராணுவவாதம் மற்றும் பாசிசவாதத்தின் மீளெழுச்சியைத் தடுப்பதற்கு அங்கே ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது: அதாவது, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டி, ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் நான்காம் அகிலத்தை ஒரு பாரிய சோசலிச கட்சியாக கட்டமைப்பது மட்டுமே ஆகும்.