ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

International Court of Justice strikes down US sanctions against Iran

ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் நிராகரிக்கிறது

By Alex Lantier
4 October 2018

ஹேக்கில் உள்ள நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice - ICJ) நேற்று, 2015 ஈரானிய அணுசக்தி உடன்படிக்கையை ஒழிப்பதற்கான அமெரிக்க நடவடிக்கைகளை கண்டனம் செய்ததோடு, மனிதாபிமான பொருட்களை வாங்குவதற்கு ஈரான் சர்வதேச நிதி செலுத்த முறையை பயன்படுத்திக்கொள்ள வாஷிங்டன் அனுமதிக்க வேண்டும் என ஒருமனதாகத் தீர்ப்பளித்தது. 

2012-2015 இல் ஈரான் மீது ஒபாமா நிர்வாகம் தடைகளைத் திணித்த சமயத்தில், அமெரிக்க டாலர்களில் மேற்கொள்ளப்படும் அத்தனை நிதிப் பரிவர்த்தனைகளில் இருந்தும் ஈரானை வெளியேற்றுவதன் மூலமாக, அதன் பொருளாதாரத்தை மூச்சுத்திணறடிக்க முயன்றது. அதன் வேண்டுகோளின் பேரில், புரூசெல்ஸை தளமாக கொண்டு இயங்கும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையிலான நிதித் தொலைத்தொடர்பு (SWIFT) வலைப்பின்னல், ஈரானிய வங்கிகளை அதில் இருந்து வெளியேற்றி, அதன்மூலம் சர்வதேசக் கொள்முதல்களை அமெரிக்க டாலர்களைக் கொண்டு ஈரான் வாங்கும் திறனுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சென்ற மே மாதத்தில் 2015 ஒப்பந்தத்தை ஒருதரப்பாக மறுத்ததன் பின்னர், ஈரானுடனான போருக்கான தனது தயாரிப்புகளின் பகுதியாக அதன் மீது தடைகளை மீண்டும் திணிக்கும் தனது திட்டங்களை ட்ரம்ப்பின் நிர்வாகம் தெளிவாக்கியிருந்தது.

நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பு, இன்றியமையாத பொருட்களிலான வர்த்தகத்தை வாஷிங்டன் முடக்கக்கூடாது என்று கோருவதுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்பு, —ஈரான் மீது SWIFT தடைகளை மீண்டும் திணிப்பதற்கு வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் போன்ற அமெரிக்க அதிகாரிகள் விடுக்கும் அழைப்புகள் உள்ளிட்டவை— சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்பதையும் தெளிவாக்குகிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கூற்றுக்கள் மீது இறுதித் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், வாஷிங்டன் “அது தேர்ந்தெடுக்கின்ற வழிமுறைகளின் மூலமாக, (அ) மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் (ஆ) உணவுப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்கள்; அத்துடன் பயணிகள் விமான சேவைக்கு அவசியமாவை (இ) உதாரணமாக உதிரி பாகங்கள், சாதனங்கள் மற்றும் தொடர்புபட்ட சேவைகள் போன்ற விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அவசியமான பொருட்கள் மற்றும் சேவைகள் போன்ற மனிதாபிமானத் தேவைகளுக்குரிய பொருட்கள் ஈரான் பிராந்தியத்திற்கு சுதந்திரமாக ஏற்றுமதி செய்யப்படுவதற்கு இருக்கின்ற எந்தத் தடைகளையும் நீக்குவதற்கு” ICJ உத்தரவிட்டது.

ICJ மேலும் கூறுகிறது: “இதன் பொருட்டு, மேலே கூறப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பானதாய் இருக்கும்பட்சத்தில், அமெரிக்கா உரிமங்களும் அவசியமான அங்கீகரிப்புகளும் வழங்கப்படுவதையும், பணச் செலுத்தங்களும் பிற நிதி மாற்றங்களும் எந்த கட்டுப்பாட்டிற்கும் இலக்காகாமல் இருப்பதையும் உறுதிசெய்தாக வேண்டும்.”

ஈரானின் வெளியுறவுத் துறை ICJ முடிவை பாராட்டியது, இது “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சரியான நிலைப்பாட்டை ஊர்ஜிதம் செய்வதோடு, அமெரிக்கத் தடைகளின் அநியாயம் மற்றும் ஒடுக்குமுறையையும் ஊர்ஜிதம் செய்கிறது” என்று அது தெரிவித்தது.

ஆயினும் ICJ இடம் அதன் முடிவை அமல்படுத்துவதற்கு எந்த பொறிமுறையோ அல்லது அதிகாரமோ கிடையாது, அமெரிக்க அதிகாரிகள் ICJ தீர்ப்பை மீறவிருப்பதை உடனடியாகத் தெளிவுபடுத்தி விட்டனர். ஈரானின் வேண்டுகோள்கள் “அடிப்படையற்றவை” என்று அழைத்த அமெரிக்க வெளியுறவுச் செயலரான மைக் பொம்பியோ, ICJ தீர்ப்புக்கு ஆதாரமாய் இருந்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான 1955 அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக அறிவித்தார்.” “வெளிப்படையாகச் சொன்னால், இது 39 ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும்” என்றார் பொம்பியோ, சிஐஏ ஆதரவிலான ஈரான் ஷாவின் இரத்தக்கறை படிந்த ஆட்சி 1979 புரட்சியில் கவிழ்க்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆகியிருந்ததை அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதன்பின் பொம்பியோ, வாஷிங்டன் அதன் தடைகளில் ஏற்கனவே மனிதாபிமான பொருட்களுக்கு விதிவிலக்குகள் அளிக்கிறது என்பதால் ICJ இன் தீர்ப்பு பொருத்தமற்றது என்பதாய் காட்டுவதற்கு சிடுமூஞ்சித்தனத்துடன் முயற்சித்தார். அவர் கூறினார், “நீதிமன்ற உத்தரவில் மனிதாபிமான பிரச்சினைகளாக கருதப்படக் கூடியவற்றின் மீது கவனம்குவிக்கின்ற அம்சங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டிருக்கிறோம்... மனிதாபிமானரீதியிலான பரிவர்த்தனைகளுக்கும் விமானப் பாதுகாப்பிற்கும் இப்போதிருக்கும் விதிவிலக்குகள், அங்கீகரிப்புகள் மற்றும் உரிமக் கொள்கைகள் தொடர்ந்தும் அமலில் இருக்கும். ICJ இன் முன்பாக எந்த விசாரணைக்கும் சம்பந்தமில்லாமலேயே அமெரிக்கா இந்தப் பிரச்சினைகளில் செயலூக்கத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு வந்திருக்கிறது.”

ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகள் மனிதாபிமான ரீதியில் நாசகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்திருக்கின்றன, பொம்பியோவின் வாதம் ஒரு அருவருப்பான அரசியல் பொய்யாகும். பல தசாப்த காலத்தில், பொருளாதாரத் தடைகளானவை, ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் குறிவைக்கப்பட்ட நாடுகளை வழிக்குக் கொண்டுவருவதற்காக அவற்றை மிரட்டிப் பணியவைக்கும் ஒரு முயற்சியில் அப்பாவி மக்கள் மீது சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்த அதனை அனுமதிக்கின்ற ஒரு முக்கியமான வெளியுறவுக் கொள்கை கருவியாக இருந்து வந்திருக்கிறது.

ஈராக், கியூபா மற்றும் முன்னாள் யூகோஸ்லேவியாவுக்கு எதிரான தடைகள் படுபயங்கரமான சேதாரங்களை ஏற்படுத்திய போதிலும் அமெரிக்க அதிகாரிகள் அவற்றைப் பாராட்டி வந்திருக்கின்றனர். 1991 வளைகுடாப் போருக்குப் பின்னர் ஈராக் மீது வாஷிங்டன் திணித்த ஐ.நா வர்த்தகத் தடை, சுகாதார விநியோகங்களுக்கு ஈராக்கின் அணுகலைத் துண்டித்து, கிட்டத்தட்ட 500,000 ஈராக்கிய குழந்தைகளின் உயிரிழப்புக்கு இட்டுச்சென்றது. இந்த எண்ணிக்கை குறித்து 1996 இல் கேள்வி எழுப்பப்பட்டபோது, அப்போது அமெரிக்க வெளியுறவுச் செயலராக இருந்த மட்டலன் ஆல்பிரைட் தடைகளைப் பாதுகாத்துக் கூறிய வசனம் இழிபுகழ் பெற்றதாகும்: “கடினமான தெரிவு தான், ஆயினும், விலை, அந்த விலைக்கு மதிப்பானதே என்று நாங்கள் கருதுகிறோம்.”

1979 புரட்சிக்குப் பின்னர், குறிப்பாக 2012-2015 தடைகளுக்குப் பின்வந்த காலத்தில், ஈரானை தனிமைப்படுத்துவதற்கான அமெரிக்காவின் இடைவிடாத பிரச்சாரம் ஒரு பயங்கரமான பலி எண்ணிக்கையை எடுத்திருக்கிறது.

2012க்கும் 2016க்கும் இடையிலான காலத்தில், ஈரானின் அதிமுக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி 9 பில்லியன் டாலர்களுக்கு அதிகமாய் இருந்ததில் இருந்து 3 பில்லியன் டாலர்களுக்கும் குறைவானதாக வீழ்ச்சி கண்டு, அதன் பொருளாதாரத்தையும், இன்றியமையாத உணவு, மருந்து மற்றும் தொழிற்துறை விநியோகங்களுக்கான அதன் அணுகலையும் நொருக்கி விட்டது.

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் (NIH) உயிரிதொழில்நுட்பத்திற்கான தேசிய மைய தகவல் வலைத் தளத்தின் “ஈரானுக்கு எதிரான தடைகள்: சுகாதார சேவைகள் மீதான பாதிப்புகள்” என்ற 2014 கட்டுரை ஒன்று விளக்குகிறது, “தடைகளின் பட்டியலில் மருந்துகள் இடம்பெறவில்லை என்றபோதும், மருந்து ஏற்றுமதி, நிதிப் பரிவர்த்தனை மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கான உரிமங்கள் வைத்திருப்பதிலான சிக்கல்கள், அத்துடன் மருந்து நிறுவனங்களும் சர்வதேச வங்கிகளும் அமெரிக்க தடையின் சாத்தியம் குறித்து கொண்டிருந்த அச்சம் ஆகியவை சென்ற மாதங்களில் குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகளின் பற்றாக்குறைகளுக்கு இட்டுச் சென்றது. மருந்துகளின் விலையில் திடீரென ஐம்பது சதவீத விலை உயர்வும் இன்னுமொரு பங்களிப்புக் காரணியாக இருக்கிறது… இரத்தம்கொட்டுநோய் (hemophilia), நரம்பு மண்டல பாதிப்பு நோய் (multiple sclerosis), தலசீமியா இரத்தசோகை, குஷ்ட நோய் மற்றும் மற்றும் பல்வேறு நோயெதிர்ப்பு பற்றாக்குறை வியாதிகள், மற்றும் கிட்னி மாற்று மற்றும் டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் போன்ற சிக்கலான வியாதிகளின் பாதிப்பு கொண்ட ஆறு மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளால் இதன் தாக்கம் உணரப்பட்டது.”

ஈரானில் பிப்ரவரியில் Aseman 3705 விமானம் நொருங்கி அதில் பயணம் செய்த 65 பேரும் இறந்த சமயத்தில், கார்டியன், 1979 முதலாக குறைந்தது 1,985 பேர் ஈரானின் விமான விபத்துகளில் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டியது: “1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ஈரானில் ஏராளமாக விமான விபத்துக்கள் நடந்திருக்கின்றன, உதிரிப் பாகங்கள் வாங்குவதற்கு அல்லது புதிய விமானங்கள் வாங்குவதற்கான அதன் திறனை பல தசாப்தங்களாக மேற்கத்திய தடைகள் மட்டுப்படுத்தி விட்டன என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.”

வாஷிங்டனின் புதிய தடைகள் ஈரானுக்கான இன்றியமையாத மருந்துகளின் ஒரு துண்டிப்பில் ஏற்கனவே விளைந்து விட்டிருக்கிறது. ஈரான் நாடாளுமன்றத்தின் சுகாதார ஆணையத்தின் ஒரு உறுப்பினரான முகமது-நயீம் அமினிஃபார்ட் கூறுவதன்படி, ஈரான் அரசின் மருந்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 80 முக்கியமான மருந்துகள் இனியும் கிடைக்கத்தக்கதாக இல்லை.

வருவாய் குறைந்த ஈரானியர்களை பராமரிக்கும் ஒரு ஈரானிய மருத்துவர் பிரிட்டனில் இருந்து இயங்கும் கார்டியன் பத்திரிகையிடம் கூறினார், “இனியும் இது புற்றுநோய் அல்லது இரத்தக் கொட்டுநோய் (haemophilia) அல்லது தலீசிமியா இரத்தசோகை போன்ற சிறப்பு நோய்களுக்கான மருந்துகளின் பற்றாக்குறை சம்பந்தமானதாக மட்டும் இல்லை. இரத்த உறைவை நிறுத்தும் வார்ஃபாரின் போன்ற சாதாரண மருந்துகளும் கிடைப்பது கடினமாக ஆகிறது, அதனால் நோயாளிகளின் வாழ்க்கை ஆபத்தில் இருக்கின்றன.”

ICJ இன் தீர்ப்பு சர்வதேச அளவில் அமெரிக்காவின் கொள்கைக்கு —ஈரானுக்கு எதிரான அதன் போர் முனைப்பு மற்றும் அணு ஆயுத வல்லமை பெற்ற ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வர்த்தகப் போர் மற்றும் இராணுவத் தாக்குதல் மிரட்டல்கள் உள்ளிட்டவை— எதிர்ப்பு பெருகிச் செல்வதை பிரதிபலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 1987 மத்திய-தூர அணு சக்திகள் ஒப்பந்தத்தை (INF) மீறுவதாக வாஷிங்டன் கூறுகின்ற கப்பல் ஏவுகணைகளை அழிப்பதற்காக ரஷ்யா மீது குண்டுவீசுவதற்கு ஒரு முன்கண்டிராத மிரட்டலை நேட்டோவுக்கான அமெரிக்க தூதரான கேய் பெய்லி ஹட்சிசன் (Kay Bailey Hutchison) விடுத்ததற்கு ஒரு நாள் பின்னர் இது வந்தது. அத்தகையதொரு தாக்குதல் மனிதகுலத்தை சுக்குநூறாக்கத்தக்க உலகளாவிய அணு ஆயுதப் போருக்கு மேடை அமைக்கும்.

அமெரிக்காவின் கொள்கைக்கான எதிர்ப்பு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் ”கூட்டாளிகளிடம்” இருந்துதான் அதிகமாய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 2015 ஈரான் ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக பாதுகாத்து வந்திருக்கின்றன, சென்ற மாதத்தில் அவை, ஈரானிய எண்ணெய் வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் பயன்பாட்டை சுற்றிக் கடக்கின்ற வண்ணமாக சிறப்பு நோக்க வாகன (Special Purpose Vehicle - SPV) நிதியாதாரத் திட்டம் என்பதாக அழைக்கப்படுகின்ற ஒன்றை அமைப்பதற்கு சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடனான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.  பொம்பியோ SPV திட்டத்தை கண்டனம் செய்ததோடு, இந்த “ஆக்கபூர்வமற்ற” நடவடிக்கையால் தனக்கு “உளைச்சலும்” ”ஆழ்ந்த ஏமாற்றமும்” உண்டானதாகக் கூறினார்.

மேலும், ஈரான் தொடர்பாக ஜப்பானின் வெளியுறவு விவகார அமைச்சகத்திற்கும் (MOFA) அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் டோக்கியோவில் நடந்ததாகவும் செவ்வாயன்று செய்திகள் வெளியாகின. “இரு தரப்பும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை மீண்டும் விதித்திருப்பதை செயலூக்கத்துடன் விவாதித்தன” என்றும் அமெரிக்கத் தடைகளால் ஜப்பானியப் பெருநிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற “அடிப்படைக் கோட்பாட்டினை” மீண்டும் வலியுறுத்தியதாகவும் MOFA தெரிவித்தது.

எவ்வாறாயினும், அமெரிக்க தலைமையிலான போர் முனைப்புக்கு ஒரே முற்போக்கான எதிர்ப்பு உலகெங்கிலும் போருக்கு எதிரான மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களிடம் இருந்தே வருகின்றதே அன்றி, வாஷிங்டனின் ஏகாதிபத்திய போட்டிநாடுகளிடம் இருந்தல்ல. ஈராக் முதல் ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா வரையிலும் ஏகாதிபத்தியப் போர் பரவலின் கால் நூற்றாண்டு காலத்தை கண்டிருப்பதற்குப் பின்னர், எண்ணெய்க்கான அணுகல் மற்றும் மூலோபாய அனுகூலத்திற்கான இந்த ஏகாதிபத்தியங்கள்-இடையிலான போட்டியின் வளர்ச்சியானது மத்திய கிழக்கு எங்கிலும் முழு-வீச்சிலான போரை நோக்கிய முனைப்பை துரிதப்படுத்த மட்டுமே செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.

அமெரிக்க தடைகள் குறித்து விமர்சனப்பார்வை கொண்டிருக்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்களும் கூட, தமது சொந்தக் காரணங்களுக்காக, ஈரானுடன் ஒரு மோதலையே தூண்டிக் கொண்டிருக்கின்றன. பிரான்ஸ், அதன் முன்னாள் காலனி நாடான சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க-தலைமையிலான பினாமிப் போரில் பங்கேற்கின்ற நிலையில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் ஒரு முக்கியமான இராணுவ ஆதரவாளரான ஈரானை அது ஏற்கனவே குறிவைத்திருக்கிறது. பாரிஸ் தெஹ்ரானுக்கு ஒரு புதிய தூதரை அனுப்புவதை தாமதித்து வந்திருப்பதோடு ஈரானுக்கான விஜயங்களை தள்ளிப்போடுவதற்கு தனது தூதர்களையும் அறிவுறுத்தி வந்திருக்கிறது.

நாடு கடந்த Iranian Mujahedin-e-Khalq (MEK) அமைப்பிற்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் வழக்குரைஞரான ரூடி கிலானி உள்ளிட்ட உயர்நிலை அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் ஜூன் மாதத்தில் பாரிஸ் அருகே, Villepinte என்னும் இடத்தில் நடந்த ஒரு சந்திப்பிற்கு எதிரான ஒரு முறியடிக்கப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தயாரித்ததாக, பிரெஞ்சு அரசாங்கம், நேற்று ஈரானின் உளவு அமைச்சகத்தின் மீது குற்றம் சாட்டியது. பிரான்சின் உள்துறை, பொருளாதார மற்றும் வெளிவிவகார அமைச்சகங்கள் ஒரு கூட்டு அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தன: “ஜூன் 30 அன்று Villepinte இல் திட்டமிடப்பட்ட ஒரு வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டது. எங்களது பிராந்தியத்தில் நடக்கவிருந்த இந்த மிகத் தீவிரமான தாக்குதலுக்கு பதில் கிட்டாமல் போகாது.”

ஜேர்மனியில் ஜூலை மாதத்தில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஈரானிய இராஜதந்திரி அசதோல்லா ஆசாதி, ஈரானைப் பூர்விகமாய் கொண்ட ஒரு பெல்ஜியத் தம்பதி, மற்றும் ஏனைய மூன்று பேர் என இதற்காக பாரிஸ் குற்றம் சாட்டுபவர்களுடன் ஈரானின் உளவுத்துறையை தொடர்புபடுத்துகின்ற என்ன ஆதாரத்தை பாரிஸ் கொண்டிருக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Grande Synthe அகதிகள் முகாம் அருகில் இயங்கிவரும் ஷியா இஸ்லாமிக் Zahra-France அமைப்பை மூடுவதற்கான ஒரு முக்கிய “பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை” ஐ பிரெஞ்சு போலிஸ் தொடக்கியதற்குப் பின்னர் இது வந்தது. இந்த ஒடுக்குமுறையைக் கொண்டு ஈரானுக்கு பாரிஸ் “ஒரு செய்தியை அனுப்ப” விரும்பியதாக ஊடகங்கள் தெரிவித்தன.

Villepinte இல் ஒரு பயங்கரவாதக் குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டதான குற்றச்சாட்டுகளை தெஹ்ரான் நிராகரித்தது, ஈரானிய இராஜதந்திரியை விடுதலை செய்ய அது கோரியது. “ஈரானுக்கும் பிரான்ஸ் மற்றும் பிற செல்வாக்கான ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வேர்கொண்ட உறவுகளை நாசம் செய்வதற்கு விழைகின்ற கெட்ட-நோக்கம் கொண்டவர்களது கொடிய கரங்கள்” குறித்து ஈரான் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் எச்சரித்தார்.