ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After police raids on LFI, French courts and media denounce Mélenchon

LFI மீதான போலிஸ் சோதனைக்குப் பின்னர், பிரெஞ்சு நீதிமன்றங்களும் ஊடகங்களும் மெலோன்சோனை கண்டனம் செய்கின்றன

By Alex Lantier 
18 October 2018

பாரிஸ் அரச வழக்குதொடுனரின்­ ஆணையின் பேரில் அடிபணியா பிரான்ஸ் (LFI) இயக்கத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட போலிஸ் சோதனைகளைத் தொடர்ந்து, LFI இன் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோனை இலக்கு வைக்கும் வன்முறை மிக்க ஒரு பிரச்சாரத்தை நீதிமன்றங்களும் ஊடகங்களும் தொடங்கியுள்ளன. சென்ற வருட ஜனாதிபதி தேர்தல்களில் வாக்காளர்களின் 20 சதவிகித வாக்குகளை பெற்ற ஒரு அமைப்பான LFI இற்கு கணிசமான  சட்டரீதியான தண்டனை வழங்குவதுடன் தடைசெய்யுமாறும் பகிரங்கமாகவே அவர்கள் அச்சுறுத்துகின்றனர்.

2015–2017 காலகட்டத்தில், பிரான்ஸில் உருவாக்கப்பட்ட போலிஸ் அரசை, நிதி பிரபுத்துவத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு மற்றும் சமூக கோபத்தை வெளிப்படையாக நசுக்கும் ஒரு கருவியாக மாற்றுவதில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும். உண்மையில், இந்த வகையிலான போலிஸ் சோதனைகளை, பிரெஞ்சு ஜனநாயகத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு ஒரு எச்சரிக்கையாகவே உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கருதுகின்றன. ஒரு போலிஸ் அரசு உருவாகியிருப்பதும், அது தன்னைத் தானே விரைவாக பலப்படுத்திக் கொள்வதான இந்தச் சூழ்நிலை தொழிலாளர்களுக்கு மரணகதியிலான அபாயத்தை முன்வைப்பதாகவுள்ளது.

LFI கட்சியின் தலைமை அலுவலகத்தை சோதனை செய்த மற்றும் LFI இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கட்சி தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதை சட்ட விரோதமாக தடுக்க முயன்ற போலிசார் மீது மெலோன்சோன் கோபமடைந்தது பற்றித்தான் உண்மையில் அரசும், ஊடகங்களும் கவனம் செலுத்துகின்றன. LFI அதிகாரிகள் தங்களது அலுவலகத்திற்குள் நுழைவதற்காக போலிசார் மறித்து நின்ற வழியில் ஒரு கதவை உடைக்க வேண்டியிருந்தது, மேலும், LFI கட்சியின் தலைமை அலுவலக வளாகத்திற்குள் இருந்த போலிசாரை மெலோன்சோன் கடும் சொற்களால் திட்டினார். தற்போது, இந்த மோதல் தொடர்பான பல காணொளிகள் இணைய தளத்தில் பரபரப்பாகி வருகின்றன.

அதில் ஒன்றில், மெலோன்சோன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்: “ஒரு ஜனநாயக நாட்டிலுள்ள போலிசைப் போல நீங்கள் நடந்து கொள்ளவில்லை. …நீங்கள் எங்களை தொந்திரவு செய்ய முடியாது, நீங்கள் எங்களை வெளியே அனுப்பவும் முடியாது, மேலும், எங்கள் தலைமையகத்திற்குள் நாங்கள் நுழைவதை தடுப்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களது சோதனையை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் மிகவும் விசித்திரமாக செயல்படுகிறீர்கள். நீங்களே உள்ளே நுழைந்தீர்கள், அனைத்து வகையான பொருட்களையும் எடுத்துச் செல்கிறீர்கள். எதை எடுத்துச் செல்கிறீர்கள் என்றும் எங்களிடம் கூற மறுக்கிறீர்கள், நீங்கள்  வெளியேறுகின்றீர்கள், நீங்கள் எதையெல்லாம் எடுத்துச் செல்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை.”

உண்மையில், LFI தலைவர்களின் தனிப்பட்ட எதிர்ப்புகளை தாண்டி, LFI இன் தலைமையலுவலகத்தில் இருந்த கணினிகளிலிருந்து அனைத்து விடயங்களையும் போலிஸ் சேகரித்து சென்றுவிட்டனர். LFI இன் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான, மானுவல் போம்பார்ட், போலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் நடத்தையை கண்டனம் செய்து இவ்வாறு கூறினார்: “அடிபணியா பிரான்ஸ் கட்சியின் சட்ட பிரதிநிதியாக நான் இருந்தும் கூட, நிர்வாக நடைமுறையை அணுகவோ கவனிக்கவோ முடியாமல் நான் தடுக்கப்பட்டேன் என்பதுடன், முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அத்துடன், எந்தவித சட்டரீதியான ஆவணத்திலும் நான் கையொப்பமிடவுமில்லை.”

“ஒரு போலிஸ்காரர் எனது கழுத்தைப் பற்றி கைகளையும் வளைத்துப் பிடித்து வைத்துக்கொண்டார். இந்த போலிசின் உயரதிகாரி அவரிடம் வந்து, ‘அமைதியாக இருங்கள்’ என்று கூறினார். நான் உதைத்து தாக்கப்பட்டேன்… அங்கு நடந்தது சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது,” என்றெல்லாம் அவர் கூறியதுடன், “அவரை கடுமையாக தாக்கியது குறித்து காவல் நிலையத்தில் அவர் ஒரு வழக்கை தொடரப் போவதாகவும்” வலியுறுத்திக் கூறினார்.

இருப்பினும், அரசும் ஊடகங்களும், போலிஸ் நடத்தையை விமர்சிப்பதை விடுத்து, மெலோன்சோனை தாக்கிய போலிஸூடன் அவர்களும் விரைந்து ஒன்றுசேர்ந்து கொண்டனர். மேலும், போலிஸ் சோதனையின் போது மெலோன்சோன் நடந்துகொண்ட விதம் குறித்து அவரை விசாரணை செய்யப் போவதாகவும் நீதிமன்றங்கள் நேற்று அறிவித்தன. இந்த சோதனையை முதலில் தொடங்கியதான, பாரிஸ் வழக்குதொடுனர் அலுவலகம், “நீதித்துறையை அச்சுறுத்திய அல்லது மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட” மற்றும் “பொது அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களை இலக்கு வைத்து வன்முறையாக” நடந்து கொண்ட குற்றங்கள் குறித்து ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Force ouvrière (தொழிலாளர் சக்தி FO) இன் போலிஸ் தொழிற்சங்கம் உட்பட, அதிவலதுக்கு நெருக்கமான பல போலிஸ் தொழிற்சங்கங்கள், மெலோன்சோனை “பொது மன்னிப்பு” கேட்க வேண்டும் எனக் கோரியுள்ளன. மேலும், நவ-பாசிச தேசிய முன்னணிக் கட்சியுடன் வரலாற்று ரீதியில் இணைந்த Alliance union, LFI இன் தலைவரை இலக்குவைத்து ஒரு புகாரைப் பதிவு செய்யுமாறு புதிய உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்ட்டனேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

விசாரணை தொடங்கப்பட்டுள்ள போதிலும், குறைந்தபட்சம் பாரபட்சமற்ற பொய்யான ஒற்றுமையை பாதுகாக்க, பாரிஸ் வழக்குதொடுனர் பிரான்சுவா மோலன், தானே இந்த வழக்கை நடத்த மத்திய அரச பொது வழக்குத்தொடுனர் அனுமதிக்க வேண்டுமென பின்னர் கோரினார். ஏனென்றால், அருகாமையிலுள்ள பிராந்திய நீதிமன்றம் அப்போதுதான் இவ்வழக்கிற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

முக்கிய பிரெஞ்சு ஊடகங்கள் மெலோன்சோன் மீதான கண்டனங்களை பெருமளவில் விடுக்கத் தொடங்கியுள்ளன. அனைத்திற்கும் மேலாக, உத்தியோகபூர்வ பிரசுரங்களில் மேலாதிக்கம் செய்யும் போலிஸின் வரம்பற்ற நிலைப்பாட்டை இது சுட்டிக்காட்டுகிறது, மெலோன்சோனை அச்சுறுத்தும் ஒப்பந்தத்தில் இவையனைத்தும் உள்ளன. Liberation, Le Monde, L’Obs போன்ற பத்திரிகைகள் அனைத்தும் LFI க்கு விரோதமாக கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

LFI க்கு எதிராக மிகவும் ஆக்கிரோஷமாக இருந்த Liberation பத்திரிகை பிற்போக்குத்தனமான கட்டுரைகளை வெளியிட்டு, மெலோன்சோனின் நடத்தை LFI ஐ தடைசெய்வதை நியாயப்படுத்த முடியும் என்று ஆலோசனை வழங்குகிறது. இந்த தினசரி நாளிதழ் அதன் முதல் பக்கத்தில், மெலோன்சோனின் ஒரு பெரிய புகைப்படத்துடன், “ஒரு படி தான் இருக்கிறதா?” என்ற தலைப்புடன் கட்டுரையை வெளியிடுகிறது. மேலும், “மெலோன்சோன் மீதான போலிஸ் சோதனை: அடிபணியாமையில் இருந்து தடங்கல் செய்தல் வரை” என்ற தலைப்பிட்ட அதன் கட்டுரையில், எந்தவித ஆதாரத்தையும் கொண்டிராமல் போலிஸ் சோதனையை தடுக்க அவர் முயன்றார் என மெலோன்சோனை இது குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் Liberation பத்திரிகை, “அடிபணியா பிரான்ஸ் கட்சியின் தலைவர் அபாயகரமான சட்டவிரோதமாக, ஒரு அரசியல் தியாகியாக தன்னை காட்டிக் கொள்கிறார்” என்றும் அச்சுறுத்துகிறது.

இந்த அசாதாரணமான அச்சுறுத்தலை விடுத்ததோடல்லாமல், LFI இன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதல்களையும் Liberation பத்திரிகை பின்னர் தொடுத்து, போலிஸூக்கு ஒரு சுதந்திரமாக இயங்க அனுமதி வழங்கும் விதமாக இவ்வாறு தெரிவித்தது: “பிரான்ஸில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அதிகாரிகள் மீது நீதித்துறை ஆணையை பிரயோகிக்கும் போலிசாரை அவர்கள் எதிர்த்து சண்டையிடுவது என்பது சாதாரணமான விடயமல்ல.”

“தந்திரோபாயங்கள்,” என்ற அதன் தலையங்கத்தில், Liberation பத்திரிகை புரிந்துகொள்வது போல காட்டிக் கொள்வதுடன், “இத்தகையதொரு பெரும் போலிஸ் நடவடிக்கைக்கு எதிராக LFI எதிர் கூச்சலிடுவது” என்பது “ஆச்சரியமளிக்கும்” விடயமில்லை என்பதை ஒத்துக்கொள்கிறது. ஆனால், அதே நேரத்தில், நீங்கள் ஒரு அடி பின்வாங்கினாலும், அடிபணியா பிரான்ஸ் கட்சியின் எதிர்வினை மிகவும் மூர்க்கத்தனமானதாகவும், சட்டவிரோதமானதாகவும் இருக்கும் என்பதை நீங்கள் கூற வேண்டும்” என்றும் தெரிவிக்கிறது. சோதனை செய்ய விடுக்கப்பட்ட ஆணையின் படி, “நீதிபதிகள் தங்களது வேலையை மட்டும் தான் செய்துள்ளனர்” என்று அறிவித்து, அதன் கட்டுரையை Liberation பத்திரிகை இவ்வாறு நிறைவு செய்கிறது: “எண்ணிக்கையிலும் மற்றும் தீவிரத்திலும் நாட்டின் பிரதிநிதிகள் அதிகாரிகளை தடை செய்யும்போதும், சிவப்புக் கோட்டை அவர்கள் மீறும் போது, ஒரு நியாயமான சட்டபூர்வமான விசாரணை அவர்களின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

உண்மையில், நீதிபதிகள் அவர்களது வேலையை மட்டும் தான் செய்தார்கள் என்பதை நம்புவதற்கோ, அல்லது, போலிஸ் சோதனைகள் “முற்றிலும் நியாயமானதாக” இருந்தன என்பதற்கான ஒரு சாக்குப்போக்கை வழங்குவதற்காகவே நீதிபதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்பதற்கோ எந்தவித காரணமும் கிடையாது. பாரிஸ் வழக்குத்தொடுனர் பதவிக்கான அனைத்து விண்ணப்பதாரர்களையும் பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் “பரிசோதித்தார்” என சமீபத்தில் கூறப்பட்டது. இது ஒரு “முன்நிகழ்ந்திராத சூழ்நிலை” என்று Les Echos பத்திரிகை கூறியதோடு, இந்த “சந்திப்புகளுக்கான ‘புகழ்’ எட்வார்ட் பிலிப்பையே சாரும்” என குறிப்பிட்டது, ஏனென்றால், எதிர்கால வழக்குத்தொடுனருடன் அவர் தான் “முழுமையான மகிழ்ச்சியுடன்” இருப்பார் என்பதை “உறுதிசெய்ய” அவர் விரும்புகிறார்.

அதாவது, செவ்வாயன்று, மெலோன்சோன் மீதான இத்தகையதொரு பெரியளவிலான போலிஸ் ஆக்கிரமிப்பு, —100 போலிசாரைக் கொண்டு நடத்தப்பட்ட 15 போலிஸ் சோதனைகள்— வரவிருப்பவை பற்றி சந்தேகமின்றி முன்னறிவிப்பு செய்வதாகவே, இது நடப்பதற்கு முன்னதாக, அரசாங்கம் வழக்குத்தொடுனரை கவனமாகத் தேர்ந்தெடுத்திருந்தது. இது, வாக்கெடுப்பில் எப்போதும் போலல்லாமல் குறைந்த வாக்குகளை பெற்ற மெலோன்சோன் மற்றும் LFI மீது நிறைவேற்று அதிகாரிகளால் நடத்தப்பட்ட வெளிப்படையான ஒரு அரசியல் தாக்குதலாகும் என்பதுடன், அரசின் வேலைத்திட்டம் குறித்து எழும் அனைத்து சமூக எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் கடுமையாக முயற்சிக்கிறது.

அதன் தேசியவாதம், இராணுவம் மற்றும் உளவுத்துறை உடனான அவர் மற்றும் அவரது கட்சியின் உறவுகள், மற்றும் மிக சமீபத்தில் கட்சியின் சமீபத்திய கோடை பள்ளியின் போது, LFI க்குள் ஒருங்கிணைய வலதுசாரி சக்திகளுக்கு அவர் விடுத்த அழைப்பு என அனைத்தையும் குறிப்பிட்டு, மெலோன்சோனால் முன்மொழியப்பட்ட அரசியல் நோக்குநிலையின் திவால்தன்மை பற்றி மீண்டும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அரசு எந்திரத்திற்குள் போதுமான உறவுகளை அவர் பாதுகாத்த போதிலும், செவ்வாயன்று நடத்தப்பட்ட சோதனை குறித்து உண்மையில் அவர் வியப்படைந்ததாகவே தெரிகிறது என்ற குறிப்பிடத்தக்க உண்மையை கவனிக்க வேண்டியது அவசியாமாகும். இந்த வரவிருக்கும் சோதனை பற்றி, LFI க்கு அவர் அணிதிரட்டிய பல்வேறு போலிஸ் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகளில் எவரும் அவரை எச்சரிக்க முடியவில்லை அல்லது எச்சரிக்கவில்லை என்பது தான் உண்மை.