ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Chancellor Merkel loses closest ally

ஜேர்மன் சான்சிலர் மேர்க்கெல் நெருக்கமான கூட்டாளியை இழக்கிறார்

By Ulrich Rippert
28 September 2018

இரகசிய சேவையின் முன்னாள் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் நவ-நாஜிச கலகக்காரர்களுக்குப் பாதுகாப்பளித்த பின்னர், ஜேர்மனியின் மகா கூட்டணி அவருக்கு அதன் ஆதரவை வழங்கி இரண்டு நாட்களுக்குப் பின்னர், சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அவரின் மிக நெருக்கமான அரசியல் கூட்டாளிகளில் ஒருவரை இழந்துள்ளார். கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/ கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் நாடாளுமன்ற குழுவானது நீண்டகால நாடாளுமன்ற தலைவரான வோல்கர் கௌடர் ஐ (Volker Kauder) பதவியிலிருந்து நீக்க செவ்வாயன்று ஆச்சரியமூட்டும் விதத்தில் வாக்களித்தது.

13 ஆண்டுகளாக CDU/CSU நாடாளுமன்ற குழுவுக்குத் தலைமை வழங்கிய கௌடர், நிர்வாகிகளிடையே மேர்க்கெலின் போக்கிற்கு ஆதரவைப் பேணுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். மேர்க்கெலும் சரி, CSU தலைவர் ஹோர்ஸ்ட் சீகோவரும் சரி கௌடருக்கான அவர்களின் பலமான ஆதரவை அறிவிக்க வாக்கெடுப்புக்கு முன்னதாக தலையிட்டனர். நாடாளுமன்றமும் அரசும் திறம்பட தொடர்ந்து ஸ்திரத்தன்மையோடு இருக்க கௌடர் உத்தரவாதப்படுத்தியதாக சான்சிலரும் CDU தலைவருமான மேர்க்கெல் தெரிவித்தார்.

இருப்பினும் கௌடர் அந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார். அந்த இரகசிய வாக்கெடுப்பில், ஒப்பீட்டளவில் பிரபலமல்லாத Ralph Brinkhaus 125 வாக்குகள் பெற்றார், கௌடருக்கு வெறும் 112 வாக்குகளே கிடைத்தன. ஊடக விமர்சகர்கள் அதை "சான்சிலர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வாக்குகள்" என்றும், “சான்சிலரின் அஸ்தமனம்,” என்றும், அரசாங்கத்தின் முடிவு நெருங்கி வருவதாகவும் எழுதினர்.

வழமையான ஜனநாயக நடைமுறை ஒரு ஏமாற்றமான வாக்கெடுப்பு தோல்விக்கு இட்டு சென்றிருப்பதாக மேர்க்கெல் அதை அர்த்தப்படுத்தினார். அதே நேரத்தில், புதிய நாடாளுமன்ற குழு தலைவருடன் அவர் நெருக்கமாக இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Brinkhaus, ஒரு திட்டமிடப்பட்ட பதவிக்கவிழ்ப்பு சதி குறித்த எல்லா பேச்சுக்களையும் நிராகரித்ததுடன், சான்சிலருடன் நெருக்கமாக இணைந்து செயல்படவும் சூளுரைத்தார்.

ஆனால் மேர்க்கெலினது கூட்டாளியின் தோல்வி ஓர் அரசியல் பிளவுக்கு ஒத்தது என்ற உண்மையை, சமாதானப்படுத்துவதற்கான இந்த முயற்சிகளால் வேறுவிதத்தில் மூடிமறைக்க முடியாது. CDU/CSU இன் மதரீதியில் மற்றும் சமூகரீதியில் பழமைவாத பிரிவின் ஓர் அங்கத்தவரான கௌடர், மேர்க்கெலின் வலது கரமாக வர்ணிக்கப்பட்டார் என்பது அர்த்தமற்றவை இல்லை. 2004 இல் அவர் பொதுச் செயலராக ஆவதற்கும், 2005 இல் நாடாளுமன்ற குழு தலைவராக ஆவதற்கும் CDU தலைவர் உதவினார். அவர் நாடாளுமன்ற குழுவில் மேர்க்கெலின் கொள்கைகளை அமல்படுத்தியதுடன், அவரது அகதிகள் கொள்கைகள் மீதான விமர்சனங்களுக்கு எதிராக சமீபத்திய ஆண்டுகளில் அவரை பாதுகாத்தும் வந்திருந்தார்.

வணிக கன்னையை சார்ந்த CDU/CSU பிரிவின் ஓர் அங்கத்தவரான Brinkhaus, இதுவரையில் நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர்களில் ஒருவராக பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வந்தவர். ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் நிஜமான ஸ்தாபகர்களைப் போலவே, இவரும் யூரோவுக்கு நிதிய விட்டுக்கொடுப்புகள் வழங்குவதை எதிர்க்கிறார். இவர் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஐரோப்பாவுக்கான திட்டங்களை நோக்கி பொறுத்திருந்து பார்ப்போம் என்ற ஐயுறவான அணுகுமுறைக்கு ஒரு செய்தி தொடர்பாளராக வளர்ந்த போதுதான், கோடைகால தொடக்கத்தில் ஓரளவுக்கு பிரபலமானார்.

கட்சி தலைவர்களால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரையே Brinkhaus சவால் செய்தார் என்ற உண்மையே கூட CDU/CSU இன் வரலாற்றில் வழமைக்கு மாறானது. செவ்வாய்கிழமை வாக்களிப்பைப் போல, தங்களின் சொந்த கட்சியினது ஒரு சான்சிலருக்கு எதிராக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் ஒரு கிளர்ச்சி, இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்திருக்கவில்லை. இதற்கான பிரதான காரணம் கருத்துக்கணிப்புகளில் CDU/CSU உம் படுமோசமான எண்ணிக்கையில் உள்ளன. கூட்டாட்சி மட்டத்திலும் சரி, அக்டோபரில் பவேரியா மற்றும் ஹெஸ்ஸி இல் நடக்கவுள்ள மாநில தேர்தல்களிலும் சரி இரண்டையும் சார்ந்த கருத்துக்கணிப்புகளில் CDU/CSU முன்னொருபோதும் இல்லாதளவில் மிகக் குறைந்த ஆதரவு மட்டங்களைப் பதிவு செய்துள்ளது. இது அவர்களின் கூட்டணி பங்காளியான சமூக ஜனநாயக கட்சிக்கும் (SPD) பொருந்துகிறது.

கருத்துக்கணிப்புகளில் தோல்வி என்பது மகா கூட்டணியின் வலதுசாரி திட்டநிரலுக்கு அதிகரித்து வரும் எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும். உள்நாட்டில் ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துகின்ற மற்றும் வெளிநாடுகளில் இராணுவத்தைப் பலப்படுத்துகின்ற கொள்கைகள், அகதிகள் மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் மற்றும் தொழிலாள வர்க்க விரோத சமூக கொள்கைகளானது மக்களின் பரந்த பிரிவுகளிடையே பரந்தளவில் எதிர்ப்பைச் சந்திக்கின்றன. கெம்னிட்ஸில் அதிவலது அடிவடித்தனத்தைப் பாதுகாத்த இரகசிய சேவையின் முன்னாள் தலைவர் மாஸன் உடன் நிற்பதென்ற அவர்கள் எடுத்த முடிவு, சீற்றத்தின் ஓர் அலையைக் கட்டவிழ்த்து விட்டது. அப்போதிருந்து, ஆயிரக் கணக்கானவர்கள் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பல நகரங்களில் மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

ஆனால், CDU/CSU பிரதிநிதிகளின் கிளர்ச்சியானது எந்த விதத்திலும் அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பைத் தழுவியதல்ல. அதற்கு எதிர்விதமாக, அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை மேர்க்கெல் போதுமானளவுக்கு முழு பலத்துடன் முன்னெடுக்கவில்லை என்றும், மீண்டும் மீண்டும் பின்னுக்கு இழுப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னணி பெருவணிக அமைப்புகளும், இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு எந்திரத்தின் அங்கத்தவர்களும் அரசாங்கம் மீதான அவர்களின் அழுத்தத்தை அதிகரித்துள்ளனர். இவர்கள், இந்த மகா கூட்டணியின் வேலைத்திட்டத்தை வடிவமைப்பதில் இந்தாண்டு தொடக்கத்தில் சம்பந்தப்பட்டிருந்தனர். அப்போதிருந்து, இவர்கள், இந்த மகா கூட்டணி உடன்பாட்டில் உள்ள உடன்படிக்கைகளும் நோக்கங்களும் போதுமானளவுக்கு கடுமையான பலத்துடன் இல்லை என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

ஜேர்மன் தொழில்துறை அமைப்பின் தலைவர் Dieter Kempf ஒரு சில நாட்களுக்கு முன்னர் கூறுகையில், இந்த மகா கூட்டணி பொருளாதாரத்தை தாராளமயப்படுத்துவதன் மீது உடன்பட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக தன்னைத்தானே பெரிதும் சுருக்கிக் கொண்டிருப்பதாக குறை கூறினார். திரைக்குப் பின்னால், ஜேர்மனி இராணுவத்தின் முன்னணி அதிகாரிகள், முன்னதாக ஒப்புக் கொள்ளப்பட்டதை விட இன்னும் வேகமாக மீள்இராணுவமயமாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி வருகின்றனர்.

தனக்கும் மேர்க்கெலுக்கும் இடையே எந்த இடைவெளியும் இல்லை என்ற, கௌடரை அடுத்து வந்துள்ள Brinkhaus இன் கருத்தை இந்த உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும். Brinkhaus உறுதியாக இந்த மகா கூட்டணியினது பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தின் பின்னால் இருக்கிறார், ஆனால் அதை ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு CDU/CSU நாடாளுமன்ற குழுவால் இன்னும் கூடுதலாக அரசாங்கத்திற்கு அழுத்தமளிக்க முடியும் என்பதற்காக அதற்கு கூடுதலான சுதந்திரத்தை விரும்புகிறார்.

இந்த மகா கூட்டணி அதன் சமூக மற்றும் அரசியல் தாக்குதல்களை நடைமுறைப்படுத்த அரசு எந்திரத்திற்குள் மற்றும் AfD க்குள் உள்ள அதிவலது கூறுபாடுகளைச் சார்ந்துள்ளது என்பது சமீபத்திய வாரங்களில் ஏற்கனவே தெளிவாகி உள்ளது. மாஸன் AfD உடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறார் என்ற போதும் செல்வாக்கிழந்த மாஸன் உடன் ஒட்டிக் கொண்டிருப்பதென்ற அவர்களின் முடிவானது, அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளார்கள் என்பதை அரசு எந்திரத்தில் உள்ள AfD ஆதரவாளர்களுக்கு சமிக்ஞை செய்வதற்கு ஒப்பானதாகும்.

CDU/CSU நாடாளுமன்ற குழு தலைவர் மாற்றப்பட்டிருப்பது இந்த சமிக்ஞையை பலப்படுத்துகிறது. மக்கள் எதிர்ப்பு ஆழமடைந்து வரும் நிலைமைகளின் கீழ், அதி வலதுசாரி கூறுபாடுகளே திட்டநிரலை அமைக்கும் வகையில் இந்த கூட்டணி முன்பினும் நெருக்கமாக ஒருங்கிணைந்து வருகிறது. சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மேர்க்கெல் மீதான அதன் நம்பிக்கையை புதனன்று வெளிப்படையாக அறிவித்ததுடன், மேர்க்கெல் பலவீனமடைதிருப்பது குறித்து அதன் சொந்த உறுப்பினர்களிடம் இருந்து வரும் கருத்துக்களையும் கடுமையாக நிராகரித்தது. அரசாங்கத்திற்குள் நம்பத்தகுந்த கூட்டணியைத் தொடர்வதும் மற்றும் இன்றியமையா அரசியல் பிரச்சினைகளின் மீது ஒருங்குவிவதுமே இப்போதைய பணி என்று SPD தலைவர் நஹ்லெஸ் தெரிவித்தார்.

இதேபோன்ற கருத்துக்களை இடது கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் Dietmar Bartsch உம் வெளிப்படுத்தினார். அரசாங்கத்தின் நிரந்தர நெருக்கடி நாட்டுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ நல்லதல்ல என்று குறைகூறிய அவர், கூட்டணியின் வேலைத்திட்டத்தைப் புகழ்ந்துரைத்தார், அது சிறந்த தலைப்புகளை கொண்டிருந்தாலும் போதுமானளவுக்குத் தீர்க்கமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தின் நெருக்கடி மக்களிடையே பாதுகாப்பின்மை உணர்வை ஆழப்படுத்தி வருவதாக எச்சரித்தார்.

அதேநேரத்தில், CDU/CSU நாடாளுமன்ற குழு தலைமையின் மாற்றத்தைக் கொண்டு AfD உடன் எதிர்கால கூட்டணிகளுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது, இதை CDU/CSU, குறைந்தபட்சம் உத்தியோகபூர்வமாக, இதுவரையில் நிராகரித்து வந்திருந்தது. இப்போதும் கூட, AfD, அரசாங்க கொள்கைகளின் மீது, குறிப்பாக அகதிகள் பிரச்சினையில் ஒரு பலமான செல்வாக்கைக் கொண்டுள்ளது.

கூட்டாட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் மாற்றப்பட்டு வெறும் ஒரு நாளைக்குப் பின்னர், சாக்சோனி மாநில நாடாளுமன்றத்தின் புதிய CDU நாடாளுமன்ற தலைவரான கிறிஸ்தியான் ஹார்ட்மன் கூறுகையில், AfD உடன் ஒரு கூட்டணி ஏற்படுமாயின் அதை அவர் மறுக்கப் போவதில்லை என்று அறிவித்தார். பல ஆண்டுகள் போலிஸ் அதிகாரியாக இருந்த ஹார்ட்மன், Brinkhaus தேர்ந்தெடுக்கப்பட்ட அதே நாளில் CDU இன் அரசு தலைவர் Michael Kretschmar இன் விருப்பங்களுக்கு எதிராக புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அக்டோபரில் நடக்கவுள்ள இரண்டு மாநில தேர்தல்களுக்குப் பின்னர் இந்த பிரச்சினை கூர்மையாக முன்வரக்கூடும். பவேரியாவில், CSU நிச்சயமாக அதன் பெரும்பான்மையை இழக்கும் என்றும், ஹெஸ்ஸ இல் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/பசுமை கட்சி கூட்டணியின் பெரும்பான்மை ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. AfD தலைவர் அலெக்சாண்டர் கௌலாண்ட் AfD க்கு தாவுவதற்கு முன்னர் நிஜத்தில் Alfred Dregger தலைமையில் வழிநடத்தப்பட்ட வலதுசாரி CDU இல் 40 ஆண்டுகள் ஒரு பாத்திரம் வகித்து வந்திருந்த ஹெஸ்ஸ மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.

ஓர் அதிவலது கட்சியை அரசாங்கத்திற்குள் ஒருங்கிணைப்பது வலதை நோக்கிய மாற்றத்திற்கான ஒரு கூர்மையான தீவிரப்பாட்டைக் குறிக்கும் என்பதோடு, அகதிகள், இடது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு போர் பிரகடனத்திற்கு ஒத்ததாகும். எவ்வாறிருப்பினும் இது AfD இன் வேலைத்திட்டத்தை ஏற்கனவே நடைமுறையில் செயல்படுத்தி கொண்டிருக்கின்ற இந்த மகா கூட்டணியின் திட்டநிரலுடன் முழுமையாக பொருந்தி இருக்கும்.