ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP and IYSSE win broad support for Peradeniya university meeting on the struggle for Trotskyism

ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டம் பற்றிய கூட்டத்திற்காக பேராதனை பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பு பரந்த ஆதரவை வென்றது

By our correspondents
29 September 2018

நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து எட்டு தசாப்த நிறைவையும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு 50 வது ஆண்டு நிறைவையும் கொண்டாடுவதற்காக, அக்டோபர் 3 அன்று கண்டியில் பேராதனை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படவுள்ள கூட்டத்திற்காக, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் உறுப்பினர்கள் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.

பல்கலைக்கழக கலை அரங்கத்தில் நடைபெறும் கூட்டத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் பிரதான உரையாற்றுவார். அக்டோபர் 7 அன்று கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் மற்றொரு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு நோர்த் வருகை தந்ததையும், சோசலிச சமத்துவக் கட்சியின் பொது செயலாளர் விஜே டயஸ் உட்பட கட்சியின் பிரதிநிதிகள் அவரை வரவேற்றதையும்  பல தொலைக்காட்சி சேவைகள் பதிவு செய்தன.

வியாழன் அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் வருகை தந்ததாக தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி தெரிவித்தது. ரூபவாஹினியின் ஆங்கில சேவையான செனல் ஐ, விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரொட்ஸ்கியவாதியின் சுருக்க உரையை 9.30 மணி செய்தியில் ஒளிபரப்பியது. சுயாதீன தொலைக் காட்சியும் அதன் சிங்களச் செய்தியில் நோர்த்தின் வருகையை ஒளிபரப்பியது.

இலங்கையில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகம் ஒரு முக்கிய மையமாக இருந்துள்ளது. ட்ரொட்ஸ்கிசத்தின் செல்வாக்கின் கீழ், 1950கள் மற்றும் 1960களில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை ஆளும் உயரடுக்கிற்கு எதிராகவும், பிரதான சர்வதேச சம்பவங்கள் தொடர்பாகவும் நடந்த பெரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து போராடினர்.

கடந்த வாரம் பூராவும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பினதும் உறுப்பினர்கள் பிரச்சாரகர்கள், ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் விநியோகித்து, இலங்கையிலும் சர்வதேச அளவிலும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான போராட்டத்தினதும் கூட்டத்தினதும் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தினர்.


மயூரன்

ஒரு அரசியல் விஞ்ஞான மாணவரான மயூரன், தான் உண்மையான சோசலிசத்தைப் பற்றி தேடுக்கொண்டிருப்பதாக கூறினார். "[ஸ்ராலினிச] கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் இடதுசாரி கட்சிகள் என்று அழைத்துக்கொள்ளும் ஏனைய கட்சிகள், தமக்கும் சோசலிசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நிரூபித்துள்ளன.

"நான் [1942ல் ஸ்தாபிக்கப்பட்ட தீவில் முதல் ட்ரொட்ஸ்கிச கட்சியான போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் போராட்டத்தைப் பற்றி படித்திருக்கிறேன். நாம் இந்த வகையான கட்சியை உருவாக்க வேண்டும். தொழிலாள வர்க்கம் சர்வதேச அளவில் ஐக்கியப்பட வேண்டும், மாறாக அது இனம், மதம் மற்றும் பாலின அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. நோர்த்தின் விரிவுரை இந்த விடயங்களை விளக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.

"நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் சோசலிசத்தைப் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பினது கிளையை ஸ்தாபிப்பதில் மிகவும் உடன்படுகிறேன். நான் நிச்சயமாக என் ஆதரவை தருவேன்," என்று அவர் கூறினார்.

இறுதி ஆண்டு வரலாற்று மாணவியான நளினி, எதிர்வரும் கூட்டத்தைப் பற்றிய துண்டுப் பிரசுரம் கிடைத்த பின்னர், இணையத்தில் WSWS மற்றும் டேவிட் நோர்த்தின் கட்டுரைகளைத் தேடியுள்ளார்.

"நான் கட்டுரைகளை வாசித்தபோது, நான் கல்வி நோக்கங்களுக்காகப் படித்த வரலாற்று நிகழ்வுகளின் அரசியல் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன்" என்று அவர் கூறினார்.

"கடந்த நிகழ்வுகளின் அரசியல் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாமல், தற்போதைய நிலைமைக்கு நாம் அவற்றின் படிப்பினைகளைப் பயன்படுத்த முடியாது. நான் ஒரு சில கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து, அந்த விடயங்களைப் பற்றி என் நண்பர்களிடம் கலந்துரையாடினேன். நான் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்ளவும் முடிவு செய்தேன்.”

மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முதலாளித்துவத்திற்குள் தீர்க்க முடியாது என்று முதலாம் ஆண்டு கலைத்துறை மாணவரான கசுன் கூறினார். "அதனால் தான் சோசலிசம் முதலாளித்துவத்திற்கு ஒரு அரசியல் மாற்றீடாக இருக்கின்றது என்று நான் நம்புகிறேன். குறிப்பாக 1988-89ல் ஜே.வி.பி. இன் ஆயுத கிளர்ச்சியின் விளைவாக, இலங்கையில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோசலிசம் பற்றி ஒரு குழப்பம் நிலவுகிறது. அந்த குழப்பங்களை சமாளிப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது," என்று அவர் கூறினார்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலைமைத்துவ நெருக்கடியை தீர்க்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துவதுடன் கசுன் உடன்பட்டார். "இது சர்வதேச சோசலிசத்திற்காக போராடும் ஒரு கட்சியை நான் சந்தித்த முதல் தடவை. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்ப்பு அரசியலுக்கும் சோசலிசத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நான் புரிந்து கொண்டேன்."

தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் சமீபத்திய போராட்டங்களுக்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கடுமையான பதிலடியை சுட்டிக்காட்டிய கசுன், இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே என்றார். பிற நாடுகளில் இருந்து முதலாளித்துவ அரசாங்கங்கள் தலையிட்டால் என்ன செய்ய முடியும் என்று அவர் கேட்டார்? சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேசக் கட்சியை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும், சோசலிசத்திற்கான போராட்டம் உலகளாவிய போராட்டம் என்பதையும் விளக்கினர்.


அசாங்க

பல்கலைக்கழக வரலாற்று பீடத்தில் படிக்கும் அசாங்க, கூட்டத்திற்கு வருகை தர எதிர்பார்த்திருப்தாக சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: "உலக அரசியல் பற்றிய உங்கள் மதிப்பீடு யதார்த்தமாகி வருவதை நான் காண்கிறேன். முதலாளித்துவ அமைப்பு முறையால் மக்களுக்கு யுத்தத்தையும் சமூக சமத்துவமின்மையையும் மட்டுமே கொடுக்க முடியும்."

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) எதிர்ப்பு அரசியலை அசாங்க கண்டனம் செய்ததோடு, அந்த அமைப்பின் வழிமுறைகள் மாணவர்களை முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணிய வைக்கின்றது என்று கூறினார். நோர்த்தின் விரிவுரை "ஒரு முக்கியமான நிகழ்வு மற்றும் மாணவர்களின் அரசியல் நனவை அது உயர்த்துவதாக அமையும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு அரசியல் விஞ்ஞான விரிவுரையாளர் சுமுது வலாகுலுகே, வழக்கமான உலக சோசலிச வலைத் தள வாசகரும் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளருமாவார். ஏகாதிபத்திய சக்திகள் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளால் மற்றொரு உலகப் போரை நோக்கி உந்தப்படுகின்றன என அவர் கூறினார்.

"ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற நாடுகளுக்கு எதிரான யுத்த தயாரிப்புகளை அதிகப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துவது போல், ஒரு சர்வதேச சோசலிச இயக்கமின்றி இந்த ஆபத்துக்களை முறியடிக்க முடியாது.” என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நுண்கலை பல்கலைக்கழகத்தின் ஓவிய விரிவுரையாளரான கிங்ஸ்லி குணதிலக, நோர்த்தின் அரசியல் ஆய்வுகள் மற்றும் நுண்ணறிவுகள் இலங்கையில் இளைஞர், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீது ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியதோடு, மாணவர்களை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

"மக்களிடையே பல்வேறு விதமான மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது, அதனால் தேசிய ரீதியாகவும், உலகளாவிய ரீதியாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் ஆழத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள்," என்று அவர் கூறினார்.

"பல்கலைக்கழக மாணவர்களின் வாழ்க்கை தாங்க முடியாததாகிவிட்டது. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சித்தால், இன்னும் 10 பிரச்சினைகள் வெளிவரும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

"அரசாங்கமும் முழு அரசியல் ஸ்தாபகமும் கல்வியில் பொருளாதார சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளை அலட்சியம் செய்கின்றன. மாணவர்கள் இந்த சூழ்நிலையில் சோர்வடைந்து, மீண்டும் போராடும் ஆற்றலைக் கூட இழந்துவிட்டனர். இதுவே அவர்கள் மத்தியில் நிலவும் அரசியல் மந்தநிலைக்கும் ஆர்வமின்மைக்கும் காரணம்.

"ஜே.வி.பி. மற்றும் சோசலிஸ்டுகள் என கூறிக்கொள்ளும் ஏனைய அமைப்புகள் உட்பட பல கட்சிகளின் அரசியல் பொய்களுக்கு முற்றுப்புள்ளியே இல்லை. இந்த பொய்களால் மக்கள் திகைத்துப் போயிருந்தாலும், அவர்கள் ஒரு மாற்றீட்டை தேடுகின்றனர்" என்று அவர் கூறினார்.

கிங்ஸ்லி தொடர்ந்தார்: "நோர்த் போன்ற உலக புகழ்பெற்ற புரட்சிகர தலைவர் மற்றும் ஒரு மார்க்சிஸ்ட், உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் நான்காம் அகிலத்தின் கொள்கை ரீதியான அரசியல் போராட்டத்தை கொண்டாட வருவதானது, முக்கியத்துவம் வாய்ந்தது. அது அரசியல் தேக்க நிலையை உடைக்க உதவும். நான்காம் அகிலத்தின் வரலாற்றைப் பற்றிக் கற்றுக்கொள்வது, மாணவர்களுக்கு முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு சோசலிச மாற்று இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையை கொடுக்கும்."