ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defend Julian Assange against US charges!

அமெரிக்காவின் குற்றச்சாட்டு பதிவுகளுக்கு எதிராக ஜூலியான் அசான்ஜை பாதுகாப்போம்!

James Cogan
17 November 2018

விக்கிலீக்ஸ் ஸ்தாபகரும் வெளியீட்டாளருமான ஜூலியான் அசான்ஜிற்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுகள் மூடியிடப்பட்ட உறையில் அமெரிக்க நீதித்துறையின் வசம் இருப்பதை ஊர்ஜிதம் செய்கின்ற ஆகஸ்ட் 22 தேதியிட்ட ஒரு நீதிமன்ற ஆவணம் வியாழனன்று இரவு பகிரங்கப்படுத்தப்பட்டது. அவர் 2012 இல் அவர் அரசியல் தஞ்சம் பெற்றிருந்த இலண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் இருந்து இப்போது வெளியுலகுடன் தொடர்பு கொள்வதற்கான எந்த உரிமையும் ஈக்குவடார் அரசாங்கத்தால் அவருக்கு மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பலவந்தமாக வெளியேற்றப்பட்ட உடனேயே, அவர் அமெரிக்காவுக்கு விசாரணைக்கு நாடுகடத்தப்படுவதற்குரிய ஒரு ஆணை பிறப்பிக்கப்படும்.

அசான்ஜ்க்கு இம்மியளவும் தொடர்பில்லாத ஒரு வழக்கு சம்பந்தமான இந்த நீதிமன்ற ஆவணம் அவரது பெயரைக் குறிப்பிடும் இரண்டு பத்திகளைக் கொண்டிருக்கிறது. இந்த குற்றப்பதிவை மூடிவைத்திருக்க வேண்டியது ஏன் அவசியமானது என்றால் “...வேறெந்த நடைமுறையும் அசான்ஜ் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை இரகசியமாக பராமரிக்க அநேகமாய் வழிகொண்டதாக இல்லை.” இந்த குற்றவியல் புகாரிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக “அசான்ஜ் கைதுசெய்யப்பட்டு, அதன்மூலமாக இதற்குப் பின்னரும் அவர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படுவதையும் நாட்டுக்குக் கொண்டுவரப்படுவதையும் ஏமாற்றவோ அல்லது தவிர்க்கவோ இயலாது போகின்றவரை”இந்த குற்றச்சாட்டுகள் மூடியிட்டு இரகசியமாகவே பராமரிக்கப்பட அது கேட்டுக் கொண்டது.

அசான்ஜின் பெயர் இந்த ஆவணத்தில்“பிழையாக”இடம்பெற்றிருந்தது என்பதை மட்டுமே நீதித்துறை ஊடகங்களிடம் கூறியது. அவருக்கு எதிராய் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதை அது மறுக்கவில்லை. அவை நிச்சயமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று ஆதாரங்கள் வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்திருந்தன.

இந்த குற்றச்சாட்டு பதிவுகள் இருப்பது எத்தகைய விதத்தில் வெளிவந்திருக்கிறபோதும், இது, 2010 நவம்பரில், அவர் பாலியல் குற்றங்கள் இழைத்திருந்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பான “கேள்விகளுக்கு” பதிலளிப்பதற்காக என்று கூறி சுவீடனின் அரசவழக்குத்தொடுனர்கள் அவருக்கு எதிராக ஒரு கைதுஆணையை பிறப்பித்தது முதலாகவே, அசான்ஜ் உம் அவரது சட்டரீதியான மற்றும் அரசியல்ரீதியான பாதுகாவலர்களும் கூறி வந்திருக்கின்ற எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்கிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் போர்க் குற்றங்களையும் உலகெங்கிலுமான ஏகாதிபத்திய சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்திய வெடிப்பான தகவல்கசிவுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்ததான நிலைமைகளின் கீழ் அசான்ஜ்க்கு எதிராக சுவீடனின் இந்த குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டிருந்தன.

அந்த குற்றச்சாட்டுகள் இரண்டு நோக்கங்களைக் கொண்டிருந்தன. முதலாவதாய், அவை ஒரு தனிமனிதராக அசான்ஜின் மீது சேறிறைக்கவும் அதன்மூலம் விக்கிலீக்ஸுக்கான பொதுமக்கள் ஆதரவை பலவீனப்படுத்தவும் நோக்கம் கொண்டிருந்தன. இரண்டாவதாய், அவரை சுவீடனுக்கு வலுக்கட்டாயமாக கொண்டுவரச் செய்து அங்கிருந்து வேவுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட செய்வதற்காக அவை பயன்படுத்தப்படவிருந்தன.

ஈக்குவடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரும் அசான்ஜின் முடிவின் ஒரே காரணத்தாலேயே ஒரு நீண்ட சிறைவாசத்தை அல்லது இன்னும் ஒரு மரணதண்டனை விதிப்பின் சாத்தியத்தையும் கூட அவரால் தவிர்க்க முடிந்திருந்தது.

சுவீடனின் அரச வழக்குத்தொடுனர்கள் அசான்ஜ்க்கு எதிரான முகாந்திரமற்ற வழக்கை 2017 மே மாதத்தில், அவருக்கு எதிராய் எந்த குற்றச்சாட்டுப் பதிவும் இல்லாமல், இறுதியாக கைவிட்டது முதலாகவே வெளிப்பட்டதாய் இருந்து வந்திருக்கக் கூடிய ஒன்றை இந்த நீதிமன்ற ஆவணம் சரிபார்க்கிறது. அசான்ஜ் பிணை நிபந்தனைகளை மீறியதாக -அவசியத்தின் காரணத்தால் அவர் தஞ்சம் பெற விழைந்த சமயத்தில்- கூறும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகள் மட்டுமே அசான்ஜ்க்கு எதிரான ஒரே மற்ற “குற்றவியல் புகார்”ஆகும். இந்த பத்திரிகையாளர் மற்றும் வெளியீட்டாளரை பிரிட்டிஷ் அதிகாரிகள் சிறைப்பிடிக்கும் வரை காத்திருந்து அதன்பின் அவருக்கு எதிரான குற்றப்பதிவை வெளியிடுவது தான் அமெரிக்க அரசின் திட்டமாக இருந்து வந்திருக்கிறது.

இப்போது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருப்பது பகிரங்கமாக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மையானது ஈக்குவடார் அசான்ஜை ஒப்படைக்க சம்மதித்திருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகவும் கூட இருக்கலாம்.

நீதிமன்ற ஆவணம் அமெரிக்க குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து எதையும் வெளிப்படுத்தவில்லை. 2010 கசிவுகள் தொடர்பான வேவுபார்ப்புக் குற்றச்சாட்டுகள் தொடர்பாய், அசான்ஜ் மீது “சதி”க்கான குற்றப்பதிவு செய்யப்பட்டிருப்பதும் சாத்தியமே.

2016 இல், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு ஹிலாரி கிளிண்டனுக்கு சாதகமாய் பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்தை எவ்வாறு பலவீனப்படுத்த முனைந்தது என்பதை அம்பலப்படுத்திய மின்னஞ்சல் கசிவுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுடன் கிளிண்டன் கொண்டிருந்த அழுக்கடைந்த உறவுகளுக்கான ஆதாரத்தையும் இந்த ஆவணங்கள் வழங்கின.

கிளின்டனின் தேர்தல் தோல்விக்கு ரஷ்ய “தலையீட்டின்” மீது பழிபோடுவதற்கான அமெரிக்க ஸ்தாபகத்தின் வெறித்தனமான பிரச்சாரத்தின் பகுதியாக, சிறப்பு ஆலோசகர் ரோபர்ட் முல்லரின் விசாரணையானது, விக்கிலீக்ஸ் ரஷ்ய உளவுத்துறையிடம் இருந்து கசிவுகளை பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவதில் உதவுவதற்காக அவற்றை வெளியிட்டதாக, நம்பகமான ஆதாரத்தின் ஒரு சுவடும் கூட இன்றி, மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறது.

உண்மையில் அசான்ஜ், ட்ரம்ப்பா அல்லது கிளின்டனா என அமெரிக்க வாக்காளர்களுக்கு இருந்த தெரிவை “கொனோரியா அல்லது சிபிலிஸ்” ஆகிய இரண்டு பாலியல் வியாதிகளுக்கு இடையிலான தெரிவுடன் பகிரங்கமாக ஒப்பிட்டிருந்தார். 2016 தேர்தலையொட்டி விடுத்த ஒரு அறிக்கையில், அசான்ஜ், ஜனநாயகக் கட்சியின் கசிவுகளை -இவற்றை அளித்த மூலத்திற்கு எந்தவிதமான ரஷ்ய தொடர்பும் இருப்பதை அவர் மறுத்தார்- பெற்றுக் கொண்ட நிலையில், விக்கிலீக்ஸ் அவற்றை வெளியிட கடமைப்பட்டிருந்ததாய் தான் நம்பியதாக வலியுறுத்தினார்.

அசான்ஜ் எழுதினார்: “உண்மைத் தகவல்களை பெறுவதற்கும் வெளியிடுவதற்குமான உரிமைதான், விக்கிலீக்ஸின் எனக்கு அப்பாற்பட்ட ஒரு ஊழியர்கள் மற்றும் அமைப்பு இலட்சியத்தைக் கொண்டிருக்கும் வழிகாட்டும் கோட்பாடாக இருக்கிறது. தகவல்களை அறிந்து கொள்வதற்கு பொதுமக்கள் கொண்டிருக்கும் உரிமையை எங்கள் அமைப்பு பாதுகாக்கிறது.”

விக்கிலீக்ஸ்“மக்களுக்கு தகவலறிவை ஊட்டுகிற விவரங்களை வெளியிடுவதற்கு உறுதிபூண்டுள்ளது, பலர், குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள், அதனைக் காண விரும்பமாட்டார்கள் என்றபோதும் கூட .... அது வெளியிட்டாக வேண்டும் சாபங்களுக்கு ஆளாகியாக வேண்டும்” என்று அசான்ஜ் அறிவித்தார்.

அசான்ஜை இடைவிடாது துன்புறுத்துவது விக்கிலீக்ஸ் உண்மையை வெளியிடாமல் தடுப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. உலகெங்கிலும் இருக்கின்ற அத்தனை விமர்சனரீதியான மற்றும் சுயாதீனமான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புகள், அத்துடன் வருங்காலத்தில் விழிப்பூட்டிகளாக ஆக எண்ணுபவர்கள் அனைவரையும் அச்சுறுத்துவதற்கும் வாய்மூடச் செய்வதற்குமான ஆளும் வர்க்கத்தின் முயற்சியின் பகுதியாக அது இருக்கிறது.

அசான்ஜை ஒரு குற்றவாளியாக சித்தரிப்பதற்கான முயற்சி என்பது உலகெங்கிலும் நடந்து வருகின்ற மிகப்பெரும் தணிக்கை மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலின் முன்முனையாக இருந்து வந்திருக்கிறது. முன்னெப்போதினும் விரிவடைந்து செல்கின்ற சமூக சமத்துவமின்மைக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கம் அபிவிருத்தி கண்டு வருவது குறித்தும் பெரும் சக்திகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய மோதல்கள் போருக்கு இட்டுச் செல்கின்ற அபாயம் பெருகுவது குறித்தும் முதலாளித்துவ ஒருசிலவராட்சியினரும் அவர்களது அரசாங்கங்களும் கிலியடைந்துள்ளதன் காரணத்தால் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய நகர்வு செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

லியோன் ட்ரொட்ஸ்கி 1937 இல் குறிப்பிட்டதைப் போல,“உண்மையான குற்றவாளிகள் குற்றம்சாட்டுபவர்களின் அங்கிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றனர்.”

ஆயினும், அமெரிக்க அரசு, ஒபாமா மற்றும் ட்ரம்ப் நிர்வாகங்கள் இரண்டின் கீழும், அசான்ஜ் க்கு எதிரான அதன் பழிவாங்கல் நடவடிக்கையை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் முடிந்திருக்கிறது என்றால் சர்வதேச அளவில் அதற்குக் கிடைத்து வந்திருக்கின்ற வெட்கமற்ற ஆதரவே அதற்குக் காரணமாகும்.

ஸ்தாபக ஊடகங்கள், குறிப்பாக தி கார்டியன் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் போன்ற வெளியீடுகள், விக்கிலீக்ஸை அழிப்பதற்கும் அத்தனை மற்ற சுயாதீனமான வெளியீடுகளை ஒடுக்குவதற்குமான முயற்சியுடன் முழுமையாக ஒன்றிணைந்திருக்கின்றன.

அடுத்தடுத்து வந்திருக்கின்ற ஆஸ்திரேலியாவின் தொழிற் கட்சி மற்றும் பழமைவாத அரசாங்கங்கள் ஒரு ஆஸ்திரேலிய குடிமகனான அசான்ஜை பாதுகாப்பதற்கு மறுத்து வந்திருக்கின்றன. பசுமைக் கட்சியினர், நாடாளுமன்ற“சுயேச்சைகள்”மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்களும் அசான்ஜை ஓநாய்களின் முன்னால் வீசி விட்டிருக்கின்றன. அசான்ஜின் சுதந்திரத்தையும் ஆஸ்திரேலியாவிற்கு அவர் திரும்புவதற்கு கொண்டுள்ள உரிமையையும் பாதுகாக்க அரசாங்கம் அதன் சட்டபூர்வ மற்றும் இராஜதந்திரரீதியான அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்று கோரி, இந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதியன்று சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த, திரைப்படைப்பாளி ஜோன் பில்ஜர் உரையாற்றிய பேரணிக்கு இவர்கள் எவரும் ஆதரவளிக்கவில்லை.

பிரிட்டனில், தொழிற் கட்சியின் தலைவரான ஜெரிமி கோர்பினின் பாத்திரம் குறிப்பாக படுதீயதாக இருந்திருக்கிறது. ஒருசமயத்தில் விக்கிலீக்ஸுக்கு ஆதரவாக வாய்திறந்திருந்த கோர்பின், டோரி அரசாங்கம் அசான்ஜ் க்கு எதிரான பிணைக் குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும், அவர் அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடுகடத்தப்பட மாட்டார் என்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும், அவர் விரும்பினால் ஈக்குவடார் தூதரகத்தை விட்டும் ஐக்கிய இராச்சியத்தை விட்டும் வெளியேற அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக கோருவதற்கு மறுத்து வந்திருக்கிறார்.

ஈக்குவடார் அரசாங்கம், அதன் இப்போதைய ஜனாதிபதி லெனின் மொரேனோவின் கீழ், வாஷிங்டனிடம் நல்ல பேர் எடுப்பதற்காக அசான்ஜ் ஐ நோக்கி திரும்பியிருக்கிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அது அவரின் தகவல்தொடர்பு அணுகலை துண்டித்ததோடு தூதரகத்தை விட்டு வெளியேற அவருக்கு நெருக்குதலளிப்பதற்கு கூடுதல் வன்மமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.

எவ்வாறாயினும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட அத்தனை நடுத்தர வர்க்க போலி-இடது அமைப்புகளாலும் கூட அசான்ஜ் கைவிடப்பட்டிருப்பதுதான் மிகவும் அதிர்ச்சியூட்டத்தக்கதாக இருந்து வந்திருக்கிறது. பாலின மற்றும் இன அடிப்படையிலான அரசியலுக்கும் உக்ரேன் மற்றும் சிரியாவிலான ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குமான -இவற்றை அசான்ஜ் எதிர்த்தும் அம்பலப்படுத்தியும் வந்திருக்கிறார்- அவற்றின் ஆதரவில் இருந்து பிறக்கின்ற நிலைப்பாட்டில், அவை ஒன்று அசான்ஜ் துன்புறுத்தப்படுவதன் மீது முழுமையான மவுனத்தை பராமரித்து வந்திருக்கின்றன இல்லையேல் ட்ரம்ப்பின் நிர்வாகம் அசான்ஜை வாய்மூடச் செய்வதற்கான அமெரிக்க முயற்சியை தீவிரப்படுத்தி வந்திருக்கிற நிலையிலும் கூட விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரை “பாலியல் வன்முறையாளர்” அல்லது ரஷ்யா அல்லது ட்ரம்ப்பின் “கைக்கூலி” என்று அவதூறு செய்வதில் கைகோர்த்து வந்திருக்கின்றன.

அசான்ஜையும், விக்கிலீக்ஸையும் மற்றும் அத்தனை ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு, நிலவும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராகவும் அது சேவைசெய்கின்ற முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வு அவசியமாகிறது என்பதை கோடிட்டுக் காட்டுவதற்கே சக்திகளின் இந்த அணிகோர்ப்பு சேவைசெய்கிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஜூலியான் அசான்ஜ் துன்புறுத்தப்படுவதில் சம்பந்தப்பட்டுள்ள தீவிரமான தாக்கங்கள் குறித்து எச்சரிக்கப்படுவதற்கும் அவரது உடனடியான மற்றும் நிபந்தனையற்ற விடுதலையைக் கோருகின்ற மிகப் பரந்த பிரச்சாரத்திற்கான அவசியம் குறித்து விழிப்பூட்டப்படுவதற்கும் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டாக வேண்டும்.