ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Brexit deal threatens survival of May government

பிரிட்டன் வெளியேறுவதற்கான உடன்படிக்கை மே அரசாங்கத்தின் உயிர்பிழப்பை அச்சுறுத்துகிறது

By Robert Stevens
16 November 2018

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரதம மந்திரி தெரேசா மேயின் பேச்சுவார்த்தை குழுவுக்கும் இடையே எட்டப்பட்ட வரைவு உடன்படிக்கைக்கு எல்லா தரப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. மிக உடனடியான மேயின் தலைவிதியானது, கடுமையாக பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் அவர் கட்சி அணியினது ஒரு கிளர்ச்சியின் அளவைச் சார்ந்துள்ளது. ஆனால் மிகவும் நேர்மறையான மதிப்பீட்டை தவிர ஏனைய அனைத்தின் அடிப்படையிலும், அவர் முன்மொழிவு நாடாளுமன்றத்தில் அனேகமாக நிறைவேறாது போகலாம்—இது அவர் எதிர்காலத்தையும் மற்றும் அந்த பழமைவாத அரசாங்கத்தின் எதிர்காலத்தையும் அச்சுறுத்துகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிபந்தனைகளின் மீது அவர் முன்மொழிந்த உடன்படிக்கைக்கு மந்திரிசபையின் ஒப்புதலை, புதன்கிழமை ஐந்து மணி நேர கூட்டத்திற்குப் பின்னர் தான், அவரால் பெற முடிந்தது என்பதோடு, அவர் ஓர் உத்தியோகப்பூர்வ வாக்கெடுப்பையும் அனுமதித்திருக்கவில்லை. பிரெக்ஸிட் (Brexit) செயலர் டொம்னிக் ராப், பணி மற்றும் ஓய்வூதியங்களுக்கான செயலர் எஸ்தெர் மெக்வேய் என உயர்மட்ட பதவிகளில் இருந்தவர்களின் இராஜினாமா அதைப் பின்தொடர்ந்தது.

ஒரே ஐரோப்பிய சந்தையை வரிவிதிப்பின்றி அணுகுவதை உறுதிப்படுத்தி வைப்பதற்கும், வடக்கு அயர்லாந்து மற்றும் ஐரிஷ் குடியரசுக்கு இடையே கடுமையான எல்லைப்பகுதியைத் தடுப்பதற்கும் புரூசெல்ஸிற்கு "விட்டுக்கொடுத்து" உடன்பட வேண்டும் என்பதை தவிர பிரிட்டன் வெளியேறுவதற்கு அங்கே வேறெந்த மாற்றீடும் இல்லை என்று வலியுறுத்தி மே விடையிறுத்தார். பிரிட்டன் கடுமையாக வெளியேறுவதை ஆதரிப்பவர்கள் (hard-Brexiteers) அவரது உடன்படிக்கையைத் தோற்கடிக்க வாக்களிக்க வேண்டாம் என்றும், இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு ஆபத்தையோ அல்லது ஜேர்மி கோர்பினின் தொழிற் கட்சியைப் பதவிக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு இடைத்தேர்தல் ஆபத்தையோ முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரின் சொந்த அரசாங்கத்திற்குள் மற்றும் கட்சிக்குள் பிளவுபட்டிருக்கும் எதிர்ப்பாளர்களிடமிருந்து அவர் வெற்றி பெற்றாலும் கூட, அப்போதும் அந்த உடன்படிக்கை நிறைவேறுவதற்கு நாடாளுமன்றத்தில் அவருக்கு தொழிற் கட்சியினது ஒரு பிரிவின் ஆதரவு அவசியமாக இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு கொண்ட டோரியின் ஐரோப்பிய ஆராய்ச்சி குழுவினது செல்வாக்கான தலைவர் Jacob Rees Mogg, மே மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டு அக்கட்சியின் 1922 குழுத்தலைவர் சேர் கிரஹாம் பிரேடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். பிரிட்டன் வெளியேற வேண்டுமென்ற ஆதரவுக் குழுவில் (Brexiteers) உள்ள ஏனைய இரண்டு பேர், ஷெர்ல் முர்ரே மற்றும் ஹென்றி ஸ்மித் ஆகியோரும் அதேயே தொடர்ந்தனர். 48 பேர் கடிதங்கள் அளித்தால் தலைமைக்கான போட்டித்தேர்தல் நடத்த வேண்டியிருக்கும், இன்னும் "அந்தளவுக்கு கிடைக்கவில்லை", ஆனால் ஒருசில வாரங்களில் கிடைக்கக்கூடும் என்று Mogg சுட்டிக்காட்டினார். இது கடந்த மாதம் முன் அனுமானிக்கப்பட்டதை விட நம்பிக்கையை மிகவும் குறைக்கிறது, பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் சிலர் ஐரோப்பிய வர்த்தகம் பேணப்பட வேண்டும் என்ற வணிகங்களின் கோரிக்கைகளை செவிமடுத்திருந்தனர் என்பதோடு ஒரு சவாலில் மே தப்பி பிழைத்துவிடக்கூடும் என்று அப்போது அறிவுறுத்தி இருந்தனர்.

அனைத்து எதிர்கட்சிகளாலும், ஜனநாயக ஒன்றியவாத கட்சியில் உள்ள அவர் கூட்டணி பங்காளிகள் மற்றும் டஜன் கணக்கான டோரி நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் மே எதிர்க்கப்படுகிறார் என்பதால், எந்தவொரு சூழலிலும், பிரிட்டன் வெளியேறுவது மீதான நெருக்கடி ஆழமடைய மட்டுமே செய்யும். “தற்போது பிரிட்டனால் அக்கண்டத்துடன் அதன் உறவைச் சீரமைக்க முடியாது ... 1956 சூயஸ் நெருக்கடியுடன் ஒப்பீடு செய்வது மிகவும் பொருத்தமானதாக இல்லை. இது அதை விட இன்னும் பெரிய குறிப்பிடத்தக்க சிக்கலாக உள்ளது,” என்பதால், இந்த முட்டுச்சந்து வரலாற்று முக்கியத்துவம் கொண்டது என்று பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் மார்டின் வொல்ஃப் எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கி இருக்கலாம் என்பதன் உத்தியோகபூர்வமற்ற தலைவர் டோனி பிளேயர் அறிவிக்கையில், “இந்த உடன்படிக்கை ஒரு சமரசமான உடன்பாடாக இல்லை, இது மண்டியிடுவதாக உள்ளது,” என்றார். முன்மொழியப்படும் உடன்படிக்கையின் நிபந்தனைகள் தற்போது ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தின் நிபந்தனைகளை விட மிகவும் மோசமாக உள்ளது, அதேவேளையில் அங்கத்துவ உரிமைகளை இழந்து, பிரிட்டன் ஒரே சந்தையைத் தொடர்ந்து அணுக உத்தரவாதமளிக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்று கூறும் கன்னை குறை கூறுகிறது. ஆகவே அவர் அந்த உடன்படிக்கையை எதிர்ப்பதானது அவரை முன்னாள் டோரியான வெளியுறவு செயலர் போரிஸ் ஜோன்சனுடன் ஒரு "முறையற்ற கூட்டணியில்" ஒன்று சேர்க்கிறது, "... இது, பெயரில் மட்டுமே இருக்கும் அர்த்தமற்ற பிரிட்டன் வெளியேற்றம், இது மோசமான வேலைகளில் சிறந்த ஒன்றாக கூட இருக்காது ஆனால் இரண்டு உலகங்களிலும் மிக மோசமான வேலையாக இருக்கும் என்பதில்" அவர்கள் உடன்படுகிறார்கள்.

வியாழனன்று காலை, தொழிற் கட்சி அதன் நிழல் அமைச்சரவை அலுவலகத்தின் அமைச்சர் Jon Trickett மூலமாக ஓர் அறிக்கை வெளியிட்டது, அதுவாவது, “அரசாங்கம் நம் கண் முன்னாலேயே சரிந்து வருகிறது", பிரதம மந்திரிக்கு "எந்த அதிகாரமும் இல்லை என்பதோடு, பிரிட்டன் வெளியேறுவது மீது நாடாளுமன்றத்தின் மற்றும் நம் நாட்டு மக்களின் ஆதரவைப் பெறுவது ஒருபுறம் இருக்கட்டும், அவர் மந்திரிசபையின் ஆதரவைப் பெறக்கூடிய ஓர் உடன்படிக்கையை வழங்குவதற்குக் கூட தெளிவாக தகைமையற்றுள்ளார்.” பிரிட்டன் வெளியேறுவது மீதான நெருக்கடியைத் தீர்க்க ஒரு பொது தேர்தலே ஒரே வழி என்ற கோர்பினின் முந்தைய அழைப்பு ஒருபுறம் இருக்கிறது என்றாலும், அவர் அதற்கு ஒரு வெளிப்படையான அழைப்பை வழங்கவில்லை.

இது, தெளிவாக, ஒரு பொது தேர்தலானது தசாப்தகால நவ-தாராளவாதம் மற்றும் சமூக செலவின குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சி, அதை எதிர்க்கின்ற அக்கட்சியின் பிளேயரிச கன்னையைச் சாந்தப்படுத்துவதற்கான கோர்பின்வாதிகளது முயற்சிகளோடு பிணைந்துள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் பிரிட்டன் வெளியேறுவதை முற்றிலுமாக பின்வாங்கசெய்ய இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பாக "மக்களின் வாக்கு" கோரி வருகிறார்கள்.

தொழிற் கட்சி, ஏனைய எதிர்கட்சிகளோடு சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் இருந்த "அதே சலுகைகளை" வழங்கக்கூடிய திருத்தங்களைச் செய்வதற்கான உரிமைகளை உள்ளடக்க, அந்த உடன்படிக்கை மீது "அர்த்தமுள்ள வாக்கெடுப்புக்கு" வாக்குறுதி அளிக்க அழைப்பு விடுப்பதில் ஒருமுனைப்பட்டுள்ளது. அந்த வரைவு உடன்படிக்கை தான் "எங்களால் செய்ய முடிந்த சிறந்த" ஒன்று என்று வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விடையிறுத்துள்ளனர்.

மே க்கு முன்பிருந்த டேவிட் கமரோன், பிரிட்டன் வெளியேறுவது மீதான 2016 சர்வஜன வாக்கெடுப்பை அவரது கட்சியில் யூரோ மீது ஐயுறவு கொண்ட கன்னையை மனநிறைவு செய்வதற்கான ஒரு வழிவகையாகவும் அதேவேளையில், ஏனைய ஐரோப்பிய சக்திகளுடன், அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியுடன், இங்கிலாந்தின் பேரம்பேசும் இடத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கான வழிவகையாகவும் குறிப்பிட்டார். பெரும்பாலும், பரந்த சமூக மற்றும் அரசியல் அன்னியப்படலை வெளிப்படுத்தும் எதிர்ப்பு வாக்குகளின் விளைவாக, தோல்வியடைந்து பேரழிவுகரமான தாக்கங்களை முகங்கொடுத்த ஆளும் உயரடுக்கு, பிரிட்டனின் உலகளாவிய நலன்களை எவ்வாறு சிறப்பாக பாதுகாப்பது என்பதன் மீது கடுமையான கன்னைவாத மோதலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.

பிரிட்டன் வெளியேறுவதை ஆதரிக்கும் (pro-Brexit) கன்னைகள், ஐரோப்பிய சந்தைகளை தடையின்றி அணுகுவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகள் மீதும் அத்துடன் சேர்ந்து சர்வதேச அளவில் சுதந்திரமான வர்த்தக உடன்படிக்கைகளை பேரம்பேசுவதற்கான உரிமை மீதும் பயணிக்கலாமென, டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பயன்படுத்துவதன் மீது நம்பிக்கைகளை வைத்திருந்தன. மே அந்த விதமான இலக்கைத்தான் முயன்றார் என்றாலும், அது பிரிட்டனின் பலவீனமான நிலைமையின் யதார்த்தத்துடனும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அதிகரித்து வரும் விரோதங்களின் முழு பாதிப்புகளுடனும் சேர்ந்து, அவரை எதிர் கொள்ளச்செய்துவிட்டது.

அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக, ஜேர்மனியும் பிரான்ஸூம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐக்கியத்தைப் பேணுவதற்காக பிரிட்டனுக்கு எதிராக ஒரு கடுமையான போக்கை எடுத்துள்ள நிலையில், அவை வாஷிங்டனுக்கு எதிராகவும் அவற்றின் கரத்தைப் பலப்படுத்த முனைந்துள்ளன. பிரிட்டன் வெளியேறுவது மீதான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முந்தைய வாரம் முதலாம் உலகப் போரினது உத்தியோகபூர்வ நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தன, இது பாரீசில் 70 உலக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு இட்டுச் சென்றது. மே அதில் கலந்து கொள்வது குறித்து சிந்திக்கக்கூட இல்லை என்பதோடு அந்த தினத்தில் இலண்டனிலேயே இருந்துவிட்டார் என்றளவுக்கு அவரின் தனிமைப்படல் உள்ளது. இன்னும் அதிகமாக குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அமெரிக்கா இனி ஒரு நம்பகமான கூட்டாளி இல்லை என்பதை அங்கீகரித்து —ரஷ்யா மற்றும் சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல— ஐரோப்பாவுக்கு அதன் சொந்த இராணுவம் அவசியப்படுகிறது என்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அறிவிப்பு மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு இடையே விரோதமான உறவுகள் எழுந்தன.

ட்ரம்ப் பாரீசில் வந்திறங்கியதும், “அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஐரோப்பா அதன் சொந்த இராணுவத்தைக் கட்டமைக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சற்று முன்னர் பரிந்துரைத்துள்ளார். மிகவும் அவமரியாதையாக உள்ளது, ஆனால் ஐரோப்பா நேட்டோவில் அதன் நியாயமான பங்கை முதலில் செலுத்த வேண்டியிருக்கும், அதில் பெரும்பான்மையை அமெரிக்கா மானியமாக அளித்து வருகிறது!” என்று ட்வீட் செய்து எதிர்கருத்து வெளியிட்டார்.

செவ்வாயன்று, அவர் பின்வருமாறு ட்வீட் செய்தார், “அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக இமானுவல் மக்ரோன் ஐரோப்பாவுக்கான சொந்த இராணுவத்தைக் கட்டமைக்க அறிவுறுத்துகிறார். ஆனால் ஜேர்மனி தான் முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஈடுபட்டு இருந்தது — இது எப்படி பிரான்சுக்கு ஏற்புடையதாக ஆனது? அமெரிக்கா வருவதற்கு முன்னர் அவர்கள் பாரீசில் ஜேர்மன் படிக்க தொடங்கி இருந்தார்கள்.”

நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் போர்க்கால தலைவர் மார்ஷல் பெத்தானைக் கௌரவிப்பதற்கான மக்ரோனின் முன்மொழிவுக்கு எதிராக ஒன்றும் கூறாத ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஒரு சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ தகைமைக்கான மக்ரோனின் அழைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டார். “ஒரு நாள் ஒரு நிஜமான ஐரோப்பிய இராணுவத்தைத் ஸ்தாபிக்கும் [அவரின்] தொலைநோக்கு" குறித்து செவ்வாயன்று அவர் ஸ்ராஸ்பேர்க் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்துகையில், “நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கும் காலங்கள் முடிந்துவிட்டன,” என்றார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், வெளியேறுவதற்கான எந்த உடன்படிக்கையும் இல்லாமல் மிகப் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்பதை விட ஒரு மோசமான உடன்படிக்கையை ஏற்க மே நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் இது போர்க்களத்தை மட்டுமே மாறியுள்ளதுடன், இதில் ஆளும் உயரடுக்கு கோபத்துடன் மோதிக்கொண்டுள்ளன.

பிரிட்டன் வெளியேறுவதற்கான 2016 சர்வஜன வாக்கெடுப்பை செயலூக்கமாக புறக்கணிக்க வேண்டுமென்று அழைப்புவிடுத்து சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகையில், இந்த இரண்டு வலதுசாரி முதலாளித்துவ கன்னைகளில் எதையும் ஆதரிக்க தொழிலாள வர்க்கத்திற்கு விருப்பமில்லை என்று வலியுறுத்தியது. பிரிட்டன் வெளியேறுவது என்பது ஒரு பொருளாதார பேரழிவாக, வெளிநாட்டவர் விரோத தேசியவாதம் மீதான ஒருகுவிப்பாக மற்றும் தொழிலாளர்களின் வேலைகள், கூலிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை விலையாக கொடுத்து தொடுக்கப்பட்ட வர்த்தக போர் திட்டங்களாக நிரூபணமாகி உள்ளது. இதை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாக இருக்கலாம் என்பதை ஆதரிப்பதன் மூலமாக எதிர்க்க முடியாது, அங்குள்ள அங்கத்துவ அரசாங்கங்களும் தீவிரப்படுத்தப்படும் இராணுவவாதம், புலம்பெயர்வோர் விரோத நடவடிக்கைகள் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சமூக செலவினக் குறைப்பு நடவடிக்கைகள் என அதே திட்டநிரலை தான் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதுடன், அக்கண்டம் எங்கிலும், அனைத்திற்கும் மேலாக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில், பாசிசவாத இயக்கங்கள் எழுச்சி பெறுவதற்கு எரியூட்டிக் கொண்டிருக்கின்றன.

வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்த, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சர்வதேசியவாத வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பன்னாட்டு பெருநிறுவனங்களின் ஐரோப்பாவுக்குப் பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டமே தொழிலாளர்களின் மாற்றீடாகும்.