ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The only answer to Brexit is the United Socialist States of Europe

பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒரே பதில், ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் மட்டுமே

By Chris Marsden
19 November 2018

பிரிட்டனின் ஆளும் உயரடுக்கிற்குள் கன்னைவாத மோதல் உச்சத்தில் உள்ளது. 1956 சூயஸ் நெருக்கடி மீதான எச்சரிக்கைகளையே விஞ்சிய நெருக்கடி எச்சரிக்கைகளுக்கும் மற்றும் ஐரோப்பாவுடன் பிரிட்டனின் உறவுகளை நிரந்தரமாக முறித்துவிடும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், பொலிஸ், இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளால் ஒரு தேசிய அவசரகால நெருக்கடி நிலைக்கான முன்னேறிய தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும் இந்தவொரு அரசியல் மோதல், அனைத்திற்கும் மேலாக, அதன் விளைவின் மீது தொழிலாள வர்க்கம் செல்வாக்கு செலுத்தாதவாறு திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டிருப்பதால் குணாம்சப்பட்டுள்ளது.

பழமைவாதிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளது பிரெக்ஸிட்-ஆதரவு கன்னை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டிஷ் அங்கத்துவத்தின் மீதான 2016 சர்வஜன வாக்கெடுப்பின் புனிதத்தன்மையை மக்களின் அறிவிக்கப்பட்ட விருப்பமாக மேற்கோளிடுகின்றன, அதேவேளையில் அதிலேயே தங்கியிருப்பதை ஆதரிக்கும் சக்திகள் இரண்டாவது "மக்கள் வாக்கெடுப்பை" வலியுறுத்துகின்றன. ஆனால் விவாதத்தின் விஷேடமான அகராதியான அதாவது, —“பிரிட்டன் கடுமையாக வெளியேறுவது (Hard Brexit),” “பிரிட்டன் முரண்பாடின்றி வெளியேறுவது (Soft Brexit),” “வெளியேற்றம்,” ஆகியவை— இந்த முரண்பாடுகள் இறுதியில் எங்கு சென்று முடிகின்றன என்பதை காட்டுகின்றன.

இது, அதிகரித்துவரும் பாதுகாப்புவாதம், வர்த்தக போர் மற்றும் இராணுவவாதத்தின் வெடிப்பு ஆகியவற்றிற்கு இடையே, பிரிட்டனின் புவிசார்மூலோபாய நோக்குநிலை சம்பந்தப்பட்ட, பொருளாதார மற்றும் அரசியல் கூட்டணிகள் சம்பந்தப்பட்ட ஒரு மோதலாக உள்ளது. ஒவ்வொரு கன்னையும் —ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்திற்கு சார்பானதாக இருக்கட்டும் அல்லது எதிரானதாக இருக்கட்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏதேனும் வடிவில் தொடர்ந்து உறவுகளைத் தக்க வைத்திருக்க வேண்டுமென வலியுறுத்துவதாக இருக்கட்டும்— தொழிலாள வர்க்கத்தின் நலன்களை உக்கிரமாக எதிர்க்கின்றது.

பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பவர்கள், அமெரிக்கா, சீனா மற்றும் தெற்காசிய சந்தைகளுடன் போட்டியிடுவதற்காக, சம்பளங்களைக் குறைத்து சுரண்டலை அதிகரிப்பது உட்பட பொருளாதார அதிர்ச்சி வைத்தியத்தை திணிப்பதற்கு கடுமையான பிரிட்டன் வெளியேற்றம் எவ்வாறு அவசியமான நிலைமைகளை உருவாக்கும் என்பதைக் குறித்து பகிரங்கமாக விவாதிக்கிறார்கள். ஆனால் அதிலேயே தங்கியிருக்கலாம் எனும் டோரி அணியினரும் மற்றும் தொழிற் கட்சியில் உள்ள அவர்களின் பிளேயரிச கூட்டாளிகளும் பிரிட்டன் வெளியேறுவதன் பொருளாதார தாக்கம் குறித்து எச்சரிக்கையில், அவர்கள் ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க உதவியவர்கள் பேசுவதைப் போல பேசுகிறார்கள் — மேலும் இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தங்கி இருந்தாலும் அதேயேதான் செய்வார்கள்.

கடந்த வாரம், ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையாளர் பிரிட்டனில் வறுமை குறித்து அவரின் அறிக்கை சமர்பித்தார். பல்வேறு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்கு விஜயம் செய்த பின்னர், அவர் குறிப்பிடுகையில், சிக்கன நடவடிக்கைகளானது "அதிகளவில் உணவு விநியேக நிலையங்களின் அதிகரிப்பு மற்றும் அவற்றிற்கு வெளியே காத்திருக்கும் வரிசைகள், மக்கள் வீதிகளில் மோசமான நிலைமைகளில் தூங்கும் நிலை, வீடற்ற நிலையின் அதிகரிப்பு, தற்கொலை தடுப்புக்காக அரசு ஒரு அமைச்சரை நியமிக்க இட்டுச் சென்றுள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை உணர்வு, முன்னர் கேட்கப்பட்டிராத மட்டத்திலான தனிமை மற்றும் அன்னியப்பட்டுள்ளமை... ஆகியவற்றிற்கு இட்டுச் சென்றுள்ளது.

“விளைவு? மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரான 14 மில்லியன் பேர், வறுமையில் வாழ்கின்றனர். நான்கு மில்லியன் பேர் வறுமைக் கோட்டின் 50 சதவீதத்திற்கும் கீழே உள்ளனர். 1.5 மில்லியன் பேர் கைவிடப்பட்டவர்களாக, அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாதவர்களாக உள்ளனர். பரவலாக மதிக்கப்படும் Fiscal ஆய்வுகள் பயிலகம் 2015 மற்றும் 2022 க்கு இடையே குழந்தை வறுமை 7% உயரும் என்று அனுமானிக்கிறது, வேறு பல ஆதாரங்கள் குழந்தை வறுமை விகிதங்களை அதிகப்பட்சமாக 40% வரை உயருமென அனுமானிக்கின்றன. இருபத்தோராம் நூற்றாண்டில் ஏறத்தாழ இரண்டு குழந்தைகளில் ஒன்று வறுமைக்குள் தள்ளப்படும் என்பது பிரிட்டனுக்கு வெறும் அவமானம் என்பது மட்டுமல்ல, மாறாக ஒரு சமூக பேரிடர் மற்றும் ஒரு பொருளாதார சீரழிவு, அனைத்தும் ஒன்றாக ஒன்று திரள்கிறது.”

இது, பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது வகையறாக்களுக்கு ஒரு மிதமான, நாகரீகமான மாற்றீடு என்று சித்தரிக்கப்பட்டவர்களின் முன்வரலாறில் இருந்து வருகிறது.

இந்நிலைமை இன்னும் மோசமடைய உள்ளது. சமூக கொள்கையில் மாற்றம் இல்லையென்றால், அல்ஸ்டன் எச்சரிக்கிறார், பிரெக்ஸிட் தாக்கம் "குறிப்பிடத்தக்களவில் மக்கள் அதிருப்திக்கும், கூடுதல் பிளவு மற்றும் ஸ்திரமின்மைக்குமே கூட இட்டுச் செல்லக் கூடும்...”

ஐரோப்பிய சந்தைகளை வரியின்றி அணுகுவதைப் பாதுகாப்பதன் மூலமாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய அந்தஸ்தை எவ்வாறு உறுதிப்படுத்தி வைக்கலாம் என்பதே, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருக்கலாம் என்ற ஆளும் வர்க்க கன்னையின் ஒரே உண்மையான கவலையாக உள்ளது. தங்கியிருக்கலாம் என்று அறிவுறுத்துபவர்களில் எவருமே, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பொருளாதாரங்களை சீரழித்து, அதன் தொழிலாளர்களை சமூக பேரழிவுக்கு உட்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியமானது ஒரு தசாப்தத்திற்கும் அதிகமாக சிக்கன கொள்கைகளின் எந்திரமாக செயல்பட்டுள்ளது என்பதை நினைவுகூர விரும்பவில்லை. சமகால ஐரோப்பிய அரசியல் மற்றும் சமூக ஒழுங்கமைப்பின் யதார்த்தத்தை மூடிமறைக்க, ஒரு மவுனச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே, ஒவ்வொரு இடத்திலும், சுதந்திர வர்த்தகமானது வர்த்தக போருக்கும், நிதிய பாதுகாப்பானது வேலையின்மைக்கும், செல்வவளமானது சிக்கன நடவடிக்கைக்கும், “மக்களுக்கு இருந்த சுதந்திர இடம்பெயர்வானது" எல்லைகளை மூடுதல் மற்றும் பாசிசவாத வலதின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு தலையீட்டைத் தடுப்பதற்கும் ஜேர்மி கோர்பினின் கீழ் தொழிற் கட்சி முக்கிய பாத்திரம் வகித்து வருகிறது. கோர்பின் மீண்டுமொருமுறை ஏகாதிபத்தியத்தின் மிகவும் சக்தி வாய்ந்த பிரதிநிதிகளின் கட்டளைகளைக் கடமையுணர்வோடு பின்பற்றுகிறார். கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் வாட்டிவதைக்கும் ஆழமான சிக்கனத் திட்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தபோதும் கூட, ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தங்கியிருப்பதற்கான 2016 பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக, அவர், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அவரின் தசாப்த கால எதிர்ப்பை கைவிட்டார். இப்போது அவர் மோசமடைந்து வரும் மோதலைத் தடுப்பதற்காகவும், பிரெக்ஸிட் நெருக்கடியை சமாளித்துக்கொண்டு தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும், தொழிற் கட்சியை பாதுகாப்பான கரங்களாக காட்டுகிறார்.

அவரது முன்மொழிவு —பிரதம மந்திரி தெரேசா மே இன் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கு ஓர் "அர்த்தமுள்ள வாக்கெடுப்பு" வேண்டும் என்பது— முற்றிலும் அரசியல் தேவைக்கேற்ப வழிநடத்தப்படும் பல-கட்ட முன்மொழிவாகும், இது ஒரு தொழிற் கட்சி சிறுபான்மை அரசாங்கம் ஐரோப்பிய சந்தைகளை அணுகுவதை உத்தரவாதப்படுத்துவதற்காக பிரிட்டன் வெளியேறுவது குறித்து மறுபேரம்பேசுவதற்கானது, அல்லது, இதில் தோல்வியடைந்தால், அதிலேயே தங்கியிருக்கலாம் என்றவொரு வாய்ப்பை உள்ளடக்கிய இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பு கோருவதாகும். அங்கே கோர்பினும் நிழல் அரசாங்க சான்சிலர் ஜோன் மெக்டொனனெலும் இலண்டன் நகரில் இதற்கான மாற்றீடாக அவர் டோரிக்களை பதவியிறக்க உடனடியாக ஒரு பொது தேர்தலைக் கோரக்கூடும் என்பதை முன்வைக்கையில், தொழிலாள வர்க்கத்திடம் முறையீடு செய்வது குறித்து அங்கே எந்த குறிப்பும் இல்லை.

பிரிட்டன் ஆட்சியாளர்கள் முகங்கொடுக்கும் நெருக்கடியை தீர்ப்பதற்காக அல்ல, மாறாக இங்கேயும் மற்றும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக, அனைத்துமே, ஒரு சுயாதீனமான அரசியல் விடையிறுப்பை ஒழுங்கமைப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் தகைமையைச் சார்ந்துள்ளது.

பூகோளரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தில், தேசிய அடித்தளத்தில் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதோ அல்லது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதுகாப்பதோ சாத்தியமே இல்லை என்பதை பிரிட்டன் வெளியேறும் விவகாரம் நிரூபித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவமும் உழைக்கும் மக்களுக்கு உண்மையான மாற்றீட்டை வழங்காது. ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிடும் சிக்கன கொள்கைகளுக்கு எதிர்ப்பாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் இத்தாலி, ஹங்கேரி மற்றும் போலாந்தின் வலதுசாரி அரசாங்கங்களுக்கும் மற்றும் புரூசெல்ஸிற்கும் இடையே ஒரு மோதல் வெடிப்பதற்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இந்த அதிகரித்துவரும் தேசிய மற்றும் சமூக விரோதங்களின் தாக்கத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் உடைந்து வருகிறது. உலகளாவிய சந்தைகள் மற்றும் ஆதாரவளங்களைக் கட்டுப்பாட்டில் கொள்வதற்கான போராட்டத்தில் ஒரு வர்த்தக அணியாக ஒருங்கிணைக்கப்பட்ட அது, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தலைமையில் அதன் சொந்த ஆயுதப்படையுடன் ஓர் இராணுவ கூட்டணியாக அதை மாற்றுவதற்கும் மற்றும் நேட்டோ மூலமாக அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மீள்ஆயுதமயமாக்கலுக்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரண்டு முறை துன்பியலாக நிரூபிக்கப்பட்டவாறு, இதுபோன்ற தீவிரமடைந்து வரும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலின் விளைவு உலக போராகும்.

முதலாளித்துவத்திடமிருந்து உடைக்காமல், உலகம் எதிர்விரோத தேசிய அரசுகளாக பிளவுபட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வராமல் ஐரோப்பாவை முற்போக்காக ஐக்கியப்படுத்துவது சாத்தியமில்லை. மூன்றாம் அகிலத்திற்குப் பின்னர் லெனின் படைப்பில் ட்ரொட்ஸ்கி விளக்கினார், “ஐரோப்பிய நாடுகள் தங்களைக் அதிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாதளவிற்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான உயிரோட்டமான பிணைப்பை, புவியியல்ரீதியிலும் வரலாற்றுரீதியிலும், நிலைமைகள் முன்பே தீர்மானித்துள்ளன. ஐரோப்பாவின் நவீன முதலாளித்துவ அரசாங்கங்கள் ஒரு தனி வண்டியில் பூட்டப்பட்ட படுகொலையாளர்களைப் போலிருக்கின்றன.”

தொழிலாள வர்க்கம் ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் அவர்களின் சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து மட்டுமே முதலாளித்துவத்திற்கு எதிராக போராட முடியும். நிதியியல் செல்வந்த உயரடுக்கு மற்றும் அதன் அரசாங்கங்களின் ஆட்சியானது, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளில் ஒரு சோசலிச பிரிட்டனைக் கொண்டு பிரதியீடு செய்யப்பட வேண்டும். இது, ட்ரொட்ஸ்கி விவரித்தவாறு, “பாட்டாளி வர்க்க புரட்சியின் இயக்கவியலுக்கு ஒத்திருக்கிறது, இது அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் உடைந்து வராது, மாறாக அது ஒரு நாடு மாற்றி ஒரு நாடாக கடந்து செல்வதுடன், அவற்றிற்கு இடையே, அதுவும் குறிப்பாக ஐரோப்பா அரங்கில், மிகவும் சக்தி வாய்ந்த வெளிப்புற எதிரிகளுக்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் கண்ணோட்டத்தில் இருந்தும், மற்றும் பொருளாதார கட்டமைப்பின் கண்ணோட்டத்தில் இருந்தும், மிக நெருக்கமான பிணைப்பு அவசியப்படுகிறது.”

இந்த முன்னோக்கை ஏற்பதானது, மிகவும் சக்தி வாய்ந்த சமூக சக்தியான ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை இயக்கத்திற்குள் கொண்டு வரும். பிரிட்டன் வெளியேறுவது குறித்த ஒவ்வொரு விபரத்தின் மீதும் மற்றும் உள்மோதல்கள் மீதும் ஊடகங்கள் தனித்துவமாக முன்னீடுபாடு காட்டுகின்ற நிலையில், அக்கண்டம் எங்கிலும் வர்க்க போராட்டம் வெடிப்பதற்கான எண்ணற்ற அறிகுறிகள் உள்ளன. இந்தாண்டு, இங்கிலாந்து விரிவுரையாளர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ளது, பிரெஞ்சு இரயில்வே தொழிலாளர்கள், ஜேர்மன் பொறியாளர்கள், ரைன்எயர் மற்றும் அமசன் தொழிலாளர்களின் எல்லை-கடந்த நடவடிக்கைகளைக் கண்டுள்ளது. ஜேர்மனியில் அதிவலதின் வளர்ச்சிக்கு எதிராக பேர்லினில் 250,000 பேர் கலந்து கொண்ட சமீபத்திய பலமான ஆர்ப்பாட்டம், பிரான்சில் எரிபொருள் வரி உயர்வுக்கு எதிராக நூறாயிரக் கணக்கானவர்களின் போராட்டம், புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்புக்காக இத்தாலி எங்கிலும் நடந்த போராட்டங்கள் போன்ற பெருந்திரளான மக்கள் போராட்டங்களும் அதில் உள்ளடங்கும்.

இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியும், எமது ஐரோப்பிய சகோதரத்துவ கட்சிகளான பிரான்சில் Parti de l’égalité socialiste (PES) மற்றும் ஜேர்மனியில் Sozialistische Gleichheitspartei (SGP) உம், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் நமது சக-சிந்தனையாளர்களுடன் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தின் இந்த அபிவிருத்தி அடைந்து வரும் எதிர்தாக்குதலை முன்னோக்கி எடுத்துச் செல்ல அவசியமான வேலைத்திட்டம் மற்றும் தலைமையை வழங்குகின்றன.