ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Washington imposes new sanctions against Venezuela and Cuba

வெனிசூலா மற்றும் கியூபாவுக்கு எதிராக வாஷிங்டன் புதிய தடையாணைகள் விதிக்கிறது

By Bill Van Auken
3 November 2018

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், நாடு கடந்து வாழும் வலதுசாரிகள் மற்றும் குடியரசுக் கட்சி செயல்பாட்டாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில், வியாழனன்று மியாமியில் பேசிய போர்நாடும் ஓர் உரையில், கியூபா மற்றும் வெனிசூலாவுக்கு எதிராக அமெரிக்க தடையாணைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதை அறிவித்தார்.

இலத்தீன் அமெரிக்காவை நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தினது கொள்கை மீதான போல்டனின் உரை, கியூபா மற்றும் வெனிசூலாவில், அத்துடன் நிக்கரகுவாவில் ஆட்சி மாற்றத்தைக் கோருவதற்கு ஒத்திருந்ததுடன், அமெரிக்க தெற்கு எல்லையின் நாடுகளிலிருந்து வரும் கவலைப்படுத்தும் விதமான நடவடிக்கைகளை வாஷிங்டன் "சகித்து" கொண்டிருக்காது என்ற கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறி, அப்பிரதேசத்தில் அப்பட்டமாக அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்துவதாக இருந்தது.

அமெரிக்க இடைக்காலத்தேர்தல்களுக்கு வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னதாக வந்துள்ள இந்த உரை, கேள்விக்கிடமின்றி ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆதரவு தளத்தை நோக்கி திரும்பும் அதன் முனைவின் பாகமாக இருந்தது. அமெரிக்க ஆதரவிலான ஃபெல்சென்சியோ பாடிஸ்டாவைத் (Fulgencio Batista) தூக்கிவீசிய 1959 புரட்சிக்குப் பின்னர் இருந்து, மியாமியை மையமாக கொண்டு நாடு கடந்து வாழும் கியூபர்களுக்கான அமைப்புகள், புளோரிடாவில் உள்ள அந்த ஆதரவு தளத்தில் உள்ளடங்கி உள்ளன.

போல்டனின் ஆரவார பேச்சு ஐயத்திற்கு இடமின்றி அவரது பிற்போக்குத்தனமான பார்வையாளர்களை கிளர்ந்து எழச்செய்ய உத்தேசித்திருந்த அதேவேளையில், அது இலத்தீன் அமெரிக்காவை நோக்கிய வாஷிங்டனின் அதிகரித்தளவிலான ஆக்ரோஷமான மற்றும் இராணுவவாத கொள்கைக்கு ஓர் உண்மையான வெளிப்பாட்டையும் வழங்கியது.

அவர் கியூபா, வெனிசூலா மற்றும் நிக்கரகுவாவை "கொடுங்கோல் ஆட்சியின் முக்கூட்டு" (Troika of Tyranny) என்று முத்திரை குத்தினார், இது மத்திய கிழக்கில் நீடித்த அமெரிக்க போர்களைத் தொடங்குவதற்கும், தொடர்வதற்கும் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பயன்படுத்திய "தீயவர்களின் அச்சு" என்ற வாய்சவடாலின் திட்டமிட்ட சாயலாக இருந்தது.

இந்த "பயங்கர நாடுகளின் முக்கோணம் தான் ஆழமான மனிதயின துன்பங்களுக்குக் காரணம், மிகப் பெரியளவில் பிராந்திய ஸ்திரமின்மையின் தூண்டுபொருள், மேற்கத்திய கோளத்தில் கீழ்தரமான கம்யூனிசத்தின் பிறப்புக்கான மூலக்காரணம்,” என்றவர் தொடர்ந்து அறிவித்தார்.

இந்த முக்கூட்டு என்றழைக்கப்படுவது ட்ரம்ப் நிர்வாகத்தில் "அதற்குரிய பொருத்தமானதைச் சந்தித்து" உள்ளதாகவும், அது "இனியும் நமது கடலோரங்களில் சர்வாதிகாரிகளையும், கொடுங்கோன்மைகளையும் சமாதானப்படுத்திக் கொண்டு இருக்காது,” என்றும் அவர் முழங்கினார். அவை "அவற்றின் அழிவைச் சந்திக்கும்" என்றும், “அவை அவற்றின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றன,” என்றும், வாஷிங்டன் “இந்த முக்கோணத்தின் ஒவ்வொரு முனையும் வீழ்வதைப் பார்க்க எதிர்நோக்கி" காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அமெரிக்காவை "மனித உரிமைகள்" மற்றும் "சட்டத்தின் ஆட்சியினது" பாதுகாவலனாக முன்னிறுத்திய போல்டன், இப்பிரதேசத்தின் ஏனைய பகுதிகள் அவற்றிற்கான முன்மாதிரியாக "வடக்கைப் பார்க்குமாறும், நமது தேசியக் கொடியைப் பார்க்குமாறும்" அழைப்பு விடுத்தார்.

இந்த பாசாங்குத்தனத்தின் அபத்தம், போல்டன் உரை வழங்கி வெறும் ஒரு சில மணித்தியாலங்களில் ட்ரம்ப் வழங்கிய ஓர் உரையில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது, அதில் அமெரிக்க ஜனாதிபதி மூடிமறைப்பின்றி மத்திய அமெரிக்க அகதிகளுக்கு எதிராக தஞ்சம் கோருவதன் மீதான நிராகரிப்பைத் திணித்து அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு சூளுரைத்ததுடன், அமெரிக்க-மெக்சிகன் எல்லையில் புலம்பெயரும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அமெரிக்க துருப்புகள் சுட்டுக் கொல்லும் என்று அச்சுறுத்தினார்.

நெருக்கடியில் சிக்கியுள்ள வெனிசூலா பொருளாதாரத்திற்கான அன்னிய செலாவணிக்கு, முக்கிய ஆதாரமாக விளங்கும் அந்நாட்டின் தங்கம் ஏற்றுமதிகளைத் தடை செய்ய நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கையே போல்டன் உரையில் அறிவிக்கப்பட்ட புதிய தடையாணைகளில் மிகவும் முக்கியமானதானதாக இருந்தது. வாஷிங்டனுடன் அதிகரித்த மோதலில் வந்து கொண்டிருக்கும் ஒரு நேட்டோ உறுப்பு நாடான துருக்கிக்கு வெனிசூலா 20 டன் தங்கம் ஏற்றுமதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் வாதிடுகின்றனர். வெனிசூலாவின் தங்கச்சுரங்கத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக, அந்நாட்டின் அரசாங்கம் ஒரு மூலோபாய கூட்டணி என்று எதை விவரித்ததோ அதை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் உடன்பாட்டில் கராகஸ் மற்றும் சீன அரசாங்கம் சமீபத்தில் கையெழுத்திட்டிருந்தன.

தங்க ஏற்றுமதி மீதான இந்த தடையாணைகளின் அறிவிப்பானது, வெனிசூலா பொருளாதாரத்தின் குரல்வளையை நெரிக்க நோக்கம் கொண்ட ஏனைய அமெரிக்க தடையாணைகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் தங்க வர்த்தகத்தில் "மோசடியான நடைமுறைகளும்", “ஊழலும்" உள்ளடங்கி இருப்பதாக வாதிடுகிறது. முக்கியமாக, இதே அடிப்படையில் அந்த பொருளாதாரத்தின் ஏனைய எந்தவொரு துறை மீதும் இந்நடவடிக்கை விரிவாக்கப்படலாம் என்பதையும் அது சேர்த்துக் கொள்கிறது, வெனிசூலாவின் ஏற்றுமதி வருவாய்களில் சுமார் 98 சதவீதமாக உள்ள வெனிசூலா எண்ணெய்க்கு எதிராக அமெரிக்க தடையாணையை உடனடியாக நடைமுறைப்படுத்தவும் இது கதவுகளைத் திறந்துவிடுகிறது.

கியூபாவின் இராணுவம் பொருளாதாரத்தில் பரந்தளவில் பங்குடைமை வகிக்கின்ற நிலையில், அந்நாட்டின் இராணுவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சுமார் இரண்டு டஜன் பொருளாதார நிறுவனங்களை இலக்கு வைத்து கியூபாவுக்கு எதிராக ஒரு புதிய சுற்று தடையாணைகளும் அறிவிக்கப்பட்டன. இது ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டு சுமார் 180 கியூபா நிறுவனங்களை இலக்கு வைத்த நடவடிக்கைக்குக் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவை, கியூபாவுக்கு எதிராக 58 ஆண்டுகால அமெரிக்க பொருளாதார தடையைக் கண்டனம் செய்த அதேநாளில் போல்டன் உரை நிகழ்த்தி இருந்தார். அந்த கண்டனத் தீர்மானத்திற்கு 189 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன, இரண்டே இரண்டு நாடுகள்—அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்—அதற்கு எதிராக வாக்களித்தன.

1959 புரட்சியை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுடன் தொடர்புபட்ட வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிராக, நாடு கடந்து அமெரிக்காவில் வாழும் கியூபர்களை மத்திய நீதிமன்றங்களில் சட்ட வழக்கு தொடுக்க அனுமதிக்கும் வகையில், ட்ரம்ப் நிர்வாகம் 1996 கியூபா-விரோத ஹெல்ம்ஸ்-புர்டன் (Helms-Burton) சட்டத்தின் ஒரு பிரிவை நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருவதாக போல்டன் அவர் உரைக்குப் பிந்தைய கேள்வி-பதில் நேரத்தில் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கை கூடுதலான பிராந்தியங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் இரண்டு தசாப்தங்களாக வழமையாக அது கைவிடப்பட்டிருந்தது.

“அமெரிக்கா முதலில்" உலகளாவிய வர்த்தக போர் கொள்கையின் பாகமாக, ட்ரம்ப் வெள்ளை மாளிகை இந்த நடைமுறையிலிருந்து உடைத்துக் கொள்ளுமென தெரிகிறது, இது கியூபாவில் அதிகளவில் முதலீடுகள் செய்துள்ள கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டும் உட்பட வாஷிங்டனின் முன்னணி வர்த்தக பங்காளிகளுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே ஒரு நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

நிக்கராகுவாவிற்கு எதிராக எந்த புதிய தடையாணைகளும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், போல்டன் அதே மாதிரியான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியதுடன், “எதிர்வரும் மிக அண்மித்த காலத்தில்" மேற்கொள்ளப்பட இருக்கின்ற நடவடிக்கைகளால், ஜனாதிபதி டானியல் ஓர்டேகா (Daniel Ortega) அரசாங்கம் "அமெரிக்காவின் துரித தடையாணைகள் ஆட்சிமுறையின் முழு சுமையை உணரும்" என்று வலியுறுத்தி, கியூபா மற்றும் வெனிசூலாவுக்கு எதிராக திரும்பியிருந்த ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கைகளை முன்னெடுத்தார். நிக்கராகுவா மற்றும் வெளிநாட்டு மூலதன நலன்களுக்கு ஏற்ப திருப்பிவிடப்பட்ட ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 2007 இல் அதிகாரத்திற்கு வந்த அந்த சான்டினிஸ்டா (Sandinista) தலைவர் அரசாங்கத்தை நோக்கி வாஷிங்டன் இதுவரையில் ஒருவிதமான விருப்புவெறுப்பைக் காட்டி வந்துள்ளது.

அனைத்து விதமான குறைகூறல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே, பிரேசிலின் முன்னாள் இராணுவ சர்வாதிகாரம் மற்றும் அதன் சித்திரவதை முறைகளைப் புகழ்ந்துரைத்துள்ளவரும், அவரது அரசியல் போட்டியாளர்கள் சிறைவாசம் அல்லது நாடு கடத்தப்படுவதற்கு இடையே ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் என்று அச்சுறுத்தி உள்ளவருமான பாசிசவாத முன்னாள் இராணுவத் தளபதி ஜயர் போல்சொனாரோ கடந்த மாதம் பிரேசிலில் தேர்ந்தெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அது அமெரிக்காவிற்கு ஒரு ஒளிவிளக்காக இருந்ததாக போல்டன் தெரிவித்தார்.

போல்டன் போல்சொனாரோவை "ஒத்த சிந்தனை கொண்ட தலைவர்" என்றும், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை "அப்பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு சாதகமான அறிகுறிகளில்" ஒன்று என்றும் வர்ணித்ததுடன், “சுதந்திர சந்தை கோட்பாடுகள் மற்றும் பகிரங்கமான, வெளிப்படையான மற்றும் கணக்கில் கொள்ளத்தக்க அரசாங்கத்திற்கு அதிகரித்து வரும் பிராந்திய பொறுப்புறுதியைக்" காட்டுவதாக தெரிவித்தார்.

ட்ரம்புக்கும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரேசிலிய ஜனாதிபதிக்கும் இடையே புரிந்துணர்வு ஒருபக்கம் இருந்தாலும், வாஷிங்டனுடன் அணிசேர்ந்த கொள்கையை மற்றும் அப்பிரதேசத்தில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிரான ஒரு கொள்கையைப் பின்பற்றுவதற்கு போல்சொனாரோ வழங்கிய உறுதிமொழி தான், அவர் மீது அமெரிக்க நிர்வாகம் ஈர்க்கப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. பிரேசிலிய தேர்தல் பிரச்சாரத்தின் போது, அவர் பெய்ஜிங் "பிரேசிலை விலைக்கு வாங்க" முயற்சிப்பதாக கண்டித்ததுடன், 1970 களில் இருந்து பிரேசில் அங்கீகரித்திருந்த "ஒரே சீனா" கொள்கையை எதிர்க்கும் விதத்தில் கடந்த பெப்ரவரியில் தாய்வானுக்கு ஓர் ஆத்திரமூட்டும் விஜயமும் கூட மேற்கொண்டார்.

“மனித உரிமைகள்" குறித்த மற்றும் "கொடுங்கோன்மைகளை" சகித்துக் கொள்ள மறுப்பது என்ற அனைத்து தோரணைகளுக்குப் பின்னால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்டகாலமாக அதன் "சொந்த கொல்லைப்புறமாக" கருதப்படும் இலத்தீன் அமெரிக்காவில் சீனாவின் ஆதிக்கம் உறுதியாக வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையானது முன்பினும் அதிக பகிரங்கமாக சீனாவுடனான அதன் மூலோபாய மோதலால் உந்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகள் மீண்டுமொருமுறை மொன்ரோ கோட்பாட்டையும் (Monroe Doctrine), வாஷிங்டன் அதன் அரை-காலனித்துவ நாடுகளாக கருதும் நாடுகளை "வெளிப்புற" அதிகாரங்கள் களவாடுவதைத் தடுப்பதற்காக வாஷிங்டனின் தலையீடு செய்வதற்கான "உரிமை" என்று கூறப்படுவதையும் கையிலெடுத்து வருகிறார்கள்.

ட்ரம்ப் நிர்வாகம் செப்டம்பரில், எல்சால்வடோர், டொமினிக்கன் குடியரசு மற்றும் பனாமா ஆகியவற்றிலிருந்து அதன் தூதர்களைத் திரும்ப அழைத்துக் கொண்டதுடன், இந்நாடுகளின் அரசாங்கங்கள் தாய்வானுடன் —இது முந்தைய கம்யூனிஸ்ட்-விரோத சர்வாதிகாரங்களுடன் உறவுகளைப் பிணைத்திருந்தது— முறித்துக் கொண்டு பெய்ஜிங்குடன் உறவுகளை ஸ்தாபிக்க முடிவெடுத்ததற்காக அவற்றிற்கான உதவிகள் வெட்டப்படுமென அச்சுறுத்தியது.

இவ்வாறிருக்கையிலும் கூட, மியாமியில் போல்டன் அவர் உரை நிகழ்த்தி கொண்டிருந்த போது, எல்சால்வடார் மற்றும் டொமினிக்கன் குடியரசு இரண்டின் ஜனாதிபதிகளும் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் இருந்த அதேவேளையில், சீனாவுக்கும் இலத்தீன் அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதார-வர்த்தக கூட்டுறவை ஊக்குவிப்பதில் ஒருங்குவிந்த, சீன-இலத்தீன் அமெரிக்க கரீபிய வர்த்தக உச்சிமாநாடு பனாமா நகரில் அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று சீனாவும் பனாமாவும் அதேநாளில் அறிவித்தன. சீனாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு செல்வாக்கு அமெரிக்காவுக்கு எந்தளவுக்கு சவால்களை முன்நிறுத்துகின்றதோ, வாஷிங்டன் அந்தளவுக்கு அதிகரித்தளவில் ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவவாதத்தைக் கொண்டு விடையிறுக்கும்.

“கம்யூனிசம்" மற்றும் "சோசலிசம்" மீது போல்டன் மீண்டும் மீண்டும் அவர் கண்டனங்களைக் கூறியமை, மற்றும் கடந்த 20 ஆண்டுகளாக பொருளாதாரத்தின் மீது நிதி மூலதனம் அதன் பிடியைப் பலப்படுத்தி உள்ள ஒரு நாடான, அரசாங்கம் பெரிதும் இராணுவத்தால் நடத்தப்பட்டு வந்துள்ள ஒரு நாடான வெனிசூலாவினது பொருளாதார மற்றும் சமூக பேரழிவுகள், "இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட" சோசத்திற்கான ஒரு முன்னுதாரணம் என்று அவர் வலியுறுத்தியமையும் போல்டன் உரையில் குறிப்பிடத்தக்கதாகும்.

முதலாளித்துவ நெருக்கடி உருவாக்கி வருகின்ற கடுமையான நிலைமைகள் இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒரு புதிய புரட்சிகர சவாலை உருவாக்கி வருகிறது என்று அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் பயமே, இந்த பிற்போக்குத்தனமான வார்த்தையாடலின் அடியில் உள்ளது.