ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A terrorist network inside the German Army

ஜேர்மன் இராணுவத்திற்குள் ஒரு பயங்கரவாத வலையமைப்பு

By Peter Schwarz
17 November 2018

ஜேர்மன் ஆயுதப்படைகள் (Bundeswehr) மற்றும் இரகசிய சேவைகளுடன் நெருக்கமாக இணைந்த, ஆயுதங்களைச் சேமித்து வருகின்ற மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் பற்றிய படுகொலை பட்டியல்களை உருவாக்கக் கூடிய மற்றும் அரசால் மூடிமறைக்கப்பட்டு வருகின்ற, துணை-இராணுவப்படை வலையமைப்புகள் ஜேர்மனியில் உருவாகும் என்று நீண்டகாலமாக, யாரொருவரும் நடைமுறையளவில் கற்பனையும் செய்திருக்க மாட்டார்கள்.

வைய்மார் குடியரசில், அங்கே இதுபோன்ற எண்ணற்ற குழுக்கள் இருந்தன. இவை நூற்றுக் கணக்கான முக்கியமான இடதுசாரி அரசியல் எதிர்ப்பாளர்களைப் படுகொலை செய்தன. இவற்றில் பிரபலமாக அறியப்பட்டது தூதரக அமைப்பு (Consul Organization) என்பது. 5,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இது, கறுப்பு குடியரசுப்படை (“Black Reichswehr”) என்றும் அறியப்பட்டது.

1918 நவம்பர் புரட்சியை இரத்தம்தோய்ந்தமுறையில் ஒடுக்குவதில் சம்பந்தப்பட்டிருந்த ஒரு தன்னார்வ படையான (Freikorps) Ehrhardt கடற்படை பிரிவிலிருந்து உதித்து வந்திருந்த அது, ஏகாதிபத்திய இராணுவம் (Reichswehr), பொலிஸ் மற்றும் நீதித்துறையுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியது. Zentrum கட்சி அரசியல்வாதி மத்தியாஸ் ஏர்ஸ்பேர்கர் (Matthias Erzberger) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் வால்ட்டர் ராத்தனவ் (Walther Rathenau) ஆகியோர் அந்த படையால் பலியானவர்களில் நன்கறியப்பட்டவர்கள். பின்னர், இந்த Consul அமைப்பின் உறுப்பினர்கள் ஹிட்லரின் அதிரடிதாக்குதல் பிரிவான SA ஐ கட்டமைப்பதில் ஒரு முன்னணிப் பாத்திரம் வகித்தனர்.

இதுபோன்ற சக்திகள் "ஆயுதப்படைகளின் உள்ளே நிழலுலக இராணுவமாக" பணியாற்றுகின்றன என்று ஜேர்மன் செய்தி பத்திரிகை Focus இன் நவம்பர் 10 ஆம் தேதி பதிப்பின் ஓர் அறிக்கையில் அம்பலப்படுத்தப்பட்டது. மத்திய தலைமை வழக்குதொடுனர் அலுவலகத்தின் ஆவணங்களை புலனாய்வுக்கு உட்படுத்தியதன் அடிப்படையில், அந்த பத்திரிகை "சுமார் 200 முன்னாள் மற்றும் இன்னாள் ஜேர்மன் இராணுவப்படை சிப்பாய்களின் ஒரு இரகசிய வலையமைப்பை" விவரிக்கிறது.

Focus தகவலின்படி, “எண்ணற்ற புலனாய்வுகள்", “அரசியல் எதிர்ப்பாளர்களைத் திட்டமிட்டு கொல்லவும் தயங்காதவை என்று கூறப்படும் ஒரு சதிக்குழுவைக் குறித்த விபரத்தை வழங்குகின்றன. புலனாய்வாளர்களின் கருத்துப்படி, இந்த அதிவிஷேட படையினர் —ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்தை ஒட்டிய ஜேர்மன் எல்லையில்— ஆயுதங்கள், வெடிகுண்டுகள், எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றையும் இரகசியமாக குவித்து வைத்துள்ளனர்.”

Focus இன் தகவல்படி, அதில் பங்கெடுத்திருப்பவர்கள், “அவர்களின் அகதிகள் மற்றும் 'இடது மீதான [ஆழ்ந்த] வெறுப்பில்', அவர்கள் செல்ல வேண்டிய இலக்குகள் பற்றிய 'முகவரிகள் மற்றும் புகைப்படங்களுடன் கோப்பு' ஒன்றை உருவாக்கி இருக்கின்றன" என்று சாட்சியம் கூறிய ஒருவர் மத்திய குற்றவியல் பொலிஸ் அலுவலகத்தின் புலனாய்வாளர்களுக்கு தெரிவித்தார். “உளவு பார்க்கப்பட்ட நபர்களை ஒருங்கிணைத்து, 'அவர்கள் எங்கே கொல்லப்பட வேண்டுமோ' அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு வருவது குறித்து [உள்வாட்டாரங்களில்] விவாதிக்கப்பட்டிருந்தது.” விபரமளித்த மற்றொருவரின் கருத்துப்படி, ஜேர்மன் நாடாளுமன்றம் இடது கட்சி தலைவர்களான டீற்மார் பார்ட்ஷ் மற்றும் சாரா வாகன்கினெக்ட் ஆகியோர் பட்டியலின் முதல் இலக்குகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஜேர்மன் ஆயுதப்படையில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான புலன்விசாரணைகள், பயங்கரவாதத்தின் அடிப்படையில் சந்தேகத்திற்குரியவராக ஜேர்மன் இராணுவ அதிகாரி பிரான்ங்கோ ஏ. கைது செய்யப்பட்ட போது, கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால் அரச வழக்குத்தொடுனர் அலுவலகமும் சரி மத்திய குற்றவியல் அலுவலகமும் சரி (BKA) பொதுமக்களை எச்சரிக்க வேண்டுமென கருதவில்லை. பிராங்கோ ஏ. (Franco A) க்கு எதிராக ஆதாரங்கள் பெருவாரியாக இருந்தாலும், அவர் சுதந்திரமாக நடமாடித் திரிகிறார்.

Focus இன் வெளியீடுகளும் கூட இப்போது கண்டும் காணாததைப் போல புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதோடு, மற்ற ஊடக நிறுவனங்களும் ஸ்தாபக அரசியல் கட்சிகளும் அது குறித்து வாய் திறக்கவில்லை. இதுவே இஸ்லாமியவாதிகள் அல்லது இடதுசாரிகளின் ஒரு பயங்கரவாத சூழ்ச்சியைக் குறித்து அப்பத்திரிகை வெளியிட்டிருக்குமானால், அது பல நாட்களுக்கு முடிவின்றி தலைப்பு செய்திகளில் இடம் பெற்றிருக்கும். கடுமையான சட்டங்களுக்கான கோரிக்கைகள் காதைப் பிளந்திருக்கும். ஆனால் ஜேர்மன் இராணுவத்தின் மையத்தினுள் ஒரு சதியை எதிர்கொள்கையில், இறுக்கமான மவுனம் தான் நிலவுகின்றது.

என்ன சம்பந்தப்பட்டிருக்கிறதோ அது ஒரு தனிப்பட்ட விடயமல்ல என்பதற்கு இது மட்டுமே கூட ஆதாரமாக உள்ளது. வலதுசாரி தீவிரவாத சதி சகித்து கொள்ளப்படுகிறது, மூடிமறைக்கப்படுகிறது, அரசு மற்றும் அரசியலின் உயர்மட்ட அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகிறது.

Focus பத்திரிகை தகவலின்படி, ஜேர்மன் இராணுவத்தின் உயர்மட்ட படைப்பிரிவான சிறப்பு படைப்பிரிவு (KSK) தான் இந்த சதி வலையமைப்பின் மையத்தில் உள்ளது. இந்த KSK, ஜேர்மனி மீண்டும் சர்வதேச இராணுவ தலையீடுகளுக்குத் தயாரிப்பு செய்து வந்த போது, 1990 களின் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜேர்மன் இராணுவத்தின் போர் நடவடிக்கைகள் வெளிப்பார்வைக்கு "சமாதான செயல்திட்டங்கள்" என்று காட்டப்பட்ட வேளையில், பயங்கரவாதம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு எதிராக சண்டையிடுவதில் பயிற்றுவிக்கப்பட்ட KSK, பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட அதன் அருவருக்கத்தக்க வேலையை நடத்திக் கொண்டிருக்கிறது. இறந்த சிப்பாய்களின் எண்கள் மற்றும் பெயர்களைக் கூட வெளியிடாத அளவுக்கு, 1,100 பலமான பிரிவின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய இரத்தந்தோய்ந்த ஜேர்மன் இராணுவ நடவடிக்கையாக, குண்டூஸ் படுகொலையில் KSK சம்பந்தப்பட்டிருந்தது, இதில் 100 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

உயரடுக்கு பிரிவுகளுக்குள் வலதுசாரி தீவிரக் கொள்கையினர் மூர்க்கமாக செயல்பட்டு வருகின்றனர் என்பது நீண்டகாலத்திற்கு முன்பே தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ 2003 இன் தொடக்கத்தில், அப்போதைய KSK தளபதி பிரிகேடியர் ஜெனரல் றைன்கார்ட் குன்ஷல் (Reinhard Günzel) கிறிஸ்துவ ஜனநாயக கட்சி (CDU) உறுப்பினர் மார்ட்டீன் ஹோஹ்மனின் (இப்போது இவர் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் AfD கட்சிக்காக அமர்ந்துள்ளார்) யூத-எதிர்ப்புவாத அறிக்கைகளுக்கு அவரின் உடன்பாட்டை பகிரங்கமாக வெளியிட்டதற்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். குன்ஷல் அடுத்தடுத்து நவ-நாஜிக்களுக்கு வழங்கிய அவரின் சொற்பொழிவுகளில், யூத இனப்படுகொலையின் தனித்துவமான தன்மையை மறுத்ததுடன், நூரெம்பேர்க் போர் குற்ற விசாரணைகளைத் தாக்கினார் மற்றும் இரண்டாம் உலக போரில் ஜேர்மன் சிப்பாய்களின் துணிச்சல், வீரம் மற்றும் தியாகத்தைப் புகழ்ந்துரைத்தார்.

KSK சிப்பாய்கள், வலதுசாரி தீவிரவாத இசைக்குழு "Sturmwehr” இன் இசையோடு ஒரு வழியனுப்பு விருந்து உபச்சார விழா கொண்டாடியதுடன், ஹிட்லர் வீரவணக்கம் செலுத்தினர் என்பது கடந்த ஆண்டு ஏப்ரலில் தெரிய வந்தது. இந்த வாரம் தான், ஒரு குடியியல் நீதிமன்றம் ஒரு லெப்டினென்ட் கர்னலுக்கு 4,000 யூரோ அபராத தண்டனை விதித்தது. ஜேர்மன் இராணுவத் தலைமையோ, இதுபற்றி முன்னதாக அதன் உள்ளக நடைமுறைகளை தட்டிக் கழித்திருந்தது.

Focus பத்திரிகை வெளியீடுகள் சம்பந்தமாக வாய்மூடி இருப்பதற்கான காரணம் அவை சந்தேகத்திற்குரியவை என்பதால் அல்ல. ஜேர்மன் அமைச்சகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பத்திரிகை அலுவலகங்களின் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, ஜேர்மன் இராணுவத்திற்குள் நடக்கும் தீவிர வலதுசாரி நடவடிக்கைகள் குறித்தும், நவ-நாஜி அரங்கில் அவர்களின் தொடர்புகள் குறித்தும் நன்கு தெரியும். அவர்கள் இத்தகைய சூழ்ச்சிகளை மூடிமறைத்து அவற்றை ஆதரிக்கிறார்கள் என்பதால் தான், அவர்கள் தங்களை மவுனப் போர்வையில் மூடிக்கொள்கிறார்கள்.

இது, நவம்பர் புரட்சியின் 100 வது நினைவாண்டு விழாவில் சமூக ஜனநாயக கட்சியின் கூட்டாட்சி ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் வழங்கிய அவர் உரையிலும் தெளிவுப்படுத்தப்பட்டது. அதில் அவர், ஸ்பார்டகஸ் மேலெழுச்சி இரத்தச்சேற்றில் ஒடுக்கப்பட்டதை வெளிப்படையாக பாதுகாத்தார், அந்த ஒடுக்குமுறை வலதுசாரி தீவிர கொள்கைவாத Freikorps படையுடன் நெருக்கமான கூட்டுறவில் பிரெடெரிக் ஏபேர்ட் (Friedrich Ebert) ஒழுங்கமைத்ததாகும். Freikorps இல் இருந்து ஹிட்லரின் அதிரடி துருப்புகள் வரையில் அங்கே ஒரு நேரடியான தொடர்பு உள்ளது.

அப்போது போலவே இப்போதும், ஜேர்மனியின் ஆட்சியாளர்கள், வலதுசாரி தீவிர சக்திகளுடன் சேர்ந்து செயல்பட்டு, கடுமையான வர்க்க போராட்டங்களை வன்முறையாக ஒடுக்க தயாரிப்பு செய்து வருகின்றனர். போருக்குப் பிந்தைய காலத்தில் "சமூக சமாதானம்" ஒழுங்கமைத்த "மக்கள் கட்சிகள்" என்றழைக்கப்படுவது விரைவாக அவற்றின் செல்வாக்கை இழந்து வருகின்றன. சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, சமூக ஜனநாயகக் கட்சிக்கான (SPD) ஆதரவு வெறும் 13 சதவீதத்தில் உள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியும், அதிகரித்து வரும் வாடகைகள் மற்றும் தாங்கொணா வேலையிட நிலைமைகளும் மக்களை இன்னும் இன்னும் அதிகமாக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக திருப்பி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் போட்டியிடக் கூடிய ஒரு ஜேர்மன் அல்லது ஐரோப்பிய இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான முன்மொழிவுகளை ஜனநாயக வழிவகைகளைக் கொண்டு எட்ட முடியாது.

“சர்வதேச போராட்டத்தினதும் மற்றும் வர்க்க போராட்டத்தினதும் தீவிர அதிஉயர் பதட்டம், சர்வாதிகாரத்திற்கான குறுக்கு சுற்றில் சென்று முடிவதுடன், ஒன்று மாற்றி ஒன்றாக ஜனநாயகத்தின் தடுப்பு காப்புகளை சிதறடிக்கும்.” என லியோன் ட்ரொட்ஸ்கி 1929 இல் எழுதினார். இது இன்று மீண்டும் நிரூபணமாகி வருகிறது. இதன் காரணமாகத்தான் ஆளும் வர்க்கம், வலதுசாரி சதிகளை, அதுவும் குறிப்பாக அகதிகள் கொள்கைகளில், ஊக்குவித்துக் கொண்டும் சகித்துக் கொண்டும், அதிவலது AfD இன் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டும், வைய்மார் குடியரசின் ஆட்சி முறைகளுக்குத் திரும்பி வருகிறது.

ஜேர்மன் இராணுவத்தின் பயங்கரவாத வலையமைப்பு இராணுவ சொல்லாடல்களில் தன்னை "Day X” க்குத் தயார் செய்து வருவதாக மத்திய குற்றவியல் அலுவலக புலன்விசாரணையாளர்களுக்கு ஓர் ஆதார நபர் கூறியதாக Focus பத்திரிக்கை மேற்கோளிட்டது. "Day X” என்பது “பொது ஒழுங்கு முறிந்துவிட்ட", “பொலிஸ் கூட உதவ முடியாத", "அதிதீவிர நெருக்கடி காலக்கட்டம்" ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு சமூக மேலெழுச்சியை ஒடுக்குவதற்கு அது தயாரிப்பு செய்து வருகிறது.

சென்ற கோடையில், அரசியலமைப்புக்கான பாதுகாப்பு அலுவலகம் (BfV) என்றழைக்கப்படும் ஜேர்மன் இரகசிய சேவை, அதன் ஆண்டு அறிக்கையில், முதல்முறையாக ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei, SGP) ஓர் "இடதுசாரி தீவிரவாத கட்சி" என்றும், கண்காணிப்பில் வைக்க வேண்டிய ஒரு அமைப்பாகவும் பட்டியலிட்டு, அவ்விதத்தில் தடை செய்வதற்கான ஒரு சாத்தியக்கூறை தயாரிப்பு செய்தது. SGP ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது, முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது, ஸ்தாபக கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கிறது என்பவை மட்டும் அது கூறிய ஒரே காரண விளக்கமாக இருந்தது. அந்த அறிக்கை AfD பிரதிநிதிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு உருவாக்கப்பட்டதாகும், BfV இன் தலைவர் ஹன்ஸ்-கியோர்க் மாஸன் அதற்கு பொறுப்பாக இருந்தார், இப்போது இவர் பகிரங்கமாக வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகளை அறிவுறுத்தி கொண்டிருக்கிறார்.

இதுவொரு சர்வதேச நிகழ்வுபோக்கின் பாகமாகும். ஒவ்வொரு இடத்திலும், ஆளும் வர்க்கம் கடுமையான வர்க்க போராட்டங்களை எதிர்நோக்கி வலதுசாரி மற்றும் பாசிசவாத சக்திகளை நோக்கி திரும்பி வருகிறது. வார்சோவில், ஆளும் கட்சியான PIS நவ-நாஜிக்கள் பக்கவாட்டில் இருக்க அவர்களுடன் சேர்ந்து 100 வது போலாந்து சுதந்திர தினவிழாவைக் கொண்டாடியது. அமெரிக்காவில், ஜனாதிபதி ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கு எதிரான அவரது கொடூரமான எதிர்ப்புடன் ஒரு பாசிசவாத இயக்கத்தைக் கட்டமைக்க முனைந்துள்ளார். பிரான்சில், ஜனாதிபதி மக்ரோன் சர்வாதிகாரியும், நாஜி ஒத்துழைப்பாளருமான தளபதி பெத்தானைப் புகழ்ந்துரைக்கிறார்.

தங்குதடையற்ற சுரண்டல், போர் மற்றும் பாசிசவாதம் மீண்டும் திரும்பி வருவதை நிராகரிக்கும் அனைவரும், இதையொரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு இருக்கும் மாற்றீடு, சோசலிச புரட்சியா அல்லது முதலாளித்துவ சீர்திருத்தமா என்பதல்ல, மாறாக சோசலிச புரட்சியா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பது தான். ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான தலையீடு மட்டுமே போர் மற்றும் பாசிசவாதத்திற்குள் மீண்டும் விழுவதிலிருந்து தடுக்க முடியும். இதற்காக தான் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (SGP) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) போராடிக் கொண்டிருக்கின்றன.