ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US escalates illegal economic war on the people of Iran

ஈரான் மக்கள் மீதான சட்டவிரோத பொருளாதார போரை அமெரிக்கா தீவிரப்படுத்துகிறது

By Keith Jones
6 November 2018

வாஷிங்டன் ஈரானுக்கு எதிரான அதன் சட்டவிரோத, ஒருதலைபட்சமான பொருளாதார தடையாணைகளின் இரண்டாவதும் மற்றும் இன்னும் அதிகமாக தண்டிக்கும் வகையிலான கட்டத்தை நேற்று தொடங்கியது.

வங்கிகள், நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான ஈரான் விமானச்சேவையின் அனைத்து விமானங்கள் என 700 க்கும் அதிகமான நிறுவனங்கள் மீதும் பல்வேறு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீதும் இந்த புதிய தடையாணைகள் வெளிப்படையாக இலக்கு வைக்குகிறது. ஈரானின் பொருளாதாரத்தைச் சிதறடிப்பதற்காக, அந்த தடையாணைகள் ஈரானின் எரிசக்தி ஏற்றுமதிகள் அனைத்தையும் திணறடிப்பதற்கும் மற்றும் உலக வங்கியியல் அமைப்புமுறையில் ஈரானை முடக்குவதற்கும் நோக்கம் கொண்டுள்ளன. கப்பல் கட்டுதல், கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்த்துறை காப்பீட்டு தொழில்துறையும் இலக்கில் வைக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் தொடக்கத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2015 ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கு வாஷிங்டன் கொண்டிருந்த பொறுப்புறுதியைக் கைவிட்டு, "அமெரிக்காவில் உற்பத்தி செய்வதற்கான" புதிய உடன்படிக்கைக்கு ஈரான் ஒப்புக்கொள்ளுமாறு வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பின்னர், அமெரிக்கா ஈரானின் வாகனத்துறை மீதும் அதன் தங்கம் மற்றும் தொழில்துறை உற்பத்திக்கு அத்தியாவசிய அடிப்படை உலோகங்களது வர்த்தகம் மீதும் அது டாலர்களைப் பெற்றுக்கொள்வதன் மீதும் தடையாணை விதித்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ திங்களன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், இப்போது நடைமுறையில் உள்ள தடையாணைகள் "முன்னொருபோதும் இல்லாதளவில் கடுமையானவை,” 2011 மற்றும் 2015 க்கு இடையே ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் ஈரான் மீது திணித்தவற்றை விட அதிக கடுமையானவையும் தண்டிக்கக்கூடியவையும் என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.

முன்னாள் சிஐஏ இயக்குனரும் இழிவார்ந்த ஈரான் போர் வெறியருமான அவர், “ஈரான் ஆட்சிக்கு ஒரு விருப்பத்தெரிவு உள்ளது,” என்று அறிவித்தார். “அது சட்டத்தை மீறிய நடவடிக்கைகளின் போக்கிலிருந்து 180 பாகை திரும்பி சாதாரண ஒரு நாட்டைப் போல நடந்து கொள்ளலாம், அல்லது அதன் பொருளாதாரம் சிதைவதைக் காணலாம்,” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகம் கடந்த மே மாதம் மேசையில் வைத்த 12 கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் உடன்படும் வரையில் அமெரிக்கா "அதிகபட்ச அழுத்தத்திற்கான" அதன் நடவடிக்கையைத் தொடரும் என்று பொம்பியோ சூளுரைத்தார். அவற்றில் உள்ளடங்குபவை: படைத்துறைசாரா அணுஆயுதமல்லாத ஒரு தேசிய அணுசக்தி திட்டத்தை என்றென்றைக்கும் கைவிட வேண்டும்; சிரியாவின் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக அதன் இராணுவ தலையீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும்; நடைமுறையளவில் அதன் தொலைதூர ஏவுகணை திட்டத்தைக் கைவிட வேண்டும்; ஹெஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் அமெரிக்கா-அங்கீகரித்துள்ள ஏனைய "பயங்கரவாத" குழுக்களுக்கான அனைத்து ஆதரவையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முற்றிலுமாக இந்த கோரிக்கைகள், ஈரான் நிராயுதபாணியாக தன்னை அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் பிராந்திய கூட்டாளிகளின் கருணைக்கு உரியதாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஓர் இறுதி எச்சரிக்கையை தான் உள்ளடக்கி உள்ளன.

தெஹ்ரான் சர்வதேச பயங்கரவாதம் மற்றும் பிற "தீங்கு விளைவிக்கின்ற" நடவடிக்கைகளை ஆதரித்து வருவதாக பொம்பியோ குற்றஞ்சாட்டினார். இதுபோன்ற வாதங்களில் புதிதாக ஒன்றுமில்லை. 1979 ஈரானிய புரட்சி அமெரிக்க ஆதரவிலான ஷாவின் முடியாட்சி சர்வாதிகாரத்தைக் கவிழ்த்ததற்குப் பின்னர் இருந்து, ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகத்தாலும், அது ஜனநாயகக் கட்சியினது ஆகட்டும் அல்லது குடியரசுக் கட்சியினது ஆகட்டும், ஏதோவொரு வடிவத்தில் அத்தகைய வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களாக பரந்த மத்திய கிழக்கு எங்கிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து லிபியா வரையில் தொடர்ச்சியான பல சூறையாடும் போர்களைத் தூண்டிவிட்டும், நடத்தியும் உள்ள நிலையில், அவை அந்த ஒட்டுமொத்த சமூகங்களையும் சீரழித்துள்ள நிலையில், அத்தகைய வாதங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக அதிகமாக பரப்பப்பட்டுள்ளன.

அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் பல ஆண்டுகளாக ஈரானை ஒரு வலிந்து தாக்கும் நாடாக சித்தரித்துள்ளன, இந்த விடயத்தில் பொம்பியோவும் நேற்று ஏமாற்றிவிடவில்லை. ஆனால் நேரத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் அமெரிக்காதான் இராணுவ தாக்குதலைக் கொண்டு ஈரானை அச்சுறுத்தி உள்ளது என்பதோடு, ஈரானின் அண்டைநாடுகளான ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்துள்ளது, மேலும் இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவில் தொடங்கி, அப்பிராந்தியத்தில் உள்ள அதன் வாடிக்கையாளர் அரசுகளை ஈரானுக்கு எதிராக போர் தயாரிப்பு செய்ய ஊக்குவிக்கவும் முற்றுமுழுதாக ஆயுதமேந்தவும் செய்துள்ளது.

கருத்துவேறுபாடு கொண்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை முற்றுமுதலான அதிகாரம் கொண்ட சவூதி ஆட்சி காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்ததன் சர்வதேச சீற்றத்தை எவ்வாறு கையாள்வது என்பதைக் குறித்து அதற்கு ஆலோசனை வழங்க, வெறும் மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் பொம்பியோ ரியாத்தில் இருந்தார். அமெரிக்க தளவாட ஆதரவைப் பெற்றுள்ள ரியாத், அப்போதிருந்து, ஐக்கிய நாடுகள் சபை எதை உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடி ஆழமடைகிறது என்று முத்திரை குத்தியதோ அதை உறுதிப்படுத்தும் விதத்தில், யேமனில் அதன் காட்டுமிராண்டித்தனமான போரைத் தீவிரப்படுத்தி உள்ளது.

சனிக்கிழமையின் வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த ஒரு கட்டுரையின்படி, ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகத்தின் "அதிகபட்ச அழுத்தத்திற்கான" நடவடிக்கையை பலப்படுத்த மத்திய கிழக்கிற்கு கூடுதல் இராணுவ படைகளை அனுப்புவதற்காக பென்டகனின் மத்திய கட்டளையகம் அழுத்தமளித்து வருகிறது.

அமெரிக்காவின் தன்னிச்சைப்போக்கும், குற்றகரத்தன்மையும்

பொம்பியோ திங்களன்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கையில், சீனா, இந்தியா, ஜப்பான், தாய்வான், தென் கொரியா, கிரீஸ், இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய எட்டு நாடுகளுக்கு ஈரானில் இருந்து எண்ணைய் இறக்குமதி மீதான வாஷிங்டனின் உலகளாவிய தடையாணைகள் மீது ஆறு மாதங்களுக்கு தற்காலிக "விலக்குரிமைகள்" வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இதை செய்கையில், அமெரிக்கா வரவிருக்கும் அண்மித்த நாட்களில் ஈரானிய எரிபொருள் ஏற்றுமதிகளைப் பூஜ்ஜியமாக குறைக்க தீர்மானகரமாக உள்ளது என்றும், விலக்குரிமைகள் வழங்கப்பட்டுள்ள நாடுகளும் ஏற்கனவே அவற்றின் ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன என்பதுடன், மேற்கொண்டும் வெட்டுக்களைச் செய்ய பொறுப்பேற்றுள்ளன என்றும் பொம்பியோ வலியுறுத்தினார். அந்நாடுகள் ஈரானுக்குச் செலுத்த வேண்டிய பணத்தைக் காப்போலை கணக்குகளில் (escrow accounts) வைக்கவும் உடன்பட்டுள்ளன, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான "மனிதாபிமான" பண்டங்களைக் கொள்முதல் செய்வதற்காக மட்டுமே தெஹ்ரான் இக்கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலக எண்ணெய் விலைகளை நிலைகுலையச் செய்யும் ஒரு விலை உயர்வை தவிர்க்கவே இந்த விலக்குரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஏனென்றால் சில நாடுகள் ஈரானிய கச்சா எண்ணெய்க்கு ஏற்ப சீரமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு ஆலைகளைக் கொண்டுள்ளதால் மாற்று எண்ணெய் ஆதாரவளங்களைக் காண கூடுதல் காலம் தேவைப்படுவதாகவும் பொம்பியோ வாதிட்டார்.

நிதித்துறை செயலர் ஸ்டீவ் முனுசினின் நேற்றைய பத்திரிகையாளர் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு துணையாக ஆதரவு வழங்கப்பட்டது. இந்த உதவி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார யுத்தத்திற்கு முக்கியமாக இருப்பது ஏனென்றால் அமெரிக்க சந்தையிலிருந்து வெளியேற்றுவது, பாரிய அபராதங்கள் மற்றும் ஏனைய தண்டனைகள் ஆகியவற்றைக் கொண்டு ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை அச்சுறுத்தும் வகையில், அல்லது ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய நாடுகளை கையாளும் விதத்தில், இரண்டாம் கட்ட தடையாணைகளின் ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பதற்கான அமெரிக்காவின் தகைமை மற்றும் உலக நிதியியல் அமைப்புமுறை மீதான அமெரிக்காவின் மேலாதிக்கம் ஆகியவையாகும்.

நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்கள் அமெரிக்க தடையாணைகளுக்கு அஞ்சி ஈரானிலிருந்து வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 நாடுகள் ஈரானிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டதாகவும், அமெரிக்க தடை உத்தியோகபூர்வமாக தொடங்குவதற்கு முன்னரே கூட, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளில் நாளொன்றுக்கு மில்லியன் கணக்கான பேரல்கள், அல்லது சுமார் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் பொம்பியோ மற்றும் முனுசின் பெருமைபீற்றினர்.

ஈரானின் இரண்டு அணுசக்தி ஆலைகளை ஈரானிய அணுசக்தி உடன்படிக்கை அல்லது விரிவான கூட்டு நடவடிக்கை திட்டத்திற்கு (JCPOA) இணங்க கொண்டு வருவதற்காக அவற்றின் நோக்கத்தை மாற்றியமைப்பதில் ஈடுபடுபவர்களுக்கே தடையாணைகளில் இருந்து விலக்குரிமைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பொம்பியோ தெரிவித்தார்.

ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் JCPOA இன் கீழ் ஈரான் அதன் அனைத்து கடமைப்பாடுகளையும் பூர்த்தி செய்திருப்பதாக விடாப்பிடியாக உள்ளன. ஈரான் உடன்படிக்கைக்கு ஏற்ப செயல்படுகிறதா என்பதை பரிசோதிப்பதற்குப் பொறுப்பேற்றுள்ள ஐ.நா. அமைப்பான சர்வதேச அணுசக்தி எரிபொருள் ஆணையமும் அதே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

அமெரிக்க தடையாணைகளை முறியடிப்பதில் ஈரானுக்கு உதவ ரஷ்யா சூளுரைத்துள்ளது, ரஷ்யா உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருந்தாலும், ரூபிள்களைப் (ரஷ்ய நாணயம்) பயன்படுத்தி ஈரானிய எண்ணெய்களைக் கொள்முதல் செய்ய அது உடன்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன, பின்னர் தெஹ்ரான் ரஷ்ய பண்டங்களைக் கொள்முதல் செய்ய ரூபிள்களைப் பயன்படுத்தும்.

ரஷ்யா அதுவே கூட அமெரிக்க பொருளாதார தடையாணைகளின் இலக்கில் உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, ரஷ்ய எரிசக்தித்துறை அமைச்சர் அலெக்சாண்டர் நோவாக் கடந்த வெள்ளியன்று பைனான்சியல் டைம்ஸ் க்குக் கூறுகையில், “ஐக்கிய நாடுகள் சபை இல்லாமல் தன்னிச்சையாக கொண்டு வரப்படும் தடையாணைகளை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம். நாங்கள் அதுபோன்ற நடைமுறைகளை அவ்வாறே சட்டவிரோதமானவையாக கருதுகிறோம்,” என்றார்.

ஈரானுக்கு எதிரான ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஐரோப்பிய சக்திகள் JCPOA உடன்படிக்கையை தாங்கிப் பிடிக்கவும் மற்றும் தன்னிச்சையான அமெரிக்க தடையாணைகளைச் சவால்விடுக்கவும் சூளுரைத்து வருகின்றன.

ஈரானில் ஆதாயமுள்ள வணிக வாய்ப்புகளைச் சுரண்டுவதற்கான ஐரோப்பிய பெருநிறுவன போட்டாபோட்டியை ட்ரம்ப் நிர்வாகம் தடம் புரளச் செய்திருப்பதாக ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் கோபப்படுகின்றன. அவை மத்திய கிழக்கில் அமெரிக்கா-தூண்டிவிடும் மற்றொரு போரின் பேரழிவுகரமான பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் விளைவுகளைக் குறித்தும் அஞ்சுகின்றன என்பதுடன், உலகளாவிய வர்த்தக போர் மற்றும் மூலோபாய போட்டிகள் தீவிரமடைந்து வரும் நிலைமைகளின் கீழ் அவற்றின் சொந்த ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் தந்திரங்களைப் பின்பற்றுவதற்காக, வாஷிங்டன் இரண்டாவது கட்டத் தடையாணைகளைப் பயன்படுத்தியமை உள்ளடங்கலாக வாஷிங்டனின் தன்னிச்சைவாதத்திற்கு எதிராக அவை எதிர் அழுத்தம் அளிக்க வேண்டுமென கணக்கிடுகின்றன.

அமெரிக்க-மேலாதிக்க நிதியியல் அமைப்புமுறைக்கு வெளியே ஈரானுடன் வர்த்தகத்தை நடத்துவதற்கு, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சிறப்பு நோக்கிலான செயல்முறையை (Special Purpose Vehicle - SPV) ஸ்தாபித்து வருவதுடன், அதில் பங்கெடுக்க மிகவும் குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா உட்பட ஏனைய நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், வாஷிங்டனுடன் அதுபோன்றவொரு பகிரங்க மோதலின் தாக்கங்கள் குறித்து ஐரோப்பிய அதிகாரங்களுக்கு இடையே நடுக்கங்கள் இருப்பதால், SPV செயல்பாட்டிற்கு வருவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.

இதற்கிடையே, ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளோ, எதிர்காலத்தில் SPV பரிவர்த்தனையில் ஈடுபடும் எந்தவொரு நாடுகள் மீதும் ஆக்ரோஷமாக தடையாணைகள் விதிப்பதன் மூலமாக தங்களின் ஐரோப்பிய போட்டியாளர்களுக்கு இடுக்கிப்பிடி இடப்படும் என்று அச்சுறுத்துவதில் அவர்கள் எந்த தயக்கமும் கொண்டிருக்கவில்லை.

ஈரான் அதனது "எதிர்ப்பாற்றலுள்ள" பொருளாதாரத்திற்குத் தயார் செய்ய சூளுரைக்கிறது

ஈரான் கடந்த 39 ஆண்டுகளாக பல்வேறு அமெரிக்க தடையாணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, ஈரானிய முதலாளித்துவ தேசியவாத ஆட்சி, ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார போரைத் தாக்குப்பிடிக்க சூளுரைத்து வருகிறது.

1979 இல் பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஷா அமெரிக்காவுக்கு வரலாமென அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் எடுத்த முடிவுக்கும், மற்றும் ஈரானில் ஏகாதிபத்திய-எதிர்ப்பு மேலெழுச்சிக்கு எதிராக சிஐஏ சூழ்ச்சிகளுக்கும் எதிராக போராட அமெரிக்க தூதரகம் மீது மாணவர் ஆக்கிரமிப்பு தொடங்கிய நினைவுதினத்தைக் குறிக்கும் வகையில் ஞாயிறன்று நடந்த ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்தனர். அதில் பங்கெடுத்தவர்கள் பலரும் கைகளால் எழுதப்பட்ட ட்ரம்பை ஏளனப்படுத்தும் மற்றும் அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறைகூவல் விடுக்கும் அறிவிப்பு பலகைகளை ஏந்தியிருந்தனர்.

அத்தியாவசிய மருந்து பொருட்களைக் கூட பெறுவதற்கு தடைவிதித்துள்ளமை உட்பட ஈரானிய மக்களை இன்னும் வறுமைப்படுத்துவதற்கான அமெரிக்க முனைவின் மீதும், ஈரானிய மதகுருமார்-முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக "மக்களுடன்" நிற்பதாக ட்ரம்ப் மற்றும் பொம்பியோ கூறும் வெற்றுரைகள் மீதும் மக்கள் சீற்றம் உணரக்கூடியளவுக்கு இருப்பதை மேற்கத்திய ஊடகங்களே கூட செய்திகளில் வெளியிட்டுள்ளன.

1980 களின் தொடக்கத்தில் ஈவிரக்கமின்றி அனைத்து தொழிலாள வர்க்க இடதுசாரி அமைப்புகளையும் ஒடுக்கி அதேவேளையில் தங்களுக்கு அதிகாரத்தைக் குவித்துக் கொண்ட முல்லாக்கள், மட்டுப்பட்ட சமூக சலுகைகளை தசாப்த காலமாக திரும்ப பறித்துக் கொண்டதன் மீதும் பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகள் மீதும் போர்குணமிக்க தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் கோபத்திற்கும் மற்றும் நெருக்கடியில்-சிக்கிய சூறையாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஈரானிய ஆட்சி ஏதேனும் உபாயம் செய்ய முயற்சிக்கின்ற நிலையில், அது நெருக்கடியால் சூழப்பட்டுள்ளது என்பதில் கேள்விக்கு இடமில்லை என்பதை கூறியே ஆக வேண்டும்.

தலையாய தலைவர் அயெத்துல்லா காமெனியின் ஆதரவுடன் ஈரானிய ஜனாதிபதி ருஹானி, நவ-தாராளவாத சீர்திருத்தங்களுக்கு அழுத்தமளித்துக் கொண்டே, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தங்களின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக ஈரானிய அணுசக்தி உடன்படிக்கை மூலமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அதிகாரங்களுடன் சமரசம் செய்து கொள்ள முயன்றார்.

ஆனால் ஐரோப்பிய முதலீட்டின் அதிகரிப்பு எதிர்பார்ப்புகளை விட குறைவாகவே இருந்ததுடன், அமெரிக்கா JCPOA இல் இருந்து விலகி, தடையாணைகளை "மீண்டும் செயல்படுத்துகிறது" என்ற ட்ரம்பின் அறிவிப்பால் பின்னர் அவை திடீரென நின்றுபோனது. அப்போதிருந்து, ஈரானிய பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது, அத்துடன் ஈரானிய செலாவணியின் மதிப்பு சுமார் 70 சதவீதம் சரிந்துள்ளது.

இந்த இஸ்லாமிய குடியரசு ஆட்சியாளர்கள், உள்நாட்டில், வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை விசுவாசமற்றது என்று சித்தரித்து, “தேசிய ஒற்றுமைக்கான" அவர்களின் அழைப்புகளை இரட்டிப்பாக்கி விடையிறுத்துள்ளனர். சர்வதேச அளவில், தெஹ்ரான் ஐரோப்பிய ஏகாதிபத்திய அதிகாரங்களுடன் ஒட்டிக் கொள்ள முயல்வதுடன், ட்ரம்ப்-தலைமையிலான அமெரிக்காவை விட ஈரான் தான் உலக ஒழுங்கிற்கு சிறந்த உத்தரவாதம் அளிக்கிறது என்பதாக அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். ஈரானின் சொந்த இராணுவ தகைமைகளைக் குறித்து பெருமைபீற்றியவாறு அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதும், தடையாணைகளை வாஷிங்டன் திரும்ப பெற்று கொண்டால், JCPOA இன் துணை உடன்படிக்கை மீது பேச்சுவார்த்தைக்கு வர அது தயாராக இருப்பதற்குச் சமிக்ஞை காட்டுவதும் என இவற்றிற்கு இடையே தெஹ்ரான் ஊசலாடுகிறது.

இந்த வாரயிறுதியில் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஜரீஃப் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தெஹ்ரானுக்கு என்ன அவசியப்படுகிறது என்று USA Today க்கு விவரிக்கையில், “வேறொரு நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதில்லை, வேறொரு அணுகுமுறை தேவைப்படுகிறது,” என்றார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் JCPOA ஐ அது நிராகரித்தமை மற்றும் ஈரான் மீது பொருளாதார போரைக் கட்டவிழ்த்து விட்டமை ஆகிய குற்றகரமான ஈரான் திட்டநிரல் உலகளாவிய அளவில் நாடுகளுக்கு இடையிலான உறவுகளது முறிவின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானை ஒரு மோதல் போக்கில் நிறுத்தி உள்ள இது, மத்திய கிழக்கு எங்கிலும் ஒரு போரைத் தூண்டுவதற்கு அச்சுறுத்துவதுடன், ஏகாதிபத்தியத்திற்கும் வல்லரசுகளுக்கும் இடையே பதட்டங்களை மிகப்பெருமளவில் அதிகரிப்பதற்கும் அச்சுறுத்துகிறது.