ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Left Party in Germany supports the French president’s call for a European army

ஒரு ஐரோப்பிய இராணுவத்தை கட்டமைக்க பிரெஞ்சு ஜனாதிபதி விடுக்கும் அழைப்பை ஜேர்மனியின் இடது கட்சி ஆதரிக்கிறது

By Johannes Stern 
24 November 2018

ஒரு ஐரோப்பிய இராணுவத்தை கட்டமைக்க ஜேர்மனியும் பிரான்சும் திட்டமிடுவதை இடது கட்சி (Die Linke) ஆதரிக்கிறது.

திங்களன்று, ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், இடது கட்சியின் பாராளுமன்ற கன்னையின் தலைவரான, டீற்மார் பார்ட்ஷ், தான், “ஒரு இரங்கல் நாள் விழாவில் [ஜேர்மனியில், ஆயுத மோதல்களில் உயிரிழந்த ஆயுதப்படையினர் மற்றும் பொது மக்களை நினைவுகூரும் Volkstrauertag எனும் ஒரு பொது விடுமுறை நாள் விழாவில்], [பிரெஞ்சு ஜனாதிபதி] இமானுவல் மக்ரோன் பேசியதை ஆர்வமுடன் கேட்டதாக” கூறினார். மேலும், மக்ரோன், “ஐரோப்பா சார்பாக ஒரு வேண்டுகோளை விடுத்தார்,” என்றும், பிரெஞ்சுத் தலைவர் முன்வைத்த கருத்துக்கள் “முற்றிலும் நியாயமானவை” என்றும் அவர் தெரிவித்தார்.

நவம்பர் 18 அன்று, ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag) உரையாற்றிய போதும், ஒரு “உண்மையான ஐரோப்பிய இராணுவத்தை” கட்டமைப்பதற்கான தனது கோரிக்கையை மக்ரோன் வலியுறுத்தியதுடன், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் போட்டியிடுவதற்காக ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையிலான ஒரு ஐரோப்பிய உலக ஆதிக்கக் கொள்கைக்கு ஆதரவாகவும் அவர் பேசினார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் கரகோஷத்துடன், இதை அறிவித்தார்: “உலகம் குழப்பத்திற்குள் வீழ்வதை தடுக்க ஐரோப்பாவும், பிரான்ஸ்-ஜேர்மன் கூட்டணியும் கடமைப்பட்டுள்ளது.” மேலும், ஐரோப்பா அதன் பாதுகாப்பிற்கு மிகுந்த பொறுப்பேற்க வேண்டும் என்றும், அது வலுவானதாக மற்றும் மிகவும் சுயாதீனமானதாக உருவெடுக்க வேண்டும் என்பதுடன், அதிகளவிலான இறையாண்மை அதற்குத் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.    

போர்களிலான தலையீடுகளுக்கான தயாரிப்பும் மற்றும் இராணுவ செலவினங்களிலும்  ஒரு பாரிய அதிகரிப்பை ஏற்படுத்துவதையே இது குறிக்கும் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி பிரெஞ்சு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். “இந்த சண்டை வெற்றி பெறவில்லை, இந்த சண்டை ஒருபோதும் வெற்றி பெறாது,” எனவும் தெரிவித்தார். மேலும், “நாம் ஒவ்வொருவரும்” “அவரவர் வரவு-செலவுத் திட்ட அதிகரிப்பின் ஒரு பகுதியைக் கொண்டோ, அல்லது வரி வருவாயைக் கொண்டோ ஐரோப்பாவை திறம்பட பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.

ஒரு ஐரோப்பிய இராணுவ ஒன்றியத்தைக் கட்டமைப்பது மற்றும் போருக்கான தயாரிப்புக்களில் ஈடுபடுவது என்பது வளர்ந்து வரும் சமூக மற்றும் அரசியல் ரீதியான உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராகவும் இயக்கப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, அவரது பேர்லின் உரையின் போது, பிரான்சில் நூறாயிரக்கணக்கான மக்கள் அதிகளவிலான பெட்ரோல் வரிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், ஜேர்மன் முதலாளித்துவத்தின் ஆதரவை மக்ரோன் நாடினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல்களில் ஈடுபட்டு, “செல்வந்தர்களின் ஜனாதிபதியின்” பதவி விலகலைக் கோரினர்.

உண்மையில், மக்ரோனின் கோரிக்கை இடது கட்சியிடம் பாராட்டைப் பெற்றமை, அவ்அமைப்பின் ஏகாதிபத்திய சார்பு மற்றும் தொழிலாளர் விரோத குணாம்சம் பற்றி நிறைய தெரியப்படுத்துகின்றது. “அமைதிக்கான ஒரு ஒன்றியமாக ஐரோப்பா உள்ளது என்ற முதன்மையான திட்டநிரலை நோக்கிய, ஐரோப்பாவின் முன்னோக்கு குறித்த ஒரு விவாதத்திற்கு, ஏதோவொன்று இங்கு அழைப்பு விடுக்கிறது,” என்று பார்ட்ஷ்ச் விளக்கமளித்தார். அது, “எதுவானாலும், அதை நாம் இடதுகள் வெளிப்படையாக வரவேற்கிறோம்” என்றார்.

 “ஒரு உண்மையான ஐரோப்பிய இராணுவத்திற்கான” தனது சொந்த அழைப்பை சென்ற வாரம் வெளியிட்ட, சான்சலர் அங்கேலா மேர்க்கெல் (CDU) தலைமையிலான ஒரு பெரும் கூட்டணியின் வலதில் இருந்து பின்னர் அவரது தாக்குதலைத் தொடங்கினார். “ஜேர்மன் அரசாங்கம் நீண்ட காலமாக தாமதித்துவிட்டது என்றும், உலகில் வேறுவிதமாக அதன் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஐரோப்பாவிற்கு இது அவசரத் தேவையாகவுள்ளது என்றும்” அவர் நம்புவதாக பார்ட்ஷ்ச் தெரிவித்தார். மேலும், “பேச்சளவில் நின்றுவிடாமல், உண்மையாகவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்பதுதான் தற்போது மிகவும் முக்கியம் என்றும், ஞாயிறன்று அவர் [மக்ரோன்] மீண்டும் வலியுறுத்திய இந்த கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு இடது கட்சி முன்வைத்த கோரிக்கைகளின் தன்மையை கட்சியின் நிறுவனத் தந்தையான ஒஸ்கார் லாபொன்டைன், அவரது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு இடுகையில் தெளிவாக விளக்கினார். பிரெஞ்சு ஜனாதிபதி, ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag) ஆற்றிய உரையில் இவ்வாறு அறிவித்திருந்தார்: “சீனா, ரஷ்யா, ஏன் அமெரிக்க ஐக்கிய நாடுகளிடமிருந்தும் கூட நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.” இதற்கு பதிலிறுப்பாக, லாபொன்டைன், பிரெஞ்சு ஜனாதிபதி “ஏதோவொன்றை சரியாக முன்வைக்கிறார்: ஐரோப்பா அமைதியாக வாழ விரும்பினால், ஏனைய நாடுகளுடன் இணைந்து, உலகையே ஆளுவதற்கும், தனது நலன்களை மட்டுமே ஈவிரக்கமின்றி செயல்படுத்துவதற்கும் விரும்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பின்னுக்குத் தள்ளியாக வேண்டும். பிற நாடுகளின் மீதான வர்த்தக போர்களையும், இரகசிய போர்களையும் மற்றும் குண்டுவீச்சு போர்களையும் அமெரிக்கா தொடுத்துக் கொண்டே இருப்பதுடன், பல நாடுகளை சீர்குலைத்து, நிரந்தரமாக உலக சமாதானத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய இராணுவவாதத்தின் பாசாங்குத்தனமிக்க முகத்தை லாபொன்டைனின் வாய்வீச்சு அம்பலப்படுத்துகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் போர்வெறி மிக்க, பேரழிவுகர குணாம்சம் என்பது மிகவும் தெளிவான ஒன்றே, ஆனால் ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியதினதும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதையும் இப்போது அறிய முடிகிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர்களில் மிக நீண்ட காலமாகவே ஐரோப்பிய சக்திகள் ஈடுபட்டு வந்துள்ளன, அத்துடன் “அவர்களது சொந்த நலன்களை இரக்கமின்றி செயல்படுத்துவதற்கு” இன்னும் தீவிரமான இராணுவ பாத்திரமேற்க தற்போது முனைந்து வருகின்றன. 85 ஆண்டுகளுக்கு முன்னர், ஹிட்லருக்கு அதிகாரத்தை மாற்றியதன் மூலமாக ஜேர்மன் உயரடுக்கு அதன் உண்மையான முகத்தை உலகிற்குக் காட்டியது. ஜேர்மன் சாம்ராஜ்யத்தின் போக்கிலும், ஹிட்லராலும் உருவாக்கப்பட்ட ஜேர்மனியின் அதிசிறந்த ஆற்றல்மிக்க அரசியலின் மரபுகளைச் சார்ந்து வகுக்கப்படுவதான, ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான அதன் திட்டங்களுடன், இப்போது மீண்டும் பாரியளவிலான மறுஆயுதபாணியாகி அது வருவதுடன், இதற்காக அதி- வலது ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany - AfD) கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கும் முனைந்து கொண்டிருக்கிறது.           

அதேபோல, ஒரு ஐரோப்பிய இராணுவத்திற்கான தனது அழைப்பின் கொலைகார பாரம்பரியத்தை மக்ரோனும் தெளிவுபடுத்தினார். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் விழாவில், முதலாம் உலகப் போரின் தளபதியும், பாசிச சர்வாதிகாரியும் மற்றும் நாஜி உடனுழைப்பாளருமான பிலிப் பெத்தானுக்கு மரியாதை செலுத்துவது “நியாயமானது” என்று அவர் குறிப்பிட்டார்.

இடது கட்சியால் ஆதரிக்கப்படும் ஒற்றுமை மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை “பின்வாங்கச் செய்வதற்கு” ஐரோப்பிய இராணுவத்தை வலுப்படுத்துவது போன்றவை மட்டும் ஐரோப்பாவிற்கும் உலகிற்கும் “சமாதானத்தை” கொண்டுவராது, மாறாக ஒரு பேரழிவுகர மூன்றாம் உலகப் போருக்கே அது வழிவகுக்கும். இது ஏற்கனவே வரலாற்றின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாரிய இராணுவ மறுஆயுதமயமாக்கத்திற்கான, மற்றும் எல்லாப் பக்கங்களிலும் இருந்தான ஒரு தீவிர வெளியுறவுக் கொள்கைக்குமான கோரிக்கைகளுடன் இணைந்த பெரும் வல்லரசுகளுக்கு இடையில் அதிகரித்துவந்த மோதல்கள் தான், சென்ற நூற்றாண்டில் போருக்கான முன்னோடியாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.    

கடந்த காலத்தைப் போலவே, போரை நிறுத்துவதற்கு ஒரேயொரு வழி மட்டும் தான் இன்றும் உள்ளது: அது, தொழிலாள வர்க்க அடிப்படையிலான ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதும், மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதுமாகும். இதற்கு, வாஷிங்டன், புரூசெல்ஸ்ஸ், பாரிஸ் மற்றும் பேர்லினில் உள்ள முதலாளித்துவ போர் வெறியர்களுக்கு எதிரான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தொழிலாளர்களின் புரட்சிகர ஒற்றுமை தேவைப்படுகிறது. பார்ட்ஷ்ச் மற்றும் லாபொன்டைனின் சமீபத்திய அறிக்கைகள், புரூசெல்ஸ்ஸ், பாரிஸ் மற்றும் பேர்லினில் உள்ளோரின் முகாம்களுடன் இடது கட்சி இணைந்துள்ளதாக மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.