ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

No to the draft in France and Europe!

பிரான்சிலும் ஐரோப்பாவிலும் கட்டாய இராணுவ சேர்ப்பை எதிர்ப்போம்!

Parti de l’égalité socialiste
23 November 2018

கடுமையான மக்கள்வெறுப்பை சம்பாதித்திருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் அரசாங்கமானது, அதன் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராய் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதன் மத்தியில், கட்டாய இராணுவ சேவையை அறிமுகம் செய்வதற்கான ஒரு திட்டத்தை திங்களன்று அறிவித்தது. கட்டாயமாக சேர்க்கப்படவிருக்கும் முதல் தொகுப்பினர் அடுத்த ஏழு மாதங்களுக்குள் சேவையைத் தொடங்கவிருப்பதான இந்த வேலைதிட்டத்தின் கீழ், 2026க்குள்ளாக, அப்போது 16 வயதை எட்டியிருக்கும் அனைத்து 800,000 பிரெஞ்சு குடிமக்களும் இராணுவச் சேவைக்கு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

தேசியவாதத்திற்கும் இராணுவப் விரிவாக்கத்திற்கும் விண்ணப்பம் செய்வதன் மூலமாக தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதுதான் இந்த முன்னெடுப்பின் நோக்கமாய் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்டிருக்கின்றன. “பிரான்சின் ஐக்கியத்தை அச்சுறுத்தும் பிளவுகளால் அது கிழிபட்டுக் கொண்டிருக்கின்றதொரு நேரத்தில்”, Le Parisien எழுதியது, “தேசிய சேவையை மீண்டும் கொண்டுவருவது என்ற யோசனை ஒரு சரியான சமயத்திலான முன்னெடுப்பாகத் தோன்றுகிறது.” இரண்டு நாட்களுக்குப் பின்னர், பிரான்சின் Réunion தீவில் போராட்டங்களை ஒடுக்க இராணுவப் படைகளை நிலைநிறுத்தவிருப்பதாக மக்ரோன் புதன்கிழமை இரவு அறிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் எங்கிலும், ஆளும் உயரடுக்கினர் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு தயாரிப்பு செய்துகொண்டிருக்கின்றனர். 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்கும் பனிப் போரின் முடிவுக்கும் பின்னர், பிரான்ஸ் 1997 இல் கட்டாய இராணுவ சேவை முடிவுக்குக் கொண்டுவந்தது; ஸ்பெயின் (2001), இத்தாலி (2005), போலந்து (2008) மற்றும் ஜேர்மனி (2010) ஆகியவை பின்தொடர்ந்தன. ஆயினும் இது ஒரு சிறிய இடைவேளையாகவே நிரூபணமானது. சென்ற ஆண்டில் சுவீடனும், இந்த ஆண்டில் பிரான்சும் கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை அறிவித்ததை அடுத்து, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய முக்கிய சக்திகள் அனைத்தும் அதையே செய்வதற்கு விவாதித்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டு படுபயங்கரமான உலகப் போர்களுக்கு பின்னர், ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தில் கட்டாய இராணுவ சேவைக்குத் திரும்புவதற்கு வரலாற்றுரீதியாக வேரூன்றிய கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. 2015 இல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று பிரெஞ்சு மக்களில் வெறும் 29 சதவீதம் பேர் மட்டுமே தமது நாட்டுக்காக போருக்குச் செல்வதற்கு உடன்படுவார்கள் எனக் கண்டது; 2017 இல் ஐரோப்பிய ஒன்றிய இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்ட “தலைமுறை எது” என்ற கருத்துக்கணிப்பு, 60 சதவீதம் பேர் அதைச் செய்வதற்கு மறுப்போம் என்றனர்.

வெறும் 20 சதவீத ஏற்பு விகிதத்தை கொண்டுள்ள, மக்ரோன் அரசாங்கம், கட்டாய இராணுவ சேர்ப்புக்கு அது மீண்டும் உயிர்கொடுக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாது கவனமாய் இருக்கிறது. அடுத்த ஆண்டின் வேலைத்திட்டம் ஒரு மாத காலமே நீடிக்கும், 16-வயதானவர்கள் மட்டுமே அதில் பங்குபெறுவார்கள்; எல்லா இளைஞர்களுமே போரிடும் பிரிவுகளில் சேவை செய்ய மாட்டார்கள்; கல்வி அமைச்சக அதிகாரிகளும் இதில் ஈடுபடுத்தப்படுவார்கள்; இராணுவம் பதின்மவயதினருக்கு “நெருக்கடி நிலைமைகளை கையாளும் திறன்” ஐயும் “சமூக, சூழலியல், பொருளாதார வளர்ச்சி”யையும் கற்றுக்கொடுக்கும் என்றெல்லாம் அபத்தமான சாக்குகளை அதன் அதிகாரிகள் முன்வைக்கிறார்கள்.

ஆனால், 1930களில் ஐரோப்பா பாசிசத்திற்குள் மூழ்கியதும் அதன்பின் வந்த உலகப் போரும் கற்றுத்தரும் ஒரு மறக்கமுடியாத படிப்பினை என்னவென்றால் முதலாளித்துவ வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் தேசியவாதத்திலும் இராணுவவாதத்திலும் இறங்குவதென்பது அழிவுகரமான புறநிலை இயக்கவியலை கொண்டிருக்கிறது என்பதாகும். அனைவருக்கும் இராணுவ சேவையைக் கட்டாயமாக்க திரும்புவதன் தாக்கங்களை, உத்தியோகபூர்வ இடக்கரடக்கல் பெயர்கள் மற்றும் இருட்டடிப்புகளில் இருந்து புரிந்துகொள்ள இயலாது. 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பு முதலாக கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாய் இடைவெளியில்லாத ஏகாதிபத்தியப் போர்களைக் கண்டிருக்கும் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் பெருகும் புறநிலை நெருக்கடியில் இருந்தே இவை பிறக்கின்றன.

சோவியத் ஒன்றியத்தின் முடிவு வரலாற்றின் முடிவைக் குறித்ததாகக் கூறிய கூற்று சுக்குநூறாகிக் கிடக்கிறது. மாறாக, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது உலகை இரண்டு முறை உலகப் போருக்குள் மூழ்கடித்திருந்த அத்தனை வரலாற்று மோதல்களும் திரும்புவதை சமிக்கை செய்தது. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் மாலி போன்ற போர்களிலோ அல்லது சொந்த நாட்டில் நகரங்களை “அமைதிப்படுத்தும்” போதோ போரிட்டு உயிரிழக்க —அல்லது தங்கள் பிள்ளைகள் உயிரிழப்பதைக் காண— விரும்பாதவர்களைப் பொறுத்தவரை, தொழிலாள வர்க்கத்தில் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே தீர்மானகரமான பிரச்சினையாக உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளின் போர்களது தீவிரப்படுத்தலும் அதன் கீழமைந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளும் முதலாளித்துவ நெருக்கடியில் பண்புரீதியாய் ஒரு புதிய கட்டத்தை உருவாக்கியிருக்கின்றன. அமெரிக்கா, அதன் உலக மேலாதிக்கம் உருக்குலைகின்ற நிலைக்கு முகம்கொடுக்கையில்,“பயங்கரவாதத்தின் மீதான போர்” ஐ சற்று கீழிறக்கி விட்டு, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையானது “பெரும்சக்திகளிடையேயான மோதல்” ஐ அடிப்படையாகக் கொண்டதாக அறிவிக்கின்ற ஒரு தேசிய பாதுகாப்புக் கொள்கையை சென்ற வருடத்தில் ஏற்றுக் கொண்டது. அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியம் இடையில் வர்த்தகப் போர் வெடிக்கின்ற நிலையில், அமெரிக்காவுடன் போட்டிபோடத்தக்கதான ஒரு ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான அழைப்புகளை பேர்லினும் பாரிசும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்க இராணுவத்திற்குள்ளாக, கட்டாய இராணுவ சேர்ப்புக்கான அழைப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. 2001 முதலாக குறைந்தபட்சம் 76 நாடுகளில் போர் நடத்துவதில் அமெரிக்கப் படைகள் 5.6 டிரில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன, என்று Military.com எழுதியது, இது “முன்வைக்கின்ற கேள்வி: ஒரு முழு-தன்னார்வப் படை இந்த அழைப்புக்கு பதிலளிக்க தயாராய் இருக்குமா?” கட்டாய இராணுவ சேர்ப்பின் ஒரு ஆதரவாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டென்னிஸ் லேய்க் ஐ அது மேற்கோளிட்டது: “கணக்குப் போட்டுப் பார்த்தீர்களானால், அமெரிக்கர்களில் பத்துக்கு மூன்று பேர் மட்டுமே இராணுவ சேவைக்கு தகுதிபெறக் கூடியவர்களாய் இருக்கிறார்கள், அவர்களில் வெறும் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே சேவை செய்யும் உத்வேகம் இருக்கிறது. இந்நிலை நீண்டநாளைக்குத் தாங்காது....”

இரண்டு வாரங்களுக்கு முன்னர் உலகப் போர் முடிந்ததன் நூறாவது ஆண்டு அனுசரிப்புக்கு முன்பாக முதலாம் உலகப் போரின் கொலைக்களங்களுக்கு விஜயம் செய்த மக்ரோன், ரஷ்யா மற்றும் சீனாவை மட்டுமல்லாமல் அமெரிக்காவையும் கூட எதிர்த்து நிற்கத் திறமுடைய ஒரு இராணுவம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவசியப்படுவதாக தெரிவித்தார்.

ஐரோப்பாவின் ஏகாதிபத்தியங்கள், சொந்த நாட்டில் தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு முகம்கொடுக்கின்ற அதேவேளையில் அமெரிக்க இராணுவ வலிமையுடனும் போட்டி போடுவதற்காக கைகோர்க்க முயலுகின்ற நிலையில், அவை பாசிச தேசியவாதத்திற்கு திரும்புவதற்கும் உந்தப்படுகின்றன. கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜேர்மனியின் மகா கூட்டணி அரசாங்கமானது அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றினை (AfD) ஊக்குவித்துக் கொண்டிருக்கிறது; கெம்னிட்ஸில் ஒரு யூத உணவகம் தாக்கப்பட்ட ஒரு நவ-நாஜி கலகத்தில் பங்கேற்றவர்களை உள்துறை அமைச்சரான ஹோர்ஸ்ட் சீஹோபர் பாராட்டினார். பிரான்சில் மக்ரோன், நாஜி-ஒத்துழைப்புவாத சர்வாதிகாரியும் யூத-விரோதியுமான பிலிப் பெத்தானை, அவரது முதலாம் உலகப் போர் செயல்வரலாற்றைக் காட்டி, ஒரு போர் நாயகர் என்று புகழ்ந்துரைத்தார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கும் சமூக சமத்துவமின்மைக்குமான வெகுஜன எதிர்ப்பு ஐரோப்பாவெங்கிலும் வெடிக்கின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் நனவை அதன் வரலாற்றுக் கடமைகளுக்குரிய மட்டத்திற்கு உயர்த்துவதே தீர்மானகரமான பிரச்சினையாகும். ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச முன்னோக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; தொழிலாள வர்க்கத்தில் இந்த முன்னோக்குக்காகப் போராடுகின்ற ஒரு அரசியல் முன்னணிப்படையால் வழிநடத்தப்பட வேண்டும். உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் (ICFI), மற்றும் ICFI இன் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (PES- Parti de l’égalité socialiste) கட்டியெழுப்புவது என்பதே இதன் அர்த்தமாகும்.

1968 மாணவர் இயக்கத்தின் பின்னர் உண்டாகியிருந்த பிற்போக்குத்தனமான ஐரோப்பிய நடுத்தர வர்க்க “இடது” குழுக்கள் விடயத்தில் PES சாத்தியமான மிகக் கூரிய எச்சரிக்கைகளை அளிக்கிறது: அவை போரையும் தேசியவாதத்தையும் ஆதரிப்பவையாகும். சுவீடனின் இடது கட்சி கட்டாய இராணுவ சேர்ப்புக்கு ஆதரவாக வாக்களித்தது; ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) இயக்கத்தின் பிரதிநிதிகள் பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தின் இராணுவ கமிட்டியில் இருந்தபடி கட்டாய இராணுவ சேவைக்கு திட்டம் வகுத்துக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் இராணுவ ஆணையத்தில், இடது கட்சியின் உயர்நிலை நிர்வாகிகள், இரகசியம் காக்க பிரமாணம் எடுத்துக் கொண்டு, அமர்ந்திருக்கிறார்கள்.

இதற்கான அரசியல் மாற்று ICFI ஆகும். ICFI இன் சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற 2016 அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்டிருந்த கோட்பாடுகளை PES மீளுறுதி செய்கிறது:

* போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், தனக்குப் பின்னால் மக்களின் அத்தனை முற்போக்கான கூறுகளையும் அணிதிரட்டி நிற்பதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

* புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது முதலாளித்துவத்திற்கு எதிரானதாகவும் சோசலிசத் தன்மையுடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு முடிவுகட்டவும் இராணுவவாதம் மற்றும் போரின் அடிப்படைக் காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமான போராட்டத்தின் ஊடாய் அல்லாமல் போருக்கு எதிரான எந்த உருப்படியான போராட்டமும் இருக்க முடியாது.

* ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியத்தின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் மற்றும் சந்தேகத்திற்கு இடமற்ற வகையிலும் சுயாதீனமானதாகவும் மற்றும் அவற்றுக்குக் குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.

* அனைத்துக்கும் மேலாய், புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட உலகளாவிய போராட்டத்தில் அணிதிரட்டுவதாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் நிரந்தரப் போருக்கு தொழிலாள வர்க்கம் நிரந்தரப் புரட்சி முன்னோக்கைக் கொண்டு பதிலளிக்க வேண்டும்; தேசிய-அரசு அமைப்புமுறையை ஒழிப்பதும் ஒரு உலக சோசலிசக் கூட்டமைப்பை ஸ்தாபிப்பதுமே அதன் மூலோபாய இலட்சியங்களாய் இருக்கும். உலக வளங்கள் பகுத்தறிவான, திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையும், இந்த அடிப்படையில், வறுமை ஒழிக்கப்பட்டு மனித கலாச்சாரம் புதிய உயரங்களுக்கு உயர்த்தப்படுவதையும் அது சாத்தியமாக்கும்.

மேலதிக வாசிப்புக்கு :

வெகுஜனப் போராட்டங்களின் மத்தியில் பிரான்ஸ், கட்டாய இராணுவ சேவைக்கு திரும்புவதை அறிவிக்கிறது  [PDF]