ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan crisis: SLFP holds rally to defend political coup

இலங்கை நெருக்கடி: ஸ்ரீ.ல.சு.க. அரசியல் சதிக்கு ஆதரவாக பேரணி நடத்தியது

By K. Ratnayake
6 November 2018

இலங்கையின் ஆளும் உயரடுக்கின் பிரிவுகளுக்கு இடையேயான பகைமை உக்கிரமடைந்து வரும் நிலைமையின் மத்தியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த இராஜபக்ஷவும் நேற்று கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லவில் பேரணி ஒன்றை நடாத்தினர். அக்டோபர் 26 அன்று, சிறிசேன பிரதமராக இருந்த விக்கிரமசிங்கவை பதவி நீக்கி இராஜபக்ஷவை அந்தப் பதவியில் நியமித்து நடத்திய அரசியல் சதியை நியாயப்படுத்தவே இந்த பேரணி நடத்தப்பட்டது.

அக்டோபர் 30 அன்று, விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான அதன் பிரச்சாரத்தின் பாகமாக ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்-ஆர்ப்பாட்டமாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) இந்தப் பேரணியை நடத்த முயன்றது. நவம்பர் 16 வரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி, பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து வெளியேற விக்கிரமசிங்க மறுத்துவிட்டார்.

அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்தை திசை திருப்பும் முயற்சியில் சிறிசேன நவம்பர் 14 அன்று பாராளுமன்றத்தை மீண்டும் திறக்க ஒரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் விக்கிரமசிங்கவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்துள்ளன.

சிறிசேன, 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளபாக போட்டியிடுவதன் பேரில், விக்கிரமசிங்கவுடன் கை கோர்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து 2014 நவம்பரில் வெளியேறினார்.

அந்த நேரத்தில், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சிக்கும் சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக அவரை விமர்சித்த சிறிசேன, "நல்லாட்சியை" ஏற்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த வாய்சவடால்களுக்குப் பின்னால், சீன சார்பு என அமெரிக்காவால் கருதப்பட்ட இராஜபக்ஷவை அகற்ற வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஒரு ஆட்சி மாற்ற சதியின் பங்காளிகளாக சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் இருந்தனர்.

2014ல், இராஜபக்ஷ தனது பங்கிற்கு, சிறிசேனவை அரசியல் ரீதியில் முதுகில் குத்தியதாக குற்றம் சாட்டினார்.

எவ்வாறெனினும், நேற்று ஒரே மேடையில் தோன்றிய சிறிசேனவும் இராஜபக்ஷவும், கடந்த காலத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. மாறாக, அவர்கள் உத்தியோகபூர்வ அரசியலின் சிதைவைக் கோடிட்டுக் காட்டி, ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டனர்.

விக்கிரமசிங்கவை பதவி நீக்கியதைப் பற்றி பேசிய சிறிசேன, பகட்டாக அறிவித்ததாவது: "எங்கள் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பெறுமதிகளுக்கு பொருந்தாத மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிநிரல்களின்படி செயல்படுகின்ற ஒரு குறிக்கோளையே அகற்றினேன்." கடந்த மூன்றரை ஆண்டுகளாக, "ஒரு தீவிர நவ-தாராளவாத ஆட்சி வடிவமாக" முன்னெடுக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார மற்றும் அரசியல் நோக்கத்தால் ஏழை மக்கள் நசுக்கப்பட்டனர் ".

இந்த கூற்றுக்கள், சர்வதேச நாணய நிதியம்  ஆணையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை விக்ரமசிங்கவுடன் சேர்ந்து அமுல்படுத்திய சிறிசேனவின் முழு பாசாங்குத்தனத்தைக் காட்டுகின்றன. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸையும் இராணுவத்தையும் அனுப்பியது.

குறிப்பிடத்தக்க வகையில், பெப்ரவரி 10 அன்று நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அரசாங்கம் சந்தித்த தோல்வியின் பின்னர்தான் பிரதமரை மாற்றியமைப்பதை பற்றி சிந்தித்ததாகவும், பாராளுமன்ற சபாநாயகரான கரு ஜயசூரியவை அந்தப் பதவிக்கு அழைத்த போதிலும் அவர் அந்த திட்டத்தை நிராகரித்தாதாகவும் சிறிசேன தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஸ்ரீ.ல.சு.க.வின் சிறிசேனவினது கன்னை மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, ஐ.தே.க. இரண்டாவது இடத்தைப் பெற்றதுடன், இராஜபக்ஷவின் ஸ்ரீ.ல.சு.க. கன்னையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பதாகையின் கீழ் பெரும்பான்மை சபைகளை வென்றது.

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை அந்த தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன. இராஜபக்ஷவின் கட்சிக்கு வாக்களித்த பலர், அவருக்கு எந்தவொரு சாதகமான ஆதரவையும் வழங்கவில்லை, மாறாக அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான தமது விரோதத்தையே வெளிப்படுத்தியிருந்தனர்.

பெருகி வரும் அதிருப்தியைப் பற்றி விழிப்படைந்த சிறிசேன, ஐ.தே.க. துணைத் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக இருக்குமாறு அழைத்தார், ஆனால் அவரும் உடன்படவில்லை.

பேரணியில் சிறிசேன பிரகடனம் செய்ததாவது: "நாட்டை நேசிக்கும் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்த என்னுடன் இணைய விரும்பும் ஒருவரை நான் தேடிக்கொண்டிருந்தேன். ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசாங்கத்தையும் கவிழ்க்கக் கூடியவராக நான் மஹிந்த இராஜபக்ஷவை கண்டேன். "

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயகத்தை மீறியதற்காக அவர் கண்டனம் செய்த இராஜபக்ஷவால் இப்போது ஜனநாயகத்தை எப்படி வலுப்படுத்த முடியும் என்பதை சிறிசேன விளக்கவில்லை.

இராஜபக்ஷ சுருக்கமான கருத்துக்களை மட்டுமே தெரிவித்தார். சிறிசேன உடனான தனது பிணைப்பு இப்போது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது, அதை பொய்களைக் கூறி உடைக்க முடியாது என்று அவர் கூறினார். அவரது அரசாங்கம் "அனைத்து நாடுகளின் உதவியுடனும்", ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மக்களின் நலனுக்காக வேலை செய்து, நாட்டை சுபீட்சமாக்கும் என அவர் கூறினார். தமிழ் சிறுபான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

இது ஒரு அப்பட்டமான மோசடி ஆகும். 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷவின் தாக்குதல்கள், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியமை மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் போது தமிழ் பொதுமக்களுக்கு விரோதமான இராணுவத்தின் அட்டூழியங்களின் காரணமாகவுமே அவர் தோற்கடிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களில், இராஜபக்ஷ முகாம் ஐ.தே.க. இல் இருந்தும் எதிர்க்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் பல பாராளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்துகொண்டது. ஊடக செய்திகளின் படி, இந்த இழிந்த பேரம்பேசல் தொடர்கிறது. சிறிசேன இராஜபக்ஷவுக்கும் நேரத்தை கொடுப்பதற்காக பாராளுமன்றத்தை ஒத்தி வைத்தார். சிறிசேன மற்றும் இராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டணியுடன் இப்போது ஸ்ரீ.ல.சு.க. 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 96 உறுப்பினர்கள் மட்டுமே கொண்டுள்ளதுடன், மேலும் பெரும்பான்மை பெற இன்னும் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர்.

நேற்று ஒரு ஊடக மாநாட்டில், ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார திஸாநாயக்க, இராஜபக்ஷ-சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பலரும் அவருக்கு 500 மில்லியன் ரூபாவை (US2.8 மில்லியன் டொலர்) வழங்க வாக்குறுதியளிப்பதாக ஒரு ஒலிப்பதிவை அம்பலப்படுத்தினார். 200 முதல் 300 மில்லியன் ரூபாய்கள் மற்றும் சிறந்த ஊதியத்துடனான அமைச்சுப் பதவிகளும் கட்சிமாறிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசியலில் பாராளுமன்ற உறுப்பினர்களை கொள்முதல் செய்வது புதிதல்ல என்றாலும், அது வெறுப்பூட்டும் புதிய மட்டத்துக்கு உயர்ந்துள்ளது.

நேற்று, சபாநாயகர் ஜயசூரிய, “பாராளுமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அனைத்து மாற்றங்களும் ஜனநாயகமற்ற மற்றும் பாராளுமன்ற மரபுகளுடன் பொருத்தமற்றவை என்று பெரும்பான்மை கருத்துக்கள் நிலவுவதால்”, அக்டோபர் 26ம் திகதிக்கு முந்தைய பாராளுமன்றத்தின் நிலைமையையே தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதாவது, இராஜபக்ஷவை அவர் பிரதமராக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. "புதிய அரசியல் கூட்டணி பாராளுமன்றத்தில் அதன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

“நடுநிலை ஊழியர்களை அலட்சியம் செய்து ஊடக நிறுவனங்கள் மற்றும் பிற பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகத்தை பலாத்காரமாக எடுத்துக் கொள்ளுதல், மற்றும் தகவல்களுக்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கையூட்டுக்கள் வழங்கப்படுவது” போன்ற "ஜனநாயகக் கொள்கைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன", என ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

ஜயசூரிய, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு பேர் போன ஐ.தே.க. இன் பிரதான உறுப்பினராவார். பெரும் வல்லரசுகளின் இராஜதந்திரிகள் சமீபத்தில் வருகை தந்த போது பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அவரைக் கேட்டுக் கொண்டனர்.

"நாடுகள் உணர்ந்துள்ளன, அவை கவலையடைந்துள்ளன, ஜனநாயக நாடுகள் கவலையில் உள்ளன," என நேற்று விக்கிரமசிங்க ராய்ட்டர் செய்திக்கு கூறினார். உண்மையில், இந்த சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா நோக்கிய கடந்த கால நகர்வினால் இராஜபக்ஷவை எதிர்த்து நிற்கிறன. ஜனநாயகம் பற்றி அவற்றுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

இராஜபக்ஷவின் நியமனத்திற்கு எதிராக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அதிகாரத்தை மீண்டும் பெறும் ஐ.தே.க. இன் முயற்சியின் பாதையில், தமிழ் கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

குவிந்து வரும் பதட்டங்களைப் பற்றி குறிப்பிடுகையில், வெள்ளிக்கிழமை விக்கிரமசிங்க AFP ஊடகத்திற்கு பேட்டியளித்த போது ஒரு "இரத்தக்களரி" ஏற்படும் சாத்தியத்தைப் பற்றி எச்சரித்தார். "நாங்கள் வன்முறையை நாடவே வேண்டாம் என்று எமது மக்களை கேட்டுக்கொள்கிறோம்... ஒரு சில ஆத்திரமடைந்தவர்கள் ஒரு இரத்தக் களரியை தூண்டிவிட முடியும்."

இந்த கருத்து, ஆளும் வர்க்கத்தின் இரு கன்னைகளும் அரச அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகப் பயன்படுத்த தயாராக வைத்திருக்கும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளைப் பற்றிய ஒரு எச்சரிக்கை ஆகும். எந்த கட்சி அல்லது கட்சிகள் இறுதியில் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டாலும் அது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி அடக்கும்.

ஆளும் உயரடுக்கின் பிரிவுகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தை பற்றி கவலை தெரிவிக்கின்றன. நேற்று டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் கூறியதாவது: "சாதாரண இலங்கையர்கள் அரசியல்வாதிகளை பூமியில் கிருமிகளைப் போல் கருதுகின்றனர்; இது குறிப்பாக ஜனநாயகத்தை பாராளுமன்ற முறையின் மீதான இளைஞர்களின் நம்பிக்கையை அழிப்பதனால், ஒட்டு மொத்த ஜனநாயகத்துக்குமே கெட்டதாக உள்ளது."

"பாராளுமன்ற முறைக்குள்ளே நிலைமை மோசமடைந்து வருவதை" நிறுத்த வேண்டும் என்று தலையங்கம் வலியுறுத்தியது: "தற்போதைய சூறாவளியை கட்டுப்பாட்டை மீறி இயங்க அனுமதித்தால், ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்திற்கு-வெளியிலான வழிமுறைகளைப் பற்றி சிந்திக்க இளைஞர்களை மீண்டும் வழிநடத்த கூடும்," என அது எச்சரித்துள்ளது.

பாராளுமன்ற ஜனநாயகக் முகமூடி பொறிந்து போயுள்ள நிலையில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேறும் ஒரு வழியை கண்டுபிடிக்க புரட்சிகர சோசலிச பாதைக்கு எடுக்கும், என்பதையிட்டே ஆளும் உயரடுக்கு உண்மையில் அச்சமடைந்துள்ளது.