ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan parliament rejects Rajapakse as prime minister

இலங்கை பாராளுமன்றம் இராஜபக்ஷவை பிரதமராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

By Wasantha Rupasinghe 
15 November 2018

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை பாராளுமன்றம் நேற்று நிறைவேற்றியதை அடுத்து, இலங்கை ஆளும் உயரடுக்கிற்குள் நிலவும் கசப்பான உள் மோதல்கள் தொடர்கின்றன. அவர், அக்டோபர் 26 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 225 ஆசனங்களைக் கொண்ட 122 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்ததாகக் கூறியுள்ளார். சிறிசேன அக்டோபர் 28 அன்று பாராளுமன்றத்தை ஒத்திவைத்த பின்னர் அது கூடியது இதுவே முதன்முறை. இலாபம் தரும் அமச்சர் பதவிகளை வழங்குவது உடப்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இராஜபக்ஷவுக்கு அவகாசம் வழங்குவதற்காகவே சிறிசேன பாராளுமன்றத்தை மூடினார்.

இருப்பினும், நவம்பர் 14 அன்று பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இராஜபக்ஷவால் பெரும்பான்மை ஆதரவைப் பெற முடியாது என்பது தெளிவான போது, சிறிசேன அதை கலைத்துவிட்டு ஜனவரி 5ம் திகதிக்கு பொதுத் தேர்தலை அறிவித்தார்.

ஜனாதிபதியின் ஒருதலைப்பட்ச மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையின் அரசியலமைப்பு பொருத்தம் பற்றி நவம்பர் 13 அன்று உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், பாராளுமன்ற அமர்வுக்கு வழி திறந்து விட்டது.

நேற்று பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு அனுமதிப்பதற்காக நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தினார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுர குமார திசாநாயக்கவும் இன்னொரு ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் தீர்மானத்தை கொண்டு வந்தனர். "ஜனநாயகத்தை பாதுகாக்கும்" போலிக் கதையின் கீழ், விக்கிரமசிங்க மற்றும் அவரது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடன் ஜே.வி.பி. கூட்டுச் சேர்ந்துள்ளது.

ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்களால் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டதோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதை ஆதரித்ததுடன் இராஜபக்ஷவின் அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையின்மை பிரகடனம் செய்யப்பட்டது.

பாராளுமன்ற பேரம்பேசலின் குள்ளlத்தனம் ஐந்து அமைச்சர்களின் சூழ்ச்சிகளால் சமிக்ஜை செய்யப்பட்டது. விக்கிரமசிங்கவிடம் இருந்து இராஜபக்ஷவின் முகாமுக்குச் செல்வதற்காக வெளியேறிய சிலர், பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வாக்களிக்க விக்கிரமசிங்க பக்கம் வந்தனர்.

தோல்வி நிச்சயமான நிலையில் இராஜபக்ஷ வாக்களிப்பிற்கு முன்பே பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார். ஆனால், அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற நடைமுறைகளை குழப்புவதற்கும் வாக்களிப்பை தடுக்கவும் சகல தந்திரங்களையும் பயன்படுத்தினர். சபாநாயகர் இறுதியில் ஒரு குரல் வாக்கெடுப்பை நடத்துவதற்காக சாத்தியமான வழிமுறைகளைப் பயன்படுத்தியதோடு, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக உடனடியாக அறிவித்தார். பாராளுமன்ற அமர்வு பின்னர் திடீரென முடிவுக்கு வந்தது.

ஆரம்பத்தில் இருந்தே, இராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதை கண்டனம் செய்தனர். முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் இராஜபக்ஷவுக்கு நெருக்கமானவருமான விமல் வீரவன்ச, பாராளுமன்றம் கூடுவதற்கு "சட்ட அங்கீகாரம் இல்லை" என்று ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். அவர் தனது கூற்றை விவரிக்க முயற்சிக்கவில்லை.

சபாநாயகர் ஜயசூரிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி கூறியதாவது: "பல நாட்கள் அரசியல் நிச்சயமற்ற நிலையின் பின்னர், பொதுமக்கள் நம் நீதித்துறை பற்றி பெருமைப்படலாம், அது குறிந்த சந்தர்ப்பத்தில் முன்வந்து, அவசரமும் அவசியமும் கொண்ட பெரும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்துக்கு பிரதிபலித்தது." நீதித்துறையின் நீண்ட மற்றும் இழிந்த சரித்திரத்தை ஒப்பிட்டால், ஜயசூரியவின் கூற்று வெளிப்படையாக பொய்யானது.

நேற்றைய நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து, ஜயசூரிய இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடும் எனவும், நாட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க நடவடிக்கை எடுப்பதற்காக பிரேரணையின் ஒரு பிரதியும் வாக்களிப்பு முடிவுகளும் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

நேற்றைய நிகழ்வுகள் பற்றி சிறிசேன இன்னமும் எந்த கருத்தும் தெரிவிக்காத அதேவேளை, அந்த பிரேரணை "சரியான முறையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததால்" தமது கன்னை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளாது என்று இராஜபக்ஷவின் விசுவாசியும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன அறிவித்தார்.

கடந்த இரண்டரை வாரங்களில் சிறிசேனவின் அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கைகளைப் பொறுத்தளவில், அவர் என்ன செய்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் என்ன முடிவெடுக்கின்றார், அல்லது உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு என்ன என்பதைப் பொருட்படுத்தாமல், ஆளும் உயரடுக்கின் அனைத்து கன்னைகளுமே மேலும் எதேச்சதிகார ஆட்சிக்கு உறுதியாக நிற்கின்றன.

நேற்றைய வாக்கெடுப்பை "ஒரு வரலாற்று நாள்" என்று அறிவித்த விக்கிரமசிங்க, சபாநாயகரின் முடிவை சவால் செய்யும் எந்த முயற்சியும் மற்றொரு நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்படும் என்று மேலும் கூறினார். விக்கிரமசிங்கவின் கருத்துக்கள், ஜே.வி.பி. மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலானதாக இருந்தன.

"ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதாக" கூறும் பாசாங்கில் இணைந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியதாவது: "சட்டமன்றத்தின் இறையாண்மை இன்று மேலோங்கி இருக்கின்றது. இப்போது நாட்டிற்கு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கும், நல்லாட்சி மேலோங்குவதற்கும் இப்போது சரியான காலம்."

சம்பத்தனின் "ஜனநாயக" கூற்றுக்கள் ஒரு மோசமான மோசடி ஆகும். பாராளுமன்றமானது உழைக்கும் மக்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக பல கடுமையான சட்டங்களை இயற்றியதில் பேர் போனதாகும்.

ஐ.தே.க., ஸ்ரீ.ல.சு.க., ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அவற்றுடன் ஒத்துழைக்கும் போலி இடது குழுக்களும் தொழிற்சங்கங்களுமாக முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினாலும் வாக்குறுதியளிக்கப்பட்ட "இயல்பு" நிலை என்பது, ஒரு காணல்நீராகும். வாஷிங்டனின் கட்டளைகளுக்கும் சீனாவிற்கு எதிரான அதன் பூகோள-அரசியல் நடவடிக்கைகளுக்கும் இணங்க, கடுமையான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோதச் சட்டங்களைக் கூட கொழும்பு தயாரித்து வரும் நிலையில், இத்தகைய கூற்றுக்கள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அரசியல் ரீதியாக நிராகரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்து பெரும் வல்லரசுகளும் அபிவிருத்தியடைந்து வரும் அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடியை கண்காணித்து வருவதுடன் எச்சரிக்கை மணிகளையும் ஒலிக்கச் செய்கின்றன.

இராஜபக்ஷ சீனாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்ததன் காரணமாக ஜனாதிபதியாக இருந்த அவரை அகற்றி சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய அரசாங்கமும் 2015 ஆட்சி மாற்ற நடவடிக்கையில் நேரடியாக தலையீடு செய்தன. வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகளுக்கு விரோதமான வாஷிங்டனும் அதன் கூட்டளிகளும், எந்தவொரு அரசாங்கமும் சீனாவுடன் அணிசேர்வதை தடுப்பதில் உறுதியாக உள்ளன.

அக்டோபர் 31 அன்று வெளியிடப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) அறிக்கை அடிநிலையில் உள்ள அழுத்தங்களை விளக்கியது: "அமெரிக்கா, இந்திய-பசிபிக் பிராந்தியத்தை ஒரு இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ போர்க்களமாக மாற்றி, போருக்கான தயாரிப்பில் சீனாவுக்கு எதிராக அணிதிரளுமாறு நாடுகளை வற்புறுத்துகிறது. சீனா தன் பக்கத்தில், எந்த முற்போக்கான தீர்வையும் கொண்டிருக்காததோடு, தனது பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவை எதிர்த்து நிற்க முயலும் அதே சமயம், அதன் சொந்த இராணுவத் தளவாடங்களை கட்டியெழுப்புகிறது. இலங்கையிலும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள், முடிவில் மனிதகுலத்திற்கு ஒரு பேரழிவை மட்டுமே தரக்க்கூடிய, அணு ஆயுதம் கொண்ட இரு சக்திகளுக்கு இடையேயான ஒரு போரின் முன்னரங்கில் தங்களது சொந்த மக்களையே முன்நிறுத்துகின்றன."

இலங்கையின் பாராளுமன்ற அமர்வுகளில் நேற்று கலந்து கொண்ட இலங்கையின் அமெரிக்க தூதர் அலியான பி டெப்லிட்ஸ், "ஜனநாயகம் செயற்படுவதைப் பார்ப்பதற்கு இலங்கை பாராளுமன்றம் மீண்டும் கூடுவதில் பங்குபெறுவதில் பெறுமையடைகிறேன்" என்று கூறினார். இந்த அமர்வு, "மிகவும் நேரடியானதாக இருந்தாலும் இந்த நிறுவனம் மீண்டும் அரசியலமைப்பு பாத்திரத்தை நிறைவேற்றுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்," என அவர் அறிவித்தார்.

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் இதேபோன்று, "தற்போதைய நெருக்கடிக்கு சமாதானமான மற்றும் ஜனநாயக தீர்வைக் காணவும், ஜனநாயக நிறுவனங்களை மதிக்கவும் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளையும்" கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த அபிவிருத்திகள், முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மற்றும் அவற்றின் போலி-இடது மற்றும் தொழிற்சங்க கருவிகளுக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேசியவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அணிதிரள வேண்டியதன் அவசர தேவையை கோடிட்டுக் காட்டுகின்றன.