ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan political crisis exposes bankruptcy of Tamil nationalist parties

இலங்கை அரசியல் நெருக்கடி தமிழ் தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்துகிறது

By K. Nesan and V. Gnana
22 November 2018

அக்டோபர் 26 அன்று இலங்கை அரசாங்கம் நிலைகுலைந்தமை தமிழ் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளின் திவால்நிலையை அம்பலப்படுத்தியிருக்கிறது. 1983-2009 இலங்கை உள்நாட்டுப் போர் குருதிகொட்ட முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது முதலாக தமிழ் தொழிலாளர்களும், பரந்த ஒடுக்கப்பட்ட மக்களும் முகம்கொடுத்து வரும் கொடுமையான நிலைமைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக கொழும்பின் சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயற்படப்போவதாக அவர்கள் வாக்குறுதியளித்தனர். இது ஒரு மோசடி என நிரூபணமாகியிருக்கிறது. அமெரிக்க ஆதரவிலான ஒரு “நல்லாட்சி” உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு பின்னரும், இந்தப் பிரச்சினைகளில் ஒன்றும் கூட தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

2015 ஜனவரியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்திய அமெரிக்க பொறியமைவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்தது. தற்போது வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி விட்டு அவரின் இடத்தில் மகிந்த இராஜபக்ஷவை அமர்த்துவதற்கு சிறிசேன முயன்றதன் பின்னர், இந்த “தேசிய ஐக்கிய” அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது. குண்டர்களுடையதைப் போன்ற இரைச்சல் மிக்க வாய்ச்சண்டைகள் கைகலப்புகளாக நாடாளுமன்றத்தில் வெடித்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் இராஜபக்‌ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு எதிராய் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் “சம்பந்தன் திரைமறைவிலான இரகசிய உடன்பாடுகளின் மூலமாக இலங்கை ஆட்சியாளர்களின் காவலராக ஆகியிருக்கிறார்” என்று கூட்டமைப்பு ஆதரவு இணைய தினசரி தமிழ்வின் பெருமைபொங்க எழுதியது. சிறிசேன, விக்கிரமசிங்கவை பதவிநீக்கிய பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு “சர்வதேச சமூக”த்துடன் இணைந்து சம்பந்தன் செயற்படுவதாக அது பெருமைப்பட்டது. மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களுடன் சேர்ந்து மீனவர்கள், பெட்ரோலிய தொழிலாளர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், பல்கலைக்கழகத்தின் கற்பிப்பு சார்ந்த மற்றும் சாராத தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் வெடித்திருக்கும் நிலையில், கூட்டமைப்பு மேலும் வலதுசாரி அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அக்டோபர் 26 ல் தொடங்கிய நிகழ்வுகள் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கையும், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தையும் மீண்டுமொரு முறை சக்திவாய்ந்த விதத்தில் நிரூபணம் செய்திருக்கின்றன. தாமதமான அபிவிருத்தி கொண்ட நாடுகளின் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் ஒரு தொங்குதசையாக, எந்த ஜனநாயகப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வக்கில்லாமல் இருக்கிறது. இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள அத்தனை இனங்களையும் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம் மட்டுமே இலங்கையின் உள்நாட்டுப் போரில் இருந்து எழுகின்ற தீர்க்கப்படாத எரியும் பிரச்சினைகளை தீர்க்க இயலும்.

கூட்டமைப்பு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு, தொழிலாள வர்க்கத்தினதும் தமிழ் வெகுஜனங்களினதும் கசப்பான எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதன் மூலமாக பதிலிறுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாறு தெள்ளத்தெளிவானது.

ஐக்கிய தேசியக் கட்சி 1949 இல் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் தோட்டத் தொழிலாளர்களது வாக்குரிமைகளை இல்லாமல் செய்தது, 1980ல் பொதுத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தை பெருந்திரளான வேலைநீக்கங்களைக் கொண்டு நசுக்கியது, அத்துடன் 1983 இல் இலங்கை உள்நாட்டுப் போரைத் தூண்டிய தமிழர் விரோதப் படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டது. 2015 ஜனவரிக்குப் பின்னர் சிறிசேனவின் கூட்டாளியாக, இலங்கையில் “நல்லாட்சி”க்கு வாக்குறுதியளித்த அது, கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நிறைவேற்றியதன் மூலம், நாடுதழுவிய சிங்கள, தமிழ், முஸ்லீம் தொழிலாளர்கள், வறிய மக்களின் வாழ்க்கைத் தரங்களின் மீது தாக்குதல் நடத்தியது.

2015 தேர்தல் அறிக்கையில் கூட்டமைப்பு வழங்கிய வாக்குறுதிகள் பொய்களின் ஒரு மூட்டையாக நிரூபணமாகின. ஒரு “அரசியல் தீர்வு” காண்பதற்கும், “பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்காக” போராடுவது, “தமிழ் மக்களின் உடனடியான தேவைகள் குறித்த விடயங்களை” கையாளுவது, மற்றும் “போர் விதவைகள், அனாதைகள், வயோதிபர்கள், ஊனமுற்றோர்களது” நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் அது வாக்குறுதியளித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான அக்கறை, தமிழ் தொழிலாளர்கள், வறிய மக்கள் பற்றியதல்ல மாறாக, இலங்கையிலும் மற்றும் உலகெங்கிலும் நாடுகடந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு குறுகிய அடுக்கு, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளில் தொழிலாளர்களையும் ஏழைகளையும் சுரண்டுவதற்கு கொண்டுள்ள வர்க்க நலன்களே ஆகும். அமெரிக்காவின் சீனாவுக்கு எதிரான அதன் மோதல் மற்றும் போர் மிரட்டல்களுக்கு ஆதரவான ஒரு ஆட்சியை இலங்கையில் உருவாக்குவதற்கு முனைந்த நிலையில், கூட்டமைப்பு இலங்கை அரசுடனான அதன் பேரம்பேசலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவை நாடியது. அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் தன்னை அணிநிறுத்திக் கொண்டது. இன்று இந்தக் கொள்கையானது கூட்டமைப்பினை, அது பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்கின்ற தமிழ் உழைக்கும் மக்களின் தீர்க்கமான எதிரிகளுடன் கூட்டணி சேருவதற்கு அதனைக் கொண்டு செல்கிறது.

ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சூழ்ச்சித் திட்டங்களை விளங்கிக் கொள்வதற்கு, இலங்கையில் கூட்டமைப்பின் ஆதரவிலான “நல்லாட்சி” அரசாங்கம் நான்கு வருடங்களாக தமிழ் மக்களுக்கு என்ன பெறுபேறுகளை வழங்கியிருக்கின்றது? என்ற கேள்வியைக் கேட்டாலே போதும்.

தென்னிலங்கையின் சிங்கள மக்களைப் போலவே, பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைமைகளும் மோசமடைந்திருக்கின்றன, வறுமை விண்ணைமுட்டியிருக்கிறது. கிளிநொச்சி பகுதியில் 18.2 சதவீதமான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இது இலங்கையில் மிக உயர்ந்த அளவிலான வறுமை விகிதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன் தேசிய சராசரியை விட நான்கு மடங்குக்கும் அதிகமானதாகும். போரின் முடிவில் 40,000 க்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், வீட்டு மாதாந்திர வருவாய் நாட்டின் மிகக்குறைந்த சராசரியாக 25,526 ரூபாயாக உள்ளது, தேசிய சராசரி 43,511 ரூபாயாகும்.

பெரும்பாலான இளம் தொழிலாளர்கள் மலிவு உழைப்புத் துறைகளில் வேலைசெய்கின்றனர், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். 2015 முதல் 2018 வரையான காலத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி 5.7 சதவீதத்தில் இருந்து 10.7 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. 2009க்குப் பின்னரான “போருக்குப் பிந்தைய சகாப்தத்தில்”, வெறும் 8,754 வேலைவாய்ப்புக்கள் மட்டுமே வட மாகாணத்தில் உருவாக்கப்பட்டிருந்ததாக தேசிய முதலீட்டுச் சபை செப்டம்பரில் தெரிவித்தது.

தோல்வியடைந்த தமிழ் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவம் படுகொலை செய்து உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்தபோதும் அதனால் விட்டுச் செல்லப்பட்ட பிரச்சினைகளில் எதுவுமே தீர்க்கப்பட்டிருக்கவில்லை. விசாரணையின்றி பத்தாண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். அத்துடன் வடக்கும் கிழக்கும் இப்போதும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்த்தான் உள்ளது.

இந்தப் பிராந்தியங்களில் மட்டும் 90,000 க்கும் அதிகமான போர் விதவைகள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போன அல்லது தொலைந்துபோன ஆயிரக்கணக்கானோரின் மனைவிகளது எண்ணிக்கை இந்த புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவில்லை. வட மாகாணத்தில் சுமார் 58,000 வீடுகள், அல்லது மக்களின் கால்வாசிப் பேருக்கு பெண்களே குடும்ப தலைமையில் உள்ளனர். பாரிய வறுமை, துஷ்பிரயோகம் அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பாலியல் அச்சுறுத்தல் என சொல்லணா துயரங்களுக்கு அவர்கள் முகம்கொடுக்கின்றனர்.

நுண்நிதி நிறுவனங்கள் அவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் சிறு கடனுதவிகளை அளிக்கின்றன. பெண்கள் பெரும்பாலும் விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலுமான சிறு தொழில்களை தொடங்குவதற்கு அவற்றை பயன்படுத்துகின்றனர். அவர்களது முயற்சிகள் பெரும்ப்பாலும் தோல்வியடைவதால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் கிழக்கு மாகாணத்தில் இத்தகைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் 60க்கும் அதிகமான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வடக்கு மாகாணத்திலும் இதையொத்த தற்கொலைகள் நடைபெறுகின்றன.

உள்நாட்டுப் போரின் போது வடக்கு, கிழக்கில் 100,000 க்கும் அதிகமான பேர் காணாமல் போனதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவிக்கிறது. தமது குடும்ப அங்கத்தவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரி, காணாமல் போனவர்களது உறவினர்கள், 2017 பிப்ரவரி முதலாக, இரவுபகல் பாராமல் வீதியோரப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் தெற்கில் மிகப்பரந்த மக்களின் அனுதாபத்தை அவர்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறது. வடக்கிற்கு பயணம் செய்யும் சிங்கள தொழிலாளர் குழுக்கள் போராட்டக்காரர்களை சந்தித்து தங்களது அனுதாபங்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். 2018 ஜூலையில், முதன்முறையாக, காணாமல் போனவர்களது உறவினர்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஒரு ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டங்களை, தெற்கில் அபிவிருத்தி கண்டுவருகின்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் இணைப்பதற்கு செய்யப்படுகின்ற முயற்சிகளை தமிழ் தேசியவாதிகள் முழுமையாக எதிர்க்கின்றனர். அதற்குப் பதிலாக, போராட்டக்காரர்களில் இருந்து சிறுசிறு பிரதிநிதிக் குழுக்களை சிறிசேனவுடன் சம்பிரதாயமான நேருக்கு நேர் சந்திப்புகளுக்காய் அவர்கள் அனுப்பி வந்துள்ளனர். தமிழ்நெட் வலைத் தளம் எழுதியது, “சிங்கள தேசம் அதன் தலைவிதியை தீர்மானித்துக் கொள்ளட்டும், தமிழர் போராட்டத்தின் மீது தொடர்ந்து கவனம் குவியுங்கள்”.

தமிழ் தேசியவாதிகளின் இந்த நடைமுறைகள், அன்றாடம் அமெரிக்காவுடனும், இலங்கை அரசுடனும் இணைந்து சூழ்ச்சி செய்யும் அதேவேளையில் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களை இனரீதியாகப் பிளவுபடுத்தி வைப்பது என்ற அவர்களது திவாலான முன்னோக்கின் மீதான ஒரு குற்றப்பதிவாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பாக அமெரிக்க ஏற்பாட்டில் கொண்டுவரப்படுகின்ற ஒரு தீர்மானம் உள்நாட்டுப் போர் குற்றங்களுக்கு நீதியைக் கொண்டுவரும் என்று வாக்குறுதியளித்து, தமிழ் மக்களின் நம்பிக்கைகளை அவர்கள் சுரண்டிக் கொண்டனர். ஆனால், சீனாவுக்கு எதிரான அமெரிக்க நலன்களை ஊக்குவிக்கும் ஒரு முதலாளித்துவ ஆட்சியை கொழும்பில் அமர்த்துவது, அத்தோடு தமிழ் தேசியவாதிகளின் இலாபங்கள் ஆகிய அமெரிக்க மற்றும் தமிழ் தேசியவாதிகளின் நோக்கங்கள், இத்தகைய வாக்குறுதிகளுடன் வன்மையான முரண்பாடு கொண்டவையாக இருந்தன.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் உடந்தையாக இருந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் கூட்டமைப்பின் கூட்டாளிகள், 2009 இறுதிப்போரில் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளும் அப்பாவி தமிழ் மக்களும் படுகொலை செய்யப்பட்டதை உற்சாகத்துடன் ஆதரித்தவர்கள் என்பது நன்கறியப்பட்டதாகும். கூட்டமைப்பின் சிங்களக் கூட்டாளிகள் அனைவரும் இந்த இரத்தக்களரியில் அரசியல்ரீதியாக சம்பந்தப்பட்டிருந்தவர்களே. இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிக்கு எதிராக 2017 இல் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளுக்கான பதிலிறுப்பில் சிறிசேன அறிவித்தார்: “மிகத் தெளிவாக சொல்கின்றேன், ஜகத் ஜயசூரியாவின் மீதோ அல்லது வேறு எந்த இராணுவத் தலைவரின் மீதோ அல்லது இந்த நாட்டின் வேறெந்த போர் நாயகரின் மீதோ உலகின் எவரொருவரும் கைவைப்பதை நான் அனுமதிக்கப் போவதில்லை.”

எந்த விதமான போர்க்குற்ற விசாரணைகளையும் இப்போது செயலிழந்து கிடக்கும் “நல்லாட்சி” அரசாங்கம் உள்ளிட்ட இலங்கையின் அனைத்து அரசியல் நிறுவனங்களும், தொடர்ச்சியாகவும் ஆவேசமாகவும் எதிர்த்தே வந்திருக்கின்றன.

தமிழ் தொழிலாளர்கள், ஏழை மக்களை பொறுத்தவரை, இது அவர்கள் தமிழ் தேசியவாதத்தின் முட்டுச்சந்தை நிராகரித்து, சோசலிச சமத்துவக் கட்சி முன்வைக்கும், சோசலிச சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் இந்திய மற்றும் சிங்களப் பெரும்பான்மை கொண்ட தெற்கு இலங்கையின் வர்க்க சகோதர சகோதரிகளது போராட்டங்களுடன் ஐக்கியம் பேணுவதற்குமான தொழிலாள வர்க்க அரசியலை நோக்கித் திரும்புவதை அவசியமாக்குகின்றது.