ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

From the Nazis to the AfD: Big business finances the far-right

நாஜிக்களில் இருந்து ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சி வரை: பெரு வணிகங்கள் அதி-வலதுசாரிகளுக்கு நிதியளிக்கின்றன

By Peter Schwarz  
28 November 2018

Der Spiegel வார இதழின் விசாரணைப் படி, அதி-வலது ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) கட்சியின் எழுச்சியானது முக்கியத்துவம் அதிகரிப்பது என்பது-, 88 வயது பில்லியனரான அகுஸ்ட் வோன் ஃபிங்க் (August Von Finck) வழங்கிய பெரும் நிதி பங்களிப்புகளால் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. அகுஸ்ட் வோன் ஃபிங்க் என்ற அதே பெயராலேயே அழைக்கப்பட்ட அவரது தந்தையும் அடோல்ஃப் ஹிட்லருக்கு நிதியளிப்பு வழங்கியதுடன், “ஆரியர்மயமாகல்” என்றழைக்கப்பட்ட செயல்முறை மூலமாக யூதர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து தனது செல்வவளத்தை பெருக்கியிருந்தார்.

ஃபிங்கின் வணிக மற்றும் நிதி சாம்ராஜ்யத்தில் இருந்து பல மில்லியன் யூரோக்கள் AfD இன் தோற்றுவிப்புக்கும் வளர்ச்சிக்கும் பாய்ந்ததாக Der Spiegel முடிவிற்கு வருகின்றது. 2013 இல், ஜேர்மனின் பெரும் செல்வந்தர்களுக்கான Forbes பட்டியலில் 8.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள செல்வந்தராக ஃபிங்க் 10வது இடத்தில் இருந்தார். என்றாலும், வரி செலுத்துதல்களை தவிர்ப்பதற்காக, 1999 இல் இருந்து சுவிட்சர்லாந்தில், வைய்ன்ஃபெல்டனில் உள்ள ஒரு பழைய அரண்மனையில் தான் ஃபிங்க் வசித்து வந்தார்.

ஃபிங்க் அளிக்கும் நிதியுதவிகள் என்பவை பகிரங்கமான நன்கொடைகள் வடிவில் அல்லாமல், பணத்தை வழங்குவோரின் உண்மையான ஆதாரங்களை மூடிமறைத்த இடைத்தரகர்கள் மற்றும் அமைப்புக்கள் மூலமான நிதியளிப்புக்களாக செயல்படுத்தப்பட்டன. உதாரணமாக, “Association for the Rule of Law and Civil Liberties” என்றழைக்கப்பட்ட ஒரு அமைப்பு, AfD க்கு வாக்களிக்க பரிந்துரைக்கும் விளம்பர பிரச்சாரங்களுக்கும் மற்றும் இலவச செய்தித்தாள்கள் வழங்குதலுக்கும் குறைந்தபட்சம் 10 மில்லியன் யூரோக்கள் அளவிற்கு நிதியுதவி செய்தது. சுவிஸ் வாராந்திர இதழான WOZ உடனுழைத்து Der Spiegel மேற்கொண்ட அதன் ஆராய்ச்சியில், இந்த சங்கத்திற்கும், மற்றும் ஃபிங்கின் நிதி மற்றும் சொத்துடைமை நிறுவனத்தின் இயக்குநரான 74 வயது எர்ன்ஸ்ட் குனூட் ஸ்டால் இற்க்கும் இடையே இருந்த நெருங்கிய உறவுகளைப் பற்றி தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

1990 களில் இருந்தே நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் மற்றும் இணைந்த ஐரோப்பிய நாணயத்தை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சிகளை ஃபிங்க் ஊக்குவித்து வருகிறார். அந்த தசாப்தத்தின் போது, தாராளவாத ஜனநாயகக் கட்சி (Free Democratic Party-FDP) அரசியல்வாதி மன்பிரெட் புரூன்னெர் தலைமையிலான, League of Free Citizens இற்கு 4.3 மில்லியன் யூரோக்களை அவர் வழங்கியிருந்தார். AfD இன் ஒரு முன்னோடியாக இந்த லீக் இருந்தது.

2003/2004 இல், ஒரு அநாமதேய தொழில் முனைவோர் குழு 6 மில்லியன் யூரோக்களை குடிமக்கள் கூடுகைகள் சங்கத்திற்கு (Association of Citizens’ Conventions) நன்கொடையாக அளித்தது. அப்போது அந்த சங்கத்தின் நிர்வாகியாக பதவி வகித்த பெயாட்ரிக்ஸ் வோன் ஸ்டோர்ச் (Beatrix Von Storch) என்பவர் தான் தற்போது AfD இல் ஒரு முன்னணி பிரமுகராக இருக்கிறார். இந்த தொகையில் பெரும்பகுதி ஃபிங்கிடம் இருந்து வந்துள்ளது.

2009 இல், ஃபிங்கிற்கு சொந்தமான, உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளின் குழுவான மோவென்பிக் (Mövenpick), தாராளவாத ஜனநாயகக் கட்சிக்குFDP 1.1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக அளித்தது. அதன்பின்னர் விரைவிலேயே, சுற்றுலாத் துறையில் VAT வரி குறைப்புக்கு FDP அழுத்தம் கொடுத்தது மூலமாக மோவென்பிக் நேரடியாக பயனடைந்தது. இந்த “மோவென்பிக் நன்கொடை” பின்னர் ஒரு பொது ஊழலாக அபிவிருத்தி கண்டது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் இருந்தே AfD ஐ ஃபிங்க் ஊக்குவித்து வந்துள்ளார். AfD இன் நிறுவனர் உறுப்பினர்களான பேர்ன்ட் லுக்க மற்றும் ஓலாஃப் ஹென்கெல் இருவரும், ஸ்டால் அல்லது ஃபிங்கை அவர்கள் நேரடியாக சந்தித்ததாக Der Spiegel தெரிவித்ததை ஒப்புக் கொண்டனர். Free Voters இன் தலைவரும் தற்போது பவேரியா நாட்டின் துணை பிரதமருமான, ஹூபெர்ட் ஐவாங்கர் (Hubert Aiwanger), 2013 இல் லூக்குடன் சிறிது காலத்திற்கு கூட்டணி வைத்திருந்ததோடு, அத்தகைய சந்திப்புகளையும் உறுதி செய்தார். AfD ஸ்தாபிக்கப்பட்டப் பின்னர் அதன் செய்தித் தொடர்பாளராக இருந்த டக்மார் மெட்ஸ்கர் (Dagmar Metzger) ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தார். ஃபிங்க் மற்றும் ஸ்டால் உடனான தொடர்புகளை பராமரித்துவந்த அதே வேளையில், மெட்ஸ்கர் தனது நிறுவனமான Wordstatt வழியாக கட்சிக்கு நிதி வழங்கினார்.

அடுத்த கட்டத்தில், தங்க நாணயங்களை விற்பதன் மூலமாக அதன் பெரும்பகுதி செலவுகளை AfD மேற்கொண்டது. இதில், ஃபிங்கின் டெகுஸ்ஸா (Degussa) நிறுவனம் இதற்கு உதவியது, அந்நிறுவனத்தின் பொது உறவுகள் மெட்ஸ்கரால் கையாளப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் இறுதியில் பாராளுமன்றத்திற்குப் பின்னர், கட்சியின் நிதியளிப்பு தொடர்பான சட்டங்களை மாற்றுவதன் மூலம் இந்த நாணய வர்த்தகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது, மேலும் Association for the Rule of Law and Civil Liberties அமைப்பு கையகப்படுத்தப்பட்டு, AfD இன் பிரச்சாரங்களுக்கு மில்லியன்களில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த இரகசியம், சட்டவிரோத நிதியளிப்பின் ஒரு பாகமாக AfD இன் ஏற்றத்திற்கு ஒரு பிரதான பங்காற்றியது என Spiegel அறிக்கை நிறைவடைகிறது. “சாம்பல் பணம் அல்லது கறுப்பு பணம் என்பது கூட்டாட்சி குடியரசில் பெரும்பகுதி அரசியல் ஊழல்களுக்கு தொடக்கப் புள்ளியாக இருக்கிறது,” என்று பத்திரிகை முடிக்கிறது. “புதியது என்னவென்றால், AfD போன்ற ஒரு கட்சியை சந்தேகத்திற்குரிய நிதியுதவியுடன் ஆரம்பிக்க முடிந்தது என்பதுடன், பின்னர் ஜேர்மனிய பாராளுமன்றங்களுக்கு உள்ளே அது நுழையவும் முடிந்தது என்பது தான்.”

கூட்டாட்சி குடியரசிற்கு அத்தகைய நிதியளிப்புகள் ஒருவேளை புதியதாக இருந்தாலும், ஜேர்மனிய வரலாற்றில் அவற்றிற்கான  முன்னுதாரணங்களை அவை கொண்டுள்ளன. ஃபிங்கின் தந்தையான, ஆகஸ்ட் வோன் ஃபிங்க், அப்போது வரை அதிகாரத்தை கைப்பற்ற முடியாத நிலையில் இருந்த நாஜிக்களுக்கு ஏற்கனவே ஆதரவளித்துள்ளார். அவரும் ஏனைய தொழிலதிபர்களும், 1931 ஆம் ஆண்டின் மத்தியில், பேர்லினில் உள்ள கைசர்ஹோப் (Kaifserhof) ஹோட்டலில் ஹிட்லரை சந்தித்து, இடதுசாரி கிளர்ச்சி ஏற்படுமானால் அவருக்கு 25 மில்லியன் ரெய்ச்ஸ்மார்க் (Reichsmark) வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த தொகை இன்று சுமார் 100 மில்லியன் யூரோக்களுக்கு சமமானதாகும். பெப்ரவரி 20, 1933 அன்று ஹிட்லருடன் நடத்திய மற்றொரு இரகசிய சந்திப்பின் போது, ஃபிங்கும் ஏனைய வணிகத் தலைவர்களும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சான்சலருக்கு அவரது வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்காக 3 மில்லியன் யூரோக்களை வழங்கினர்.

ஆகஸ்ட் வோன் ஃபிங்க், வைமார் குடியரசின் மிகுந்த செல்வாக்குமிக்க வணிக பிரமுகர்களில் ஒருவராக இருந்தார். அவரது தந்தை, வில்ஹெல்ம் ஃபிங்க், Merck Finck & Co வங்கி, மற்றும் Allianz Insurance மற்றும் Munich Insurance போன்ற ஏனைய நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் இணை நிறுவனர் ஆவார். 1911 இல், வில்ஹெல்ம் ஃபிங்க் பவேரியாவின் கோமானாக உயர்த்தப்பட்டார்.

அகுஸ்ட் வோன் ஃபிங்கின் நிதி ஆதரவுகள் ஹிட்லருக்கு வழங்கப்பட்டன. 1933 இல், NSDAP (நாஜிக் கட்சி) இல் அவர் சேர்ந்ததோடு, வணிகத்திலும் அரசியலிலும் பல முன்னணி பதவிகளை வகித்தார். யூத சொத்துக்களின் “ஆரியமயப்படுத்தும்” செயல்முறை மூலமாகவும், அத்துடன் ஆஸ்திரியாவை நாஜிகள் இணைத்த பின்னர்  வியன்னாவில் S.M.V. Rothschild என்ற யூத வங்கியை கையகப்படுத்தியதன் பின்னரும் அவர் பயனடைந்தார்.

நாஜி ஆட்சியின் பொறிவைத் தொடர்ந்து, ஃபிங்க் அவரது நிறைவேற்று பதவிகள் சிலவற்றில் இருந்து தற்காலிகமாக விலகவும், குடும்ப வங்கி நிர்வகிப்பை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கவும் நேரிட்டது. என்றாலும், அவரது சொத்துக்களை தக்கவைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், நாஜிக்களுடன் இணைந்த குற்றங்களால் அடுத்தடுத்து அது அதிகரித்து வந்தது. 1948 இல், நாஜிக்களின் “சக பயணிப்பாளராக” அவர் வகைப்படுத்தப்பட்டார். வெகு விரைவிலேயே, அவரது முன்னணி பதவிகளுக்கு அவர் திரும்பினார். பின்னர் தொடர்ந்து திட்டமிட்ட நில சீர்திருத்தத்தை பராமரிப்பதிலும், அவரது சொத்துக்களை பெருக்குவதிலும் அவர் கவனம் வைத்தார்.

இன்று, ஃபிங்கின் சொத்துகுவிப்பு என்பது ஜேர்மனியின் மிகுந்த செலவுமிக்க நகரமான மூனிச்சில் பெரியளவிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை பிரதானமாக கொண்டுள்ளது. Merck Finck & Co வங்கி 1990 இல் விற்கப்பட்டது. கூடுதலாக, இளைய அகஸ்ட், பெரிய நிறுவனங்களில் எண்ணற்ற முதலீடுகளை கொண்டிருந்தார் என்பதுடன், குறுகிய கால இடைவெளிகளில் அவற்றை வாங்குவதும் விற்பதுமாக இருந்தார். மூனிச் Löwenbräu மதுபான உற்பத்தியகம், மோவென்பிக் உணவகங்கள், Von Roll இயந்திர உற்பத்தியாளர், Oerlikon-Bührle என்ற போர் தளவாட உற்பத்தியாளர், Hochtief கட்டுமான நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார்.

2010 இல், “Deutsche Gold und Silberscheideanstalt” (Degussa) என்ற விற்பனைக்கான தர அடையாளத்தை 2 மில்லியன் யூரோக்களுக்கு ஃபிங்க் வாங்கி, AfD க்கு ஆதரவளிப்பதற்கான அவரது திட்டத்தின் ஒரு பகுதியாக, தங்க வர்த்தகத்திற்குள் நுழைந்தார். இந்த Degussa என்ற பெயர் நாஜி ஆட்சியின் மிக மோசமான சில குற்றங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனம் நாஜிக்களின் அழிப்பு முகாம்களுக்கு சைக்லோன் பி வாயுவை (Zyklon B gas) விநியோகம் செய்தது. படுகொலை செய்யப்பட்ட யூதர்களின் பற்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தை கூட Degussa உருக்கி எடுத்தது.

தற்போது ஃபிங்கின் சொத்துடைமை, வரலாற்றில் மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களின் ஒரு விளைபொருளாக, நாஜி அரசியலை அதிகரித்தளவில் தழுவி நிற்கும் கட்சியை ஊக்கப்படுத்த மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது, உலக சோசலிச வலைத் தளத்தால் நீண்ட காலமாக விடுக்கும் எச்சரிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: முக்கிய சக்திகளுக்கு இடையே வளர்ந்துவரும் சமூக பதட்டங்களையும் மோதல்களையும் எதிர்கொள்கையில், ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் அதன் கடந்த கால பாசிச மற்றும் இராணுவவாத மரபுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

AfD இன் நிதி ஆதாரங்களைப் பற்றிய இவ்வெளிப்பாடுகள், இந்த தீவிர வலது-சாரி கட்சி ஒரு வகையான சமூகத்தின் கீழிருந்து உருவாகும் இயக்கம் அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்கிறது. அவர்கள் ஏன் மீண்டும் திரும்பிவந்துள்ளனர் (Why Are They Back?) என்ற புத்தகத்தின் முன்னுரை, அதிவலதின் எழுச்சி என்பது, “அரசியல் கட்சிகள், ஊடகங்கள், அரசாங்கம் மற்றும் அரசு எந்திரம் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் ஆதரவை மட்டுமே சார்ந்துள்ளது” – அத்துடன், நிதி பிரபுத்துவத்தின் பிரதிநிதிகளின் ஆதரவு என்ற ஒன்றையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.