ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Financial market fall accelerates on global growth fears

உலகளாவிய வளர்ச்சி குறித்த அச்சங்களால் நிதிய சந்தை வீழ்ச்சி தீவிரமடைகிறது

By Nick Beams
18 December 2018

அமெரிக்க பங்குச்சந்தைகள் நேற்று கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன, டோவ் சந்தை 500 புள்ளிகள் சரிந்து, கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மொத்த வீழ்ச்சியை 1,000 புள்ளிகளுக்கும் அதிகமாக கொண்டு வந்தது. பரந்தளவில் அமைந்த எஸ்&பி 500 குறியீட்டின் அனைத்து துறைகளிலும் விற்றுத்தள்ளல் இருந்ததால், 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.

எல்லா குறியீடுகளும் இப்போது "சீர்படுத்திக் கொள்ளும்" பகுதியில் இருப்பதால், அவற்றின் உச்சங்களில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்தன, வோல் ஸ்ட்ரீட் 2008 க்குப் பிந்தைய அதன் மிகப்பெரிய வருடாந்தர வீழ்ச்சியின் பாதையில் உள்ளது. டோவ் மற்றும் எஸ்&பி 500 பங்குச் சந்தைகள், பெருமந்தநிலையின் உச்சத்தில், 1931 க்குப் பின்னர் இந்த டிசம்பரில் அவற்றின் மிக மோசமான வீழ்ச்சியோடு சாதனைப் படைக்க உள்ளன, இந்த மாதம் இதுவரையில் அவை 7 சதவீதம் சரிந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாஸ்டாக் குறியீடு, இந்தாண்டு 2.2 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவு செய்து, 2.3 சதவீதம் சரிந்தது. சந்தை பகுப்பாய்வாளர்கள் சந்தையை "ஏமாற்றகரமாக" இருப்பதாக வர்ணித்ததுடன், இந்த முறை “வீழ்ச்சியைத் தடுக்கும் வாங்கல்" உபாயத்தைக் காண முடியவில்லை என்று கூறுகின்றனர், இதன் அர்த்தம் முந்தைய கீழ்நோக்கிய சரிவுகள் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கே இருந்தன என்பதாகும்.

உலகளாவிய உற்பத்திவேகக்குறைவு மற்றும் சாத்தியமான மந்தநிலை மீதான அச்சங்கள்; நிகழ்ந்து வரும் சீனாவுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக போரின் தாக்கம்; வட்டி விகிதங்களின் எதிர்கால போக்கைக் குறித்தும் மற்றும் புதனன்று பெடரல் அதன் சந்திப்புக்குப் பின்னர் என்ன கூறும் என்பதன் மீதும் ஏற்பட்டுள்ள கவலைகள்; அமெரிக்க அரசியல் கொந்தளிப்பின் தாக்கம்; பிரிட்டனில் பிரெக்ஸிட் நெருக்கடியின் விளைவு; மற்றும் பிரான்சில் "மஞ்சள் சீருடை" இயக்கத்தில் பிரதிபலிப்பதைப் போல தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தி அடைந்து வரும் மேலெழுச்சி என பல்வேறு காரணிகள் பங்குச் சந்தையைப் பாதித்து வருகின்றன.

உலகளாவிய வளர்ச்சியில் ஒரு வேகக்குறைவுக்கான அறிகுறிகள் சீனா மற்றும் ஐரோப்பாவில் மிகத் தெளிவாக தெரிகின்றன. 15 ஆண்டுகளுக்கான சில்லறை விற்பனை வளர்ச்சி விகிதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியையும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் மூன்றாண்டுகளில் குறைந்தபட்ச புள்ளிக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதையும் கடந்த வாரம் சீன அரசாங்க புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டின. அமெரிக்க வர்த்தகப் போர் நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கி உள்ள நிலையில், 2008-2009 க்குப் பின்னர் அதன் குறைந்தபட்ச புள்ளியில் உள்ள ஒட்டுமொத்த சீன வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டும் மேற்கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடும் என்பதற்கான எச்சரிக்கைகள் உள்ளன.

ராய்டர்ஸ் க்குக் கூறிய கருத்துக்களில் ஆசிய பசிபிக் பிரதேசத்திற்கான ஒரு மூத்த சர்வதேச நாணய நிதிய அதிகாரி Changyong Rhee கூறுகையில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்த மோதல் ஏற்கனவே ஆசியாவில் வணிக நம்பிக்கைகளைத் தாக்கி வருகிறது என்றார்.

“முதலீடு எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது,” என்றார். “நம்பிக்கையின் பாதை ஏற்கனவே உலகளாவிய பொருளாதாரத்தை, அதுவும் குறிப்பாக ஆசிய பொருளாதாரங்களை, பாதித்து வருகிறது என்பதே எனது பொருள்விளக்கம்,” என்றார். ஜப்பானும் தென் கொரியாவும் சீனாவுக்கான ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதால் அவைதான் கடுமையாக பாதிக்கப்படும் நாடுகளாக இருக்கக்கூடும் என்றவர் எச்சரித்தார்.

ஐரோப்பாவில், முக்கிய பொருளாதார புள்ளிவிபரங்கள், ஒரு பின்னடவை இல்லையென்றாலும், ஒரு குறிப்பிடத்தக்க வேகக்குறைவைச் சுட்டிக்காட்டுகின்றன, வெள்ளிக்கிழமை பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி: “ஜேர்மனி 'வளர்ச்சிக் குறைவு கட்டத்தில் சிக்கி' உள்ளது, பிரான்சின் தனியார் துறை 2016 க்குப் பின்னர் முதல்முறையாக சுருங்குவதில் வீழ்ந்துள்ளது, யூரோ மண்டலத்தில் வணிக வளர்ச்சி 2018 இல் நான்காண்டுகளில் அதன் குறைந்தபட்ச மட்டத்தை முடிந்துள்ளது.”

“2017 இல் ஆர்வத்தைத் தூண்டிய வளர்ச்சி இப்போது ஒரு தொலைதூர நினைவாகிவிட்டதுடன்" சேர்ந்து, ஜேர்மனி "பலமிழந்த வளர்ச்சி" காலக்கட்டத்தில் இருப்பதாக வியாபார தகவல் சேவை IHA Markit தீர்மானத்திற்கு வந்திருப்பதாக அச்செய்தி குறிப்பிட்டது.

அந்த அமைப்பின் தலைமை வணிக பொருளாதார நிபுணர் கிறிஸ் வில்லியம்ஸ் கூறுகையில், பிரான்சில் சுருக்கம் முற்றிலுமாக தொடர்ச்சியான "மஞ்சள் சீருடையாளர்கள்" போராட்டங்களினால் ஏற்பட்டதல்ல. சில வேகக்குறைவு போராட்டங்களால் உண்டாக்கப்பட்ட தொந்தரவைப் பிரதிபலித்தன என்றாலும், “இந்த பலவீனமான காட்சி, பொருளாதார வளர்ச்சியின் அடியிலுள்ள விகிதம் ஒட்டுமொத்தமாக யூரோ பகுதி எங்கிலும் குறைந்துள்ளதற்கான அதிகரித்து வரும் சான்றையும் பிரதிபலிக்கிறது. நிறுவனங்கள் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அத்துடன் வர்த்தகப் போர்கள் மற்றும் பிரெக்ஸிட் குறித்து கவலைக் கொண்டுள்ளன, இத்துடன் சேர்ந்து யூரோ பகுதியில் அதிகரித்த அரசியல் பதட்டங்களும் உள்ளன.”

அமெரிக்காவில், பொருளாதாரம் இன்னும் குறைந்த வளர்ச்சி காலகட்டத்தில் நுழையும் என்பதோடு, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெருநிறுவன வரி வெட்டுக்கள் முடிவடைந்த "இனிய வெற்றியின்" விளைவுகளுக்குப் பின்னர் 2019 இல் வருவாய் குறையும் என்ற கவலைகள் நிலவுகின்றன.

இவ்வாரம், அனைவரின் பார்வையும் புதன்கிழமை பெடரல் கூட்டத்திற்குப் பின் வரும் அறிக்கை மீதிருக்கும். அடிப்படை விகிதத்தில் 0.25 சதவீத கூடுதல் உயர்வு எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில் —அவ்வாறு செய்யாமல் விடுத்தால், பெடரல் மோசமடையக்கூடிய பொருளாதார கண்ணோட்டத்தை கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என்று அதிகரித்த கொந்தளிப்பைத் தூண்டிவிடும் என்று சில விமர்சகர்கள் அறிவுறுத்துகின்ற நிலையில்— அடுத்த ஆண்டு அதன் திட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதே முக்கிய பிரச்சினையாக இருக்கும்.

பெடரல் தலைவர் ஜெரோம் பாவெல் மத்திய வங்கியின் அடிப்படை விகிதம் நடுநிலைக்கு அருகில் இருப்பதாக கூறி, அவ்விதத்தில் 2019 இல் படிப்படியாக உயர்வுகள் இருக்குமென முன்னர் குறித்துக் காட்டியதை நோக்கி அது முன்நகராது என்பதைச் சுட்டிக்காட்டி, நவம்பரில் சந்தைகளுக்குச் சில மறுஉத்தரவாதங்கள் வழங்கி இருந்தார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெடரல் வட்டி விகிதங்களுக்கு எதிராக அவர் நடவடிக்கையைத் தொடர்ந்து வருகிறார். நேற்றைய ஒரு ட்வீட் செய்தியில், அவரது "அமெரிக்கா முதலில்" திட்டநிரலில் உலகின் ஏனைய பகுதிகளில் ஏற்படும் கொந்தளிப்பு அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆதாயமாக இருக்கும் என்று கூறப்பட்ட அத்திட்டநிரலின் முன்னுக்குப்பின் முரணான தன்மையை அடிக்கோடிடும் வகையில், அவர் எழுதினார்: “நம்பமுடியாத விதத்தில், மிகவும் பலமான டாலரும் நடைமுறையளவில் பணவீக்க விகிதமின்மையும் உள்ளன, நம்மைச் சுற்றிய வெளியுலகமோ சிதறி வருகிறது, பாரீஸ் எரிந்து கொண்டிருக்கிறது, சீனா கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது, பெடரல் மற்றொரு வட்டிவிகித உயர்வையே கூட பரிசீலித்து வருகிறது. வெற்றியை ஏற்றுக் கொள்ளுங்கள்!”

பெடரலின் முடிவு நிதியியல் சந்தைகளுக்கு முக்கியமாக இருக்கும், அவற்றில் கடன் வழங்குவதை இறுக்குவதற்கான அதிகரித்த அறிகுறிகளும், ஸ்திரத்தன்மை மீதான கவலைகளும் உள்ளன. பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, அமெரிக்க கடன் சந்தைகள் "நிற்கும் நிலைக்கு" இருப்பதாக செய்திகள் உள்ளன, “நிதி நிறுவன நிர்வாகிகள் வங்கிகள் விலைக்கு வாங்குவதற்கான முதலீடுகளைச் செய்ய (bankroll buyouts) மறுத்து வருகிறார்கள் என்பதுடன், முதலீட்டாளர்களோ உயர்-மதிப்பு பத்திர விற்பனைகளைத் தவிர்த்தொதுக்கி வருகிறார்கள், அதேவேளையில் அதிகரித்து வரும் வட்டிவிகிதங்களும் மற்றும் சந்தை கொந்தளிப்பும் உணர்வுகள் மீது இன்னும் சுமையேற்றுகின்றன.”

இந்த மாதம் இதுவரையில் ஒரேயொரு நிறுவனம் கூட 1.2 ட்ரில்லியன் டாலர் உயர்-மதிப்பு பத்திரங்கள், அல்லது “பெருமதியற்ற பத்திரங்கள்” மூலமாக பணம் பெறவில்லை, இதே போக்கு தொடர்ந்து கொண்டிருந்தால் நிதியியல் நெருக்கடிக்கு மத்தியில் நவம்பர் 2008 க்குப் பின்னர், இதுபோல் ஏற்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

பெடரல் ரிசர்வ் முன்னால் தலைவர் ஜெனெட் யெலென் பெருநிறுவன கடன் வழங்கும் தரமுறைகளில் "பெரும் சீரழிவு" இருப்பதாக கூறி, கடந்த அக்டோபரில் நிதியியல் சந்தைகளின் நிலை குறித்து ஓர் எச்சரிக்கை வெளியிட்டார்.

ஆனால் இந்த சீரழிவானது, 2008 பொறிவை உருவாக்கிய ஊகவணிகம் தொடரும் வகையிலும் புதிய உயரங்களை எட்டுவதற்கும் உதவியாக, பெடரல் வங்கி ஏனைய மத்திய வங்கிகளுடன் சேர்ந்து, நிதியியல் அமைப்புமுறைக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களைப் பாய்ச்சிய நிலையில், 2008 உருகுதலுக்குப் பின்னர் பெடரல் பின்பற்றிய கொள்கைகளின் ஒரு நேரடி விளைவாகும்.

உலகின் 50 மிகவும் பிரபல நிதியியல் பெரும்புள்ளிகளில் ஒருவரான நிதியியல் பகுப்பாய்வாளர் சத்யஜித் தாஸ் இவ்வாரயிறுதியில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கருத்துரையில், அவர் எதை "ஒவ்வொன்றும் குமிழி" என்று குறிப்பிட்டாரோ அது சுருங்கி வருவதாகவும் ஒரு புதிய நெருக்கடி உருவாகி வருவதாகவும் எச்சரித்தார். 2008 க்குப் பின்னர், அரசாங்கங்களும் மத்திய வங்கிகளும் நிலைமையை ஸ்திரப்படுத்தின என்றாலும், அதிக கடன் மட்டங்கள், பலவீனமான வங்கி அமைப்புமுறைகள் மற்றும் அதீத நிதியமயமாக்கம் ஆகியவற்றின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்று எழுதினார்.

தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சி தொடங்கி வருகிறது என்று நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், முன்னேறிய நாடுகளில் "ஜனநாயக பற்றாக்குறை" என்றும் "அதிகரித்து வரும் அரசியல் பதட்டங்கள்" என்றும் குறிப்பிட்டு, அவர், “கொள்கை வகுப்பாளர்களின் தொழில்நுட்ப தகமைகள் எனப்படுபவை மீது நம்பிக்கை இழப்பு" ஏற்பட்டிருப்பதையும், இது பொருளாதார மற்றும் நிதியியல் பிரச்சினைகளை சூழ்ந்து வரும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

“அரசியல் பொருளாதாரம்,” அவர் எழுதினார், “பின்னர் 1933 இல் ஜோன் மேனார்டு கெய்ன்ஸ் அடையாளம் கண்ட முக்கிய புள்ளியை நோக்கி தீவிரமடையலாம், அப்புள்ளியில் 'இப்போதைய ஒப்பந்த கட்டமைப்பு மற்றும் கடன்நிலைக்கான முறையான ஆவணங்களின் உடைவு முன் வருவதை நாம் எதிர்பார்க்கலாம், அத்துடன் சேர்ந்து நிதியியல் மற்றும் அரசின் பாரம்பரிய தலைவர்கள் முற்றிலும் மதிப்பிழப்பதும் சேர்ந்திருக்கும், இதன் இறுதியான விளைவை நம்மால் அனுமானிக்க முடியாது.”

கெய்ன்ஸ் அனுமானம் செய்யவில்லை, மாறாக என்ன விளைவு என்பதை வரலாறு பதிவு செய்தது: மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள், பாசிசவாத மற்றும் எதேச்சதிகார ஆட்சி வடிவங்களின் உயர்வு, வர்த்தகப் போர் மற்றும் பொருளாதார தேசியவாத மோதல்கள், இவை இறுதியில் உலக போருக்கு இட்டுச் செல்கின்றன. அந்த நிலைமைகள் இப்போது வேகமாக திரும்ப வந்து கொண்டிருக்கின்றன.

நிதியியல் சந்தைகளின் தற்போதைய ஏற்ற-இறக்கங்களின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், அவை உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் தீர்க்கவியலாத முரண்பாடுகளில் எதையுமே தீர்க்காது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி ஸ்தாபித்துக்காட்டும். அதற்கு பதிலாக அவை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன, கட்டுப்படுத்தவியலாத பொருளாதார மற்றும் நிதியியல் நெருக்கடியை முகங்கொடுத்துள்ள ஆளும் வர்க்கம் கடந்த தசாப்தத்தின் தாக்குதல்களை ஆழப்படுத்தி தொழிலாள வர்க்கம் மீது முன்பினும் அதிக வக்கிரமான தாக்குதல்களைத் தொடுக்கும்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், சர்வதேச தொழிலாள வர்க்கம் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்வதைத் தடுக்க முடியாதிருந்தது, ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பலமான போராட்டங்களை மேற்கொண்டிருந்தாலும், அதற்கு ஒரு புரட்சிகர தலைமை இல்லாதிருந்தது. அது மீண்டுமொருமுறை ஆளும் உயரடுக்குகளுக்கு எதிராக மிகப் பெரியளவிலான போராட்டங்களைத் தொடங்குகின்ற நிலையில், அது வரலாற்றிலிருந்து படிப்பினைகளை ஏற்று, உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் உடைவால் இப்போது முன்னிறுத்தபடும் மிகப் பிரமாண்டமான அரசியல் பணிகளை முகங்கொடுக்க ஓர் உலகளாவிய சோசலிச மூலோபாயத்துடன் தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்ள வேண்டும்.