ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian workers face slave-like conditions in Sri Lanka

இலங்கையில் இந்திய தொழிலாளர்கள் அடிமைத்தன வேலை நிலைமைகளை எதிர்கொள்கின்றனர்

By R. Shreeharan and Ivan Weerasinghe
10 December 2018

இலங்கையின் கிராமப் புறங்களில் அதிவலு மின் கம்பி இணைக்கும் திட்டத்திற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட 30 இளம் இந்திய தொழிலாளர்களிடம் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பேசினர். மோசமாக சுரண்டப்படும் இந்த தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக முறையான ஊதியம் அளிக்கப்படாது, நெரிசல் நிறைந்த, இழிவான நிலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்னையை சேர்ந்த கிருஷ்ணா பவர் நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இவர்கள் அனைவரும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான ஜார்கண்டில் உள்ள ஹஜாரிபாக் மாவட்டத்தில் உள்ள கர்காலோ கிராமத்தை சேர்ந்தவர்கள். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் தம்புள்ளையில் கலேவெல பகுதியில் அதிவலு மின் கம்பிகள் கட்டுவதற்க்காக, சீலெக்ஸ் என்ற மின்சார நிறுவனத்தினத்துடன் கிருஷ்ணா பவர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொழிலாளர்களை ஒட்டு மொத்தமாக சுரண்டுவதன் மூலம் இந்த இந்திய மற்றும் இலங்கை நிறுவனங்கள் பயனடைந்து வருகின்றன.


தொழிலாளர்கள் ஒரு பாழடைந்த அறையில் நெருக்கமாக படுத்துறங்குகின்றனர்

இந்த தொழிலாளர்கள் இலங்கையில் கட்டுபொத்த கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர். இங்கு சுத்தமான குடிநீர் இல்லாதது மட்டுமன்றி, அவர்கள் தங்கும் விடுதிகளில் போதுமான சுகாதார வசதிகள் இல்லை. உறங்குவதற்கு பாய்கள் மட்டுமே உள்ளன. இவர்கள் அடிப்படை உணவுகளை மட்டுமே உண்கின்றனர்.

ஒரு உத்தரவாதமான மாத ஊதியத்திற்காக, கடவுச் சீட்டுகளை எடுத்து கொள்வது உட்பட, இந்த தொழிலாளர்கள் மீது முழுக் கட்டுபாட்டையும் திணிக்கக் கூடிய வகையில் ஒரு ஒப்பத்தில் கையெழுத்திடுமாறு நிறுனவம் அவர்களை வற்புறுத்தி இருக்கிறது. 4,000 ரூபா மேலதிக கொடுப்பனவுடன், இவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட மாத ஊதியம் 18,500 இந்திய ரூபாவாகும் (261 டாலர்).

இந்த ஒப்பந்த கம்பனி, இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட தொழில் சட்டங்களையும் மீறி, ஆபத்தான வேலைத் தளங்களில் அடிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கூட புறக்கணித்து, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் இன்றி, நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை வாங்குகின்றனர். இந்தி மட்டுமே பேச தெரிந்த குறைந்தளவே கல்வி கற்றுள்ள இந்த இந்திய தொழிலாளர்களுக்கு, கடந்த 3 மாதமாக சம்பளம் கொடுக்கப்படவில்லை. உள்ளுர் சமூகத்தின் உதவியுடன், அவர்கள் பொலிசில் உத்தியோகபூர்வ புகாரை கொடுத்துள்ளனர்.

புனித் என்ற 26 வயது தொழிலாளி கூறியதாவது: “நாங்கள் மிக கடுமையான வேலை நிலைமைகளை எதிர்கொள்கிறோம். நாங்கள் காலை எட்டு மணிக்கு வேலைக்கு சென்று நடு இரவில் தான் வீடு திரும்புகின்றோம். நாங்கள் காலையில் சமைத்து அதே உணவை மூன்று வேலையும் சாப்பிடுகிறோம். இன்று நாங்கள் சோறு சமைத்து, வெண்டைக்காய் மற்றும் பருப்பு குழம்பு வைத்துள்ளோம். இப்படிதான் நாங்கள் எங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டி உள்ளது.”


பாழடைந்த வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் சமையலறை

“எங்களுக்கு குடும்பம் மற்றும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், இங்கு கிடைக்கும் வருமானம் எங்களுக்கு போதவில்லை. இதனால் இந்த வேலையை விட்டுவிட்டு மீண்டும் இந்தியாவுக்கு போக முடிவு எடுத்துள்ளோம். இதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.”

தாம் ஆசியா முழுவதும் வேலைக்கு அமர்த்தப்படுவதாகவும், வாழ்வதற்கு வருமானம் தேடும் முயற்சியில் மனித வள நிறுவனங்களுடன் இரண்டாண்டு ஒப்பந்தம் செய்துகொள்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

26 வயது பிஜெகுமார் கூறியதாவது: “எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். ஒரு பிள்ளை பாடசாலை செல்கிறாள். நான் இவ்வளவு கடுமையாக உழைத்தாலும் இந்த சம்பளத்தை கொண்டு என் குடும்பத்தை பராமறிக்க முடியாது. நாங்கள் இந்தியா சென்று வேறு நிறுவனத்தில் தான் வேலை தேட வேண்டும். நாங்கள் கென்யா, பர்மா, சௌதி அராபி, கட்டார் போன்ற பல இடங்களில் வேலை செய்திருக்கிறோம். அங்கு வேலை கடுமையாக இருந்தாலும் வேலை 6 மணிக்கு முடிந்து விடும்.”

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற சிங்கள பேரினவாத கட்சிகளின் இந்திய எதிர்ப்பு வகுப்புவாத பிரச்சாரத்தையும் மீறி, அங்குள்ள மக்கள் அவர்களுக்கு உதவி உள்ளனர்.

கட்டுபொத்தவில் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தும் ஒரு பெண், இந்திய தொழிலாளர்களை சுரண்டும் மின் நிறுவனங்களை கடுமையாக விமர்சித்தார். “இந்த இளம் தொழிலாளர்கள் என் தேநீர் கடைக்கு தினமும் வருகிறார்கள். அவர்களுடன் பேசுவது கடினமாக இருக்கிறது,” எனக் கூறிய அவர், “இவர்கள் அவ்வளவாக பணம் செலவு செய்வதில்லை, இப்போது சிற்றுண்டிகள் வாங்குவதையும் குறைத்துவிட்டனர். அப்போதுதான் இவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று எனக்கு தெரிந்தது. அவர்களும் அப்பாவி மனிதர்கள்தானே. அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது குற்றம்,” என மேலும் தெரிவித்தார்.


பாழடைந்த வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை

WSWS நிருபர்களுக்கு உதவி செய்த பேருந்து தொழிலாளி ஒருவர், கோபமாக இந்த நிறுவனங்களை கண்டனம் செய்தார். “இந்த குற்றவியல் நிறுவனங்கள் தண்டிக்கப்பட வேண்டும். உழைப்பை வாங்கி விட்டு இவர்கள் எப்படி ஏமாற்ற முடியும்? இவர்கள் யாராக இருந்தாலும், குடும்பத்தை பாதுகாக்க உழைக்கிறார்கள்.”

இந்த இளம் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நிலைமை, இந்தியாவின் நிலங்களால் சூழப்பட்ட வட-கிழக்கு மாநிலங்களில் வாழும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மட்டுமன்றி இந்திய உபகண்டம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் சந்திக்கும் நிலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

சமீபத்திய ஆய்வின் படி, இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், ஜார்கண்டில் இருந்து மட்டும், ஐந்து மில்லியன் உழைக்கும் வயது உடையவர்கள் வேலை மற்றும் கல்விக்காக புலம்பெயர்ந்து உள்ளார்கள் என்று தெரிய வருகிறது. அரசு அறிக்கையின் படி இந்த மாநிலத்தின் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 7.2 ஆகும். தொழில் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை 2016 இன் படி, 48.6 சதவீத பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஜார்கண்ட்: பொருளாதார மற்றும் மனித அபிவிருத்தி குறிப்புகள், 39.1 சதவீத மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர் என கூறுகிறது. 5 வயதுக்கு குறைவானவர்களில் 19.6 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டில் பாதிக்கப்பட்டுள்ளன.