ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Left Party publications denounce protest movement in France

இடது கட்சி பிரசுரங்கள் பிரான்சில் போராட்ட இயக்கத்தைக் கண்டிக்கின்றன

By Johannes Stern
30 November 2018

இடது கட்சியும் அதன் தொழிற்சங்கம் மற்றும் போலி-இடது வட்டாரங்களும் ஜேர்மனியில் ஒரு சமூக மேலெழுச்சிக்கு எவ்வாறு விடையிறுக்கும் என்பதை எவரேனும் அறிய விரும்பினால், பிரான்சில் மக்ரோன் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து அக்கட்சியுடன் ஐக்கியம் கொண்ட பத்திரிகைகள் என்ன கூறுகிறது என்று மட்டும் ஒரு பார்வை பார்க்க வேண்டும்.

இடது கட்சியுடன் பாரம்பரியமாக தொடர்புடைய Neues Deutschland (ND) நாளிதழ் திங்களன்று, “வன்முறையின் மொழி" என்று தலைப்பிட்டு அதன் வாசகர்களை வரவேற்கிறது. அந்த நாளிதழ், பிரான்சில் பெட்ரோல் விலை மீதான வரியுயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன "மஞ்சள் சீருடையாளர்களின்" இயக்கத்தின் கடந்த வாரயிறுதி பாரிய போராட்டங்களைத் தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தது. அப்போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் இராஜினாமாவைக் கோரினர்.

ND நாளிதழ், இரண்டு வெவ்வேறு கட்டுரைகளில், பாரீசில் ஆர்ப்பாட்டக்காரர்களிடடையே வன்முறை வேரூன்றி இருப்பதாக கூறி வரும் பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் பொலிஸின் பொய்களைப் பரப்புகிறது. “பொலிஸ் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டன, வழியடைப்புகள் உண்டாக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் நீர்பீய்ச்சிகளைக் கொண்டு பொலிஸ் எதிர்வினையாற்றியது,” என்று ND அதன் தலைப்பு செய்தியில் எழுதுகிறது. “கிறிஸ்துமஸ் க்கு முன்னதாக, சாம்ப்ஸ்-எலிசே வீதி,” “நாசகரமான ஒரு சித்திரத்தை" வழங்கியது.

ஒரு துளியும் விமர்சனமின்றி, ND, போராட்டங்கள் மீதான மக்ரோனின் கண்டனங்களை மேற்கோளிடுகிறது: “பாதுகாப்பு படைகளைத் தாக்கியவர்கள் வெட்கப்பட வேண்டும், ஏனைய குடிமக்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் வன்முறை பிரயோகித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்,” என்று பிரெஞ்சு ஜனாதிபதி கூறினார். அப்பத்திரிகை பின்னர், “வன்முறையான தீவிரவாதிகள் கலகம் செய்வதற்கு அச்சந்தர்ப்பத்தை ஆதாயமாக்கிக் கொண்டார்கள்,” என்று பழிசுமத்தி, பிரெஞ்சு அரசு அதிகாரிகளின் பிரச்சாரத்தையே மறுபிரச்சாரம் செய்தது.

“மஞ்சள் சீருடையாளர்கள் வன்முறைக்கு தயாரிக்கிறார்கள்,” என்று தலைப்பிட்டிருந்த ஐந்தாம் பக்க கட்டுரை ஒன்று இன்னும் அதிக விரோதத்துடன் இருந்தது. அக்கட்டுரையின் தொடக்கத்தில், ND இன் பிரெஞ்சு செய்தியாளர் Ralf Klingsieck குறிப்பிடுகையில், பாரீஸ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்க கூடாது என்று அறிவுறுத்துவதுடன், அதேவேளையில் வாசகர்கள் பொலிஸ் மீது அனுதாபம் பெறும் வகையில் அருவருக்கத்தக்க விபரங்களை சித்தரிக்கிறார்.

“சாம்ப்ஸ்-எலிசே ஒரு நாசகரமான சித்திரத்தை வழங்குகிறது,” என்று Klingsieck எழுதுகிறார். “பொலிஸால் ஒப்புதல் வழங்கப்படாத, மஞ்சள் சீருடையாளர்களின் சனிக்கிழமை பாரீஸ் ஆர்ப்பாட்டங்கள், வன்முறைக்குள் வீழ்ந்தன.”

கொன்கோர்ட் சதுக்கத்தை (Place de la Concorde) நோக்கி அணிவகுப்பதிலிருந்து தடுக்கப்பட்ட சுமார் 8,000 ஆர்ப்பாட்டக்காரர்களில் சில பிரிவுகள் பொலிஸ் மீது கற்களை வீசுவதற்காக நடைபாதைகளை நாசப்படுத்தின, அதற்காக தான் பொலிஸ் கண்ணீர் புகைக்குண்டுகள் மற்றும் நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தி விடையிறுத்தது,” என்று தொடர்ந்து குறிப்பிட்ட அக்கட்டுரை, பெரிதும் ஒரு பொலிஸ் அறிக்கை போல செல்கிறது. “சில இடங்களில், சாலை மறிப்புகளை உருவாக்குவதற்காக அமரும் திண்ணைகளும் நாற்காலிகளும் வீதியில் குவிக்கப்பட்டதுடன், பின்னர் அவை எரிக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் விளிம்போரங்களில், கடை ஜன்னல்கள் உடைக்கப்பட்டன என்பதோடு, காட்சிப் பலகைகளும் சூறையாடப்பட்டன. மீண்டும் அமைதி ஏற்படுத்துவதற்கு பொலிஸ் க்கு பல மணி நேரமானது.

பாதுகாப்பு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பிரச்சாரத்தையே Klingsieck எந்தவித கருத்துரையும் இல்லாமல் வாந்தியெடுத்தது: “பாரீசில் அவர்களின் ஆர்ப்பாட்டத்தில் வன்முறையான வலதுசாரி தீவிரவாதிகளும், மஞ்சள் சீருடை அணிந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் 'கருப்பு அணிகளின்' குண்டர்களும் ஊடுருவிவிட்டதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்ட்னேர் பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார்.”

இந்த கூற்றுகள் அனைத்தும் பொய்கள். உண்மையில், பொலிஸ் தான் ஆரம்பத்தில் இருந்தே "வன்முறையைத் தூண்டியது" மற்றும் "வன்முறைக்குரிய மொழிகளை" பிரயோகித்தது. பாதுகாப்பு படைகள் தான் சாம்ப்ஸ்-எலிசே மோதல்களைத் தொடங்கின என்பதோடு, அவையே பெரும்பாலான கலகங்களுக்கும் பொறுப்பாக இருந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் முதல் சாலை தடுப்புகளை ஏற்படுத்திய பின்னர் உடனடியாக, பொலிஸ் படையினர் நீர் பீய்ச்சிகள், இரப்பர் குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு விடையிறுத்தனர். பொலிஸ்காரர்கள் தடிகளைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர் என்பதோடு, அவர்களைச் சுற்றி வளைக்க முயன்றனர். இதற்கு விடையிறுப்பாக, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியெறிந்தும் தீயிட்டும் தங்களைப் பாதுகாத்து கொள்ள முயன்றார்கள்.

இடது கட்சிக்கு நெருக்கமான மற்றொரு நாளிதழ் Junge Welt குறிப்பிடுகையில், வன்முறை பொலிஸிடம் இருந்துதான் தொடங்கியது, ஆனால் பின்னர் போராட்டங்களின் மதிப்பைக் குறைப்பதற்கும் காரணமானது என்று அதன் தலையங்கத்தில் கூடுதலாகவோ குறைவாகவோ ஒப்புக்கொண்டது. “மரீன் லு பென் தலைமையிலான நவ-பாசிசவாத அமைப்பான 'Rassemblement Nationale' (RN, முன்னாள் தேசிய முன்னணி) மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி பழமைவாத 'Les Républicains' இரண்டுமே அதிகரித்து வரும் எதிர்ப்பை அவர்களின் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர்,” என்று எழுதியது. “கருத்துக் கணிப்புகளின்படி இவ்விரு கட்சிகளுக்கான ஆதரவு தற்போது அதிகரித்து வருகிறது.”

இந்த கூற்று, பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடதுகளின் நிலைப்பாட்டுடன் பொருந்தி உள்ளது, இந்த போராட்டங்கள் வெறுமனே தீவிர வலதின் கரங்களுக்குள் சாதகமாக்கப்படுவதாக அவை வாதிடுகின்றன. யதார்த்தத்தில், சார்க்கோசி போன்ற பிரமுகர்கள் பரவலாக வெறுக்கப்படுகிறார்கள், அதேவேளையில் அதிவலதோ "மஞ்சள் சீருடை" போராட்டக்காரர்களை இடதுசாரி வன்முறை தீவிரவாதிகள் என்று அதிகரித்தளவில் குற்றஞ்சாட்டி வருகிறது. RN தலைவர் மரீன் லு பென்னின் மருமகளான மரியோன் மரேஷால்-லு பென் கூறுகையில், அந்த இயக்கம் "தீவிர-இடது போராளிகளால் நிறைந்துள்ளது. மக்கள், 'முதலாளித்துவம் மரித்துவிட்டது!' என்று கூறுவதை நாம் கேட்கிறோம், இதுவே அதிதீவிர வலதாக இருந்திருந்தால், பின்னர் அது வேறுவிதமாக மாறியிருக்கும்,” என்றார்.

பிரான்சில் இந்த போராட்டங்கள் ஸ்தாபக அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக அபிவிருத்தி அடைந்து வருவதால், இடது கட்சியைச் சுற்றியுள்ள பிரசுரங்கள் இதற்கு விரோதமாக உள்ளன.

“தொடர்ச்சியாக பல்வேறு வரி உயர்வுகள், மற்றும் அனைத்திற்கும் மேலாக, ஜனவரி 1 இல் இருந்து திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் வரி உயர்வு ஆகியவற்றால் நுகர்வு சக்தி குறைவதற்கு எதிராக போராடுவதற்காக, மஞ்சள் சீருடை இயக்கம் சில வாரங்களுக்கு முன்னர் தன்னெழுச்சியாக மேலெழுந்தது,” என்று ND அதன் மத்திய கவலையை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக குறிப்பிடுகிறது. “அரசியல் கட்சிகளைப் போலவே, தொழிற்சங்கங்கள் இதனால் முற்றிலுமாக மலைத்துப் போயின என்பதுடன், இணைய கருத்தரங்குகள் மூலமாக தன்னை ஒழுங்கமைத்துக் கொண்ட இந்த இயக்கத்தின் மீது அவற்றிற்கு எந்த செல்வாக்கும் இல்லை.”

சமீபத்திய நாட்களில் “மஞ்சள் சீருடையாளர்" போராட்டங்கள் ஐரோப்பா எங்கிலுமான தொடர்ச்சியான வேலைநிறுத்தங்களுடன் பொருந்தி உள்ளன. பிரான்சில், வேலைநிறுத்தம் செய்து வரும் துறைமுக தொழிலாளர்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தொழிலாளர்கள் மற்றும் அமசன் தொழிலாளர்கள் "மஞ்சள் சீருடையாளர்களால்" அமைக்கப்பட்ட சாலை தடுப்புகளைப் பாதுகாத்தனர். இந்த அபிவிருத்தியையும், அத்துடன் சேர்ந்து "மஞ்சள் சீருடையாளர்கள்" இயக்கத்தின் இலக்குகளையும் இடது கட்சி ஓர் அச்சுறுத்தலாக கருதுகிறது. உண்மையில், மக்ரோன் இராஜினாமா செய்ய வேண்டும், சமூக சமத்துவமின்மையும் மற்றும் ஐரோப்பாவை இராணுவமயமாக்குவதும் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை, ஒரு சர்வதேசவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே வென்றெடுக்க முடியும்.

தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்கங்களின் நலன்களை வெளிப்படுத்தும் இடது கட்சி, வர்க்க போராட்டத்தின் எதிர்பக்கத்தில் நிற்கிறது. 2014 ஐரோப்பிய தேர்தல்களில், அக்கட்சி, ஒரு புரட்சிகர அபிவிருத்தியைத் தடுக்க அவசியமான அனைத்தையும் அது செய்யும் என்பதை ஆளும் வர்க்கத்திற்கு சமிக்ஞை செய்ய, "புரட்சியா—வேண்டாம், நன்றி!” என்று குறிப்பிடும் சுவரொட்டிகளை ஒட்டியது. நான்காண்டுகளுக்குப் பின்னர் அதன் அர்த்தம் என்பது தெளிவாக உள்ளது. சமீபத்திய வாரங்களில், இடது கட்சியின் தலைவர்கள், மக்ரோனின் பின்னால் மற்றும் ஜேர்மன்-பிரெஞ்சு தலைமையின் கீழ் ஓர் ஐரோப்பிய இராணுவத்திற்கான அவர் திட்டங்களுக்குப் பின்னால் அணி வகுத்துள்ளனர். ஓர் "ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான" மக்ரோனின் திட்டங்களை ஒரு "அபாரமான யோசனை" என்று விவரிக்கும் ஒரு கருத்துரையையும் ND பிரசுரித்துள்ளது.

அப்போது உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: “ஓர் ஐரோப்பிய இராணுவ ஒன்றியத்தைக் கட்டமைப்பதும் மற்றும் போருக்கான தயாரிப்புகள் செய்வதும், அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் உள்நாட்டு எதிர்ப்புக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டுள்ளன என்பது வெளிப்படையாக உள்ளது. பிரான்சில் நூறாயிரக் கணக்கானவர்கள் பெட்ரோல் வரி உயர்வுக்கு எதிராக போராடிய போது, மக்ரோன் அவரது பேர்லின் உரையில், ஜேர்மன் முதலாளித்துவத்திற்கு ஆதரவைக் கோரினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, “செல்வந்தர்களின் ஜனாதிபதி" இராஜினாமா செய்ய வேண்டுமெனக் கோரினார்கள். இடது கட்சியால் மக்ரோனின் முறையீடு பாராட்டப்படுகிறது என்ற உண்மையானது, அந்த அமைப்பின் ஏகாதிபத்திய-சார்பு மற்றும் தொழிலாளர்-விரோத குணாம்சத்தைக் குறித்து பக்கம் பக்கமாக பேசுகிறது.”